பயங்கரவாதி, அவன் பார்த்துக் கொண்டிருக்கிறான்

சரியாக ஒன்று இருபதுக்கு பாரில் குண்டு வெடிக்கும்.
இப்போது ஒன்று பதினாறுதான் ஆகிறது.
சிலர் உள்ளே வர நேரம் இருக்கிறது,
சிலர் வெளியேறலாம்.
இப்போதே பயங்கரவாதி எதிர்ப்புறம் போய்விட்டான்.
இந்த தூரம் அவனை ஆபத்திலிருந்து காப்பாற்றும்,
எல்லாம் சினிமாக்களில் பார்ப்பது போல்தான்:
மஞ்சள் சட்டை அணிந்த ஒரு பெண் நுழைகிறாள்.
கறுப்புக் கண்ணாடி போட்டவன் ஒருவன், வெளியேறுகிறான்.
ஜீன்ஸ் அணிந்த இளைஞர்கள், பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
ஒரு மணி பதினாறு நிமிடம் நான்கு நொடிகள்.
அவர்களில் சிறியவன் அதிர்ஷ்டசாலி, ஸ்கூட்டரில் ஏறுகிறான்,
ஆனால் உயரமானவன், அவன் உள்ளே நுழைகிறான்..
பதினேழு நிமிடம் நாற்பது நொடிகள்.
ஒரு பெண், நடந்து செல்கிறாள், சிகையில் பச்சை ரிப்பன் அணிந்திருக்கிறாள்.
ஆனால் அந்த பஸ் திடீரென்று அவளைப் பார்வையிலிருந்து மறைக்கிறது.
பதினெட்டு நிமிடங்கள் கடந்து விட்டன.
பெண்ணைக் கானவில்லை.
அவள் முட்டாள்தனமாக உள்ளே போய்விட்டாளா, இல்லையா.
உடல்களை வெளியே எடுத்து வரும்போது பார்க்கலாம்.
பத்தொன்பது நிமிடங்கள் கடந்து விட்டன.
வேறு யாரும் உள்ளே செல்வதாகத் தெரியவில்லை.
மாறாய், குண்டான ஒருவன், சொட்டை விழுந்தவன் வெளியேறுகிறான்.
ஆனால் அவன் தன பாக்கெட்டுகளில் எதையோ தேடுவதாகத் தெரிகிறது,
ஒரு மணி இருபது நிமிடம் ஆக பத்து நொடிகள் இருக்கும்போது
நாசமாய்ப் போன தன கையுறைகளைத் தேடி உள்ளே செல்கிறான்.
ஒரு மணி இருபது நிமிடங்கள்.
நேரம், எவ்வளவு மெல்லச் செல்கிறது.
நிச்சயம், இதுவே தருணம்.
இல்லை, இதுவல்ல.
ஆம், இப்போதுதான்.
குண்டு, வெடிக்கிறது.,
— போலிஷ் கவிதை, விஸ்லவா (Wislawa Szymborska)
உலகமெங்கும் பயங்கரவாதம் ஒரு பெரும் கவலையாக இருக்கிறது. பயங்கரவாதம் பல காரணங்களால் உருவாகிறது, பல வடிவங்களில் வருகிறது: சமயம், தேசியம், அரசியல், இனம் என்று இன்னும் பல காரணங்கள், வடிவங்கள் இருக்கின்றன. உலகின் பல பகுதிகளில் போர்கள் மறைந்துவிட்ட நிலையில், பயங்கரவாதச் செயல்கள் தலைப்புச் செய்திகளாகின்றன.
ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களின்மீது அமெரிக்கா அணுகுண்டு வீசியபோது, அணுஆயுத யுத்தம் குறித்த அச்சமே அதிகமாக இருந்தது. மானுட இன அழிவுக்கு இது அடிகோலும் என்று பலரும் பயப்பட்டார்கள். இந்த அச்சத்தைச் சித்தரிக்கும் திரைப்படங்கள் பல வெளிவந்தன. நம்பிக்கை பற்றி இங்க்மார் பெர்க்மன் எடுத்த மூன்று படங்களில் ஒன்றான “Winter Light” திரைப்படத்தில், ஒரு சாதாரணன் அணுஆயுத போர் குறித்த தன் அச்சங்களைப் பேசுகிறான். அந்த அச்சத்தால் அவன் தற்கொலை செய்து கொள்கிறான். தார்கோவ்ஸ்கி எடுத்த கடைசி படமான, ‘Sacrifice’, அணுஆயுத போரின் பேரழிவு குறித்த அச்சத்தை விவரிக்கிறது.
பல்வேறு காரணங்களால் அணுஆயுத பேரழிவு குறித்த அச்சம் தற்போது பெசப்படுவதில்லை. தவறான நபர்கள் அணு ஆயுதங்களைக் கையாள்வது பற்றிய ஒரு அச்சம் இருக்கவே செய்கிறது. ஆனால் பயங்கரவாதம்தான் உலகெங்கும் அச்சுறுத்தலாக இருக்கிறது. அதன் காரணங்களை ஆழமாகப் பேசப் போவதில்லை. பல காரணங்கள் இருக்கின்றன, அவற்றைப் புரிந்து கொள்ளும் அளவு தரவுகள் என்னிடமில்லை.
ஆனால் காரணங்கள் எவையாயினும் அச்சம் இருப்பதை மறுக்க முடியாது. போரென்றால், எங்கு நடக்கிறது என்று தெரியும், மற்றவர்கள் அமைதியாக இருக்கலாம். ஆனால் பயங்கரவாதி எங்கு வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம். இந்த நிச்சயமின்மைதான் அச்சத்தின் மிகப்பெரும் காரணம். இதனுடன், இளைஞர்கள் பயங்கரவாத பரப்புரைக்கு பலியாவதும் இன்னொரு காரணம். தேசத்தை உருவாக்க வேண்டியவர்கள் அதை அழிக்க முனைகிறார்கள்.
பயங்கரவாதம் பற்றி இத்தனை சொன்னாலும், நாம் வாழும் காலகட்டம் மிகவும் பாதுகாப்பான காலகட்டம் என்றுதான் சொல்வேன். இன்னும் வெகுதூரம் செல்ல வேண்டியிருக்கிறது என்றாலும், மனித இனம் மிகப்பெரும் முன்னேற்றம் கண்டிருக்கிறது. முந்தைய நூற்றாண்டுகளின் போர்கள், படுகொலைகள், இடப்பெயர்வுகளை ஒப்பிட்டுப் பாருங்கள். இன்றுள்ள தேசங்களில் பெரும்பாலானவை ஜனநாயக அமைப்பு கொண்டவை, அண்டை நாடுகளுடன் இணக்கமான நல்லுறவு கொண்டவை. குடிமக்களின் உரிமைகளும் பேணப்படுகின்றன, பொதுவெளியில் பெண்களின் பங்கு இப்போது கூடுதலாய் இருக்கிறது. இன்றும் மனச்சாய்வுகள் இருக்கவே செய்கின்றன, எல்லைத் தகராறுகள் தொடர்கின்றன. இந்தியாவில் சாதிய ஒடுக்குமுறையும் அதன் காரணமான ஏற்றத்தாழ்வும் தொடர்கிறது, ஆனால் சிறிது முன்னேற்றம் தென்படுகிறது. சில விஷயங்களில் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறோம், வேறு சிலவற்றில் முன்னேற்றம் காண போராட வேண்டியிருக்கிறது.
நான்தான் பயங்கரவாதம் என்று ஏதோ பேசுகிறேனே தவிர, இந்தக் கவிதை முழுக்க முழுக்க பயங்கரவாதம் பற்றி மட்டுமல்ல என்பதை இதை வாசிக்கும் எல்லாரும் ஏற்றுக் கொள்வார்கள் நிகழ்தகவு, அதிர்ஷ்டம், அல்லது நம் மொழியில், விதி பற்றிய கவிதை என்றும் சொல்லலாம். உள்ளே குண்டு வைக்கப்பட்டிருக்கிறது என்ற விஷயம் தெரியாமல் பாருக்குள் வந்து செல்பவர்களைப் பட்டியலிடுகிறது இந்தக் கவிதை. யார் சாகப் போகிறார்கள், யார் தப்பித்துச் செல்வர்கள் என்பது அவரவர் அதிர்ஷ்டம் அல்லது விதி என்று சொல்ல முடியுமா? இந்த கேள்விக்கு பல தத்துவவியலாளர்கள் பதில் தேடியிருக்கின்றனர்.
“போரும் அமைதியும்” என்ற தன் மகத்தான நாவலில் தால்ஸ்தோய், வரலாறு என்பது ஓர் அதிநாயகனின் கைவண்ணம் அல்ல, அது பல்வேறு சூழ்நிலைகளால் உருவாக்கப்படுகிறது என்று எழுதுகிறார். நெப்போலியன் கதையை அவர் எடுத்துக் கொள்கிறார். நெப்போலியன் மீது பெரிய மரியாதை அவருக்கு கிடையாது. பல்வேறு சூழ்நிலைகள் ஒன்றுகூடி அவரை அரியணையில் அமர்த்தின என்றும், அவரது வெற்றிகளுக்கும் அவர் மட்டுமே காரணமல்ல என்றும் சொல்கிறார் அவர். தாலஸ்தோய் எழுதியது எல்லாம் விதிப்படி நடக்கும் என்பதைச் சொல்லும் வரலாறு என்று பலரும் சொல்கிறார்கள். தால்ஸ்தோயைப் பொறுத்தவரை, வரலாற்று நிகழ்வுகளை ஓரளவுக்கு மேல் தவிர்க்க முடியாது. யாரோ ஒருவர் தனிமனிதனாக வரலாற்றை மாற்றிவிட முடியாது.
நம்மில் பலரும் விதியை நம்புவதால் இந்து தத்துவம் விதியே வலியது என்று சொல்லும் தத்துவமாகக் கருதப்படுகிறது. நடப்பது எதையும் மாற்ற முடியாது என்று நாம் நம்புகிறோம். ஆனால் மேலை நாட்டவர்கள் மனிதனுக்கு சுதந்திரம் இருக்கிறது என்றும் முன்திட்டம் இல்லாமல் எதுவும் நடக்கிறது நம்புகிறார்கள், நாம் விதியை நம்புகிறோம்.
இது சுவாரசியமான விஷயம். இந்தக் கவிதையில் சிலர் பாருக்குள் செல்கிறார்கள், சிலர் வெளியேறுகிறார்கள். மஞ்சள் சட்டை அணிந்த பெண் உள்ளே செல்கிறாள். அவள் தினமும் இதே நேரத்தில் வருபவளா, அல்லது சந்தர்ப்பவசத்தால் இங்கே வந்தவளா? யதேச்சையாக வந்தாள் என்றால், அவள் ஏன் இந்த நேரத்தில் வர வேண்டும்? அவளுக்கு ஏன் உள்ளே வரும் எண்ணம் எழ வேண்டும்? வெளியே வெயில் அதிகமாக இருந்ததா? அரை மணி நேரம் தாமதமாக எழுந்திருந்தால் இங்கு வந்திருப்பாளா, அல்லது, அரை மணி நேரம் முன்னதாக எழுந்திருந்தாலும் வராமல் போயிருக்கலாம்.
கருப்பு கண்ணாடி அணிந்தவன் வெளியேறுகிறானே, அவனைப் பற்றி என்ன சொல்வது? அவன் ஏன் வெளியேறினான்? எப்போதும் இந்த நேரத்தில் வெளியே செல்பவன்தானா, அல்லது அலுவலகத்திலிருந்து அந்த நேரத்தில் அழைப்பு வந்ததா? பத்து நிமிடம் தாமதமாக வந்திருந்தால் வெளியே போயிருக்க முடியுமா?
“மாற்றுச் சிந்தனை” என்ற வகையில் ஒரு கேள்வி உண்டு. “வளைந்து செல்லும் மலைப்பாதையில் ஒரு பஸ் போய்க் கொண்டிருக்கிறது. நிறுத்தத்தில் ஒரு ஆணும் பெண்ணும் இறங்குகின்றனர். பச கொஞ்ச தூரம் சென்றதும் ஒரு பெரிய கல் உருண்டு வந்து பஸ் மேல் விழுகிறது, விபத்தில் பஸ்ஸில் இருப்பவர்கள் அனைவரும் இறந்து போகின்றனர். அப்போது அந்த ஆண், பெண்ணைப் பார்த்து, “நாமும் அந்த பஸ்ஸில் இருந்திருக்க வேண்டும்”, என்று சொல்கிறான். அவன் ஏன் அப்படி சொன்னான்?” இதுதான் விடை- அவர்கள் பஸ்ஸில் இருக்கிறார்கள் என்றால், பஸ் நின்றிருக்காது பஸ் நின்றிருக்காவிட்டால், பாறை உருண்டு வருவதற்கு முன் அந்த இடத்தைக் கடந்து சென்றிருக்கும். எது ஒன்றும் நடக்க வேண்டும் என்றால் இப்படிதான் நடக்க வேண்டும் என்று ஒரு காலவரிசை இருக்கிறது. அதில் ஒரு சிறு மாற்றம் நிகழ்ந்தாலும் விளைவு முற்றிலும் வேறாக இருக்கும். எனவே, வரலாற்று நிகழ்வுகளில் சமய சந்தர்ப்பங்கள் முக்கியமான பங்காற்றுகின்றன என்பதை ஏற்றுக் கொண்டாக வேண்டும்.
தங்களைச் சிரமப்படுத்திக் கொள்ள விரும்பாதவர்களுக்கு விதி மீதான நம்பிக்கை நிறைய கட்டுப்பாடுகளை விதிப்பதாக இருக்கும். இந்த ஆபத்து இன்றைய சமுதாயத்தில் இருக்கும் ஒன்றுதான். இதற்கு மாறாய், பலருக்கும் தம் தனிவாழ்வில் ஏற்பட்ட துயரங்களைக் கடந்து செல்ல விதி மீதான நம்பிக்கை பெரும் துணையாக இருக்கிறது. யாரும் முழுமையான விடையளிக்க முடியாத மிகப்பெரிய கேள்விகள் இருக்கின்றன, விதி மீதான நம்பிக்கை துணை செய்கிறது. ஏதோ ஒரு வகையில் இந்த துயரத்தைக் கடந்து செல்ல இந்த நம்பிக்கை உதவுகிறது, துயரத்தின் தாக்கத்தை குறைக்கவும் செய்கிறது.
ஆனால் யாரும் விதி பற்றி தினமும் நினைத்துக் கொண்டிருப்பதில்லை, என்னடா இந்த உலகம் இப்படி நிலையில்லாமல் இருக்கிறதே, எந்த நேரமும் உயிர் பிரிந்துவிடும் என்ற ஊசலாட்டமாக அல்லவா வாழ்க்கை இருக்கிறது, என்று யாரும் கவலைப்படுவதில்லை. யட்சன் கேட்டபோது இதைதான் யுதிஷ்டிரன் மிகப் பெரிய அதிசயமாகச் சொன்னான்- “உயிர் நிலையில்லாதது என்பது எல்லாருக்கும் தெரியும். ஆனாலும் சாகப் போவதேயில்லை என்பது போல் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்”, என்றான் அவன். உண்மையில் இதில் ஒரு அதிசயமும் இல்லை இப்படிதான் நம்மால் வாழ முடியும், இப்படிதான் நாம் வாழ்ந்தாக வேண்டும்.
ஒளிப்பட உதவி- wikiart