இங்கர்சால் எனும் பெயர் பிராமண குடும்பங்களில் ரொம்பவே அபூர்வம். பெயர் பொருத்தமில்லை என்றாலும் இவனும் கொஞ்சம் அபூர்வமானவன் தான். காலையில் அவன் மரண செய்தியை அறிந்ததிலிருந்து வழக்கத்திற்கு மாறாக மூன்று நான்கு தடவை வயிறு கலக்கி வெளியே போனது. அவனுக்கும் என் வயதிருக்கலாம், இல்லை இரண்டோ மூன்றோ அதிகமாகக்கூட இருக்கலாம். சவுண்டு மாமா எஸ்.எம்.எஸ் அனுப்பியிருந்தார். ரேடியோ ஸ்டேஷனில் பணியாற்றியதாலோ இல்லை உச்ச ஸ்தாயியில் பேசுவாதாலோ அவருக்கு அந்த பெயரில்லை. சௌந்தரராஜன் எனும் இயற்பெயரின் சுருக்கம் தான், ஆனாலும் பொருத்தமான பெயர் சுருக்கம்.
மாமா தூரத்து உறவு, தீவிர நாத்திகர் ஆனால் கட்சிகளிலோ அமைப்புகளிலோ இருந்ததில்லை. தன்னை நாத்திகர் என பறைசாற்றிகொண்டதோ அதன் மகத்துவத்தை ஏற்க சொல்லி பிரசாரம் செய்ததோ கூட இல்லை. அவருடைய வடபழனி வீட்டில் பூஜை அறை கிடையாது. அவர் அமாவாசை தர்ப்பனமோ வருடாந்திர தெவசமோ செய்வதில்லை என்பதில் பொதுவாகவே குடும்பத்தில் எல்லோருக்கும் வருத்தம். பித்ரு சாபம், புத் நரகம் என்றெல்லாம் பலரும் அவரிடம் சொல்லும்போது அமைதியாக கேட்டுக்கொண்டு இருந்துவிட்டு புன்முறுவலுடன் சென்றிடுவார். மாமா நல்ல வாசகரும் கூட. கோபராஜூ ரமாச்சந்திரராவ் எனும் கோராவை எனக்கு அறிமுகப்படுத்தியது அவர் தான். an atheist with gandhi எனும் நூலை உளவியலில் பட்டபடிப்பு முடித்ததற்காக எனக்கு பரிசளித்தார். இளமையில் மாமாவின் தந்தை இறந்தபோது அவருடைய அம்மாவிற்கு சில அமங்கல சடங்குகள் செய்யவேண்டும் என பெரியவர்கள் சொன்னதை கேட்டு கொதித்து நாத்திகர் ஆகி பூணூலை அறுத்து எறிந்துவிட்டு அம்மாவை அழைத்துக்கொண்டு மெட்ராசுக்கு வந்தார் என ஒருமுறை அம்மா என்னிடம் சொல்லியிருக்கிறாள். நானும் அதையே செய்திருக்க வேண்டும் ஆனால் அன்று எனக்கு போதிய வயசு இல்லை.
“என்ன ஆச்சு க்ரிஷ்? யு லுக் சோ க்ளுமி” என்று அருகமர்ந்தபடி வினவினாள் ஜானு. “ஒண்ணுமில்ல ..இங்கி இறந்துட்டான்…ரெண்டு நாள் ஆச்சாம்.” என்றேன் மொபைலில் வந்த மெசேஜை அவளிடம் நீட்டியபடி. சற்றுநேரம் மவுனமாக அமர்ந்திருந்தாள். எழுத்தாளனின் அகம் செயல்படும் விதம் குறித்து அவள் நன்றாகவே அறிவாள். துயரமோ மகிழ்ச்சியோ எதுவுமே அவன் வெளிபடுத்துவதை காட்டிலும் பன்மடங்கு அதிகமாக அவன் அகத்தை அலைகழிக்கும். சித்தன்னவாசல் குகைபோல் சிறிய ஒலியை, சலனத்தை பன்மடங்கு பெருக்கி காட்டும். “நான் கேப்ல ஆபீஸ் போய்க்கிறேன்..உனக்கு வண்டி தேவ படலாம்..டேக் கேர்” என்று கூறிவிட்டு கிளம்பி சென்றாள். இன்று கன்னிமரா செல்லவேண்டும் என எண்ணியிருந்தேன். சுதந்திர போராட்ட பின்னணியில் எழுதிகொண்டிருக்கும் புதிய நாவலுக்கு சில தரவுகள் தேவையாய் இருந்தன. ஆனால் இன்னும் இரண்டு மூன்று நாட்களுக்கு நான் எதையும் செய்ய முடியாது.
பள்ளி காலங்களில் ஒவ்வொரு வருடமும் ஆண்டு விடுமுறைக்கு சென்னைக்கு வருவது வாடிக்கை. ஊரிலிருந்த உறவுகள் மெதுவாக சென்னையில் குடியேற துவங்கிய காலகட்டம் அது. ஒவ்வொரு உறவினர் வீட்டிற்கும் சென்று வருவோம். மாம்பலத்தில் புதிதாக எழும்ப தொடங்கியிருந்த அடுக்குமாடி கட்டிடங்கள், மயிலாப்பூர் சந்து இடுக்குகளில் இருக்கும் பழங்கால அக்கிரகாரத்து ஒண்டுக்குடித்தனங்கள், கனகாம்பரம் பூத்து நிற்கும் சுற்றுசுவறற்ற ஒடுக்கமான நீரொழுகும் பெரம்பூர் ஐ.சி.எப் க்வார்டர்ஸ்கள் என சென்னையில் பல குடும்பங்கள் மெல்ல வேர்விட துவங்கின. இங்கியை அப்படியான ஒரு சென்னை விஜயத்தின் பொது தான் முதன்முதலில் பார்த்தேன். அதற்கு முன்னர் இரண்டு மூன்று வருடங்கள் அங்கு வந்திருந்தாலும் இங்கியின் அக்காக்கள் இருவரை மட்டுமே பார்த்திருக்கிறேன். ஒருமணிநேரத்திற்கு மேல் அங்கு செலவிட்டதில்லை. புனா ஆர்மி கல்லூரியில் மருத்துவ படிப்புக்காக நுழைவு தேர்வு எழுத நானும் அம்மாவும் அங்கு சென்றோம். அங்கே ஏ.வி.எம் பள்ளியில் தான் தேர்வு.
ஐந்தரை மணிக்கெல்லாம் அவர்கள் வீட்டு வாயிலில் இறங்கிவிட்டோம். எழுப்புவதா இல்லை இன்னும் அரைமணிநேரம் காத்திருப்பதா என இருவருக்குமே தயக்கம். மாடி அறையிலிருந்து ஒரு ஜன்னல் திறந்து மூடியது. பின்னர் மெலிந்த நீள்முடியும் ஆட்டுதாடியும் கொண்ட வேட்டிகட்டிய இளைஞன் படியிறங்கி கீழே வந்து கதவை திறந்துவிட்டான். எதுவுமே பேசாமல் மீண்டும் விடுவிடென மாடி ஏறி ஏதோ ஒரு அறைக்குள் நுழைந்து மறைந்துவிட்டான். தேர்வு முடித்துவிட்டு மாலை வீடு திரும்பிய பின்னர் தான் மீண்டும் அவனை கண்டேன். அவனே தன்னை அறிமுகபடுத்திக்கொண்டு பேசினான். ஏதோ ஒரு கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் இறுதியாண்டு படிப்பதாக சொன்னான். மருத்துவத்தை காட்டிலும் இஞ்சினியரிங் படிப்பிற்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்றான். சென்சார் பற்றிய தனது இறுதியாண்டு ப்ராஜெக்டை விளக்கி கூறிகொண்டிருந்தான். அவன் அறைக்குள் அழைத்து சென்றான். அங்கு பெண் சாயலில் தலைசாய்த்தபடி இருக்கும் சாமியாரின் புகைப்படம் ஒன்றிருந்தது. அதற்கு கீழ் சிறிய அரைவட்ட மலரலங்காரமும் விளக்கும் இருந்தன. பனிரெண்டாம் வகுப்பு முடித்து கல்லூரிக்கு புகும் காலகட்டத்தில் தான் எதேச்சையாக இந்த புத்தகத்தை வாசிக்க நேர்ந்ததாக சொன்னான். அது தன் வாழ்வையே மாற்றியமைத்துவிட்டது என்றான். நீயும் படித்துவிட்டு கொடு என்று ஒரு யோகியின் சுயசரிதம் நூலை எனக்களித்தான். அதன் பின்னர் அவன் அந்த நூலை திருப்பி கேட்கவே இல்லை. உணவு உண்ணாமல் காற்றை மட்டும் சுவாசித்து வாழும் துறவி, ஒரே நேரத்தில் ஈருடலில் வசிக்கும் துறவி, புலி தோல் அணிந்த பயில்வான் துறவி என மாயாஜால கதையை போல் அதை படித்து முடித்தேன். கல்லூரி படிப்புக்காக மீண்டும் சென்னைக்கே வரவேண்டியதாகி விட்டது. எப்போதாவது அவர்கள் வீட்டிற்கு செல்வேன். அவன் எம்.எஸ். படிக்க அமேரிக்கா சென்றுவிட்டிருந்தான். அக்காக்களுக்கு திருமணம் முடிக்க முனைந்து கொண்டிருந்தார் மாமா. கல்லூரி பேராசிரியராக இருந்த ஒரு அக்கா தனக்கு திருமணமே வேண்டாம் என உறுதியாக இருந்தார். மற்றொருவர் அவருடன் பணிபுரிந்தவரை திருமணம் செய்துகொள்ள அனுமதி கோரினார். எளிமையாக நடந்த இரண்டாவது அக்கா திருமணத்தின் போது கூட இங்கி வரவில்லை.
வேலை திருமணம் என காலம் சுழற்றி அடித்தது. நானும் ஜானுவும் பெங்களூர் திப்பசந்த்ரா பகுதியில் குடிவந்து சில மாதங்கள் இருக்கலாம். ஒருநாள் மாலை அபார்ட்மென்ட் காவலாளி வந்து யாரோ ஒருவர் என்னை பார்க்க வந்திருப்பதாக சொன்னான். கருப்புசட்டையும் காவி வேட்டியும் அடர்தாடியும் சுருட்டை முடியும். அவனை எனக்கு அடையாளமே தெரியவில்லை. இங்கி என அறிமுகபடுத்திகொண்டவுடன் அவன் மாற்றங்களை புலன்கள் கிரகித்துகொண்டன. மலைக்கு மாலை போட்டிருந்தான். உள்ளே அழைத்து வந்தேன். அவனுடைய கோலத்தை ஏற இறங்க பார்ப்பதை கண்டு புலனடக்கம் பழக மாலை போட்டு விரதமிருப்பதாக கூறினான். ஏதோ ஒரு யுனிவர்சிட்டி பேரை சொன்னான். அங்கு ரோபோடிக்ஸ் துறையில் பணியாற்றும் பேராசிரியர் ஒருவர் முன்பொருமுறை தான் எழுதிய தகுதி தேர்வுக்கு ஹால் சூப்பர்வைசராக இருந்தார். அவரை காண வந்திருக்கிறேன் என்றான். என்ன முட்டாள்தனம் என அவனிடம் கத்த வேண்டும் போலிருந்தது.
அடக்கிக்கொண்டு அறையில் ஓய்வெடுக்க சொல்லிவிட்டு சவுண்ட் மாமாவுடன் பேசினேன். இங்கி இங்கிருக்கிறான் என சொன்னதும் உடைந்து அழ தொடங்கினார். “அமெரிக்காலேந்து வெஜிடபிள் மாதிரி தான் வந்தான்..ரெண்டு வருஷம் ஆச்சுப்பா..சைக்காட்ரிஸ்ட் அது இதுன்னு அலஞ்சு இப்பதான் கொஞ்சம் பரவால்ல..திடீர் திடிர்னு சொல்லாம கொள்ளாம காணாமா போயிடறான்..அங்க எப்படி வந்தான்னு தெரியல.. ஆனா அதுவும் நல்லதுக்கு தான்…நானும் ரிடையர் ஆயிட்டேன்..வேலைக்கு போலாமேன்னா கொவப்படுறான் உன்கிட்ட சொல்றதுக்கு என்ன..ரெண்டுதடவை என்னையே அறஞ்சுட்டான்“ குரல் தழுதழுத்தது. என்னாலும் கூட கண்ணீரை கட்டுபடுத்தமுடியவில்லை.
“அமெரிக்காவில என்னமோ நடந்துருக்கு..லவ்வு கிவ்வு பண்ணி தொலைச்சுருகானோ என்ன இழவோ சொல்லி தொலையலாம் இல்ல? வாயை திறக்க மாட்டேங்கிறான்.. எப்படியாவது பேசி என்ன பிரச்சனைன்னு கேட்டு சொல்லு…சிரமம் பாக்காம கொண்டுவந்து வீட்டுல விட்டுடு” என்று சொல்லிவைத்தார். ஆபீசில் இருந்த ஜானுவிற்கு தகவல் சொன்னேன். எவனோ ஒரு கிறுக்கனை கூட்டிக்கொண்டு நான் சென்னைக்கு பயணமாகும் யோசனையில் அவளுக்கு துளிகூட ஒப்புதல் இல்லை. மாமா கேட்கிறார் தட்ட முடியாது என ஒருமாதிரி சமாதானபடுத்திவிட்டு வந்தேன்.
அறைக்குள் நுழைந்தால் மாலையை கழட்டி மேஜை மீது வைத்திருந்தான். பாத்ரூம் கதவிடுக்கிலிருந்து சிகரெட் புகை மெல்ல கசிந்து நாசியை முட்டியது. வேட்டியை மடித்தபடி சிரித்துக்கொண்டே வெளியே வந்து “ஆச்சாரம் முக்கியம்” என்றபடி மாலையை போட்டுகொண்டான். தலையை எதிலாவது முட்டிக்கொள்ள வேண்டும் போலிருந்தது. கையிலிருந்த டெலிபோன் பில்லை கசக்கி குப்பையில் போட்டுவிட்டு வந்தேன். ஏதேதோ பேசிக்கொண்டே வந்தான். தன்னிடம் ஒரு மாபெரும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புக்கான ஃபார்முலா இருக்கிறது என்றான். ஆட்டோமொபைல் இண்டஸ்ட்ரியே ஸ்தம்பித்துவிடும். அதற்கு காப்புரிமை வாங்கிய பிறகு துவங்க போகும் நிறுவனத்திற்கு என்னையும் பார்ட்னராக இணைத்துகொள்கிறேன் என்றான் குத்கா பொட்டலத்தை பிரித்து வாயில் குதப்பியபடி. காரில் வெளியே கிளம்பி சென்றோம்.
மெல்ல அவனிடம் பேச்சு கொடுத்தேன். பேச்சு கொடுத்தேன் என்பதை விட பேசியதை கேட்டுக்கொண்டு இருந்தேன் என்று தான் சொல்ல வேண்டும். அமெரிக்க வாழ்க்கையை பற்றி விசாரித்தேன். பாகிஸ்தானிய நண்பர்கள், குஜராத்தி ரூம் மேட், இந்திய உணவகங்கள், வாழ்க்கைமுறை பழக்கவழக்கங்கள் என உதிரிகளாக சிலவற்றை கூறினான். “அங்க என்னால பீஸ்புல்லா இருக்க முடிஞ்சதே இல்ல..எப்பவுமே என்ன ரெண்டு கண்ணு ஆப்சர்வ் பண்ணிகிட்டே இருக்குற மாதிரி..என்னால அதுகிட்டேந்து தப்பிக்கவே முடியல..இங்க அப்டி இல்ல ஜஸ்ட் பஸ்ல ஏறினா, இல்ல ரோட்டுல இறங்கி நடந்தா கூட போதும் ரொம்ப ஈசியா காணாம போயிடலாம்….
எனக்கு பரமஹம்சர் நினைவுக்கு வந்தார் “உன்னோட ஆன்மீக முயற்சி எல்லாம் எவ்ளோ தூரம் இருக்கு?” என்றேன் வண்டியை நிறுத்த சொன்னான். மாலையை கழட்டி டாஷ்போர்டில் வைத்துவிட்டு இறங்கி மெல்ல புகைக்க தொடங்கினான். ‘பாரு..ஆன்மிகம் அப்டிங்கிறது மாயமந்திரமோ, சித்து வேலைகளோ இல்ல..நான் முன்னகாட்டிலும் இப்ப தான் ஆன்மீகவாதியாக உணர்றேன்…ஒவ்வொரு செக்கண்டும் முழுமையா வாழ்கிறேன் பூரணமாக மலர்றேன்..நான் என்னை கடவுளாக உணர்றேன்..அப்பா நல்ல ஆன்மீகவாதியாக வந்திருக்கவேண்டியவர் ஆனா அவர் தன்னைத்தானே ஏமாத்திக்கிறார்” என சிரித்தான். வெயில் தோலில் பட்டு எரிந்தது. சிகரெட்டு பிடிப்பதும் குத்கா மெல்லுவதும் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிவருவதும் கூட ஆன்மீக வாழ்வில் அடக்கம் தானா என கேட்டிருக்க வேண்டும். சற்றுநேரம் புகை இழுத்தபடி அமைதியாக இருந்தான்.
“அங்க உன்னோட பெர்சனல் லைப் எப்டி இருந்தது?”
“ நேரடியா கேக்கலாம்..செக்ஸ் லைப் பத்தி தானே தெரிஞ்சிக்கணும்.”
நான் எதுவும் பதில் சொல்லவில்லை.
.”செக்ஸ் அமெரிக்கால ரொம்ப சீப், ஈசியா இருக்கும்னு எல்லா இந்தியன்சும் நினைக்கிறீங்க..ஆனா உண்மை அதில்ல..நா பிரம்மச்சரிய விரதம் எடுத்துகிட்டு இருந்தேன அங்க..பட் எனக்கு இந்த வெட் ட்ரீம்ஸ் கொஞ்சம் ப்ராப்ளம்..என்னால ரீடைன் பண்ண முடியல” என்றான்.
“உன் கனவு ஞாபகத்துல இருக்குமா?” மெல்ல அவன் கனவுகளை பற்றி கேட்டேன். “நல்லாவே இருக்கும்” என்றான். சிகரெட்டை நசுக்கிவிட்டு. “சாரா பாலினும் ஹிலாரி கிளிண்டனும் தான் அடிக்கடி வருவாங்க” என நிதானமாக சொன்னான். அவன் அப்படி சொன்னபோது முகம் வேறுபக்கமாக திரும்பியிருந்தது. கண்களில் குறும்போ சிரிப்போ இருந்திருக்குமோ? தெரியவில்லை. இனி அவனிடம் நான் பேசுவதற்கு ஏதுமில்லை என்பதை புரிந்துகொண்டேன்.
“ப்ளீஸ்..ஒருநிமிஷம் ரீசஸ் போயிட்டு வந்துடுறேன்” என்று.சென்றவன் திரும்பவே இல்லை. அவன் கழுத்தில் போட்டிருந்த மாலை வண்டியில் கிடந்தது. அதற்குப்பின்னர் இங்கியை நான் பார்க்கவே இல்லை. இப்படியான ஆன்மிகம் எனக்கு தேவை இல்லை எனும் முடிவுக்கு அன்று தான் வந்தேன். மாமா என் கண்களில் பலமடங்கு பெரிய ஆன்மீகவாதியாக தெரிந்தார். மாமாவின் குடும்பம் சபிக்கப்பட்ட குடும்பம் எனும் பேச்சு எழ துவங்கியது. கல்யாணம் ஆகி சென்ற இரண்டாவது அக்காவிற்கு வலிப்பு நோய் வந்துவிட்டதால் அவரும் காதல் கணவரால் வீட்டிற்கு அனுப்பபட்டார். மாமா வெளியிடங்களுக்கு விஷேஷங்களுக்கு வருவதில்லை என அம்மா சொன்னாள்.
எத்தனை நேரமாக இதனுள் உழன்றுகொண்டே இருந்தேன் என தெரியவில்லை. எப்போது உறங்கிபோனேன் எனவும் தெரியவில்லை. கண்விழித்து பார்த்தபோது மணி மூன்று. சுவாசம் சீரடைந்து இருந்தது. மொபைலில் ஆறேழு மிஸ்ட் கால்கள். ஜானு அழைத்திருந்தாள், உணவு உன்ன சொல்லி ஒரு மெசேஜ் இட்டிருந்தாள். மிஸ்ட் கால் பட்டியலில் மாமாவின் எண்ணை பார்த்தவுடன் மனம் பரபரக்க தொடங்கியது. திரும்பி அழைப்பதா வேண்டாமா என்றொரு யோசனை. என்ன பேசுவது எப்படி ஆறுதல் கூறுவது என்றெல்லாம் குழப்பம். தீர்மானத்திற்கு வருவதற்குள் மாமாவே மீண்டும் அழைத்தார்.
“உன்கிட்ட இத சொல்லனும்னு தோணுது டா..நீ தான் எழுத்தாளன் ஆச்சே..” என்ற போது அவர் குரலில் நடுக்கமோ அழுகையோ தொனிக்கவில்லை.
“சொல்லுங்க மாமா”
“இங்கி பாடி எங்க கிடந்துது தெரியுமாடா?
“ம்?”
“கோட்டயம் கிட்டக்க அல்போன்சம்மா சமாதி இருக்கே தெரியுமா? செயின்ட் மேரி சர்ச்..”
“அல்போன்சம்மா பத்தி கேள்வி பட்டிருக்கேன்”
“அங்கதான் செத்து போயிருக்கான்….அங்க ஃபாதருக்கு உதவியா இருந்திருக்கான்..மூணுமாசம் முன்னாடி பாப்டைஸ் பண்ணிகிட்டானாம்..தகவல் வந்து போய் பாத்து அங்கேயே கிறித்தவ முறைப்படி அடக்கம் பண்ண சொல்லிட்டு வந்துட்டேன்..அக்கா அம்மா யாரும் வரவேணாம்னு சொல்லிட்டேன்..ஒரு சனியன் விட்டுது..டென்ஷன் விட்டுதுன்னு தோணித்து டா ” குரல் கமறியது. மூச்சு வாங்கியது.
ஆறுதல் வார்த்தைகள் எதையும் பேசி பசப்ப தோன்றவில்லை. நெடிய அமைதிக்கு பின்னர் தொடர்ந்தார்.
“ மனசு கேக்கல டா..இங்க ஒரு ஜோசியர் கிட்ட பிறந்த நேரம் இடம் எல்லாம் சொல்லி ஜாதக பலன் கேட்டேன்..இவன் முமுக்ஷு..இவனுக்கு இனி பிறவி கிடையாது..இந்த ஜென்மாவோட பிறவி சங்கிலி முடிஞ்சுடும் அப்டின்னார்..”
“ம்”
“ ராத்திரி நீலகண்டன் ஒரு மீடியம் கிட்ட அழைச்சிட்டு போனார்..அவர் எல்.ஐ.சில வேல பாக்குறார்..ஒல்லியா பூனை கண்ணோட சாதரணமா தான் இருந்தார்…இவனோட அடையாளங்கள் எல்லாம் சொல்லி அவனை கூப்பிட்டு பேச முடியுமான்னு கேட்டேன்..மூணு மணிநேரம் முயற்சி பண்ணார்..ஆனா அப்படியொரு ஆள் ஆவி உலகத்துல இல்லவே இல்லைன்னு சொல்லிட்டார்..”
நானறிந்த மாமாவா இது. எனக்கு குழப்பமாக இருந்தது.
“மனசு ரொம்பவே நிம்மதியா இருக்குடா..உண்மையிலேயே அவன் விஷ்ணு பதம் போயிருப்பான்னு நினைக்குறேன் ..நீ என்ன நினைக்குற?”
எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.
“இருக்கலாம் மாமா”
மீண்டும் நீண்ட மவுனத்திற்கு பின்னர் சொன்னார்.
“உனக்கு இதெல்லாம் அபத்தமா தெரியலாம்..நம்புறதுக்கு கஷ்டமா இருக்கலாம்..நானா இப்படி பேசுறேன்னு தோணலாம்..ஆனா இன்னும் கொஞ்ச நாள் நாங்க வாழ்ந்தாகணுமேடா..”
வெடித்து சிரிக்கும் இங்கியின் சிரிப்பொலி இடைவிடாமல் கேட்டுக்கொண்டே இருந்தது.
