காந்தி படம்

– கவிதை: ஸ்ரீதர் நாராயணன்; ஓவியம்: பரணி

gandhi_padam

ஒரு காந்தி படம் வேண்டும்.

பெரிய பெரிய படங்களோடு
சிறிய சிறிய வாசகங்களோடு
மனிதநேயக் கதைகளை சொல்லும்
குழந்தைகள் புத்தகத்திற்கு
ஒரு காந்தி படம் வேண்டும்

குழந்தைகளுக்கு நிறைய சொல்ல வேண்டியிருக்கிறது.
அன்பால் எவரையும் அரவணைத்து செல்ல முடியும்
சமத்துவம் நிறைந்த சமுதாயத்தை காண முடியும்
எளிமையின் தெளிவில் வலிமையை உருவாக்க முடியும்
வஞ்சகமில்லாத அரசியல் வகைமையை வாழ்ந்து காட்ட முடியும்
வெறும் மனிதனாக மட்டும் இருந்து காட்ட முடியும்.

இப்படி நிறைய சொல்ல வேண்டியிருக்கிறது.

நீங்கள் காட்டும் காந்தி படங்கள் எல்லாம்
எண்களின் மதிப்புகளுக்காக குவித்து வைத்திருக்கும்
வெற்றுத்தாள்களின் படமாக இருக்கிறது.
அது சொல்லும் பேராசைக் கதைகள்
எங்கள் குழந்தைகளை தூங்கவிடாது.

உங்கள் அதிகார கோட்டையில்
மேஜைகளின் மேலிருக்கும் காந்தி படங்கள் வேண்டாம்
அதன் இழுப்பறைகளில் புதைந்திருக்கும் ஊழல்கள்
எங்கள் குழந்தைகளை உள்ளீடற்றவராக்கி விடும்.

உங்கள் கொடிகளில் இருக்கும் காந்தி படமும் வேண்டாம்
அது போர்த்தி மறைத்த அதிகாரப் போட்டிகள்
எங்கள் குழந்தைகளை கொன்றுவிடும்.

உங்கள் நீதிச்சுவர்களின் அலங்கார சித்திரமும் வேண்டாம்.
அது சாட்சியாக இருக்கும் ஆன்மாவற்ற நிகழ்முறைகள்
எங்கள் குழந்தைகளை குழப்பவாதிகளாக்கி விடும்.

உங்கள் ஊடகங்களின் எக்ஸ்க்ளூசிவ்
காந்தி படங்களும் வேண்டாம்.
அதன் கிளர்ச்சி அரசியல்
எங்கள் குழந்தைகளை கிறுக்குபிடித்து அலையச்செய்யும்.

புத்தம் புதியதாக ஒரு காந்தி படம் வேண்டும்.
எங்கள் குழந்தைகளுக்கு நிறைய சொல்ல வேண்டியிருக்கிறது.

One comment

  1. இந்திய ரூபாய் தாள்களில் அச்சிட்டிருக்கும் காந்திப்படமும் வேண்டாம்.
    அவை பல ரூபம் கொண்டு போடும் இலஞ்ச வேஷம் வேண்டாம்
    எம் பிள்ளைகள் அதைக் கற்று தெளிந்து ஏமாற்றுக்காரர்கள் ஆக வேண்டாம்.
    இதையும் சேர்த்திருக்கலாம். முதல் இரண்டு பேரா படித்தவுடன் இந்தப்படம் வேண்டாம் என்று வரும் வரும் என்று படிக்க அது இல்லாமல் போனது ஏமாற்றமாக இருந்தது.

Leave a reply to s.kaniamudhu Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.