– சிகந்தர்வாசி –

உனக்குள் நுழைகிறேன்
தனிமையில், ஒரு கப் சாயுடன்
கோடியில் உட்கார்ந்துகொள்ள
சிகரெட் புகையுடன் கனவும்
கலந்து மிதக்கிறது இங்கே
எல்லோரையும் ருபாபாக பார்க்கும் வெயிட்டர்கள்
முன்பின் பார்த்தறியாதவரிடம்
தன் பிரச்சினைகளை பகிர்ந்து கொள்பவர்கள்
ஒரு கப் சாயுடன்
இரானி டீக்கடைக்கே உரிய
ஒஸ்மானியா பிஸ்கட், டை பிஸ்கட், பைன் பிஸ்கட்,
க்ரீம், சோட்டா சமோசா ஷெல்பில் இருக்கின்றன
ஒரு கப் சாயுடன் சாப்பிட
கடையினுள் குரல்களின் ஓசை
வெளியிலிருந்து வரும் வாகனங்களின் அலறலைத் தடுக்கிறது
எப்போதும் அந்த மேஜையில்
அதே ஆறு பேர், எங்கும் செல்லாத கனவுகளை
தினமும் காண்கிறார்கள்
ஒரு கப் சாய் அருந்திக்கொண்டே
அதோ, அங்கு டீ அருந்துபவன்
சாஸரிலிருந்து உற்சாகத்தை உறிகிறான்
சிலருக்கு இரானி டீக்கடை
ஆராமாக இருக்க ஒரு இடம்
சிலருக்கு இரானி டீக்கடை
ஒரு புகல், அன்றாட கஸ்ரத்திலிருந்து
தப்ப ஒரு இடம்.
இவற்றில் எது என்னைப் வசீகரித்து,
தினமும் இங்கு அமரச் செய்கிறது?
ஒரு கப் சாயுடன்