ஓரிரு வருடங்கள்தான் ஆகியிருக்கும். அப்போது நான் ஒரு வருடமாக காதன்பர்க்கில், ஸ்வீடனில் வேலை செய்துகொண்டிருந்தேன். ஒரு ராஜஸ்தானிய நண்பரின் ப்ளாட்டில் நானும் ஒண்டிக்கொண்டிருந்தேன்.
என்னுடன் இன்னொரு நபரும் ஒட்டிக்கொண்டிருந்தான். என்னை விட பல வருடங்கள் இளையவன் என்பதாலும் ஒரு வாஞ்சையாலும் அந்த ஆந்திரனை அவன், இவன் என்ற ஏகவசனம் அவ்வளவுதான்!
அதுவோர் இலையுதிர் காலம். மதியம் தாண்டியவுடன் காலம் ஸ்தம்பித்து நின்றுவிடும். முடிவே இல்லாத மாலை. அத்தனை வெளிச்சத்தை காலை மணி ஒன்பது என்றால் நம்பலாமே தவிர இரவு மணி ஒன்பது என்று சொல்லவே முடியாது.
வார இறுதி நாட்களில், பின் மாலை பொழுதுகளில் நான் சட்டென வரவேற்பறையிலிருந்து துள்ளி எழுவேன், காமிராவோடு. காமிரா என்றால் பெரிய எஸ்எல்ஆர் எல்லாம் இல்லை, ஐபோன்தான்.
வெளியே சில சமயங்களில் மேகங்களுடன் புடை சூழ, சில சமயங்களில் யாரும் இல்லாமல் தனியே, வெட்கச்சிவப்பில், பின் சிவந்து சிவந்து சலித்து ரோஜா வண்ணத்தில் மாறும் பளிங்கு வானில் சூரியன். வலிக்கவே வலிக்காத சூரியன்.
நாங்கள் இருந்த அபார்ட்மெண்ட் ஒரு மலையடிவாரத்தில் ஒட்டிக்கொண்டிருந்தது.
அதன் பால்கனிலிருந்தும், பின் கீழே இறங்கி அருகே இருக்கும் மலையில், சுற்றி சுற்றி வந்து இந்த தக்ளியூண்டு காமிராவில், மனிதன் செய்த ஓர் அற்பப் பொருளில், அந்த அலகிலா வானத்தை, அந்த காலத்தை பிரதியெடுக்க முயன்றுகொண்டே இருப்பேன்.
திருப்பித் திருப்பி என்னனென்ன கோணத்திலோ, எத்தனை தடவைகள் எடுத்துக்கொண்டே இருப்பேன். எடுத்து மாளாது, அது ஒரு தீராத் தாகம். தீரவே தீராது.
ஆந்திர அறைத் தோழனிற்கு எனது செயல்கள் மிக விசித்திரமாகத் தோன்றும். “சிவா காரு, என்னத்தான் எடுத்துக்கிட்டு இருக்கிங்க? தினம் தினம் சூரியன் காலைல வரும், இரவு போகும். இதில் என்ன இருக்கிறது? என்னத்தைக் கண்டு இப்படி எடுத்துக்கிட்டே இருக்கிங்க? சலிக்கலையா?” என்று நகைப்பான், விசித்திரமாக பார்ப்பான். சில சமயங்களில் சமையல் வேலையிலிருந்து தப்பிப்பதற்கான வழிமுறைகளாகவும் காணுவான்.
ஒரு முறை இதைக் கேட்டதும் திடுக்கென்றது. இதில் என்ன இருக்கிறது என்று கேட்கிறானே?
ஒரு நாள், எப்படி மெல்ல, மெல்ல நழுவிப்போய்க் கொண்டிருக்கிறது.
ஒரு பெரிய மேசைவிரிப்பை மாயக்கரம் ஒன்று மெல்ல மெல்ல இழுத்துக்கொண்டிருக்கிறது. தினம், தினம் இந்த ஆச்சரியம், விந்தை நடந்துகொண்டிருக்கிறது. இதில் என்ன இருக்கிறது என்று கேட்கிறான் இந்தப்பயல்.
இப்படி ஒரு நாள் தினந்தோறும் முடிவது அவனுக்கு ஒன்றும் பெரிதாகப்படவில்லை என்பதே எனக்கு மிக விந்தையாகவும் சோகமாகவும் ஏமாற்றமாகவும் பட்டது. ஒரு நாள் முடிகிறது, அந்த இலையுதிர்காலம் அந்த ஆண்டின் முடிவை நோக்கிப்போவது போல் ஒவ்வொரு நாளும் கை விரல்களின் இடையில், கால்களில் நழுவும் அலைகள் போல் நழுவுவதை உணர்ந்த மாலைப்பொழுதுகள்.
ச.அனுக்கிரஹாவின் கீழ்கண்ட கவிதை அந்த பொழுதுகளை நினைவுபடுத்தியது. ஒரு நகரத்தின் மாலைப்பொழுதை, பறவைகளும் விளக்குகளும் மெல்ல மெல்ல கரைந்து, அணைந்து, சாலையோர மர இலைகளுஊடே, கதவிடுக்குளூடே மறையும், முடியும் ஒரு நாள்…
நமது தினக்கவலைகளில், அவசரங்களில், ப்ராயாரிட்டிகளில், சோகங்களில் கவனிக்க தவறும் ஒரு நாளின் முடிவு – இந்தக் கவிதையை கவனிக்கத்தவறியதைப் போல.
ஒரு நாள் முடிகிறது ச. அனுக்ரஹா
பகல் கரைந்து வழிகிறது,
கட்டிடங்களின் இடுக்குகள் வழியே,
சாலையோர மரங்களின்
இலைகளுக்கிடையே,
கண்ணாடி ஜன்னல்களின் மீது
நீலம் மஞ்சள் சிவப்பாகி,
மேஜைகளுக்கு கீழே
பூச்செடிகளுக்கடியில்
பாதி திறந்த கதவிடுக்குகளுக்கு உள்ளே
ஒளிந்து மறைகிறது.
மாலையின் நிழல்களை
மிதித்து செல்கின்றன
வாகனங்கள்.
வீடுகளுக்கிடையே
சிக்கியிருக்கும் மரங்களுக்குமேல்
பறவைகள் சிறு கூட்டமாக
செல்கின்றன.
வானம் விளக்கணைத்து
காத்திருக்கிறது,
இமையாது ஒளிரும்
ஜன்னல்களுக்கு வெளியே.
ஒரு நாள் முடிகிறது, உங்களுடைய சிறு கவனிப்புமின்றி.
நன்றி: சொல்வனம்








புகைக்படங்கள் கவிதையாகும் அழகோடும், கவிதை ஓவியமாகும் சிறப்போடும் நெஞ்சில் நிறைகின்றது இந்த இந்த படைப்புகள்.
வாழ்த்துக்கள் சிவா கிருஷ்ணமூர்த்தி.
அன்புடன்
ஆர்.மாணிக்கவேல்