வண்ணக்கழுத்து 4(ஆ): இமாலயம்

-மாயக்கூத்தன்-

சொன்னது போலவே ஒரு மாதத்திற்கு சற்று மேலே ஆனபின் நாங்கள் அந்த இடத்திற்குத் திரும்பி வந்தோம். எங்களுடன் வண்ணக்கழுத்தையும் அவன் அம்மாவையும் கூட்டி வந்திருந்தோம். ஏனெனில், குட்டிப்பயல் இப்போது இரண்டாம் முறை பறக்கும் போது, ஒவ்வொரு கிராமம், லாமாக்களின் மடாலயம், ஏரி, ஆறு எல்லாவற்றையும் சந்தேகத்துக்கே இடமில்லாத வகையில் மிகத் துல்லியமாக அறிந்து கொள்வதோடு, விலங்குகளையும், நாரைகள், கிளிகள், ஹிமாலய கொக்குகள், காட்டு வாத்துகள், டைவர்கள், குருவிப் பருந்துகள், உழவாரக் குருவிகள் போன்ற பறவைகளையும் அறிந்து கொள்ள வேண்டுமென்று விரும்பினேன்.

இந்த முறை நாங்கள் அந்தக் கழுகின் பொந்தைத் தாண்டி நூறு மீட்டர் சென்றோம். அப்போதே ரெடோடென்ரான்களில் இலையுதிர் காலத்திற்கான அறிகுறிகள் தெரிந்தன. அவற்றின் எரியும் பூவிதழ்கள் உதிரத் துவங்கியிருந்தன. பல அடிகள் உயர்ந்திருந்த அவற்றின் தண்டுகள் காற்றில் சலசலத்துக் கொண்டிருந்தன. பல மரங்களின் இலைகள் நிறம் மாறத் துவங்கி இருந்தன. காற்றெங்கும் துக்கம் நிறைந்திருந்தது. பதினோரு மணி சுமாருக்கு, எங்கள் புறாக்களைத் திறந்துவிட்டோம். அவை, வெள்ளைச் சிகரங்களில் தொங்கும் பாய்மரத் துணியாய் விரிந்திருந்த, மாணிக்கக் கல்போன்ற நீல வானத்தில் பறந்து சென்றன.

அரைமணிநேரம் பறந்திருக்கும், ஒரு பருந்து அவற்றின் மேல் உயரே பறந்து வந்தது. அது புறாக்களுக்கு அருகே பறந்து வந்து, அவற்றைப் பாய்ந்து தாக்கியது. ஆனால் அதன் இரையோ ரொம்ப எச்சரிக்கையாக இருந்து, காயம் இல்லாமல் தப்பித்துவிட்டன.

வண்ணக்கழுத்தும் அதன் அம்மாவும், மரங்கள் இருக்கும் இடத்தை நோக்கி கீழே பரபரவென்று இறங்கும்போது, பருந்தின் துணை வெளிவந்து தாக்கியது. தன் கணவரைப் போலவே புறாக்களை நோக்கி அதுவும் பறந்தது. ஆனால், அதனாலும் இரையை வீழ்த்த முடியவில்லை.

தங்கள் இரை தப்பிப் போவதைக் பார்த்த ஆண் பருந்து, தன் பெடையை நோக்கி க்றீச்சிட்டதைக் கேட்டதும் அது காற்றில் இறக்கைகளை அடித்துக் கொண்டு, தக்க சமயத்தை எதிர்பார்த்து, அப்படியே நின்றுவிட்டது. தப்பித்து விட்டோம் என்ற உணர்வில் புறாக்கள் தங்கள் இறக்கைகளை வேகமாக அடித்துக் கொண்டு பறந்தன. மேற்கிலிருந்தும் கிழக்கிலிருந்தும் இரு பருந்துகளும் விரட்ட, புறாக்கள் தெற்கு நோக்கிப் பறந்தன.

ஒவ்வொரு சிறகடிப்புக்கும் பருந்துகள் புறாக்களை இன்னும் கொஞ்சம் நெருங்கின. கூர் தீட்டிய முனை கொண்ட கசாப்புக் கடைக்காரனின் கத்தி போன்ற வடிவத்திலிருந்த அவற்றின் இறக்கைகள், புயல் போல் காற்றைக் கிழித்து விரைந்தன. ஒன்று, இரண்டு, மூன்று… ஈட்டிகளைப் போல பருந்துகள் வீழ்ந்தன.

வண்ணக்கழுத்தின் அம்மா, அப்படியே நின்று காற்றில் மிதந்தார். பருந்துகளின் கணக்கு தப்பிவிட்டது. இப்போது என்ன செய்ய? எதைத் தாக்க? இதுமாதிரிக் கேள்விகளுக்கு விடை காண சற்று நேரமெடுக்கும். இந்த வாய்ப்பை வண்ணக்கழுத்து தன் திசையை மாற்றிக் கொள்ள பயன்படுத்திக் கொண்டது. பரபரவென்று மேலே இன்னும் மேலே ஏறியது. சில நொடிகளில், மகனைப் பார்த்து அம்மாவும் மேலே ஏறியது.

ஆனால், அதற்கான காலம் கடந்துவிட்டது. பருந்துகள், அம்மாவைக் கிட்டத்தட்ட தாக்கும் தூரத்தில் நெருங்கி வந்துவிட்டன. திடீரென்று ஒரு பதற்றம் அம்மாவைப் பற்றிக் கொண்டது. பருந்துகள் தன் மகனைக் குறிவைக்கின்றன என்று அது பயந்தது. தன் மகனைக் காக்க – இதற்கான அவசியமே இல்லை – விரட்டிவரும் பருந்துகளை நோக்கிப் பறந்தது. அடுத்த நிமிடம், இரண்டு வேட்டைப் பறவைகளும் அதன் மீது பாய்ந்துவிட்டன. காற்று முழுக்க சிறகுகள் சிதறி விழுந்தன. இதைப் பார்த்த வண்ணக்கழுத்து பயந்து போனது. பாதுகாப்புக்காக பக்கத்திலிருந்த செங்குத்தான மலைக் குன்றில் பாய்ந்துவிட்டான். அவனுடைய அம்மா, தன்னுடைய தவறால் தன் உயிரையும் இழந்து, அனேகமாக தன் மகனுடைய உயிருக்கும் ஆபத்தை உண்டு பண்ணிவிட்டது.

நாங்கள் மூவரும் வண்ணக்கழுத்தை மலைக் குன்றில் தேடத் தொடங்கினோம். இமாலயம் ஆபத்தான இடம் என்பதால், தேடுவது அத்தனை எளிதான வேலையில்லை. புலிகளுக்காக பயப்பட வேண்டியதில்லை, ஆனால் மலைப்பாம்புகளுக்காக பயப்பட்டே ஆகவேண்டும். இருந்தாலும் என் நண்பன் ரட்ஜா, நாம் தேடிப் போக வேண்டும் என்று வலியுறுத்தினான். வேட்டைக்கார கோண்டும், சொல்வதை ஒப்புக் கொண்டதோடு, இது நம்முடைய அறிவை வளப்படுத்தும் என்றார்.

நாங்கள் இருந்த குன்றிலிருந்து இறங்கி ஒரு குறுகிய பள்ளத்தாக்கில் நுழைந்தோம். அங்கே கிடந்த பிசுபிசுப்பான எலும்புத் துண்டங்கள், முன்னிரவு ஏதோ ஒரு மிருகம் தான் வேட்டையாடிய விலங்கைத் தின்றிருக்கிறது என்பதை உணர்த்தியது. வங்கத்திலேயே சிறந்த ஆயுதங்கள் கொண்ட வேடரான கோண்ட் எங்களை வழிநடத்திச் சென்றதால், எங்களுக்கு பயமேதும் இல்லை. சீக்கிரமே, பச்சைப் பாசியில் முளைத்திருந்த ஊதா ஆர்கிட்கள் நிறைந்த பிளவுகளையும் பள்ளங்களையும் கடந்து நாங்கள் கஷ்டப்பட்டு ஏறிச் செல்ல வேண்டியிருந்தது. ஃபிர் மணமும் பால்சம் மணமும் எங்கள் மூக்கைத் துளைத்தன. சில சமயம் இன்னும் வாடாதிருந்த ரொடொடென்ரான்களைப் பார்த்தோம். காற்று வேறு குளிராக இருந்தது. எங்கள் ஏற்றமோ முடிவில்லாது தொடர்ந்தது.

மதியம் இரண்டு மணிக்குப் பிறகு, ஊறவைத்த தட்டைப்பயிறை கைபிடியளவு சாப்பிட்டபின், நாங்கள் வண்ணக்கழுத்து ஒளிந்து கொண்டிருந்த குன்றை அடைந்தோம். ஆச்சரியம் என்னவென்றால், நாங்கள் சென்ற முறை பார்த்த கழுகின் பொந்து அந்தக் குன்றில்தான் இருந்தது. அதன் இரு குஞ்சுகள் இப்போது, முழுமையான கழுகுகளாக வளர்ந்திருந்தன. அவை, அவற்றின் பொந்துக்கு முன் இருந்த பாறை விளிம்பில் உட்கார்ந்திருந்தன. எங்களை ஆச்சரியப்படுத்தும் வகையில், வண்ணக்கழுத்து அதையடுத்து நீட்டிக் கொண்டிருந்த வேறொரு பாறை விளிம்பில் தொலைதூர மூலையில் வலுவற்று, பயத்தில் குறுகிப்போய் உட்கார்ந்திருந்தது. நாங்கள் நடந்து செல்கையில், கழுகுக் குஞ்சுகள் முன்னே வந்து எங்களை அலகுகளால் தாக்கின. அவற்றின் பக்கமிருந்த ரட்ஜாவிக்கு அழுத்தமான கொத்து விழுந்தது. அவனது கை கட்டைவிரலின் தோல் கிழிந்து ரத்தம் பொலபொலவென்று கொட்டியது.

எங்களுக்கும் வண்ணக்கழுத்துக்கும் நடுவே இந்தக் கழுகுகள். வேறொரு உயரமான மலைப்பாறையின் விளிம்பில் நடந்து சென்று அவனை அடைவதைத் தவிர வேறொன்றும் செய்வதற்கில்லை. கழுகுக் கூட்டிலிருந்து ஆறு கஜம் கூட போயிருக்கமாட்டோம், முதல் தடவை வந்தபோது செய்ததைப் போல, இப்போதும் எங்களை ஒளிந்து கொள்ளச் சொன்னார் கோண்ட். நாங்கள் வேகமாகப் போய், ஒரு பைன் மரத்தின்கீழ் மறைந்து கொண்டோம்.

காற்றில் மெல்லிய அலறலோடு கழுகுகளின் அம்மாவோ அப்பாவோ அருகில் பறந்து வந்தது. சில நொடிகளில், கீறீச்சிடும் சத்தத்தோடு அந்தக் கழுகு தன் கூட்டை நோக்கி பறந்து சென்றது. அதன் வால் சிறகுகள் எங்கள் மரத்தை உரசிச் சென்றபோது, நடுங்கச் செய்யும் பரவசம் ஓர் அதிர்வாய் என் முதுகுத்தண்டில் உயர்ந்து அடங்கிற்று. காற்றைக் கிழித்துச் சென்ற அதன் ஓசை அடங்கக் கேட்டேன்.

கழுகுகள் தனித்த, அணுக முடியாத குன்றில் கூடு கட்டுகின்றன என்று தவறாக நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஒரு உண்மையை மீண்டும் வலியுறுத்துகிறேன். ஒரு வலிமையான பறவையோ விலங்கோ தன்னுடைய வீட்டை அமைத்துக்கொள்ள அத்தனை கவனமாக இருக்க வேண்டியதில்லை. அலட்சியமாக இருந்தாலும் அவற்றுக்கு பிரச்சனை ஏதுமில்லை.

ஒரு பிரம்மாண்டமான பறவையின் கூட்டின் முதல் தேவை, வீட்டின் வெளிப்புறத்தில் தன்னுடைய பெரிய இறக்கைகளை திறந்து மூடத் தேவைப்படும் இடம் கண்டிப்பாக இருக்க வேண்டும். அத்தனை பெரிய இடம், அணுக முடியாத மாதிரியும் இருக்க முடியாது. அடுத்தபடியாக, கழுகுக்கு கூடு கட்டும் சாமர்த்தியமும் கிடையாது. ஒரு மலைக்குகையின் வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் விளிம்பை தேர்ந்தெடுத்துக் கொள்ளும். இயற்கையே அங்கு மூன்றில் இரண்டு பங்கு வேலையைச் செய்திருக்கும். முன்றாம் பங்கை மட்டும் பறவைகள் செய்து கொள்ளும். அதுவும் பெரிதாக ஒன்றுமில்லை, முட்டையிட்டு குஞ்சு பொறிப்பதற்காக கிளைகள், இலைகள், புற்கள் போன்றவற்றை திரட்டி ஒரு கரடுமுரடான படுக்கையை உருவாக்கும்.

இத்தனை தகவல்களையும் எங்கள் மறைவிடத்திலிருந்து மெல்ல வெளிவந்து அந்தப் பொந்தை சற்று தொலைவிலிருந்து இரண்டாம் முறை நோட்டமிட்டபோது நாங்கள் அறிந்து கொண்டோம். வளர்ந்துவிட்ட இரண்டு குஞ்சுகளும், அவற்றின் அம்மாவும் எங்கள் பழைய நண்பர்கள்தான் என்பதில் சந்தேகமே இல்லை. அவை வளர்ந்துவிட்டாலும், அவற்றின் அம்மா இன்னமும், அவற்றை காயப்படுத்திவிடக்கூடாது என்று பழக்க தோஷத்தில் தன் நகங்களை உள்ளிழுத்துக் கொண்டது. அந்த நொடியில் மட்டும்தான் அப்படி. பிறகு அவை தன்னை நோக்கி ஓடி வருவதை உறுதி செய்து கொண்டு, தன் விரல்களை விரித்து வெளிப்புற விளிம்பில் உறுதியாக நின்றது.

முழுமையாக வளர்ந்துவிட்ட குஞ்சுகள், அம்மாவை நோக்கி ஓடி, அதன் விரிந்த இறக்கைக்கு அடியில் ஒளிந்து கொண்டன. ஆனால், அவை அங்கேயே அதிக நேரம் இருக்கவில்லை. அவற்றுக்கு இப்போது பாசம் தேவையில்லை. அவை பயங்கர பசியில் இருக்கின்றன. அவற்றுக்கு தின்ன ஏதாவது வேண்டும். ஆனால் பாவம், அம்மா எதுவுமே கொண்டு வரவில்லை. அதை உணர்ந்ததும், அம்மாவிடமிருந்து திரும்பி, காற்றடிக்கும் திசையை நோக்கி திரும்பி அமர்ந்து கொண்டு காத்திருக்கத் தொடங்கின.

கோண்ட் கொடுத்த சமிக்ஞைக்குப்பின் நாங்கள் மூவரும், எழுந்து ஏறத் துவங்கினோம். அடுத்த ஒரு மணிநேரம், பல்லியைப் போல் அமைதியாக கழுகுகளின் பொந்தின் கூரைக்கு மேல் ஊர்ந்து சென்றோம். அதை நான் கடக்கும்போது, எலும்புகள் மற்றும் காய்ந்து கொண்டிருக்கும் சதைகளின் மட்டமான வாடை என் நாசியை வரவேற்றது. இதிலிருந்து கழுகு, என்னதான் பறவைகளின் ராஜாவாக இருந்தாலும், புறாக்கள் அளவுக்கு சுத்தமாகவும் ஒழுங்காகவும் இல்லை என்பதைப் புரிந்து கொள்ளலாம். என்னைப் பொறுத்தவரை, கழுகின் பொந்தைவிட, புறாவின் கூட்டையே விரும்புவேன்.

சீக்கிரமே நாங்கள் வண்ணக்கழுத்தை அடைந்து, அவனைக் கூண்டிற்குள் அடைக்க முயற்சி செய்தோம். எங்களைப் பார்த்த்தில் அவனுக்கு மகிழ்ச்சி. ஆனால், கூண்டிற்குள் போக மறுத்து போராடினான். நேரம் ஆகிறது என்பதால், நான் அவன் தின்ன பயிறுகளைக் கொடுத்தேன். அவன் பாதி சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, அவனுடைய முழுக்கவனமும் தின்பதில் இருப்பதைப் பார்த்து, அவனைப் என் கைகளால் பிடிக்க முயற்சி செய்தேன். பாவம், அவன் பயந்து போய், பறந்து விட்டான்.

அவன் பறக்கும்போது எழும்பிய சத்தம் கேட்ட அம்மா கழுகு தன் பொந்தின் உள்ளிருந்து வெளிவந்துவிட்டது. தன் அலகு துடிக்க, இறக்கைகள் கிட்டத்தட்ட பறப்பதற்காக திறந்திருக்க, அது வெளியே பார்த்தது. ஒரே நொடியில் கீழிருந்த அனைத்து காட்டுச் சப்தங்களும் நின்றுவிட, அது பறந்தது. வண்ணக்கழுத்தின் கதை முடிந்தது என்றுதான் நாங்கள் நினைத்தோம். திடீரென்று அதன் மீது ஒரு நிழல் விழுந்தது. கழுகு தான் அவன் மீது பாய்கிறது என்று நினைத்தேன். ஆனால், அது ஒரு நொடி அவன் மீது நின்றுவிட்டு, பறந்துவிட்டது. அவன் உயிரைப் பிடித்துக் கொண்டு பறந்தான். பெரும் பீதியில், வளைந்து வளைந்து பறந்து எங்கள் கண்பார்வையைத் தாண்டிப் போய்விட்டான்.

நாங்கள் வண்ணக்கழுத்தை இழந்துவிட்டோம் என்று நான் நினைத்தேன். ஆனால், நாங்கள் ஒன்று அல்லது இரு நாட்களில் அவனை கண்டுபிடித்துவிட முடியும் என்று சொன்னார் கோண்ட் . அதனால், நாங்கள் அங்கேயே காத்திருக்க முடிவு செய்தோம்.

வேகமாக இருட்டிவிட்டது. சில பைன் மரங்களுக்குக் கீழே நாங்கள் தங்கினோம். அடுத்த நாள் காலையில், இளம் கழுகுகள் பறப்பதற்கான நாள் வந்துவிட்டது என்று கோண்ட் எங்களிடம் சொன்னார். “கழுகுகள் ஒருநாளும் தங்கள் குஞ்சுகளுக்கு பறக்க கற்றுக் கொடுப்பதில்லை. அவை எப்போது பறக்க தயார் என்பது அவற்றுக்கு தெரியும். அப்போது குஞ்சுகளை விட்டு விட்டு ஒரேயடியாகப் போய்விடும்” என்றார்.

அந்த நாள் முழுக்க அம்மா கழுகு தன் கூட்டிற்கு திரும்பவில்லை. இரவானபின், அதன் குழந்தைகள் அது வரும் என்ற நம்பிக்கையை இழந்து மீண்டும் கூட்டின் உட்பகுதிக்குச் சென்றுவிட்டன. எங்களுக்கு மறக்க முடியாத இரவாக அது இருந்தது. நாங்கள் மிக உயரத்தில் இருந்ததால், வேட்டையாடும் நாலு கால் பிராணி எதுவும் எங்களைத் தாக்காது என்று நம்பிக்கையுடன் இருந்தோம்.

புலிகளும் சிறுத்தைகளும் கீழ் நோக்கியே போகும். அவற்றுக்கு உயரத்தின் மீது பயம் இல்லை. எல்லா விலங்குகளையும் போலவே அவையும் தங்கள் இரையைத் நோக்கியே போகும். மறிமான்கள், மான்கள், நீர் எருமைகள், காட்டுப் பன்றிகள், எங்கு வளர்ச்சி செழிப்பாக இருக்கிறதோ அங்குதான் மேயும். அவை புற்கள், செடிகள், ருசியான கிளைகள் எங்கே விளைகிறதோ, சுருக்கமாகச் சொன்னால் அவற்றின் இரவு உணவு நதிக்கரைகளில் விளையும் என்பதால் அங்கேதான் போகும். அந்த விலங்குகளைச் சாப்பிட்டு வாழும் உயிரினங்கள், அவற்றைத் தேடி அங்கேதான் போகும். இதனால்தான், சில பறவைகள் மற்றும் மலைப்பாம்புகள், பனிச் சிறுத்தைகள், காட்டுப் பூனைகள் தவிர வேறு எந்த வேட்டையாடும் விலங்கும் இரவு நேரத்தில் உயரமான பகுதிகளில் இருக்காது. பசுவைப் போலக் கருதப்படும் யாக் கூட, அத்தனை உயரத்திற்கு அடிக்கடியோ அதிக எண்ணிக்கையிலோ ஏறுவதில்லை. ஒன்றிரண்டு மலை ஆடுகளை அவ்வப்போது பார்க்கலாம். ஆனால் அதைவிட பெரிதாக எதுவும் இருக்காது. அதனால் எங்கள் இரவு எந்தவொரு பரபரப்பான நிகழ்வுமின்றிக் கழிந்தது.

ஆனால், இதற்கு ஈடாக, துளைக்கும் அதிகாலைக் குளிர் எங்கள் உடலை உலுக்கி எடுத்துவிட்டது. தூக்கம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதால், எழுந்து உட்கார்ந்து கொண்டு என் படுக்கை விரிப்புகளை என்னைச் சுற்றி போர்த்திக் கொண்டு, பார்த்துக்கொண்டும் கேட்டுக் கொண்டும் இருந்தேன். தோல் நன்கு இழுத்துக் கட்டப்பட்ட மேளம் மூச்சுக் காற்றுக்குக்கூட சப்தம் எழுப்பும். அது போல் சுற்றிலும் அமைதி மிகத் தீவிரமாக இருந்தது. துளைத்தெடுக்கும் சப்தமின்மை எல்லாத் திசைகளிலிருந்தும் என்னைச் சூழ்ந்து கொண்டது. அவ்வப்போது, பக்கத்தில் எங்கோ மென்மையான கால்கள் கொண்ட காட்டுப் பூனை மரக்கிளையிலிருந்து குதிக்கும்போது, காய்ந்த இலைகள் உடைவது, வெடிச் சத்தம் போல் கேட்டது. அந்தச் சத்தம், உயர்ந்து கொண்டே வரும் சப்தமின்மையில் விழுந்த கல் போல தணிந்தது. மெதுவாக, ஒவ்வொரு நட்சத்திரமாக அஸ்தமித்தது. சுற்றிலும் உயர்ந்து கொண்டேயிருந்த மர்மம் இன்னும் ஆழத்துக்குச் சென்றது.

கழுகுகளின் பொந்தில், எறியப்பட்ட ஈட்டி அதிர்வது போல ஏதொவொன்று நடுக்கம் கொடுத்தது. சந்தேகமே இல்லாமல் இப்போது பொழுது புலர்ந்தது. மீண்டும் அதே இடத்திலிருந்து அதே சத்தம் கேட்டது. படுக்கையிலிருந்து எழும்போது மனிதன் சோம்பல் முறிப்பது போல, கழுகுகள் தங்கள் அலகுகளால் இறகுகளை ஒழுங்கு செய்து கொண்டிருந்தன. இப்போது ஏதோ சலசலப்பு கேட்கவே, இரண்டு கழுகுகளும் தங்கள் கூட்டின் முன் விளிம்பிற்கு வருகின்றன என்று நினைத்துக் கொண்டேன்.

தொடர்ந்து வேறு பல சத்தங்கள் எழுந்தன. தலைக்கு மேலே நாரைகள் பறந்தன. நாரைகள் போன்ற புதிய பறவைகள் வானத்தை அளந்தன. பக்கத்தில் ஒரு யாக் அமைதியைக் குலைத்த்து; தன்னுடைய கொம்பை ஒரு மேளத்தைக் கிழித்துக் கொண்டு நுழைத்தது போல அது ஒலித்தது. கீழே தொலைவில், பறவைகள் ஒன்றை ஒன்று அழைத்துக் கொண்டன. கடைசியில் கஞ்சன்ஜங்கா மலைத் தொடரில் வெளிச்சம் விழுந்தது. பின்னர், தன் தலையைச் சுற்றி மணிக்கல்லின் பிரகாசமான ஒளிவட்டத்தோடு மகாலு வெளித் தோன்றியது. தாழ்பகுதியின் மலைத்தொடர்கள், மோண்ட் பிலான்க் போல் உயர்ந்தவை, தங்கள் பால் வெள்ளை உடையைப் போட்டுக் கொண்டு வந்தன. கற்கள் மற்றும் மரங்களின் வடிவங்களும் வண்ணங்களும் கண்பார்வைக்கு வந்தன. காலைப் பனியோடு ஆர்கிட்கள் அசைந்தன. இப்போது சூரியன், ஒரு சிங்கத்தைப் போல, வானத்தின் தோளில் ஏறிக் கொண்டது. பனி நிறைந்த அடிவானம் கருஞ்சிவப்பு நிறத்தில் சுடர் விட்டது.

தூங்கி எழுந்துவிட்ட கோண்டும் ரட்ஜாவும் எழுந்து நின்றார்கள். பின், தேர்ந்த பூசாரியான ரட்ஜா, கதிரவனுக்கான சமஸ்கிருத பிரார்த்தனையைச் ஓதினான்.

ஓ! கீழ்திசை மெளனத்தின் அரும்பே
மனிதனின் கால்படாத புராதன பாதையில் போ
தூசுகள் இல்லாத மர்மப் பாதையில் போ
நீ தெய்வத்தின் தங்க அரியணையை அடைந்து
அவருடைய அமைதிக்கும் கருணைமிகு மௌனத்தின் முன்னும்
எங்களுக்காகப் பேசு.

மனித குரல்களுக்குப் பழக்கப்படாத கழுகுகள், இந்தப் பிரார்த்தனையைக் கேட்டு பயந்து போய்விட்டன. ஆனால், அவற்றுக்கு கோபம் வருவதற்கு முன், எங்கள் சிறிய பிரார்த்தனை முடிந்து, நாங்கள் வளர்ச்சி குன்றிய அந்தப் பைன் மரத்தின் கீழ் ஒளிந்து கொண்டோம். காலை உணவிற்கு எதுவும் இல்லாத கழுகுகள், தங்கள் பெற்றோர் எங்காவது தென்படுகிறார்களா என்று வானத்தை அளந்தன.

கீழே ஓசனிச்சிட்டுகளின் அளவில் பறக்கும் கிளிக்கூட்டங்களையும் ஜே பறவைகளையும் பார்த்தன. தெற்கு நோக்கிச் செல்லும் காட்டு வாத்துகள் முந்தைய இரவு தங்கியிருந்த பனி படர்ந்த சிகரங்களில் இருந்து பறந்து வந்தன. சீக்கிரமே அவை வண்டுகள் போலச் சிறியதாகி வெட்டவெளியில் கரைந்து போயின. ஒவ்வொரு மணிநேரமாகக் கடந்து சென்றது. இன்னும் பெரிய கழுகைக் காணவில்லை. முழுதும் வளர்ந்த கழுகுக் குஞ்சுகளுக்கு பசி அதிகரித்துக் கொண்டே போனது. தங்கள் கூட்டிற்குள் சத்தமிடத் துவங்கின. பொந்துக்குள் நடக்கும் சண்டையை எங்களால் கேட்க முடிந்தது. சத்தம் அதிகரித்துக் கொண்டே போய், கோபத்தில் ஒரு கழுகு கூண்டை விட்டு வெளியே வெளியே போய், குன்றின் மீது ஏறத் துவங்கி விட்டது. இன்னும் மேலே மேலே ஏறியது. தன் இறக்கைகளை பயன்படுத்தாமலேயே மேலே மேலே நடந்தது.

இப்போது, மதியம் தாண்டிவிட்டது. நாங்கள் மதிய உணவையும் முடித்துவிட்டோம், இன்னும் அம்மா அப்பா பறவைகள் கண்ணில் படவில்லை. பொந்தில் தங்கியிருக்கும் கழுகுக் குஞ்சு, வெளியே சென்றதைவிட சிறியதாக இருப்பதால் அதைப் பெண் என்று தீர்மானித்தோம். அது காற்றின் திசை நோக்கி உட்கார்ந்து கொண்டு, தொலைவில் நோக்கியது. ஆனால், அதற்கும் நம்பிக்கை தேய்ந்து போனது.

ஆச்சரியமாக இருக்கலாம், ஆனால், கடலோடிச் சிறுவன் கடலுக்குள் இறங்கும் நாள் வரை கடலையே பார்த்துக் கொண்டிருப்பான் என்பதைப் போல, பிறந்ததிலிருந்து பறக்கும் நாள் வரை காற்றின் திசையைப் பார்த்துக் கொண்டு உட்காராத ஹிமாலய கழுகை நான் இனிமேல் தான் பார்க்க வேண்டும். மதியம் இரண்டு மணி இருக்கும்போது, கூண்டில் காத்துக் கொண்டிருக்கும் பொறுமையை அந்தக் கழுகு இழந்துவிட்டது. தூரத்தில் குன்றின் மேல் உட்கார்ந்து கொண்டிருக்கும் தன்னுடைய சகோதரனைத் தேடிப் போனது. அவனும் காற்றடிக்கும் திசையை நோக்கி அமர்ந்திருந்தான்.

தன் சகோதரி மேலே வந்தவுடன், அவனுடைய கண்கள் பிரகாசமாயின. தான் தனியாக இல்லை என்ற நிம்மதி அதனிடம் தெரிந்த்து. சகோதரியைப் பார்த்த மாத்திரத்தில், சாப்பாட்டிற்காக பறந்தாக வேண்டும் என்ற துக்கமான எண்ணமும் போனது. தன் பெற்றோரால் பறக்க பயிற்சி கொடுக்கப்படும் எந்தவொரு கழுகுக் குஞ்சையும் நான் பார்த்ததில்லை. அதனால்தான், பசி தங்களை நிர்பந்திக்கும் வரை எந்தவொரு குஞ்சும் தன் இறக்கையைத் திறப்பதில்லை. பெரிய கழுகுகளுக்கு இது நன்றாகவே தெரியும். அதனால்தான், அவை வளர்ந்தவுடன் சரியான சமயத்தில் அவற்றை விட்டுவிட்டுப் போய்விடுகின்றன.

சின்னப் பெண் கழுகு, கஷ்டப்பட்டு குன்றில் ஏறி தன் சகோதரனுக்கு அருகில் சென்றது. ஆனால் பாவம் அங்கு இரண்டு பேருக்கு இடம் போதவில்லை. இரண்டு பேரும் தங்களை சமநிலைப்படுத்திக் கொள்ள முடியாமல், சகோதரி சகோதரனைத் கிட்டத்தட்ட தட்டிவிட்டு விட்டது. உடனடியாக அந்தக் கழுகு தன்னுடைய இறக்கைகளை அகல விரித்துக் கொண்டது. காற்று அந்தக் கழுகை மேலே உயர்த்தியது. அது தன் நகங்களை விரித்தது, ஆனால் தரையில் இறங்குவதற்கான நேரமெல்லாம் கடந்துவிட்டது. தரையிலிருந்து குறைந்தது இரண்டு அடி உயரத்திலாவது இருந்திருக்கும். அதன் இறக்கைகளை அடிக்க அடிக்க இன்னும் மேலே உயர்ந்தது. தன் வாலை தாழ்த்த, அது துடுப்பு போல வேலை செய்து, கழுகை கிழக்கு, தெற்கு, கிழக்கு என்று பக்கவாட்டில் செலுத்தியது. அது எங்கள் தலைக்கு மேலே பறந்து சென்றது. காற்று அதன் இறக்கைகளில் பாடிச் செல்வதை எங்களால் கேட்க முடிந்தது.

அந்த நேரத்தில் ஒரு தீர்க்கமான மெளனம் எல்லாவற்றின் மீதும் கவிந்தது. பூச்சிகள் ரீங்காரம் நின்று போனது. முயல்கள், அந்தப் பக்கம் முயல்கள் இருந்திருந்தால், தங்கள் வளைகளில் மறைந்து கொண்டன. இலைகள் கூட அமைதியாக, காற்றின் இந்தப் புதிய அரசன் இறக்கை அடித்து மேலே மேலே பறக்கும் சத்தத்தைக் கவனித்தன. அது இன்னும் மேலே பறக்க வேண்டும். இன்னும் தொலைதூரம் பறந்து சென்றே அது தான் தேடிப் போவதை அடைய முடியும்.

சில சமயம், ஆயிரத்தி எண்ணூறு முதல் மூவாயிரம் அடிகள் மேலிருந்தே கழுகுகளால் தரையில் ஒரு முயல் குதிப்பதைப் பார்க்க முடியும். பிறகு தன் இறக்கைகளை மடக்கி மின்னல் போல கீழ் நோக்கிப் பாயும். இடி போல் அது இறங்கும் பயங்கர சத்தம், பாவப்பட்ட அந்த ஜீவனை ஸ்தம்பிக்கச் செய்து அதே இடத்தில் நிற்கச் செய்துவிடும். பிறகு கழுகின் நகங்கள் அதைப் பிய்த்துவிடும்.

தன் சகோதரன் அவனுடைய பாதையில் போவதைப் பார்த்ததும், தனிமையின் பயத்தால், பெண் கழுகும் திடீரென்று தன்னுடைய இறக்கைகளை விரித்தது. கீழ் இருந்து வீசும் காற்று, அவளை மேலே தள்ளியது. அவளும் காற்றில் மிதந்து, வாலை அசைத்துகாற்றில் திரும்பி, தன் சகோதரனை நோக்கிச் சென்றாள். சில நிமிடங்களில் இருவரும் எங்கள் கண்பார்வையில் இருந்து மறைந்து போயினர். இப்போது எங்கள் முறை. அந்த குன்றுகளில் இருந்து இறங்கி எங்கள் புறாவைத் தேடப் போக வேண்டும். அவன் டெண்டாமுக்குப் போயிருக்கக் கூடும். ஆனால், அங்கு செல்லும் வழியில் அவன் இதற்கு முன்பு பறந்தபோது கடந்து வந்த வழித்தடங்களான ஒவ்வொரு பெளத்த மடாலயத்திலும் பெரிய மனிதர்களின் கோட்டைகளிலும் தேட வேண்டும் என்று எங்களுக்குத் தோன்றியது.

(தொடரும்)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.