புத்தக கண்காட்சி – எம். ஏ. சுசீலாவுடன் ஒரு நேர்முகம்

மதுரை பாத்திமா கல்லூரியில் தமிழ்த்துறை இணைப் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். சிறுகதைகள், செவ்வியல் மொழியாக்கம், பெண்ணிய ஆய்வு என்ற பல தளங்களில் இயங்கி வரும் முனைவர் எம்.ஏ.சுசீலா அவர்களின் புதிய படைப்பாக ‘யாதுமாகி’ நாவல் இவ்வருடம் வம்சி வெளியீடாக வருகிறது. இவருடைய முந்தைய படைப்பான ‘அசடன்’ (தஸ்தெய்வ்ஸ்கியின் ‘இடியட்’டின் தமிழ் மொழியாக்கம்) பல விருதுகளை பெற்று பெருவாரியான வரவேற்பை பெற்ற நிலையில் இந்த நூல் எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது. சுசீலா அவர்களுடன் பதாகை நிகழ்த்திய உரையாடல் –

yathumaagi

செவ்வியல் இலக்கிய ஆக்கங்களில் ஆழ்ந்த புலமையும், அடுத்த தலைமுறையினருக்கு அவற்றை எடுத்துச் செல்லும் வழிகாட்டியான பொறுப்பும் அனுபவமும் கொண்ட நீங்கள், ஒரு புது நாவல் படைப்பிற்காக மீள் உருவாக்கம் செய்து கொள்ள வேண்டியிருந்ததா? இலக்கிய வகுப்பெடுப்பதும், இலக்கிய உருவாக்கமும் முரணான மனநிலைகள் கொண்டு செயல்பட வேண்டியதாக இருக்கிறதா?

அப்படிப்பட்ட முரணான மனநிலைகள் எனக்கு ஒருபோதுமே ஏற்பட்டதில்லை. மிகச்சிறு வயதிலிருந்தே இலக்கிய உருவாக்கத்தின் மீது நான் மாளாத காதல் கொண்டிருந்தேன். அதுவே வேதியியலில் இளம் அறிவியல் படித்த என்னை இலக்கியக் கல்வியிடம் கொண்டுபோய்ச் சேர்த்தது.

நான் பெற்ற செவ்வியல் இலக்கியப்பயிற்சி என் மொழியை வளப்படுத்தியது. தமிழின் ஆழங்களையும் நுட்பங்களையும் அறிய வைத்தது. செவ்வியல் இலக்கிய ஆக்கங்களைப் படித்த காலகட்டம், அவற்றைப் பயிற்றுவித்த காலகட்டம் என இரண்டிலுமே சமகால இலக்கிய வாசிப்பை நான் இடைவிடாமல் தொடர்ந்து கொண்டிருந்தேன். பாடத்திட்டத்தில் இல்லாதபோதும் வாய்ப்பு நேரும்போதெல்லாம் ஆர்வமுள்ள மாணவியருக்கு சமகாலத் தமிழ்ப்போக்குகளை இனம் காட்டிக் கொண்டிருந்தேன். சங்கத் தமிழும், காப்பியத் தமிழும், சமயத்தமிழும் இவை எதுவுமே படைப்பிலக்கிய உருவாக்கத்துக்கு இடையூறாக என் நடையையோ உள்ளடக்கத்தையோ பாதிக்கவில்லை; அவற்றை அடித்தளங்களாக மட்டுமே கொண்டு பண்டித நடையின் குறுக்கீடுகள் இன்றிக் கதைகளை எழுதிக்கொண்டு போவது ஒன்றும் இயலாத செயல் அல்ல; நான் செய்ததும் அதைத்தான். இளம் வயது முதல் நான் படித்த ஏராளமான சிறுகதைகளும் நாவல்களும் எனக்குத் துணையாக நின்றபடி – நான் பெற்ற இலக்கியக்கல்வியும் நான் போதிக்கும் இலக்கியமும் எந்த வகையிலும் என் படைப்பைப் பாதிக்காமல் பார்த்துக்கொண்டன என்றுதான் சொல்ல வேண்டும்.

1979 முதல் என் சிறுகதைகள் வரத் தொடங்கி விட்டதால் என்னை நான் மீள் உருவாக்கம் செய்து கொள்ள வேண்டிய தேவையே எனக்கு ஏற்படவில்லை. மேலும் முனைவர் பட்டத்துக்காக நான் தேர்ந்து கொண்டதும்கூட நவீன இலக்கியம் சார்ந்ததாகவே இருந்தது. என் நவீன இலக்கியச்சார்பு, சங்கத் தமிழைக்கூட நவீன இலக்கியப்பாணியில் கற்பிக்கும் கலையை எனக்கு சொல்லித் தந்தது என்று வேண்டுமானால் சொல்லலாம்.

‘அசடன்’ மொழிபெயர்ப்புக்கும், யாதுமாகி நாவலாக்கத்திற்குமான பயணத்தை எப்படி அடையாளப்படுத்துகிறீர்கள்?

இரண்டும் இரு திசை நோக்கியபடி இருக்கும் வெவ்வேறு பயணங்கள். அவற்றை ஒப்பிட முயல்வதுகூட சரியாக இருக்காது. குற்றமும் தண்டனையும், அசடன் ஆகியவை தஸ்தாயெவ்ஸ்கியின் அனுபவமும் கற்பனையும் இணைந்ததாய் அந்த நாட்டுக் கலாச்சாரப் பின்புலத்தில் அமைந்திருப்பவை. மேலும் அவை இரண்டுமே இன்னொரு மொழியிலிருந்து நான் செய்த மொழிபெயர்ப்புகள்.

யாதுமாகி என் சொந்தப்படைப்பு, நான் பெற்ற அனுபவங்களை, நான் உருவாக்கிக்கொண்ட புனைவுகளை எனக்குத் தெரிந்த பின்புலத்தில் பொருத்தி எனக்கே உரிய மொழியில் முன் வைக்கும் சுதந்திரத்தை எனக்குத் தரும் ஆக்கம்.

முன்னரே பல சிறுகதைகள் எழுதி, தேவந்தி எனும் தலைப்பில் அவை தொகுக்கப்பட்டிருந்தாலும், மொழியாக்கம் வழியாகவே பரவலாக கவனம் பெற்றீர்கள். இப்போது மீண்டும் உங்கள் யாதுமாகி நாவல் வெளிவருகிறது. மொழிபெயர்ப்பாளர் – புனைவு எழுத்தாளர் இவ்விரு அடையாளங்களில் எது உங்களுக்கு நெருக்கமானதாக இருக்கிறது? சவுகரியமானதாக இருக்கிறது? எது சவாலாக இருக்கிறது?

1979இல் வெளிவந்த என் முதல் சிறுகதையே -(ஓர் உயிர் விலை போகிறது- அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டி)- முதல் பரிசு பெற்று எனக்கு அங்கீகாரம் தேடித் தந்த படைப்புத்தான். அதைத் தொடர்ந்து சில ஆண்டுகள் என் பல சிறுகதைகள் பல்வேறு இதழ்களில் வெளியாகிக் கவனம் பெற்றவைதான். ஆனால் அந்தத் துறையில் மட்டுமே தீவிரமாக இயங்க முடியாதபடி என் பணிச்சுமை, நான் மேற்கொண்ட ஆய்வு, மற்றும் குடும்பச்சூழல் முதலிய பல நெருக்குதல்கள் இருந்ததால் அவ்வப்போது மட்டுமே எழுதியபடி ஒரு சிலரால் மட்டுமே அறியப்பட்டவளாக நான் இருந்தேன். பணி ஓய்வுக்குப் பிறகு கிடைத்த நிதானமான சூழலில் மொழியாக்க வாய்ப்பு தற்செயலாக என்னைத் தேடி வந்தபோது அதை நான் தட்டாமல் ஏற்றுக் கொண்டேன். சிறுகதைகளை எழுதி அனுபவப்பட்டிருந்ததால் நாவலை மொழிபெயர்க்கும் வேலையை உரிய கதை ஓட்டத்தோடு தர என்னால் முடிந்தது; எனக்கு அது மிக மிக எளிதாகவே இருந்தது.

மொழியாக்கம் வழியாக நான் பரவலாக கவனம் பெற்றது, பணி ஓய்வு பெற்று 56 வயதுக்கு மேல் என் இரண்டாம் ஆட்டம் துவங்கியபோது அதுவே என்னைப்பற்றி அதிகம் தெரிந்திராத இளம் தலைமுறை வாசகர்களிடம்- உலக இலக்கிய வாசிப்பை நாடி வரும் புதிய வாசகர்களிடம் என்னைக் கொண்டுபோய்ச் சேர்த்தது. அதற்காக மொழியாக்கப் பணிகளுக்கு நான் மெய்யாகவே பெரிதும் கடன்பட்டிருக்கிறேன்.

ஆனாலும்கூட நான் நேசிக்கும்- பெற ஆசைப்படும் அடையாளம் புனைவெழுத்தாளர் என்பதுதான்; எனக்கு சவாலானதாக இருந்தபோதும் என் நெஞ்சுக்கு நெருக்கமானது அதுதான்.

மொழிபெயர்ப்புக்களை என்னால் மிக விரைவாக, இலகுவாகச் செய்துவிட முடிகிறதென்றால் அதன் பின்னணி என்னுள் இருக்கும் கதைசொல்லி மட்டுமே.

மொழிபெயர்ப்புச் செய்வதை நான் விரும்பவில்லை என்பது பொருளில்லை; குறிப்பாக தஸ்தாயெவ்ஸ்கி போன்ற மகத்தான உலக இலக்கியப் படைப்பாளிகளைப் பெயர்க்கும்போது நான் பெறும் தரிசனம் உன்னதமானது. அந்தப்பணி என் மொழியை இன்னும் கூர்தீட்டிக்கொள்ள உதவுகிறது. கதையமைப்பை காட்சியமைப்பை இன்னும்கூட எப்படியெல்லாம் செம்மையாக்க முடியும் என்று எனக்குக் கற்றுத் தருகிறது. நான் செய்யும் படைப்பிலக்கியங்களுக்கு அது துணையாக இருக்கிறது. மொழிபெயர்ப்பை இயல்பான ஓட்டத்துடன் சரளமாகச் செய்வதற்கு என் படைப்பனுபவம் கைகொடுக்கிறது.

இந்த இரண்டுமே என் தமிழையும் படைப்பையும் ஒன்றை ஒன்று நிரப்பியபடி – சமன்செய்தபடி இருப்பதாகக் கொள்ளலாம்.

புனைவெழுத்தின் எல்லாவித வடிவங்களும் அதற்குண்டான சவால்களுடனும், தேவைப்படும் பிரயாசைகளுடனும் கடினமானவையே. உங்கள் பார்வையில் தேவந்தி சிறுகதை தொகுப்பு மற்றும் யாதுமாகி நாவலில் எது அதிகமான நிறைவை தந்தது? அடுத்ததாக மற்றுமொரு நாவலை தொடங்கும் எண்ணம் உண்டா?

எல்லாப் புனைவுகளையுமே ‘எழுதிப் பார்க்கும் முயற்சிகள்’ என்று கருதியபடிதான் நான் இயங்கிக் கொண்டிருக்கிறேன். சிறுகதையின் வடிவம், அதன் சூட்சுமம் எனக்கு மிகவும் உகப்பானது; குறுகத் தரித்த குறள் போல மிகப்பெரிய செய்திகளையும்கூடக் கோட்டுச்சித்திரங்களாகக் காட்டிக்கொண்டு போவது சிறுகதை. அதற்கான எழுச்சி மட்டும் பிறந்தால் போதும், என்னால் உடனே அதை முடித்து விட முடியும். அப்படி ஒரு கண நேர மன எழுச்சியால் பிறந்த பல சிறுகதைகள் அபாரமான மன நிறைவை எனக்கு அளித்திருக்கின்றன.

ஆனால் நாவல் அப்படிப்பட்டதல்ல. அதற்கான திட்டமிடல், நீண்ட உழைப்பு, அமைதியான சூழல் இத்தனையும் சேர்ந்து அமைவதென்பது, என்னைப் பொறுத்தவரை கொஞ்சம் கடினமானதுதான். ஆனாலும்கூட யாதுமாகி நாவலை முடித்த கணம் எனக்குத் தந்த நிறைவு அலாதியானது; ஒற்றை நிகழ்வாக மட்டுமே – சிறுகதையாக மட்டுமே புனைவுகளைச் செய்து கொண்டிருந்த என்னால் நீண்ட தொடர்ச்சியுடன் கூடிய கதைப்பின்னலைத் தர முடிந்திருக்கிறதே என்ற ஆனந்தத்தால் விளைந்த நிறைவு அது. இன்னுமொரு நாவல் எழுத ஆவல்தான். கருவும் இருக்கிறது… பின்னித் தொடுக்க வேண்டும்; தக்க சூழ்நிலை கைகூடும் வேளையில் அது சாத்தியமாகலாம்.

வரும் ஆண்டுகளில் வேறு மொழியாக்கங்கள் செய்யும் திட்டம் ஏதுமுண்டா?

தஸ்தாயெவ்ஸ்கியின் குறுநாவல்கள் சிலவற்றை நான் செய்து முடித்திருக்கிறேன்; அது, தொகுப்பாக -இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியின்பொழுதே வெளிவர வாய்ப்பிருக்கிறது.

மூன்று தலைமுறை பெண்களை பற்றிய கதை இந்நாவல் என அறிகிறோம். நாவலில் வரும் அன்னம்மாவின் சித்திரம் வெகுவாக சிலாகிக்கப்படுகிறது. அது உங்கள் அம்மாவின் சித்திரம் என்று சொல்லப்படுகிறது. எழுத்தாளர் ஜெயமோகன் இந்நாவலை பற்றி பேசுகையில் ‘புத்தகத்தின் வழியாக அம்மாவிற்கு எழுப்பப்பட்ட’ நினைவுச்சின்னம் என கூறியிருக்கிறார். இந்நாவல் ஒரு அம்மாவின் நினைவு என்பதைத் தாண்டி ஒரு காலகட்டத்தின் சமூக சித்திரம் எனும் இடத்தை அடைவதால், அக்கால சமூக சூழல்கள் எத்தகையதாக இருந்தன என்பதை விவரிக்கிறதா?

இதை ஒரு நாவல் என்று சொல்வதை விடவும் புனைவுப் போக்கிலான ஓர் ஆளுமையின் வாழ்க்கைச் சரிதம் என்பதே பொருத்தமானது. ஒரு வாழ்க்கை வரலாற்றை அப்பட்டமாக….நேரடியாக- bluntஆகச் சொல்லாமல் ஒரு புனைவுப்போக்குடன் சொல்லப் பார்த்திருக்கிறேன்… அதனால் அந்த ஆளுமையின் வாழ்வும் அவரது பலவகைப் பரிமாணங்களும் மட்டுமே இதில் முதன்மைப் படுத்தப்பட்டிருக்கின்றன. அதில் சமூகப் பின்னணியும் பொருந்தி அமைவது இயல்பான ஒரு நடப்பு…

தன் வாழ்வின் பக்கங்களை – குறிப்பாகத் தன் படிப்பு பல முறை பல காரணங்களாலும் விட்டுவிட்டுத் தொடர்ந்ததை நான் பதிவு செய்ய வேண்டுமென்பது என் தாயின் ஆறாத‌ விருப்பம். அவள் காலம் முடிந்து என் காலத்துக்குள்ளாவது அதை முடிக்கும் ஆதங்கமும் அதனால் விளையும் ஆத்ம நிறைவுமே இதன் இலக்கு.

கதையில் மூன்று தலைமுறைப் பெண்கள் வந்தாலும் அவர்களைப் பற்றிய குறிப்பும் சித்தரிப்பும் தேவி பாத்திரத்தை மையப்படுத்தி அதற்கு வலுச்சேர்க்க மட்டுமே.

தாயாய்த் தந்தையாய் சகலமுமாய் இருந்த அன்னையின் ஆளுமை தன்னுள் விதைக்கும் தேடல்களின் தடம் பற்றிக் குறுக்கும் நெடுக்குமாய்க் காலத்தை ஊடறுத்தபடி அவள் வாழ்வுக்குள் அகமுகப்பயணம் ஒன்றை மேற்கொள்கிறாள் மகள் சாரு. அந்தப் பயணத்தில் தேவியின் வாழ்க்கை ஏடுகள் புதிரும் பிரமிப்புமாய் விரிந்தபடி அவளைத் திகைப்பில் ஆழ்த்துகின்றன. தடைகளும் சவால்களும் முட்களாய் விரவிக் கிடந்த ஒரு பாதையில் மனத்திண்மை என்ற ஒற்றை மந்திரத்தை மட்டுமே உறுதியாகப் பற்றிக்கொண்டு – தான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் அது பற்றிய முழுமையான தன்னுணர்வோடு பதித்தபடி- அரற்றல்களோ ஆவேசக்கூச்சல்களோ இல்லாத அனாயாசமான லாவகத்தோடு அவற்றைப் புறங்கண்டு வென்றிருக்கும் அவளது சாதுரியம் அடுத்த தலைமுறைப் பெண்ணான அவளுக்கு வியப்பூட்டுகிறது.

எவராலும் பொருட்படுத்தப்படாத…, யாராலும் அதிகம் கண்டுகொள்ளப்படாத இருட்டறை மூலைகளில் கிடந்து புழுதி படர்ந்து பாசி பிடித்து வீணடிக்கப்பட்டிருக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் மட்டுமே மலிந்திருந்த ஒரு வாழ்க்கை; அதற்குள் புதையுண்டு போயிருக்க வேண்டிய ஞானம்; இவற்றை அரிதாக வாய்த்த ஒரு சில ஊன்றுகோல்களால் மீட்டெடுத்தபடி தனக்கென்று ஒரு தகுதிப்பாட்டை ஏற்படுத்திக்கொண்ட தாயின் வாழ்க்கை கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டிய ஒன்று என்னும் எண்ணம் அவளுக்குள் பிறக்கிறது; அதன் செயல்வடிவமே அவள் வரையும் தாயின் வாழ்க்கைச் சரிதம்.

அம்மாவை பற்றிய நினைவுகள் இந்நாவலின் அடித்தளம் மட்டுமே; அறுபது சதம் உண்மையும் மீதம் என் கற்பனையும் விரவியதே யாதுமாகி. அதனால் நிச்சயம் நிஜ ஆளுமைக்கும் இதற்கும் மாறுபாடுகள் இருக்கலாம்.- பலப்பல நிகழ்ச்சிகள், இடங்கள் மாற்றத்துடனேயே தரப்பட்டிருக்கின்றன.

‘’’புத்தகத்தின் வழியாக அம்மாவிற்கு எழுப்பப்பட்ட’ நினைவுச்சின்னம் ;என்று ஜெ சொன்னது உண்மைதான்; ஆனால் இது என் அம்மாவுக்கு மட்டுமானது இல்லை; பலரையும் தங்கள் அன்புத் தாய்மாரை நினைவு கூர வைக்கும் ஒட்டுமொத்தத் தாய்மைக்கான நினைவுச் சின்னம்; அப்படிப் பொதுமைப்படுத்திப் பார்க்கும்போதுதான் இதற்கு கலைத்தகுதி கிடைக்கிறது. இதில் வரும் அன்னம்மா என் தாய் இல்லை.

உங்கள் பார்வையில் நீங்கள் பெண்ணியத்தை எப்படி வரையறை செய்கிறீர்கள்? அப்பெண்ணிய பார்வை இந்நாவலில் வெளிப்பட்டுள்ளதா? நீங்கள் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றியபோது சில ஆண்டுகளுக்கு முன்னர் இதை எழுதி இருந்தால் சில காழ்ப்புகளும் கோபங்களும் வெளிப்பட்டிருக்கக்கூடும், ஆனால் இன்று அப்படியான கசப்புக்கள் ஏதுமில்லை என கூறியிருந்தீர்கள், இத்தகைய மனமாற்றம் எப்படி சாத்தியமானது?

இது உறுதியாக ஒரு பெண்ணியப் படைப்புத்தான். ஆனால் நான் எழுதிய பெண் சார்ந்த பல சிறுகதைகளில் ஆவேசமும் கோபமும் உரத்துச் சத்தம் போடும்; ஆனால்… இதில் அதையே அடக்கி வாசித்திருக்கிறேன் என்றால் அதற்கு வயது முதிர்ச்சியால் கைகூயிருக்கும் விவேகமும், கசப்புக்களாலும் காழ்ப்புக்களாலும் மட்டுமே எதையும் சாதிக்க முடியாது என்ற புரிதலும் எனக்கு ஏற்பட்டதும் காரணமாக இருக்கலாம்.

வரும் புத்தக கண்காட்சியில் யாருடைய படைப்புகளை அதிகம் எதிர்பார்க்கிறீர்கள்?

குறிப்பாக அப்படிப்பட்ட எதிர்பார்ப்பு எதுவும் இல்லை;நல்ல நூல்களை எதிர்பார்க்கிறேன், அவ்வளவுதான்…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.