அரேபிய இலக்கியத்தை ஆங்கிலத்தில் முழுமையாய் புரிந்து கொள்வது சாத்தியமா? – எம். லின்க்ஸ் க்வேலி

(The National என்ற தளத்தில், Can Arabic literature ever be fully understood in English? என்ற தலைப்பில் M Lynx Qualey எழுதியுள்ள கட்டுரையின் தமிழாக்கம்.)

1987ஆம் ஆண்டுக்கு முன் நவீன அரேபிய இலக்கியம் ஆங்கில இலக்கிய உலகில் அறியப்படாத ஒன்றாக இருந்தது. அவ்வாண்டு நாகூப் மாஃபூஸ் நோபல் பரிசு பெற்றபோது மாஃபூஸ் போலவே, ஆங்கில இலக்கியத்தை நேசிப்பவர்களுக்கும் அது ஒரு அதிர்ச்சியான செய்தியாக வந்தது.

தலைசிறந்த அந்த எழுத்தாளரின் புத்தகங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் தகுதி வாய்ந்த மொழிபெயர்ப்பாளர் யாரும் இல்லை என்று அப்போதுதான் கெய்ரோ பிரஸ்ஸில் அமெரிக்கன் யுனிவர்சிட்டி சொல்லியிருந்தது. அப்போது அவர்கள் குழுக்களாய் மொழிபெயர்த்துக் கொண்டிருந்தனர். சில சமயம் நான்கு கல்வியியலாளர்கள் அல்லது மொழிபெயர்ப்பாளர்கள் தம் ஒவ்வொருவரின் மொழிபெயர்ப்பையும் சரி பார்த்துக் கொடுத்துக் கொள்வதுண்டு.

1987ஆம் ஆண்டுக்குப்பின் நவீன அரேபிய இலக்கியத்தின் இருப்பை பதிப்பகத்தினர் உணர்ந்து கொண்டனர். மெல்ல மெல்ல அரேபிய புத்தகங்கள் ஆங்கிலத்தில் வர ஆரம்பித்தன. சிறுதுளிகளாய் இருந்தது செப்டம்பர் 2001க்குப்பின் நீர்த்தடம் போலாயிற்று. இப்போது அது ஒரு சிற்றோடை போன்ற நிலையைத் தொட்டிருக்கிறது.

இன்று காலை, ஷுப்பக் பெஸ்டிவல் கலந்துரையாடலில் நாங்கள் ஒரு குழுவினராய், “ஆங்கில மொழியில் அரேபிய இலக்கியத்தின் வளர்ச்சிஎன்ற தலைப்பில் பேசப்போகிறோம். இந்த வளர்ச்சியை எப்படி புரிந்து கொள்வது என்பது குறித்து கருத்து வேற்றுமை இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன்இது நன்மையா தீமையா என்று.

அரேபிய இலக்கியத்தை, “பிரேதப் பரிசோதனைசெய்வது போல் மேற்கத்திய வாசகர் அணுகுகிறார் என்று இதற்கு முன்னர் எகிப்திய நாவலாசிரியர் சினான் அன்டூன் பேசியிருக்கிறார், அவரும் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்கப் போகிறார்.

நாம் வாசிக்கும் புத்தகங்கள் குறித்து வேறு பலரும் விமரிசித்திருக்கின்றனர்: “தவறான புத்தகங்களைநாம் மொழிபெயர்ப்பதாக எகிப்திய நாவலாசிரியர் இப்ராகிம் ஃபர்காலி கூறியிருக்கிறார். சிறந்த அரேபிய இலக்கியத்தைக் கண்டறிய நாம் போதுமான முயற்சிகள் செய்வதில்லைஎன்று லேபானிய நாவலாசிரியர் ஹனான் அல்ஷைக் குறைபட்டுக் கொண்டிருக்கிறார்.

அன்டூன் சொல்வது சரிதான். பல வாசகர்களும் ஏதோ ஒரு புரிதலை அளிக்கக்கூடிய பிரேதத்தை அணுகுவது போல்தான் ஆங்கிலத்தில் உள்ள அரேபிய இலக்கியத்தை அணுகுகின்றனர். ஃபர்காலி மற்றும் அல்ஷைக் ஆகிய இருவர் சொல்வதும் சரிதான். சில மோசமான நாவல்கள் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன, சில நல்ல நாவல்கள் கண்டுகொள்ளாமல் விட்டுப் போயிருக்கின்றன.

ஆனால்கூட இதுவரை மொழிபெயர்க்கப்பட்டுள்ள சில புத்தகங்கள் மூளையைக் கலங்கடிக்குமளவு பிரமாதமாக இருந்திருக்கின்றன. அரேபிய இலக்கியத்தின் எழுச்சியை நாம் எவ்வாறு புரிந்துக் கொள்ளப் போகிறோம் என்றும் அதற்கான சரியான கருவிகள் எவை என்றும் நான் பேசுவதாக இருக்கிறேன்.

சிறந்த நாவல்கள் சில வாசிக்கப்படாமல் விட்டுப் போயிருக்கின்றன. அல்லது, அவை வாசிக்கப்பட்டபோதும், அவற்றின் செறிவு, புரட்டிப் போடும் தன்மை, நளினம் போன்றவை பெருமளவு கவனிக்கப்படவில்லை.

ஆங்கில மொழியில் வெளியிடப்படும் அரேபிய இலக்கியம் இவ்வளவையும் படிப்பது என்பது இது போலிருக்கிறதுநாம் வேற்று மொழியொன்றை கேட்டுக் கொண்டிருக்கிறோம், அதன் சொற்களின் பொருள் விளங்குகிறது, ஆனால் அவை எதைச் சுட்டுகின்றன என்பது பிடிபடவில்லை, அவற்றின் நகைச்சுவை விளங்கவில்லை, அதன் உட்கிடையாய் பொதிந்திருக்கும் இசை நம்மைத் தொடவில்லை.

இந்தத் தட்டைத்தன்மைக்கு குறைபட்ட மொழிபெயர்ப்புகளை ஓரளவு குற்றம் சொல்லலாம். ஆனால் சில காரணங்கள் நம் கண்ணுக்குப் புலப்படாத வரலாற்றின் பிரதேசங்களில் இருக்கின்றன. ஒரு இலக்கியப் படைப்பை மொழிபெயர்க்க முடியாததாகச் செய்வது எந்த ஒரு குறிப்பிட்ட சொல்லுக்கும் இணையான வேறொரு சொல்லைக் கண்டுபிடிக்க முடியாததன் தோல்வியல்ல. “மொழிபெயர்க்கப்படமுடியாத சொற்கள் என்று நீண்டு செல்கிறது ஒரு பட்டியல் backpfeifengesicht (ஜெர்மன் மொழியில், “முட்டி தொடக் காத்திருக்கும் முகம்“,), bakku-span (ஜப்பானிய மொழியில், “பின்னழகு மட்டும் வாய்த்த பெண்“)- இவற்றுக்கு இணையான ஒற்றைச் சொல் இல்லாதிருக்கலாம், ஆனால் எளிதில் புரிந்துகொள்ளப்படக்கூடிய மொழிபெயர்ப்புகள் இவற்றுக்குச் சாத்தியம்.

இசை நயம், ஓசை நயம் போன்றவை மொழிபெயர்க்க இன்னும் கடினமாக இருக்கலாம். ஆனால் உண்மையில், ஒரு இலக்கிய மரபின் முழுமையைச் கட்டுவதுதான் மொழிபெயர்க்க மிகக் கடினமாக விஷயம். அரபு மொழி வாசகர்கள் ஏன் இந்தப் படைப்பைச் சிறந்த ஒன்றாகக் கருதுகின்றனர்? ஆங்கிலத்தில் நாம் மதிக்கும் அதே விஷயங்களைத்தான் அவர்களும் எதிர்பார்க்கிறார்களா, அல்லது முற்றிலும் வேறுபட்ட ஒன்றில் அதன் முக்கியத்துவம் உள்ளதா?

மேலும், இலக்கியம் என்பது ஒரு படைப்பின் மீது மற்றொன்று என்பதான கட்டமைப்பு. பிராங்க் பாம் எழுதிய விசார்ட் ஆப் ஓஸ்பற்றி கொஞ்சம்கூட தெரியாமல் விக்கெட்கதையைப் புரிந்து கொள்ள முடியாது. ஷேக்ஸ்பியர் மற்றும் பைபிள் பற்றிச் சிறிதேனும் அறியாதவர்களுக்கு மொபிடிக் காத்திரம் குறைவான படைப்பாகவே இருக்கும்.

இலக்கிய வகைமைகள், மையச் சித்திரங்கள், மற்றும் பிற நாவல்கள் நிறைந்த சூழ்நிலத்தில் நாவல்கள் தம் இடத்தை எடுத்துக் கொள்கின்றன. அரேபிய செவ்விலக்கியத்தோடு எந்த தொடர்புமற்ற வாசகருக்கு பால் ஸ்டார்கி மொழிபெயர்த்த யூசுப்ரக்காவின் சுல்தான்ஸ் சீல்புரிந்து கொள்ளக் கடினமாக இருக்கும்.

ஆனால் முதல் பார்வையில் தோன்றுவதுபோல் அரேபிய மரபும் ஆங்கில மரபும் அவ்வளவு தொடர்பற்றவைல்ல, ஒன்றையொன்று ஊடாடும் பல கணங்கள் உள்ளன. ஸ்பானிய மொழி வழியாக அல்அன்டலுஸின் ரொமாண்டிக் அரேபிய கவிதை ஆங்கிலம் சென்று சேர்ந்திருக்கிறது. இப்ன் துஃபாய்ல் எழுதிய ஹய் இப்ன் யாகஜன்டேனியல் டிஃபோவின் ராபின்சன் க்ரூசோஎழுதப்பட காரணமாக இருந்திருக்கலாம். பத்தொன்பதாம் நூற்றாண்டு ஆங்கில இலக்கிய வளர்ச்சியில் ஆயிரத்து ஒரு இரவுகளின் தாக்கம் மிகப் பெரியது, அது விரிவாக ஆவணப்படுத்தப்பட்டும் உள்ளது.

பதிலுக்கு ராபின்சன் குரூசோ பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் அரபியில் மொழிபெயர்க்கப்பட்டது. அதன்பின் ஆர்சீன் லூபின் மற்றும் ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகளும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. ஆயிரத்தொரு இரவுகள், டாயில் மீது தாக்கம் செலுத்தியது போலவே அவர் முக்கியமான பல அரேபிய எழுத்தாளர்களையும் பாதித்திருக்கிறார்.

ஆனால் பகிர்ந்து கொள்ளப்படாத கணங்களும் பல உண்டு. அப்தல் ரகுமான் முனிப்பின் சிடிஸ் ஆப் சால்ட்என்ற சிறந்த நாவலை அக்டோபர் 1988ஆம் ஆண்டு நியூ யார்க்கரில் விமரிசனம் செய்யும்போது ஜான் அப்டைக் ஏறத்தாழ முரட்டுத்தனமாகவே அதைப் புறந்தள்ளினார். முனிப், “நாம் நாவல் என்று அழைக்கும்படியான ஒரு கதைசொல்லலை நிகழ்த்துமளவு மேலைமயமாக்கப்படாதவர். அவரது குரல், கூடார நெருப்பருகில் அமர்ந்து விளக்கம் சொல்பவர் போலிருக்கிறது….”

அரேபிய மரபைப் புரிந்து கொள்ளாமல்அரேபிய மரபு என்ற ஒன்று இருப்பதைப் புரிந்து கொண்டதாகக் காட்டிக்கொள்ளவும் இயலாமல்அப்டைக்கால் முனிப்பின் படைப்பின் உள்நுழைய இயலவில்லை.

குறிப்பிட்ட ஒரு பார்வையில் வாசிக்கப்படும்போது, பத்தொன்பதாம் நூற்றாண்டு அரேபிய இலக்கியத்தின் மிகச் சிறந்த படைப்புகளில் ஒன்றான, “லெக் ஓவர் லெக்” (1855) நாவலும்கூட, “முழுமையாக மேலைமயமாக்கப்படாததுஎன்று நிராகரிக்கப்படக்கூடும். மேற்கத்திய பெருநகரங்களின் வாழ்வையும் இலக்கியத்தையும் அஹமது ஃபாரிஸ் அல்ஷித்யாக் அறியாதவர் என்பதல்ல இதன் காரணம். மொழிபெயர்ப்பாளர் ஹம்ப்ரி டேவிஸ், அல்ஷித்யாக், “மேற்கத்திய நாவலைப் பகடி செய்கிறார். அடித்துக் கொட்டும் மழையில், காலை பத்து மணிக்கு வீட்டைவிட்டுச் செல்லும் ஒரு பெண் இரண்டு மணி நேரம் கழித்து வீடு திரும்புவது உங்களுக்கு மகத்தான முக்கியத்துவம் கொண்டதாக இருக்கிறது,” என்று எழுதுவதாகச் சொல்கிறார்.

லெக் ஓவர் லெக், ட்ரிஸ்ட்ராம் ஷாண்டியுடன் ஒப்பிடப்பட்டிருந்தாலும், அல்ஷித்யாக்கின் திசைதிரும்பல்கள் மொழி சார்ந்தன, விஷயம் சார்ந்தவையல்ல. அரேபிய இலக்கியம் வார்த்தை விளையாட்டில் வெகுகாலமாய் வசீகரிக்கப்பட்டுள்ளதைப் பிரதிபலிக்கும் நாவல் இது.

மேலை நாவல்களிலிருந்து குறிப்பிடத்தக்க வகையில் லெக் ஓவர் லெக் மாறுபட்டிருந்தாலும், ஆங்கில மொழியில் மிகக் குறைந்த அளவு அங்கீகாரமே பெற்றுள்ளது. அமெரிக்காவில் சென்ற ஆண்டு சிறந்த மொழிபெயர்ப்பு நூல்களுக்கான குறும்பட்டியலில் இது இடம் பெற்றது. என்றால் அதற்கு டேவிஸ்சின் மகத்தான மொழிபெயர்ப்பையே காரணம் சொல்ல வேண்டும். இலக்கிய மரபுகளுக்கு இடையே நிலவும் உறவு தன்னளவிலேயே முக்கியத்துவம் கொண்டது என்பது மட்டுமல்ல, சமகால அரேபிய நாவல்களை ரசிக்க நமக்கு புதிய திறப்புகளையும் அளிக்கிறது.

அரேபிய இலக்கிய நூலகம் (LAL) என்ற செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக லெக் ஓவர் லெக் பதிப்பிக்கப்பட்டது. நவீனத்துக்கு முற்பட்ட அரேபிய இலக்கியத்தை வாசிக்கவும் ரசிக்கவும் தகுந்த வகையில் மொழிபெயர்ப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கும் திட்டம் இது.

இதன் முதல் நூல் 2012ஆம் ஆண்டு வெளியிடப்பட்டதுஅரேபிய இலக்கியத்துடன் நமக்கு உள்ள உறவை மாற்றுவதை இது தன் நோக்கமாகக் கொண்டிருக்கிறது. அரேபிய இலக்கியத்தின் இருபதாம் நூற்றாண்டு நஹ்தா, அல்லது, மறுமலர்ச்சிக்கு முற்பட்ட படைப்புகளைப் பதிப்பிப்பதில் இது கவனம் செலுத்துகிறது.

இந்த மொழிபெயர்ப்புகள் சமகால இலக்கியம் குறித்த நம் புரிதலைச் செறிவாக்குகின்றன. சமகால ஆங்கில இலக்கியம் வாசிக்க நமக்கு ஷேக்ஸ்பியரும் ஜேன் ஆஸ்டனும் தேவைப்படுவது போலவே, எலியாஸ் கௌரியின் அற்புதமான நாவல், “ஆஸ் தோ ஷி வேர் ஸ்லீப்பிங்கின் ஊடுபாவுகளை நாம் உணர வேண்டுமானால் முடன்னபியைக் கொஞ்சமாவது அறிந்திருக்க வேண்டும்.

அண்மையில் நிகழ்ந்த லால் கருத்தரங்கு ஒன்றில், நாவலாசிரியரும் பேராசிரியருமான மரினா வெர்னர், நாம் சாசரியன் என்று சொல்வது போலவே ஷித்யாக்கியன் என்று சொல்லவும் கற்றுக்கொள்ளலாம், எனக் குறிப்பிட்டார்.

ஆம்: இலக்கியத்தின் எழுச்சி கடந்த சில ஆண்டுகளின் கவிதைகள் மற்றும் நாவல்களைக் கொண்டு மேலிருந்து வருவதாக மட்டும் இருக்க முடியாது. அது அரேபிய இலக்கிய மரபின் முழுமையுடனும் நாம் உரையாடுவதைக் கொண்டே நிகழ இயலும்.

நன்றி : The National 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.