
ஒரு கல் – ஒரு கதை – இரு கவிதைகள்
I
தொல் நெடுங்காலத்தில்
டைனோசர்கள் ஆகாயத்தில் பறந்து கொண்டிருந்தபோது
பனிவெளியின் ஆப்பிள் மர நிழலில்
கண்மூடி உறைந்து தவம் செய்த முனிவனை
சூழ்ந்து இறுக்கியது குருதிப் பசியடங்கா மலைப்பாம்பு.
“எதையும் இறுக்கும் திண்மை கொண்ட நீ
என்றும் இறுகிய கல்லாய்க் கிடவாய்,”
அழியா சொல்லுடன் காற்றில் கரைந்தான் முனிவன்,
முறுகி முயங்கிச் சில்லுகளாய் வெடித்தது கல்பாம்பு.
பன்னெடுங்காலம் கடந்த ஒரு வேனிற்கால மாலைப் பொழுதில்
மலைவேடன் கையில் அகப்பட்டது
கூர் முக்கோணத் துண்டு.
கல்பாம்பு உள்ளுக்குள் நகைத்தது,
“மூடன்! என்றென்றைக்கும் குருதியை சுவைக்கும்
வரம் அளித்துவிட்டான்”
– நரோபா
II
சூரியனின் கரங்களைத் தடுக்கும்
வானுயர்ந்த அடர் வனத்தின்
புதர்களைக் கோடரியால் வெட்டி
என் பாதையை நானே உருவாக்கிக்கொண்டு
இரை தேடிச் சென்றேன்
திடீரென்று புதர்களில் மறைவிலிருந்து
தாவிக் குதித்து என் முன் கால தேவன் போல் நின்றது
உக்கிரப் பார்வையும் மாசற்ற தேகமுமாய்
ஒரு வரிப்புலி
“ஆஆஆ” என்ற ஆக்ரோஷ ஒலி
என் தொண்டையைக் கீறிப் புறப்பட,
வலது கை வானுயர, வலது கால் மேலெழ,
இடது கால் உடலின் பாரத்தை தாங்க
வேகமாய் கோடரியை வீசினேன்
கோடரி மலைப்பாம்பாய்
புலியின் கழுத்தைக் கொள்ளும் நேரம்
தொலைவில் காலடி ஓசை கேட்க
இடப் பக்கம் திரும்பினேன்
காடு மாயமாய் மறைய
ஜன்னல் வழி வந்த சூரியக் கதிரில்
கூர்முனை பளபளக்க
பெட்டிப்பாம்பாய் அசையாமல்
கண்ணாடிக்கூண்டில் படுத்திருந்தது
கல்.
– – எஸ். சுரேஷ்
image credit: Metabauxite axe, The Metropolitan Museum of Art