“முதலில் சீதலங்கிரி வரும். அங்க ஒரு சின்ன கோவில் இருக்கும். அதுலேர்ந்து ஒரு கிலோமீட்டர் தூரத்துல முல்லைங்கிரி.”
சிக்மகளூர் டவுனிலிருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவில் அன்சார் ஜூர் நடத்தும் ‘ஹோம் ஸ்டே’ வில் அன்று மதியம் தான் வந்திறங்கினேன். மதிய உணவிற்கு பின் கர்நாடகாவின் மிக உயரமான இடம் என்று அறியப்பட்ட முல்லைங்கிரியை பார்க்க என் காரில் புறப்பட்டேன்.
அன்சார் ஜூர் வழி சொன்னாரே தவிர அது எவ்வளவு பயங்கரமாக இருக்கும் என்பதைச் சொல்ல மறந்துவிட்டார். முக்கால்வாசி தூரம் வழி நன்றாகதான் இருந்தது. முக்கிய சாலையை விட்டு மலைச்சாலைக்குள் நுழைந்தபோதுதான் அபாயத்தை அறிய முடிந்தது. வளைந்து நெளிந்து மலை மேல் குறுகலான பாதை. ஒருபுறம் மலை, மற்றொருபுறம் அதளபாதளம்.
கீழே அருமையான காட்சி விரிந்திருந்தது. இங்கிலாந்து கிராமப்புறங்களில் காணும் புல்வெளி போல் பல இடங்களில் பச்சைப் பசேல் என்ற புல்வெளி. நடுவில் ஓர் ஏரி. வேறொரு திசையில் காட்டின் பசுமை. ஓரிரண்டு வெள்ளை மேகங்களைக் கொண்ட நீல வானம். தூரத்தில் மென்மையான பச்சை மலைகள். பச்சை நிறம் உலகை கப்பியது போல் இருந்தது. காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கி ரசிக்கத்தூண்டும் காட்சி. ஆனால் என்னால் ரசிக்க முடியவில்லை.
பத்தடிக்கு ஒரு முறைவளைந்து மறையும் பாதை. மலைக்குப் பின்னாலிருந்து எந்த வண்டி எப்பொழுது வரும் என்று யூகிக்க முடியாது. ஸ்டீரிங்கை விட்டு கையை எடுத்தால் வண்டி சாலையை விட்டு இறங்கி விடுமோ என்ற பயம். சாலையைவிட்டு என் கண்கள் அகலவில்லை. எப்பொழுதாவது ஒரு முறை கிழே பார்ப்பேன். ரசிப்பதற்குள் ஸ்டீரிங்கை சரிசெய்ய வேண்டிவரும். சரிசெய்துவிட்டு கீழே பார்ப்பதற்குள் வளைவு வந்துவிடும்.
சாலையோ குறுகலானது. ஒரு வண்டி போகத்தான் இடமிருக்கும் என்று நான் நினைக்கும்பொழுது எதிரே ஒரு வண்டி வந்தது. நான் இடது பக்கம் நகர வேண்டும். ஆனால் அந்தப் பக்கம் பாதாளம். மிக ஜாக்கிரதையாக இடது பக்கம் நகர்ந்தேன். எதிரே வந்ததோ ஒரு பெரிய வண்டி. அது என் காரை உரசிக்கொண்டுதான் செல்லும் என்று பயந்தேன். நல்லவேளை, அது போல் ஒன்றும் நடக்கவில்லை.
அப்பாடா தப்பித்தோம், இந்தப் பாதையில் அதிக வாகன நடமாட்ட்டம் இல்லாதது நமக்கு நல்லது என்று எண்ணிக் கொண்டவுடன் எதிரே பஸ் வந்தது. எனக்கு அது இரட்டிப்பு மடங்கு பெரிதாக தெரிந்தது.
எப்படியோ கீழே விழாமல், மலையோரமாக மெதுவாக வண்டியை நகர்த்தினேன். பஸ் என்னைக் கடந்து சென்றது. வண்டிக்கு சிராய்ப்புகள் எதுவும் இல்லை.
சீதலங்கிரியில் சமவெளி வந்தது, பெருமூச்சு விட்டேன். ஆனால் அங்கிருந்து கொஞ்சம் தூரம் சென்றதும் மூச்சு நின்றது, தொண்டை அடைத்தது. இதயம் தாறுமாறாக அடித்துக்கொண்டது. என் முன் செங்குத்தான ஒரு பாதை. அதில் தார் ரோடு மாயமாகி வெறும் மணல் மட்டும் இருந்தது. சற்று பிசகினாலும் கீழே உருண்டு செல்வது நிச்சயம். மேலும்,அந்தப் பாதையில் கார் டயர் சறுக்குவது சர்வநிச்சயம். அவ்வளவு மண். எதிரில் வேறு வாகனம் எதுவும் வரக்கூடாது என்று பல கடவுள்களை வேண்டிக்கொண்டு, தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, காரை முதல் கியரில் போட்டு மெதுவாக மலை ஏற ஆரம்பித்தேன். பல மலைகளில் வண்டி ஒட்டியிருக்கும் எனக்கு இது போன்ற பயங்கர அனுபவம் எதிலும் இருந்ததில்லை. ஏறியது என்னமோ அரை கிலோமீட்டர்தான்!!
வெற்றிகரமாக மீண்டும் சமவெளிக்கு வந்து சேர்ந்தேன். வண்டியை விட்டுக் கீழே இறங்கிப் பார்த்தால் முல்லைங்கிரியின் உச்சியை அடைய நூறு படிகளுக்கு மேல் ஏற வேண்டும் என்று தெரிந்தது.
கேமரா பை தோளில், ட்ரிபாட் கையில் என படியேற கிளம்பினேன். செங்குத்தான படிகள். ஏற ஏற நூறு படி ஆயிரம் படி போல் தோன்ற ஆரம்பித்தது.
எனக்கு முன்னால் ஒரு இளம் தம்பதியினர் கைக்குழந்தையுடன் ஏறிக்கொண்டிருந்தார்கள். என்னைப் பார்த்ததும் ‘ஹலோ’ என்றார்கள்.
கணவன் என்னிடம், “நீங்க ப்ரொபஷனல் போட்டோகிராபரா?” என்று கேட்டார்.
“இல்லை சார், ஏதோ ஆர்வக் கோளாறு”
“நீங்க எந்த ஊரு?”
“பெங்களூரு”
மனைவி, “நாங்களும் பெங்களூருதான்”
கணவன், ”நான் ஒரு டென்டிஸ்ட்”
“நான் ஐடி”
நான்கைந்து படிகள் ஏறிய பிறகு கணவர், “இல்ல சார், நீங்க ப்ரொபஷனல் போட்டோகிராபர் தான்”
மனைவி, “ஆமாம். நீங்கள் ட்ரைபாட் எல்லாம் வச்சிருக்கீங்க”
மூச்சிரைக்க வெற்றிகரமாக உச்சியை அடைந்து, காரிலிருந்து பயந்து பார்த்த இயற்கை காட்சியை இப்பொழுது பயமில்லாமல் பார்த்தேன். கொஞ்ச நேரம் காட்சியை ரசித்துவிட்டு கீழே இறங்கும்போது திரும்பிச் செல்ல வேண்டிய பாதை நினைவுக்கு வர வயிறு கலங்கியது. ஆனால், பத்து நிமிடம் கழித்து ஒரு கும்பல் வந்தது. எட்டு பேர் இருப்பார்கள். குடும்பத் தலைவர், அலுவலகத்துக்குள் வந்து சுற்றுமுற்றும் பார்த்தார். என்னைப் பார்த்ததும், “நீங்கள் எங்கே தங்கியிருக்கீங்க?” என்று கேட்டார்.
நான் பதில் சொல்லும்முன், “நாங்க எதிர இருக்கு பாருங்க. அந்த காட்டேஜ்ல தங்கியிருக்கோம்”.
நல்ல அரசியல் செல்வாக்கு இருந்தால் தவிர அந்த காட்டேஜில் தங்க அனுமதி கிடைக்காது. அது எனக்குப் புரிந்திருக்குமோ இல்லையோ என்று சந்தேகப்பட்டு, “மினிஸ்டர் எனக்கு நல்லா தெரியும்.
அதுனால தான் இந்த காட்டேஜ் குடுத்தாங்க”
மறுபடியும் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, பெருக்கிக் கொண்டிருந்த பையனிடம், “நாங்க காட்டுக்குள்ள போகணும். வார்டன் அழைத்துக்கொண்டு செல்வாரா?” என்று கேட்டார்.
“கைடு வருவாரு”
“கைடு எங்கே?”
“வார்டனோட போயிருக்காரு”
“எப்போ வருவாரு?”
“வார்டனோட வருவாரு”
“வார்டன் எப்போ வருவாரு?”
“தெரியாது”
முணுமுணுத்துக்கொண்டு வெளியே குடும்பத்தைச் சந்திக்க சென்றார். எல்லோரும் அவரிடம் கேள்விகள் கேட்க ஆரம்பித்தார்கள்- “வார்டன் ஏன் இல்லை?”, “நீங்க பெர்மிஷன் வாங்கினீங்களா?” “பையன்கிட்ட சரியா கேட்டீங்களா?” என்று கேள்விகள் ஏகசமயத்தில் வந்தன. கேள்விக்கணைகளை எதிர்கொள்ள முடியாமல் மறுபடியும் உள்ளே வந்தார் அவர்.
“நாங்க நேத்தியே பெர்மிஷன் வாங்கி விட்டோம். வார்டனுக்கு நான் வர்றது தெரியாதா?”
பையன் எதுவும் சொல்லாமல் பெருக்கிக்கொண்டிருந்தான்
“வார்டன் வரணுமா இல்ல கைடு வந்தா போறுமா?”
“கைடு வந்தா போறும். அவரோட நீங்க போகலாம்”
“கைடு எங்க?”
அதே உரையாடல்.
“வாட் கவர்ன்மெண்\ட் பெல்லௌஸ்” என்று திட்டிக்கொண்டே வெளியே சென்றார்.
மறுபடியும் குடும்பம் அவரை சூழ்ந்துக்கொண்டு கேள்விமேல் கேள்வி கேட்டது. இந்த முறை வேகமாக உள்ளே வந்தார்.
“கைடு இல்லேன்னா என்ன? நாங்கதான் இவ்வளவு பேர் இருக்கிறோம். நாங்களே ட்ரெக் போறோம். கைடுக்கு எவ்வளவு நேரம் காத்திட்டிருப்பது?”
பெருக்குவதை நிறுத்திவிட்டு, துடப்பத்தை மேலே உயர்த்தி, “சரி சார். நீங்க போகலாம்” என்று பையன் பெர்மிஷன் கொடுத்தான். என்னைப் பார்த்து, “நீங்களும் அவங்களோட போகலாம்”
நானும் அவர்களுடன் கிளம்பினேன். அவர்கள் பேசும் கன்னடத்தை வைத்து அவர்கள் மங்களூர்காரர்கள் என்று தீர்மானித்தேன்.
ஒரு பத்தடி சென்றிருப்போம். அந்த குடும்பத்தில் ஒரு பெண், “கிடைச்சிடுச்சி, கிடைச்சிடுச்சி” என்று கத்தினார். ஏதோ மிருகத்தைப் பார்த்துவிட்டார் என்று எல்லா பக்கமும் பார்த்தேன்.மிருகம் கண்ணில் படவில்லை. அவருக்கு கிடைத்தது மிருக தரிசனம் அல்ல, செல்போன் சிக்னல் என்று புரிந்தது.
“ஹல்லோ” என்று சொல்லிவிட்டு கன்னடத்தில் தொடர்ந்தார். “எனக்கு குடு, எனக்கு குடு” என்று அவர் தாயார் போல் இருந்த ஒருவர் செல்போனை பிடுங்கிக்கொண்டார். அவர் இரண்டு வரிகள் பேசியவுடன் ஒரு இளைஞன் அவர் கையிலிருந்து போனை பிடுங்கினான். இப்படி மாறி மாறி எல்லோரும் போனை பிடுங்கிக் கொண்டிருந்தார்கள்.
குடும்பத் தலைவர் என்னைப் பார்த்து, “நேற்று இரவிலிருந்து சிக்னலே கிடைக்கவில்லை. நேற்று இரவுக்கு பிறகு பேசவே முடியவில்லை. இப்போதான் சிக்னல் கிடைத்தது”. அவர் முகம் சந்தோஷத்தில் பூரித்திருந்தது.
“எல்லோரும் இங்கிருக்க யாரோடு பேசுகிறார்கள்?” என்ற கேள்விக்கு எனக்கு விடை கிடைக்கவில்லை.
கொஞ்சம் தூரம் நடந்தபின் சிக்னல் மறைந்தது. எல்லோரும் உரக்க பேசிக்கொண்டு நடந்தார்கள். கிலோமீட்டர் தூரத்தில் கிசுகிசுத்தால் காது கேட்கும் விலங்குகள் இவர்கள் பேச்சை கேட்டு காட்டிற்குள் மறைந்துவிட்டன. “ஏன் அனிமல்ஸ் ஒண்ணுமே காணோம்” என்று ஒவ்வொருவராக உரக்க கேட்க ஆரம்பித்தார்கள். எல்லா கேள்விகளும் குடும்பத் தலைவர் நோக்கியே பறந்தன. அவர் பதில் சொல்ல வாய் திறப்பதற்குள் அடுத்த கேள்வி வந்துவிடும். நொந்து போன அவர், “நடந்தது போறும். திரும்பி போகலாம்” என்று யாரோ சொன்னதை உடனே ஒப்புக்கொண்டார். எல்லோரும் திரும்பினார்கள்.
குடும்பத் தலைவர் என்னைப் பார்த்து, “வெறும் காடுதான் இருக்கு. அனிமல்ஸ் இல்ல. பாத்தது போறும். நாங்க திரும்பி போறோம்” என்று சொல்ல நான் குழம்பி நின்றேன்.
இப்பொழுது நான் என்ன செய்ய வேண்டும்? திரும்பி அவர்களுடனே சென்று கைடு வரும்வரை காத்திருந்து மறுபடியும் வருவதா? இல்லை நடையைத் தொடர்வதா? கைடு வருவதற்கு ரொம்ப நேரமானால் மதிய உணவு வேளை வந்துவிடும். கைடு இல்லாமல் காட்டுக்குள் போவது சரியா?
சற்று நேரம் அங்கேயே நின்று யோசித்துவிட்டு, “சரி நடப்பது நடக்கட்டும்” என்று நடக்க தொடங்கினேன்.
காட்டுக்குள் நடப்பது ஒரு தனி அனுபவமாக இருந்தது. நாலா பக்கமும் வானுயர்ந்த மரங்கள். ஒரு பகுதியில் மூங்கில் காடு. மூங்கில் மரங்கள் காற்றுக்கு அசைந்து இசை எழுப்பிக் கொண்டிருந்தன.
கண்ணுக்குத் தெரியாத பறவைகள் ஏதோ பேசிக்கொண்டே இருந்தன. மரங்களின் நடுவிலிருந்து சூரிய ஒளி ஊடுருவிகொண்டு வந்து தரையில் விழுந்தது. பாதை எங்கும் திட்டுத்திட்டாக வெளிச்சம்.
சற்றும் தூரம் சென்ற பின் மரங்கள் மறைந்து புதர்கள் வர தொடங்கின. இன்னும் சற்று தூரம் சென்றபின் பாதை மறைந்தது.
புதர்களுக்கு நடுவில் வெட்டவெளி. அங்கு நின்று பார்த்தால் பாதை தெரியவில்லை. எங்கும் புதர்கள், அவற்றுக்குப் பின்னால் பிரும்மாண்டமான மரங்கள். இனி என்ன செய்வது?
திரும்பிவிடலாம் என்று யோசித்துக்கொண்டே புதர்களில் பாதையை தேடினேன். ஒரு சின்ன பாதை இரு புதர்களுக்கு மத்தியில் தென்பட்டது. பாதை தென்பட்டதால் குழப்பம் அதிகரித்தது. “இந்த பாதைதான் சரியான பாதையா? தவறான பாதையானால் நாம் காட்டுக்குள் சிக்கிக்கொள்வோமா? நான் திரும்பி வரவில்லை என்று அந்த பையனுக்கு தெரிந்திருக்குமா? அந்த குடும்பத்துடன் நானும் திரும்பிட்டேன் என்று நினைத்துக் கொள்வானா? நான் வரவில்லை என்றால் வார்டன் யாரையாவது அனுப்புவாரா? காட்டுக்குள் எவ்வளவு நாள் நம்மால் உயிர் வாழ முடியும்?” என்று பல கேள்விகள் மனதில் ஒரே சமயத்தில் எழுந்தன. இவ்வளவு பயந்து ஏன் போக வேண்டும். திரும்பிவிடலாம் என்று நினைத்தேன். ஆனால் வீரனுக்கு இதெல்லாம் சகஜம் என்று மனது சொல்ல, அந்தச் சிறிய பாதைக்குள் நுழைந்தேன்.
கொஞ்ச தூரம் சென்றவுடன் பாதை பெரிதானது. “சரி இதுதான் சரியான பாதை” என்ற நம்பிக்கை பிறந்தது. ஏதோ சலசலப்பு கேட்க நின்று கவனித்தேன். அது ஓடையின் சப்தம் என்று உணர்ந்தபின் அதை நோக்கி நடந்தேன். ஒரு சிற்றோடையைக் கடக்க வேண்டியிருந்தது. ஏதாவது மிருகம் தண்ணீர் குடிக்க வந்திருக்கிறதா என்று பார்த்தேன். ஒன்றும் கண்ணில் படவில்லை. கையால் நீரை அள்ளிக் குடித்தேன்.
ஓடையைக் கடந்து நடை தொடர்ந்தேன். ஓரிடத்தில் பாதை வளைந்தது. அந்த வளைவைக் கடக்கும்போது என் முன் ஒரு மிருகம் வந்தது. பயத்தால் நானும் அந்த மிருகமும் ஓரடி பின்னல் குதித்தோம்.
அந்த மிருகம் ஒரு மான் என்று அறிந்தபின் போன உயிர் திரும்பியது. நான் ஒரு மனிதன் என்று உணர்ந்த மான் புதருக்குள் ஓடி மறைந்தது. நான் புதருக்குள்எட்டிப் பார்த்தேன், மானைக் காணவில்லை.
சந்தித்தது மான்தான் என்றாலும், இப்பொழுது பயம் அதிகரித்தது. மானைத் தேடிக்கொண்டு புலி வந்தால்? அல்லது, யானை வந்தால் இன்னும் எவ்வளவு தூரம் இருக்கிறது காடு? நடையின் வேகத்தை அதிகரித்தேன். பாதையின் பக்கத்திலுள்ள மரங்களில் லங்கூர் எனப்படும் கருப்பு முகமும் சாம்பல் உடம்பும் கொண்ட குரங்குகள் தாவித் தாவி ஆடிக்கொண்டிருந்தன. எனக்கோ பீதி பற்றிக்கொண்டது.
இந்த குரங்குகள் என் பக்கம் வருமா? என் கழுத்தில் தொங்கும் காமிராவை பிடுங்கப் பார்க்குமா? என்னைக் கடிக்குமா? ஒன்றோ இரண்டோ வந்தால் சமாளிக்கலாம். அரை டஜன் வந்துவிட்டால்? அவற்றை உற்றுப் பார்த்துக்கொண்டே மிக பத்திரமாக நடந்தேன். எதுவும் சப்தம் வராமல் பார்த்துக்கொண்டேன். பயத்தில் நடுங்கிக் கொண்டிருததால் அவற்றை புகைப்படம் எடுக்க வேண்டும் என்று தோன்றவேயில்லை. நான் குரங்குகளை கவனித்தேனே தவிர, என் நல்ல காலம், அவை என்னை பார்க்கவில்லை.
சற்று தொலைவில் வீடுகள் தெரிய ஆரம்பித்தன. அவற்றைப் பார்த்து பெருமூச்சு விட்டேன். அப்பொழுது ஒரு ஜீப் வரும் சப்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தால் ஜீப்பில் இருவர் இருப்பது தெரிந்தது.
“யார் நீ?” என்று காக்கி சட்டை அணிந்திருந்தவர் கேட்டார்.
“ட்ரெக் வந்தேன்”
“பெர்மிஷன் வாங்கினாயா?”
“நேற்று அன்சார் ஜூர் வாங்கினார்”
“ஒ, ஆமாம். நேற்று வந்திருந்தார். நான்தான் வார்டன். நீ ஏன் தனியா வந்த?”
“கைடுக்கு வெயிட் பண்ணேன். ஒரு குடும்பத்தோட வந்தேன். ஆனா அவங்க திரும்பிட்டாங்க”
“நீங்க படிச்சவங்க. இப்படி பண்ணலாமா?” என்று கேட்பார் என்று நினைத்தேன். அவர் அப்படி கேட்கவில்லை. “இது பயங்கரமான இடம். இனிமே தனியா வரக்கூடாது”
“சரிங்க ஆபிசர்”
அவர் ஜீப்பில் சென்றுவிட, நான் மெதுவாக நடந்து வார்டன் அலுவலகத்துக்கு வந்து, வார்டனுக்கு நன்றி சொல்லிவிட்டு அன்சார் ஜூர் மனையை அடைந்தேன்.
இப்பொழுது நினைத்துப் பார்க்கும்போது நான் செய்தது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பது உரைக்கிறது. காடு என்னை ஒன்று செய்யாமல் விட்டது நான் என்றோ செய்த புண்ணியமாகதான் இருக்கவேண்டும்.
ஒளிப்பட உதவி – Shachi Trivedi
