– காஸ்மிக் தூசி –
குதிகால் முதல்
பிருஷ்டம் வரை
காணிக்கையாக்கி-
குளிர்ந்த பலிபீடத்தின் மேல்
காத்திருக்கிறான்
பூசாரி.
பேருந்து தாமதமா
தட்டில் போளி விழுமா
என்றெண்ணியபடி
பனியில் நனைந்த கல்லின்
முரட்டுப்பரப்பைத் தொடும்
விதைப்பைகளை
வேகமாக
உள்ளிழுத்துக்கொண்டு.
பிணத்தின்
உள்ளங்கையில் ஓடும்
அதிர்ஷ்டரேகையைப்போல
கண்ணுக்கெட்டிய தூரம்வரை
சாலையில் நிச்சலனம்.
தலையை
வெய்யிலின் பக்கம்
திருப்பிக்கொள்கிறான்.
கிராமத்து நாவிதரின் லாவகத்துடன்
பூசாரியின் முகத்தை கையிலெடுத்து
கன்னங்களை தட்டிக்கொடுக்கிறான்
சூரியன்.
மந்திரத்தைப்போல
அவன் நாக்கில்
கிடந்து உருளும்
திரும்பத்திரும்ப
துளி பாக்குத்துண்டு.
பலிக்கிறது கடைசியில்
பாக்குத்துண்டின் மந்திரம்.
அவனது
சிந்தையில் இருந்த பேருந்து
இப்போது தூரத்தில்
ஒரு புள்ளிபோல
தோன்றி
சோம்பேறி ஓணான் போன்ற
அவன் பார்வையின் கீழ்
மூக்கின் மருபோல
வளர்கிறது
மெதுவாக
சாலையின் குழியில்
முட்டி மோதி
லொடலொடத்து
உறுமியபின்
கண்களில்
நீல வண்ணத்தை
பாய்ச்சிக்கொண்டு
தாண்டிச்சென்ற பேருந்து
வட்டமடித்து
சுற்றிவந்து
செல்லமாய் ஒலிஎழுப்பி
நிலையத்தில் நிற்கிறது
பூசாரியின் முன்
பூனையைப்போல
புன்னகைத்து
யாத்ரீகனை
உயிரோடு உண்ணும்
பற்களுடன்.
அருண் கொலாட்கர் எழுதிய, The Priest, என்ற கவிதையின் மொழியாக்கம்
ஒளிப்பட உதவி – usatoday.net
