
சூன்யத்தின் இசை
பெருமுற்றம் திறக்கப்பட்டு பொதுமக்கள் எல்லாரும் உள்ளே வர ஆர்ம்பித்திருக்கிறார்கள். கௌமுதி உற்சவம் நடக்கும்போது ராஜகிருகம் முழுவதும் மக்கள் கூட்டம் வந்து போய்க்கொண்டே இருக்கும்.
‘அமாத்யர் வருவதாக எதிர்பார்த்திருந்ந்தோம்’
வேகசர்மனை வரவேற்றபடிக்கு விஷ்ணுகுப்தர் சொல்கிறார். அதிகாரமையத்தின் ஆணிவேர் அமைச்சகத்தின் தலைமையிடத்தில்தான் இருக்கிறது என்பது அவருடைய பாடங்களில் ஒன்று.
கனமான கருத்த சரீரத்தின் மேல் போர்த்திய பட்டு சீலையுடனும், முத்துச்சரங்கள் தைத்த சரிகை பாகை பறைசாற்றும் அதிகாரதோரணையோடும், சபாமண்டபத்தில் நுழைந்த வேகசர்மன், விஷ்ணுகுப்தரின் முகமனுக்கு சிரந்தாழ்த்தி பதில் முகமன் செய்துவிட்டு, சூரசேன வம்சத்தின் பராக்கிரமங்களை எடுத்துரைக்கும் வாழ்த்துகளைக் கூறி மகதத்தின் அரசவைக்கு வந்தனம் கூறுகிறான். யவனர்களை புறம்காட்டிய பர்வதவர்த்தனின் புகழ் பெருமதிப்புடன் எட்டுதிக்கும் பரவியிருந்தது. அவன் பின்னால் அணிவகுத்து நின்ற தூதுக்குழுவின் முகப்பில் பாசரின் வர்ணனைகள் மெய்யாகி வந்து நின்றது போல் இருக்கிறாள் வாசவதத்தை. அதுவரை அபிநயத்தில் லயித்திருந்த சபை நடுவே, புத்துருக் கொண்டு காப்பியத்திலிருந்து கிளம்பி வந்தது போல் நின்றிருக்கிறாள்.
வேகசர்மனும் மசோவி இனத்தவன்தான். இருவருக்குள்ளும்தான் எத்தனை வேறுபாடு. அவனைவிட அவள் சில பிடிகள் உயரமாக இருக்கிறாள். வெண்மஞ்சள் நிறமும், இடையைச்சுற்றி விசிறிப்போல் இறங்கியிருந்த சீலையின் விளிம்பில் ஒளிர்ந்த சிறுபாதங்களும், தோளைச்சுற்றி சரிந்து புட்டம்வரை நீண்டிருந்த கூந்தலின் அசாதாரண நேர்த்தன்மையும் இமைய அடிவாரத்தின் மரபை பறைசாற்றுவதாய் இருக்கின்றன. அரசவை வழக்கத்திற்கு மாறாக முக்காடு விலக்கிய தலையில், தங்காபரணங்களும் தோளைச் சுற்றி படர்ந்திருந்த சீனத்து பட்டில் வேலைப்பாடுகள் நிறைந்திருந்தன. ஹபுஷ மரத்தின் சுள்ளிகளை எரித்து தயாரித்த கரைசலில் வர்ணங்களை சேர்த்து பட்டுத்துணியில் ஓவியங்கள் வரைவது மசோவியரின் திறமைகளில் ஒன்று. மசோவியனர் பிறக்கும்போது சிறிய கண்களோடும், பெரிய பாதங்களோடும் பிறந்தாலும், அவர்களில் பெண்கள் மட்டும் கண்களை பெரிதுபடுத்தியும் பாதங்களை சிறியதாகவும் மாற்றிக் கொள்வதில் பெரும் அக்கறை காட்டிவருவார்கள். அகண்ட கண்கள்தான் அழகு என்பது அவர்கள் வழக்கம்.
வெல்லிதானா என்னும் சிறு செடிகளின் காய்களின் சுரப்பை கண்ணுக்கு இட்டு விழிகளை அகலப்படுத்திக் கொள்வார்கள் என்று அவன் அறிந்திருந்தான். மசோவியினரின் பல மூலிகைகள் விஷத்தனம் வாய்ந்தவை. அளவோடு அதைக் கையாளும் திறனை அவர்கள் காலங்காலமாக வளர்த்து வந்திருந்தனர். வேம்பின் பட்டையிலிருந்து பெறப்படும் பாலைக் கொண்டு அழுகும் நிணங்களை குணப்படுத்துவார்கள். அதே பாலின் இன்னொரு வடிவை அம்பில் தோய்த்து பெருமிருகங்களை வேட்டையாடுவார்கள். இமயமலை சாரலிலும், கங்கைக்கரை தீரத்திலும் இதுபோல தனித்திறன் வாய்ந்த குடிகள் பலர் உண்டு. சிந்து நதி தீரத்து சுவர்ணமுகர்கள், இமயமலை சாரலின் கிராதர்கள், விந்திய மலை கோண்டர்கள் என்று பலரைப் பற்றியும் கேள்விப்பட்டிருக்கிறான். மசோவியின் குறிப்பிட்ட பெண்கள் விஷக்கன்னிகளாகவே வளர்க்கப்படுவார்களாம். வாசவதத்தையின் ஒளிரும் நிறமும் பளபளப்பும் அவனுக்கு விஷத்தையே நினைவுபடுத்துகிறது. விஷம்தான் எவ்வளவு கவர்ச்சியானது என்று நினைத்துக் கொள்கிறான்.
பதினெட்டு பெட்டிகளில் நவரத்தினங்களும், எட்டடி உயர அறையை நிறைக்கும் தங்கமும் வெள்ளியும் பரிசில்களாக கொண்டு வந்திருப்பதாகவும், மகதத்தின் நல்லுறவை பேணுவதற்கான எல்லாவித சித்தங்களும் கொண்டிருப்பதாகவும் தூது செய்தியை தெரிவிக்கிறான் வேகசர்மன். மலையகேதுவோடு கூட, பாரசீக மேககோசனும், சிந்துதேச சிந்துசேனனும், காஷ்மீரத்து புஷ்கராக்ஷனும், குலுத சித்ரவர்மனும் சேர்ந்து இலச்சினையிட்ட ஒப்பந்தத்தை மகாமத்திரரிடம் கையளிக்க, விஷ்ணுகுப்தர் புன்னகையோடு தலையசைக்கிறார்.
‘இன்றைய கொலுவில் நீங்கள் எல்லோரும் இருந்து கௌரவித்து, கௌமுதி உற்சவத்தை சிறப்பிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்’ மகாமத்திரர் அஷ்டாவக்கிரரின் கோரிக்கைக்கு வேகசர்மன் பதிலிறுக்கும் முன்னால் புதிய குரல் ஒலிக்கிறது.
‘கொலு மட்டும்தானா, சக்ரவாகன ஊர்வலம், அஷ்டக விழா, சுரனக்காதம் எல்லாம் உண்டுதானே… கௌமுதி உற்சவம் பார்க்கவே ஆர்வமாக விரைந்து மகதம் வந்து சேர்ந்தோம் மகாமத்திரரே’
அரசவை வழக்கத்திற்கு மாறாக ஒலிக்கும் பெண்குரல். சபை திடுக்கிட்டது போல் இருக்கிறது. பத்ராசலரின் குரலில் வாசவத்த்தையைப் பற்றிய நினைவில் கட்டுண்டுகிடந்த அவனுக்கு அது பிறழ்வாக தெரியவில்லை.
மகாமத்திரர் மீண்டுமொருமுறை அவளை நோக்கி ஆமோதிக்கும் பாவனையில் ‘நிச்சயம் உண்டு பெண்ணே. நாமே உங்களை கூட்டிச்செல்கிறோம். இன்றைய நகர்வலத்தில் நீங்கள் காண விரும்பும் சக்ரவாகனங்கள் அணிவகுப்பு பிரமாதமாக இருக்கப்போகிறது. ‘ அவனைச் சுட்டிக் காட்டி ‘சக்ரவர்த்தியின் பிரியத்திற்கு உகந்த யானைகள், மகதத்தின் மகோன்னதங்கள், அத்தனையும் உண்டு. நாளை சுரனக்காதம் தொடங்குகிறது’
சுரனக்காதம் என்பது மதுவருந்தும் விழா. ராஜகிருகத்தின் தொன்மையான பண்டிகை. கௌமுதி உற்சவம் போது அனைத்து அங்காடிகள், மற்றும் சாவடிகளில் குடம்குடமாக மதுவும், மாமிசமும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும். மாலை ஏற ஏற, விற்பனைக்கானது எல்லாம் இலவசமாக விநியோகிக்கப்பட்டு பெரும் கொண்டாட்டமாகி விடிய விடிய நகரமே கூடிக் களித்திடும் விழா.
‘உதயணனின் வாரிசும், கஜேந்திரனின் சொரூபமுமான, பெருமைக்குரிய பிரியதர்சியின், பிரதாபங்களை மிகவும் கேட்டிருக்கிறோம். அவருடைய யாழிசை பண்ணைக் கேட்டு கட்டுண்டுபோகும் யானைகளைப் பற்றி கேள்வியுற்று, பலமுறை வியந்திருக்கிறோம். இந்த எளியவளின் கோரிக்கையை ஏற்று, அரசர் எமக்கு அந்த இசையை அருள வேண்டும்’ இரண்டடிகள் முன்னே வந்து, சபை நடுவில் தலைநிமிர்த்தி அவள் கேட்பதும் அந்த அரசவைக்கு புதிது. அவனுக்கும் புதிது. புதியது என்பதாலேயே ஈர்ப்பு கூடுகிறது..
‘நிச்சயம்’ என்கிறான். அரசவை கொலுவிற்காக திறந்துவிடப்பட்டிருந்த அரண்மனை முற்றத்தில் திரண்டிருந்த கூட்டத்தைப் பார்க்கிறான். எத்தனை எத்தனை முகங்கள். மகதத்தின் அதிகாரபீடத்தை அண்ணாந்து பார்த்து சந்தோஷப்படும் முகங்கள். அந்த முகங்கள் எல்லாம் மறைந்ந்து யானைகளும் குதிரைகளுமாய் பெரிய வனத்தில் அவன் நின்றிருப்பது போல் இருக்கிறது. அவனை சூழ்ந்து கரிய மத்தகங்களின் பெரும் அணிவகுப்பு. ஒவ்வொன்றும் ஒரு மலை. நீண்ட வலிமையான துதிக்கையில் உரசியபடி அவன் உவகையுடன் மீட்டும் யாழிசை அவைகளின் மொழியுடன் இயல்பாக உரையாடும். சூன்யத்தையே வடிவமாகக் கொண்ட கருத்த யானைக்கூட்டதிடையே அவன் இசைத்தபடி லயித்திருக்க, கட்டுண்ட மான்களாக அவை அவனுடைய சொல்படியெல்லாம் கேட்கும். மத்தகத்திலிருந்து மத்தகம் தாவி ஓடி, முட்களின் திண்மையுடன் கூடிய குறுமுடிகள் நிறைந்த தலைகளில் படுத்துறங்கி, விரிந்த செவிகளின் அணைப்பில் விளையாடி, தடித்த தோலுடனான புடைத்த வயிற்றுக்கு மருத்துவம் பார்த்து, அவன் பயிற்றுவித்த யானைகள் மட்டும் எண்ணிலடங்காதவை. நந்தனின் மகத்த்தை விழவைத்தத்தில் பெரும்பங்கு அவனுடைய யானைகளையேச் சேரும்.
விஷ்ணுகுப்தரின் முகக்குறிப்பை உணர்ந்தது போல தூதுக்குழு தலைவர் வேகசர்மன் அடிபணிந்து சபையிடம் விடைகோருகிறார். விரல்களிடையே நழுவிச்செல்லும் பட்டுத்துணி போல வாசவதத்தை சபையை நீங்கிச் செல்கிறாள். அவள் விழிகள் சில கணங்கள் அவன் மேல் தேங்கி நிற்கின்றன. இதழ்களில் மின்னிய சிறு புன்னகையோடு அவள் தலையைத் திருப்பிக் கொண்டு கண்களை தாழ்த்தியபடி செல்கிறாள்.
அதுவரை அவன் மனதில் நிறைந்திருந்த இனிமையான காடும், யானைகளும் மறைந்து போய் வைபாரகரின் படைகொட்டடி நினைவில் வந்து மோதுகிறது. முகமெல்லாம் துன்பூட்டும் வேட்கையுடன் தந்துகேசுவரர் தன் கையிலிருந்த துணிச்சுருளை விரித்து, அதில் செருகியிருந்த சிறு கத்திகளையும், கூர்மையான வளைவு கொக்கிகளையும் அளவு பார்த்தபடிக்கு அவனை நோக்கி முன்னேறுகிறார். உறுதியான மணிக்கயிறுகளால் சுற்றி இறுக்கப்பட்ட புஜங்களுடன், பதினாறு வயது சிறுவனாக அவன் திகிலுடன் நின்றிருக்க, அவன் இடையின் கீழே முழுவதும் நிர்வாணமாக இருக்கிறது. கையிலிருந்த ஆயுதத்துணியிலிருந்து உருவியெடுத்த வளைந்த முனை கொண்ட சிறுகத்தியை அவன் இடையின் கீழே வைத்து பின் மேலே தூக்கி அரைவட்டத்தில் வீச…. அவன் தேகம் சிலிர்த்து அடங்குகிறது.
இந்த நான்காண்டுகளாக எதை மறக்க வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கிறானோ, அந்த நினைவு ஏன் முழுவேகத்துடன் திரும்புகிறது. அதுவும் வாசவதத்தையின் புன்முறுவலைக் கண்டதும்….
‘பிரியதர்சி ஓய்வெடுக்கச் செல்லலாம். அந்திசாய்ந்ததும் நகர்வலம் புறப்பட வேண்டும்’ விஷ்ணுகுப்தரின் குரலில் கரிசனம் கடந்து பல செய்திகள் இருந்ததாக படுகிறது அவனுக்கு.
2 comments