கார்டியன் தளத்தில் ஆண்ட்ரூ ப்ரௌன் எழுதிய இந்த நூல் மதிப்பீடு மரணத்தின் முன் வாழ்வின் பொருள் என்ன என்பதை விவாதிக்கிறது, மறதியின் முன் நினைவின் இடமும்தான் என்ன என்ற கேள்விக்கும் இட்டுச் செல்கிறது.

Landscapes of the Metropolis of Death என்ற இந்த நூல் துண்டுக் காட்சிகளாகத் தன் கதையைச் சொல்கிறது. இதன் மையமாக நான் கருதும் காட்சி இது: ஒரு சிறுவன் தன் ஹார்மோனிக்காவில் ஏதோ ஒரு ட்யூனை வாசித்தபடி அமர்ந்திருக்கிறான். இன்னொரு சிறுவன் அவனிடம் வந்து நீ என்ன வாசித்துக் கொண்டிருக்கிறாய் தெரியுமா என்று கேட்கிறான். இல்லை என்கிறான் அவன். ஆறு மாதங்களுக்கு முன் ஒரு முகாமில் எனக்கு இது கற்றுக் கொடுக்கப்பட்டது, அந்த முகாம் இப்போது இல்லை.
ஹார்மொனிக்கா வாசித்துக் கொண்டிருந்த குல்கா தொடர்கிறார்: “நான் என்ன வாசித்துக் கொண்டிருந்தேன் என்பதையும் அங்கே நாங்கள் என்ன பாடினோம் என்பதையும் அந்த வார்த்தைகளின் அர்த்தத்தையும் அவன் எனக்குச் சொன்னான். அதிலுள்ள பயங்கரமான அபத்தத்தையும் ஆச்சரியத்தையும் அவன் எனக்கு விளக்க முயற்சித்தான் என்று நினைக்கிறேன் – ஆனந்தத்தையும் மானுட சகோதரத்துவத்தையும் போற்றித் துதிக்கும் ஒரு பாடல், பீத்தோவனின் ஒன்பதாம் சிம்பொனியில் உள்ள ஷில்லரின் Ode to Joy தான் நான் வாசித்துக் கொண்டிருந்த பாடல் என்றான் அவன். பீத்தோவனால் எந்த மானுடம் பாடப்படுகிறதோ அதே மானுட அனுபவத்துக்குட்பட்ட அதிபயங்கர தீப்பிழம்பு நாங்கள் அப்போது பேசிக் கொண்டிருந்த அக்கணத்திலேயே, அங்கு நாங்கள் இருந்த மாதங்களில், தொடர்ந்து கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த ஆஷ்விட்ஸின் மயானக்கூடங்களின் எதிரே இசைக்கப்படுகிறது, கொலை செய்யப்படும் இடத்திலிருந்து சில நூறு மீட்டர் தொலைவில்.”
ஒரு வகையில் இந்த பயங்கரமான அபத்தமும் ஆச்சரியமும் அவற்றின் இயல்பின் காரணமாகவே விளக்கப்பட முடியாதது. அபத்தத்தையும் ஆச்சரியத்தையும் வெளிப்படுத்த முடியலாம், அவற்றின் விளைவுகள் விவரிக்கப்பட முடியலாம், ஆனால் அவற்றின் பொருள் விளங்கிக் கொள்ள வகையளிக்காதது; எந்த விளக்கத்தின் அளவுக்கும் அவற்றைக் குறுக்க முடியாது. மரணமும் இது போன்றதுதான் – என்ன ஒன்று, ஆஷ்விட்ஸில் மரணத்துக்கு மட்டுமே அர்த்தம் இருந்தது. மரணம், குல்கா சொல்வதுபோல், “உலகை ஆளும் உறுதியான, ஒற்றைக் கண்ணோட்டம்”.
அப்படியானால் ஆஷ்விட்ஸில் இருந்த குடும்ப முகாமில் குழந்தைகளைக் கொண்ட இசைக்குழுவில் (choir) கண்டக்டராக இருந்த இம்ரே தன் மாணவர்களுக்கு ஏன் Ode to Joy இசையைக் கற்பித்தார்? அவரது நோக்கம் என்ன? அவரது நிலைப்பாடு என்ன? இசைக்குழு ஒன்று இருக்க வேண்டியதன் தேவையை குல்கா புரிந்து கொள்கிறார். செயல்பாடு எதுவும் இல்லாமல் வாழ்க்கை தாளவோண்ணா நிலைக்கு மேலும் நெருக்கமானதாக இருந்திருக்கும். ஆனால் ஏன் இம்ரே குழந்தைகளைக் கொண்டு துதிப்பாடலை இசைத்தார்? அது மானுட கௌரவத்தை, மானுட விழுமியங்களை, எதிர்கால நம்பிக்கைகளைப் பிரகடனப்படுத்தும் இசை அறிக்கை, “அந்த இடத்தில் எதிர்காலம்தான் ஐயமற இல்லாத ஒன்றே ஒன்று”.
இதற்கான ஒரு பதில் – மரியாதைக்குரிய அனைவரும் சந்தேகத்துக்கிடமில்லாமல் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்று- இந்த இசை நம்பிக்கையின் செய்தியாக இருக்கிறது. இம்ரே, அவரேயும்கூட 1944ஆம் ஆண்டு மார்ச் மாதம் எட்டாம் தேதி புகை போடப்பட்டுக் கொல்லப்பட்டார், சில குழந்தைகள் பிழைத்துக் கொள்ளலாம் என்பதை அறிந்தவராகவோ, நம்புபவராகவோ இருந்தார் -அவர்களில் சிலர் நாகரிகத்தைப் புனரமைக்கக்கூடியவர்களாக இருக்கலாம் என்று நினைத்தார். ஆனால் அதைச் செய்ய ஐரோப்பிய நாகரிகம் உருவாக்கிய உன்னதமான விஷயங்களின் தேவை அவர்களுக்கு இருந்தது: பீத்தோவன், ஷில்லர், தாஸ்தோயெவ்ஸ்கி (அவருடன் இருந்த இன்னொரு கைதி, டிப்தீரியாவில் சாகும்போது, தன்னிடமிருந்த ‘குற்றமும் தண்டனையும்’ நாவலின் பிரதியை குல்காவிடம் கொடுத்துச் சென்றார்).
இது ஒரு சாத்தியம், என்கிறார் குல்கா, சொல்லப்போனால் ‘மிகவும் உயர்ந்த ஒன்று”. ஆனால் இன்னொரு சாத்தியமும் உண்டு, அதற்கான வாய்ப்புகளும் அதிகம். இசை, இலக்கியம், நம் பண்பாட்டின் சிறந்த, உயர்ந்த உன்னதங்களை அடுத்த தலைமுறைக்கு அளித்தல் என்பது, “ஒரு மிகப்பெரிய கேலியாக இருக்கலாம். தன் புறப்பரப்பின் உச்ச எல்லையில் அது சுய நகைச்சுவையாகவும் இருக்கலாம் – பேதைகளைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டிருப்பவனின் நகைச்சுவையாக இது இருக்கலாம் – அவர்களிடத்தில் பேதைமையின் மதிப்பீடுகளை விதைத்தல், நுட்பமான ஆச்சரியமான மதிப்பீடுகளை விதைப்பதில் ஒரு பயனும் இல்லை. பேதைமை நோக்கமற்றது, அந்த விழுமியங்களுக்கு எந்த அர்த்தமும் கிடையாது என்று தெரிந்தே செய்யும் விதைப்பாக இருக்கலாம்”
இந்த இரு தேர்வுகளில் எதை நூலாசிரியர் விரும்புகிறார், எப்போது விரும்புகிறார் என்பதை நாம் சொல்லப் போவதில்லை. இந்த இரு புரிதல்களுக்குமிடையே அவர் தடுமாறுகிறார். மானுட தீய்மை (human evil) என்றால் என்ன என்று விசாரிக்கும் எவருமே இப்படிப்பட்ட தடுமாற்றத்தை எதிர்கொண்டாக வேண்டும். அதிகபட்சம் அனைத்தையும் அழிக்கும் அணுகலான கேலித்தனத்தோடு கூடிய விரக்தியே இவை இரண்டில் உண்மையானதாக இருக்கும் என்று வேண்டுமானால் அவர் சொல்லலாம்.
இங்கு, மிக இயல்பானது என்று நான் சொல்லவில்லை எனபதை கவனியுங்கள். அப்படிச் சொன்னால் வாழ்தலே அசாத்தியமானதாக ஆனதென்று பொருள். இதனால் ஆஷ்விட்ஸில் எந்த மாற்றமும் ஏற்படாது என்பது உண்மையாகவே இருக்கட்டும். அங்கு இருப்பவர்களின் வாழ்வை அசாத்தியமானதாக ஆக்குவதே பாசிஸ்டுகளின் நோக்கமாக இருந்தது. அதற்கு வெளியே, நம்பிக்கைகளும் லட்சியவாதமும் மெய்யான மாற்றத்தை அளிக்கின்றன. ஆனால் விஷயம் தேர்ந்தபின், லட்சியங்களும் லட்சியவாதமும் ஒரு ஏமாற்றுவித்தை என்ற சந்தேகம் நீக்க முடியாததாகிறது.
ஆஷ்விட்ஸுக்கு மனித நேயத்தையோ சமயத்தையோ குற்றம் சொல்ல முடியுமா என்ற சில்லறைத்தனமான, கொடும்கேள்வியல்ல விஷயம் – இரண்டையுமே குற்றம் சொல்ல முடியாது. ஆனால் அங்கே மனிதர்கள் நடந்து கொண்ட விதத்தின் வெளிச்சத்தில் மனித நேயம் நம்பிக்கைக்குரிய ஒன்றாக இருக்க முடியுமா? நாம் மனித இனம் மகோன்னதமானது என்றோ பெரும்போற்றுதலுக்குரியது என்றோ நினைக்க இடமுண்டா? இந்தக் கேள்விக்கு விடையில்லை என்பதன் இல்லாமை இந்தச் சிறு புத்தகத்தின் பிற பகுதிகளை நிறைக்கிறது. ஆனால் தன்னளவில் இந்தக் கேள்வியே, மனிதன் உண்மையை நேசிக்கிறான் என்பதன் உயர்ந்தெழும் சாட்சியாகவும் இருக்கிறது.
முழுக்கட்டுரையையும் வாசிக்க – கார்டியன்
image credit: Penguin.co.uk