ஒரு பக்க இரவு
இரவு கொண்ட கதவுகளை
மூடிவிட எதுவும் வரவில்லை.
நினைவுகளின் வழியாக
தப்பிச் சென்றவளை
ஒரு முறை சந்திகலாமா
என முயற்சிக்கிறேன்.
அவளோ, நினைவுக்கு முன்
உருவாகியிருந்த மதிற்சுவரை
ஏறி கடந்திருக்கலாம்.
நினைவுக்குள் தங்குவதற்கு
சற்றும் இடந்தரவில்லை.
வெளியேறிச் சென்றபோது,
யாரும் உள்ளே புக முடியாதபடி
நினைவை மாற்றி வைத்துவிட்டாள்.
வேறுயாரும் வசிக்க உகந்த சூழல் அங்கில்லை.
இவ்வளவு சொன்னபின்னும்
பிடிவாதமாக இருந்தால்,
உன் அதிருப்திகளுக்கு நான் பொறுப்பல்ல.
இரு பக்க தனிமை
அவளைப் பின்தொடர்ந்து செல்கிறது நெடுஞ்சாலை
பதற்றத்துடன் திருமபிப் பார்க்கிறாள்
யாருமில்லை
எதுவும் பின்தொடரவுமில்லை
சாலையின் இருமருங்கும் மாறியிருக்கிறது
மெல்ல நடக்கத் தொடங்குகிறாள்
வேகம் அதிகரிக்கிறது
ஓட்டம் பிடிக்கிறாள்
வீட்டை அடைந்ததும்
மூச்சிரைக்க திரும்பி சாலையைப் பார்க்கிறாள்
செத்த பாம்பைப்போல அசையாமல் கிடக்கிறது
தனது காலடிச் சத்தம்தான்
தன்னைக் கலவரப்படுத்தி துரத்தியதாக
நினைத்துக்கொண்டு வீட்டுக்குள் நுழைகிறாள்
இப்படி பல சம்பவங்களை உருவாக்கியே
நான் தனிமையைக் கடக்க முயற்சிக்கிறேன்.
சில நினைவின் காலடி
நெடு நாட்களுக்குப் பின்
மிக ஆழமாக உறங்கிக்கொண்டிருந்தபோது,
பகல் பொழுது
இரண்டாக பிளந்துவிட்டது
ஒரு பகுதியிலிருந்து
மறு பகுதிக்காக காத்திருக்கிறேன்
மீண்டும் இணையும்போதுதான்
எனது நாள் முடிவடையும்
எவ்வளவுதான் நகர்ந்தாலும்
காலம் ஒரே இடத்தில் நிற்கிறது
நீ வநடதிருக்காவிட்டால்
பகலை இரண்டாக துண்டாட
அறிந்திராமலே ஒரு நாளைக் கடத்தியிருப்பேன்