
குழந்தைகள் சிரிக்கும் ஒலி நீல நிறமாக என் காதில் விழுகிறது
ஓடிக்கொண்டிருக்கும் நினைவு நதியில்
ஒரு கூழாங்கல்லைக் கையில் எடுக்கிறேன்
மறந்துவிட்டேன் என்று நான் எண்ணிய முகமொன்று
அதன் மேடு பள்ளங்களில் மலர்கிறது
கூழாங்கல் ஏந்திய கை சில்லிட்டுப் போகிறது
அம்மாக்கள் கத்தும் ஒலி சிவப்பாக இருக்கிறது
அந்த முகம் மறைந்து வேறொரு முகம்
மெதுவாகத் தோன்றுகிறது, ஆனால் தெளிவாக இல்லை
சூரிய ஒளி கல் மேல் விழ அது பளபளக்கிறது
கண் கூசி மூடிய இமைகளுள் முகம் தெளிவாகிறது
மெதுவாக நடந்து செல்லும் முதியவர்களின் குரல் மஞ்சள் நிறம்
எடுத்த கூழாங்கல்லை நதியில் மெதுவாக இடுகிறேன்
மெல்ல அசைந்து அசைந்து தரை தட்டுகிறது
அதன் பளபளப்பு என் கண்களுக்குள் தேங்கி நிற்கிறது
குழந்தைகள் சிரிக்கும் ஒலி நீல நிறமாக என் காதில் விழுகிறது
ஒளிப்பட உதவி- Jean Gregory Evans, Panoramio