பல பெரும்பணக்காரர்கள் பூமியிலிருந்து புறப்பட்டு வானூர்தியில் வரும் வழியில் பயங்கரமான ஏதோ ஒன்று நிகழ்ந்திருக்கிறது என்பது என் ஆர்வத்தைப் பெருக்குவதாக இருந்தது. இவர்களில் எத்தனை பேர் பிழைத்துக் கொண்டனர்? பிராணவாயுப் பிரச்சினை எதனால் ஏற்பட்டது? விடையற்ற கேள்விகள்.
ஆங்காங்கே சிதறிக் கிடந்த வானூர்திகளில் என் தேடலைத் தொடர்ந்தேன். அதில் ஓர் கலத்தில் விண்வெளியாய்வு நிறுவனத்தைச் சேர்ந்தவர்களுடன் ஒரு பொறியியலாளர் நிகழ்த்திய உரையாடல் ஒன்றின் அச்சுப் பிரதி கிடைத்தது.
From: Wes Anderson, Senior VP – International Sales
To: Wes_Anderson_Direct_Reports; Deepak Agarwal – Director, Engineering
மக்களே,
இந்த நாள், குறித்து வைத்துக் கொள்ளுங்கள். இன்று நாம் சரித்திரம் படைக்கிறோம்.. இதுவரை மறைவாய் நாம் நிகழ்த்திய ஆய்வுகள் இன்றோடு முடிவுக்கு வருகின்றன. விண்ணை நோக்கி உலகின் முதல் வணிகப் பயணம் துவங்கப் போகிறது என்று இன்று அறிவிக்க இருக்கிறோம். இதுவரை நாற்பது பில்லியனர்கள் பயணிக்க ஒப்புக் கொண்டுள்ளனர். சகல வசதிகளும் கூடிய புத்தம் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் வானூர்தி ஒன்று அவர்களுக்காகக் காத்திருக்கிறது என்று சொல்லியிருக்கிறோம். நம் பிரதான செயலாக்க அதிகாரி மார்க் போடோல்ஸ்கி இது குறித்து இன்று மதியம் இரண்டு மணிக்கு அறிவிப்பு செய்யவிருக்கிறார். இந்தச் செய்தியை அறியும் முதல் சில அதிர்ஷ்டசாலிகள் நீங்கள். எனவே மார்க் இது குறித்து அறிவிப்பு செய்யும்வரை இந்தச் செய்தியை யாரிடமும் சொல்ல வேண்டாம்.
இது நாம் பெருமைப்பட வேண்டிய தருணம். நீங்கள் ஒவ்வொருவரும் சிறப்பாகப் பணியாற்றியிருக்கிறீர்கள் – விரைவில் உங்களுக்கு ஒரு பாராட்டு விழா நடக்கவிருக்கிறது – அந்தப் பார்ட்டி எங்கு, எப்போது என்று விரைவில் எழுதுகிறேன்.
Regards,
Wes
From: Deepak Agarwal
To: Wes Anderson
Cc: Phil Ho, Senior Engineering Manager
இதைச் சாத்தியப்படுத்தியமைக்கு வாழ்த்துகள். நம் அனைவருக்கும் பெருமைக்குரிய தருணம் இது.
நம் திட்டங்களுக்குச் செயல்வடிவம் அளிக்கும் பணியில் என்ஜினியரிங் பிரிவுக்குச் சில பதில்கள் தேவைப்படுகின்றன.
நாற்பது பேர் இம்முறை பயணிக்கப் போவதாகத் தெரிவித்திருக்கிறீர்கள். முன்னரே திட்டமிட்டபடி தொழிலாளர்கள், விஞ்ஞானிகள், பொறியியலாளர்கள், உயிரியலாளர்கள் மற்றும் பல வல்லுனர்களையும் அழைத்துச் செல்ல வேண்டியுள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். இப்போது கூடுதலாக இந்த நாற்பது பேரை அழைத்துச் செல்வது எப்படி? இம்முறை இருபது பேர் மட்டும் பயணித்தால் போதும் என்று நினைக்கிறேன்.
திட்டப்பிரிவின் கருத்துகளை அரிய பில் ஹோவுக்கும் இவ்வஞ்சலின் நகல் அனுப்புகிறேன்.
Regards,
Deepak
From: Wes Anderson
To: Deepak Agarwal; Phil Ho
தீபக்,
நாம் எவ்வளவு பேரை அழைத்துச் செல்வதாக ஒப்பந்தமிட்டிருக்கிறோமோ அவ்வளவு பேரும் வின்பயணம் செய்தாக வேண்டும். இது குறித்து விவாதிக்க இடமில்லை. இருவேறு குழுக்களாக பயணம் செய்வதும் சாத்தியமில்லை. பயணம் செய்யும் ஒவ்வொருவரும் தான் ஒரு முன்னோடி என்று நம்புகின்றனர். பின்னர் பயணிக்கலாம் என்றால் யாரும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். எனவே இதற்கான தீர்வு காண முயற்சி செய்யுங்கள். மிகவும் புதிய தொழில்நுட்பங்களைக் கொண்டு பொறியியல் துறையில் மிகப்பெரும் சாதனைகளைச் செய்தவர்கள் நீங்கள். உங்களுக்கு இதெல்லாம் ஒரு பெரிய விஷயமாகவே இருக்காது என்று நினைக்கிறேன்.
Regards,
Wes
From: Deepak Agarwal
To: Wes Anderson
Cc: Phil Ho
வெஸ்,
நீ சொல்வது புரிகிறது. என் பிரிவு சகாக்களுடன் பேசிப் பார்த்து இதை எப்படி நடைமுறைப்படுத்துவது என்று தீர்மானிக்கிறேன்.
Regards,
Deepak
From: Phil Ho
To: Wes Anderson, Deepak Agarwal
வெஸ்/ தீபக்,
இத்தனை பேருக்கும் இடமிருக்காது என்பதை நான் மீண்டும் மீண்டும் சொல்லியிருக்கிறேன். நம்மால் எப்படியோ இந்த விண்கலத்தை உறுதியான ஒன்றாக உருவாக்க முடிந்திருக்கிறது – முன்னிருந்ததைவிட இப்போது இன்னும் சிறிது உறுதியாகி இருக்கிறது என்பது மட்டுமே இதன் பொருள். இந்நிலையில், சென்ற பயணத்தில் எட்டிய வேகத்தை இம்முறை அடைய முடியாது. மேலும், பயணிகளைக் கொண்டு செல்ல வேண்டிய கூடுதல் சுமை இருப்பதால் இதன் வேகம் இன்னும் குறைய வாய்ப்பிருக்கிறது. கணினியில் சில சோதனை பயணங்களை முயற்சித்துப் பார்த்தோம், ஒன்றும் சொல்வதற்கில்லை. பயணத்தின் முடிவு வரை பிராணவாயு கையிருப்பில் இருக்கும் வகையில் விண்கலம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது, ஓரளவு கூடுதல் கொள்ளளவும் உண்டு. இம்முறை விண்கலம் குறைந்த வேகத்தில் பயணிக்கலாம் எனும்போது போதுமான ஆக்சிஜன் கொள்ளளவு இருக்கிறதா என்பது குறித்து சில கவலைகள் எழுகின்றன. பிலியனர்ஸ் கிளப் விண்கலனின் எடை மற்றும் சுமை கூடுவது நல்லதல்ல. இதனால் எதிர்பாராத விபத்து ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.
From: Phil Ho
To: Wes Anderson, Deepak Agarwal
வெஸ்/ தீபக்,
பொழுதுபோக்கு கருவிகள், வைன் கிடங்கு, மடிகணினி இணைப்பு போன்ற பல்வேறு விஷயங்களுக்காக பிலியனர்ஸ் கிளப் விண்கலத்தில் சில மாற்றங்கள் செய்தாக வேண்டும் என்ற குறிப்பு கிடைக்கப்பெற்றோம். விண்கலம் புறப்பட வேண்டிய நாள் நெருங்கி வருவதால் ஆக்சிஜன் கிடங்கின் அளவைக் குறைப்பதைத் தவிர வேறு வழியில்லை.
இது ஒரு நல்ல முடிவு என்று பரிந்துரைக்க மாட்டேன். நாம் இந்தப் பாதையில் செல்ல வேண்டாம். விண்கலத்தில் மாற்றங்கள் செய்வதைத் தவிர்ப்போம், அதன் ஆபத்துகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை.
Deepak
From: Deepak Agarwal
To: Wes Anderson,
Cc: Phil Ho
மார்க்/ வெஸ்,
பில் ஹோவின் குறிப்பைப் பாருங்கள். விண்கலத்தில் இத்தனை மாற்றங்கள் செய்து நாம் ஏற்றுக்கொள்ள முடியாத அளவு ஆபத்தை எதிர்கொள்கிறோம் என்பதுதான் என் கருத்தாகவும் இருக்கிறது. இது வேண்டாம். பிலியனர்ஸ் கிளப் உறுப்பினர்களைச் சந்தித்துப் பேசி, இத்தனை எதிர்பார்ப்புகள் வேண்டாம் என்று சொல்லலாமா?
Regards,
Deepak
From: Wes Anderson
To: Mark Podolski – CEO, Deepak Agarwal
ஹ்ம்ம், மார்க்கிடம் கேட்கிறேன்.
மார்க்: தங்கள் வழிகாட்டுதல் தேவைப்படுகிறது.
Regards,
Wes
From: Mark Podolski
To: Wes Anderson, Deepak Agarwal
Wes / Deepak,
வெஸ்/ தீபக்,
எனக்கு இதையெல்லாம் படிக்க வருத்தமாக இருக்கிறது என்ற உண்மையைச் சொல்லியாக வேண்டும். இந்தப் பயணத்தின் ஆபத்துகளைப் பார்த்தல்ல, உங்களைப் போன்ற நிர்வாகிகளைப் பார்த்தால் என்ன சொல்வது என்றே தெரியவில்லை. நாம் யார் என்ன செய்கிறோம் என்று எதுவுமே உங்களுக்கு இன்னும் புரியவில்லை. நாம் வெறுமே விண்ணுக்கு ஆட்களை அனுப்பவில்லை. இதற்கு முன்னர் எப்போதும் இருந்திராத ஒரு விண் பயணத்தை சாத்தியப்படுத்துகிறோம். இதுவரை அறிவியல் புனைவுகளில் மட்டுமே இருந்து வந்த ஒரு எதிர்காலத்தை இஇன்று நடைமுறைப்படுத்துகிறோம். மானுடத்துக்கு ஒரு நம்பிக்கை அளிக்கிறோம். இன்று விண்வெளி பயணம் குறித்த அச்சங்கள் குறைந்து எதிர்பார்ப்புகள் அதிகரித்திருக்கின்றன. இந்த உலகமே நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறது, கொள்ளளவு பற்றியெல்லாம் பேசும் நேரம் இதுவல்ல.
மானுடத்தின் கனவை மெய்ப்பிக்க நமக்கு பிலியனர்ஸ் கிளப் தேவை. அவர்களின் தொடர்ந்த ஆதரவு தேவை. அவர்களை மகிழ்ச்சியாக நாம் வைத்திருக்க வேண்டும். இந்தப் பயணம் குறித்த இனிய நினைவுகளோடு அவர்கள் திரும்பி வருவது முக்கியம்.
தீபக், இதுவரை நீ ஒரு தலைசிறந்த நிர்வாகியாக இருந்திருக்கிறாய். மனிதர்களையும் திட்டங்களையும் சரியாகக் கையாண்டு வெற்றி பெற்றிருக்கிறாய். இப்போதும் இது சம்பந்தமாகச் செய்ய வேண்டியதை நீ செய்வாய் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நீ சரி என்று சொன்னபின்தான் நான் சரி என்று சொல்வேன். நாளை மதியத்துக்குள் இது தொடர்பான பணிகள் அத்தனையும் முடிந்திருக்க வேண்டும்.
இதை மட்டும் தயவு செய்து நினைவில் வைத்துக்கொள்: உலகம் நம்மை கவனித்துக் கொண்டிருக்கிறது.
Mark P.
From: Deepak Agarwal
To: Mark Podolski, Wes Anderson
எல்லா வேலையும் முடிந்துவிட்டது. மகிழ்ச்சியாக இருக்கிறது. இனி அதிர்ஷ்டம் நமக்கு துணை செய்யட்டும்.
Regards,
Deepak
000
அச்சுப்பிரதிகள் இங்கு முடிந்தன. உண்மையில் என்ன நடந்தது? பொறியாளர்கள் சொன்னவை அலட்சியப்படுத்தப்பட்டனவா? அவர்கள் அஞ்சியது போலவே நடந்ததா? இது தொடர்பான பிற ஆவணங்களைத் தேடிக் கண்டறிய வேண்டும். அப்போதுதான் நடந்தது என்ன என்பதை புரிந்து கொள்ள முடியும்.
One comment