“ஹ ஹ ஹ ஹ ஹ ஹ” நான் வாய் விட்டு உரக்கச் சிரித்தேன். வெளியில் நின்றுகொண்டு இருப்பவர்கள் மூச்சைச் சட்டென்று உள்ளிழுக்கும் ஓசை கேட்டது. ஓரிருவர் பின்வாங்குவது போல் தெரிந்தது.
“ஏன் சிரிக்கிறாய்?”
“நீ கள்ளம் கபடம் இல்லாதவர் வேண்டும் என்று கேட்கிறாய். அது போல் இந்தப் பூவுலகில் நான் யாரையும் பார்த்ததில்லை. உனக்கு எப்படி கிடைப்பார்கள்?. ஹிமய மலையில்தான் நீ போய் பார்க்க வேண்டும். அங்குதான் ஆசை துறந்த முனிவர்கள் கிடைப்பார்கள். இங்கு அது சாத்தியமில்லை”
“எங்களுக்கு முனிவர்கள் வேண்டாம். சாதாரண மனிதர்கள்தான் வேண்டும்”
“ஆனால் சாதாரண மனிதர்களுக்கு ஆசை அதிகம்”
“ஆசை இருப்பவர்கள்தான் எங்களுக்கு வேண்டும். ஆசை, மகிழ்ச்சி, வீரியம், கோபம், உந்துதல் இவை எல்லாம் எங்களுக்கு ஏற்றவையே. ஆசை இல்லாமல் எதுவும் முன்னகராது. ஏதோ படைக்க வேண்டும் என்ற ஆசை, சாதிக்க வேண்டும் என்ற ஆசை. அந்த ஆசையை ஒட்டி வரும் உழைப்பு. அந்த உழைப்பினால் வரும் முன்னேற்றம். இவை எல்லாம் முனிவர்களால் வராது. நாம் முன்னேற வேண்டும் என்றால் சாதனை படைக்கும் உள்ளம் தேவை. அதற்குள் ஓர் ஆசை துளிர்விட வேண்டும். அதனால் நாங்கள் ஆசையை வெறுப்பதில்லை. ஆசையில், சாதிக்க வேண்டும் என்ற வெறியினால் உருவாகும் குரோதம், பகை போன்றவற்றை வெறுக்கிறோம். ஆசை இருந்தும் கள்ளம் கபடம் இல்லாதவர்களைத் தேடுகிறோம்”
“ஆசை இருந்தால் அதனுடன் கள்ளமும் கபடமும் சேர்ந்து வருவது இயற்கை. இதை யாராலும் மாற்ற முடியாது”
“நாங்கள் மாற்றியிருக்கிறோம். எங்கள் கிரகத்தில் கள்ளம் கபடத்தை ஒழித்துவிட்டோம். அவை எங்களுக்குள் எப்படி குடிகொண்டிருக்கின்றன என்பதை அறிந்து எங்கள் விஞ்ஞானம் மூலமாக அதற்குரிய அணுக்களை மாற்றிவிட்டோம். ஆ. உனக்கு அணு என்றால் என்ன என்று தெரியாது இல்லையா? உங்கள் விஞ்ஞானம் இன்னும் எங்கள் அளவிற்கு வளரவில்லை”
“உங்கள் கிரகத்தில் அப்படி இருக்கலாம். ஆனால் இங்கே அது போல் மாந்தர்கள் கிடைக்க மாட்டார்கள்”
“கிடைத்திருக்கிறாரே!”
“யார்?”
“இந்த இளவரசி. கள்ளம் கபடம் என்பது அவளிடம் அதிகம் இல்லை. அவளை எங்கள் கிரகத்திற்கு அழைத்து சென்று அவள் அணுக்களை ஆராய்ந்து உங்கள் உடலில் கள்ளம் கபடம் எப்படி குடிகொண்டிருக்கிறது என்பதை அறிந்து அதை எப்படி ஒழிப்பது என்று ஆராயப் போகிறோம்”
“அப்படியென்றால் கள்ளமும் கபடமும் நிறைந்த ஒருவரைதானே நீங்கள் அழைத்துச் செல்ல வேண்டும்?”
“நீ கூறுவது உண்மை. ஆனால் ஏனோ தெரியவில்லை. கள்ளம் கபடம் உள்ளவர்கள் எங்கள் பக்கத்தில் வந்தாலே வெடித்துச் சிதறி விடுகிறார்கள். கள்ளமும் கபடமும் குறைவாக இருப்பவர்கள் தூக்கி எறியப்படுகிறார்கள். இந்த இளவரசி போல் இருப்பவர்கள் மட்டுமே நாங்கள் பக்கத்தில் சென்றாலும் பாதிக்கப்படாமல் இருக்கிறார்கள். அதனால்தான் நான் அவளை எடுத்துச் செல்ல வேண்டும் என்று பார்க்கிறேன். அவளை அழைத்துச் சென்றால்தான் நான் பரிசோதனையை முடித்துவிட்டு இங்கு திரும்பி மனிதர்களின் அணுக்களை மாற்றி, கள்ளம் கபடத்தை நீக்கி விட்டு இங்கு குடிபெயர முடியும்”
“நீங்கள் இங்கு வந்து தங்க வேண்டியதுதானே? எங்களைவிட நீங்கள் பலசாலிகள். உங்களை எங்களால் பார்க்க முடியவில்லை. நீங்கள் எங்கள் அருகில் நின்றாலே நாங்கள் வெடித்து விடுகிறோம். பிறகு நீங்கள் எதற்கு பயப்படுகிறீர்கள்?”
“பயமில்லை. நாங்கள் நியாயமாக இருக்க வேண்டும் என்றே பார்க்கிறோம். இது உங்கள் கிரகம். நாங்கள் இங்கு உங்களுடம் சேர்ந்து வாழ ஆசைப்படுகிறோம். உங்களைக் கொன்றுவிட்டு இங்கு வாழ ஆசைப்படவில்லை. விஞ்ஞானமும் மெய்ஞானமும் சேர்ந்தே வளர வேண்டும் என்பது எங்கள் குருவின் போதனை. அதையே நாங்கள் கடைபிடிக்கிறோம்”
“அப்படியென்றால் என்னைக் கூட்டிச் செல். இளவரசியை விட்டுவிடு. எனக்கு உங்கள் கிரகத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. நான் உன் அருகில் இருந்தாலும் ஒன்றும் ஆகவில்லை,. என்னை அழைத்துச் செல்”
“என்னால் முடியாது. எனக்கு இளவரசியைத் தூக்கிக்கொண்டு செல்லும் பலம் இல்லை. நான் வயதானவன். இளவரசியை இன்னும் உயரே தூக்க வேண்டும். அதற்குப் பிறகு என் சமிக்ஞையைக் கண்டு விண்வெளி கப்பலிலிருந்து ஒரு ஒளி வரும். அது என்னையும் இளவரசியையும் அணு அணுவாகப் பிரித்து கப்பலுக்குள் இழுத்துக் கொள்ளும். அங்கு மறுபடியும் எங்கள் அணுக்கள் ஒன்று சேர்க்கப்படும். ஆனால் என்னால் உயரத்திற்குப் போக முடியவில்லை. நான் கடைசியில் ஒரு முறை முயற்சி செய்யப் போகிறேன். நீ கட்டிலில் இன்னும் சில மெத்தைகள் போடச் சொல். என்னால் முடியவில்லை என்றால் இளவரசி கீழே விழுந்து விடுவாள், பலத்த அடி படும்”
“என்னை எடுத்துச் செல்ல ஏன் முயற்சி செய்யக்கூடாது? உன்னைக் கெஞ்சிக் கேட்கிறேன். இளவரசியை விட்டு என்னை அழைத்துச் செல்”
“உனக்கு ஒரு ரகசியம் சொல்கிறேன். என்னுடன் இன்னும் இருவர் வந்தார்கள் அவர்கள் வெகுதூரத்தில் வேறொரு காட்டில் இருக்கிறார்கள். அவர்கள் என்னைவிட வயதில் சிறியவர்கள். அவர்களிடம் நீ சென்றால், அவர்களால் உன்னை நெருங்க முடிந்தால் உன்னை அழைத்துச் செல்வார்கள். நீ அங்கு போ.”
“அது எந்த இடம்? எவ்வளவு தூரம் இருக்கிறது?”
“உங்கள் ஊரில் அந்த இடத்தின் பெயர் என்ன என்று எனக்கு தெரியாது ஆனால் அவர்கள் ஒரு அடர்ந்த காட்டில் இருக்கிறார்கள். அவர்கள் இருக்கும் இடத்திற்கு பக்கத்தில் ஒரு நதி ஓடிக்கொண்டிருக்கும். அவர்கள் இருக்கும் இடம் நிசப்தமாக இருக்கும். ஒலியை உறிஞ்சிக் குடிக்கும் தன்மை அவர்களிடம் உண்டு. அதனால் அவர்கள் இருக்கும் இடத்தில் ஒரு ஒலியும் உன் காதில் விழாது”
“எங்கள் நாட்டிலேயே பல காடுகள், காட்டுக்குள் நதிகள் என்று பரவி இருக்கின்றன. அதைத் தவிர உலகமெங்கும் பல காடுகள் உள்ளன. நான் எப்படி தேடுவது?”
“அவர்கள் இருக்கும் காட்டுக்கு மேல் நிலவு இல்லாத நாளில் நட்சத்திரங்களின் கூட்டம் இது போல் இருக்கும்”
இதைச் சொன்னவுடம் என் எதிரில் உள்ள சுவற்றில் நீல நிறம் பரவியது. எல்லோரும் திகைத்து நின்றனர். எல்லோரும் கண்ணை விரித்து சுவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தனர். மெதுவாக சுவற்றில் நட்சத்திரங்கள் தோன்ற ஆரம்பித்தன. சுவரெங்கும் இப்பொழுது நட்சத்திரங்கள்.
“இதை நன்றாகப் பார்த்துக்கொள். அந்த இடத்தில் இரவு நட்சத்திர அமைப்பு இது போல் இருக்கும். இதற்கு மேல் அந்த இடத்தைப் பற்றி உன்னிடம் சொல்ல எனக்கு வேறு வழியில்லை. சரி இப்பொழுது நான் இளவரசியை இன்னும் உயரே தூக்கப் போகிறேன்”
“ஒரு நிமிடம் இரு” என்று சொல்லிவிட்டு, ராஜாவைப் பார்த்து, “சீக்கிரம் இன்னும் இரண்டு மெத்தைகளைக கொண்டு வாருங்கள். சீக்கிரம்”, என்றேன்.
சேவகர்கள் ஓடிச்சென்று இரண்டு மெத்தைகளை கொண்டு வந்து கட்டில் மேல் போட்டார்கள்.
இளவரசி மெதுவாக இன்னும் மேலே தூக்கிச் செல்லப்பட்டாள். பச்சை நிற ஒளியும் தீவிரமானது. எனக்கு மட்டும் ஒரு முனகல் சப்தம் கேட்டது. இளவரசி இன்னும் மேலே மேலே செல்ல ஒளியும் தீவிரமானது. முனகலின் தீவிரமும் அதிகமானது. திடீரென்று ‘அம்மா’ என்று ஒரு கூக்குரல் கேட்டது. ஏதோ ஒரு பச்சை நிற திரவம் சிதறி நான்கு சுவர்கள் மேலும் தெறித்தது. இளவரசி “தொபீர்” என்று கீழே மெத்தை மேல் விழுந்தாள். எல்லோரும் “ஐயோ” என்று அலறிக்கொண்டு அறைக்குள் ஓடி வந்தார்கள். எனக்கு மட்டும் எல்லாம் நிசப்தமாக இருந்தது.
(தொடரும்)