கண்ணுக்குத் தெரியாத கரம்- ஒரு நாவலின் ரகசிய வரலாறு

(அண்மையில் The New York Times தளத்தில் ஜானதன் மாஹ்லர் (Jonathan Mahler) எழுதியிருந்த, “The Invisible Hand Behind Harper Lee’s ‘To Kill a Mockingbird’” என்ற கட்டுரையின் தமிழாக்கம்).

அப்போது 31 வயதாகியிருந்த ஹார்பர் லீ, 1967ஆம் ஆண்டின் வேனிற்பருவத்தில் “Go Set a Watchman” என்ற நாவலின் கைப்பிரதியைத் தன் ஏஜண்டிடம் அளித்தார். அனைவராலும் நெல் என்று அழைக்கப்பட்ட ஹார்பர் லீக்கு நாவல் எழுத வேண்டும் என்ற பெருவிருப்பம் இருந்தது. அவரது கைப்பிரதி பதிப்பகங்களுக்கு அனுப்பப்பட்டது. அவற்றில் ஒன்றுதான் இப்போது காலாவதியாகிவிட்ட ஜே. பி. லிப்பின்காட் கம்பெனி. இறுதியில் அதுவே நாவலின் கைப்பிரதியை வாங்கிக் கொண்டது.

அந்த நாவல், லிப்பின்காட் நிறுவனத்தில் தெரசா வொன் ஹோஹோஃப் டோரி என்ற பெண்ணின் கை சேர்ந்தது. டே ஹோஹோஃப் என்று தொழில் வட்டத்தில் அறியப்பட்டிருந்த அவர் உருவத்தில் சிறியவராக, ஒல்லியானவராக இருந்தார். ஐம்பதுகளின் இறுதிகளில் இருந்த, நீண்ட அனுபவம் கொண்ட எடிட்டர் அவர். படித்தவுடன் நாவல் அவருக்குப் பிடித்துப் போனது. “ஒவ்வொரு வரியிலும் உண்மையான எழுத்தாளரின் பொறி தட்டியது,” என்று அவர் பின்னர் லிப்பின்காட் நிறுவன வரலாற்றை எழுதும்போது நினைவுகூர்ந்தார்.ஆனால் அந்தக் கைப்பிரதி ஹோஹோஃபின் பார்வையில், எந்த வகையிலும் பதிப்பிக்கத்தக்கதாக இருக்கவில்லை. “முழுமையாகக் கட்டமைக்கப்பட்ட நாவல் என்பதைவிட ஒருசில நிகழ்வுகளின் தொடராக” மட்டுமே அது இருந்தது என்று அவர் பின்னர் விவரித்தார். அடுத்த இரு ஆண்டுகளில் அவர் லீயை ஒன்று மாற்றி இன்னொன்று என பல வரைவு வடிவங்கள் எழுதச் செய்த பின்னரே அது முழுமை பெற்ற இறுதி வடிவை அடைந்தது. அப்போது அதன் தலைப்பு, “To Kill a Mockingbird.”, என்று மாற்றப்பட்டது.

இப்போது, இந்த வாரம், “Go Set a Watchman” பதிப்பிக்கப்படுகிறது. இதன்மூலம், மாஸ்டர்பீஸ் என்று பலராலும் மதிக்கப்படும் ஒரு நூலின் முன் பின் வடிவங்களைக் காணும் அபூர்வ வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதன் பிரதான பாத்திரங்கள் ஒன்றாக இருக்கலாம். ஆனால் வடிவத்திலும் தொனியிலும் மாக்கிங்பேர்ட் நாவலிலிருந்து வாட்ச்மேன் நாவல் முற்றிலும் மாறுபட்ட நூல். இந்த நாவலில், அலபாமாவில் மேகோம்பில் வாழும், கற்றுக்கொள்ளத் துடிக்கும் குழந்தையல்ல ஸ்கவுட். மாறாக, மேகோம்பிலிருந்து நியூ யார்க் சென்று வசிக்கும் இளம் பெண் அவள். அவளது தந்தை, அட்டிகஸ் ஃபிஞ்ச் என்ற மகத்தான மனிதன், இதில் ஒரு இனவெறியன்.

மிகக்குறைவாகவே காப்பி எடிட் செய்யப்பட்டுள்ள வடிவில் “வாட்ச்மேன்” இப்போது பதிப்பிக்கப்படுகிறது. இது தவிர்க்க முடியாத ஒரு கேள்விக்கு நம்மை இட்டுச் செல்கிறது. இதை “மாக்கிங்பேர்ட்” நாவலாக ஹார்பர் லீ மாற்றும்போது, பிறர் கண்ணுக்குத் தெரியாமல் அவளை வழிநடத்திய கரம் யாருடையது? அதைவிட முக்கியமான கேள்வி இது- தன் தந்தையின் இனவெறிப் பார்வையைக் கண்டு கசந்துபோன ஒரு இளம்பெண்ணின் ஏமாற்றத்தை விவரிக்கும் இருண்மை நிறைந்த ஒரு கதை, அறத்துணிச்சலும் மானுட நேயமும் கொண்ட மீட்சிக்கதையாக மாறியதில் ஹோஹோஃபின் பங்கு என்ன? இதைப் பேசுவதானால், இன்னொரு கேள்வி. ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்குப் பின்னர், “மாக்கிங்பேர்ட்“டின் முதல்வடிவைப் பதிப்பிப்பது என்ற முடிவு குறித்து அவரது உணர்வுகள் என்னவாக இருந்திருக்கும்?

பதிப்பகத்துறை சார்ந்த கர்ணபரம்பரைக் கதைகள் பலவற்றில் எழுத்தாளர்கள் மீது தங்கள் கருத்தைத் திணித்த, பிடிவாதத்துக்குப் பேர்போன எடிட்டர்கள் ஏராளம் உண்டு. சார்லஸ் ஸ்க்ரிப்னர்’ஸ் சன்ஸ்சில் நீண்டகாலம் எடிட்டோரியல் டைரக்டராக இருந்த மாக்ஸ்வெல் பெர்கின்ஸ், எர்னஸ்ட் ஹெமிங்வேயிடம், “அடக்கி வாசி,” என்று சொன்னவர். தாமஸ் வுல்ஃப்பின் முதல் நாவல், “Look Homeward, Angel,”, அதில் 90,000 சொற்களைக் கத்தரித்தவர் அவர். ரேமண்ட் கார்வரின் கதைகளின் பல பத்திகளை முழுதாகவே திருத்தி எழுதியவர் கார்டன் லிஷ், பின்னர் அதைப் பற்றி தன் நண்பர்களிடம் பெருமையாகவும் பேசியிருக்கிறார்.

1974ஆம் ஆண்டு, தன் 75ஆம் வயதில் மறைந்த ஹோஹோஃப் இவர்களைப் போலல்ல, முற்றிலும் வேறொரு வார்ப்பு. “ஏதோ ஒரு தாய்மை உணர்வால் நான் பீடிக்கப்பட்டிருக்கிறேன். அதனால் நான் நேசிப்பவர்கள், மிகவும் உயர்வாய் மதிப்பவர்கள், இவர்களின் பாதையை எளிதாக்கவே எப்போதும் விரும்பியிருக்கிறேன்,” என்று அவர் 1969ஆம் ஆண்டு எட்வர்ட் பர்லிங்கேமுக்கு ஒரு கடிதத்தில் எழுதுகிறார். அப்போது லிப்பின்காட்டின் புதிய எக்சிக்யூட்டிவ் எடிட்டராக இணைந்திருந்தவர் எட்வர்ட்.

“அவர் மிக கவனமாக வாசிக்கக்கூடியவர், உறுதியானவர், ஆனால் என்னை ஒருபோதும் கட்டாயப்படுத்தியதில்லை,” என்று அண்மையில் நிகோலஸ் டெல்பான்கோ ஒரு நேர்முகத்தில் கூறியுள்ளார். அப்போது இளம் எழுத்தாளராக இருந்த அவர், 1960களின் பிற்பகுதியில் ஹோஹோஃபுடன் இணைந்து செயல்பட்டிருக்கிறார்.

ஆனால், தொடர்ந்து புகைபிடித்துக் கொண்டிருந்த, ஆழமான, கரகரப்பான குரல் கொண்ட ஹோஹோஃப், பிரதி என்று வந்தால் பிடிவாதக்காரர், தன் கருத்தைத் தீவிரமாக வலியுறுத்தும் எடிட்டர் என்றுதான் அனைவரும் சொல்கிறார்கள். டெல்பான்கோவின் “Grasse 3/23/66,” என்ற இரண்டாம் நாவலை அவர் ஐநூறு பக்கங்களிலிருந்து இருநூற்றுக்கும் குறைவானதாகக் கத்தரித்தார்- அவர் அப்படிச் செய்ததை இன்றும் டெல்பான்கோ நன்றியுடன்தான் நினைவுகூர்கிறார்.

“டு கில் எ மாக்கிங்பேர்ட்,” மற்றும் ஹார்பர் லீ மீது ஹோஹோஃப்பின் தாக்கத்தைப் பொருத்தவரை, இருவரும் மிக நெருங்கிப் பணியாற்றினார்கள் என்றும் இருவருக்குமிடையே நெருங்கிய நட்பிருந்தது என்றும் கருத இடமிருக்கிறது.

லிப்பின்காட்’ஸ் அலுவலகத்தில் ஹோஹோஃப்பைச் சந்திப்பதற்கு ஆறாண்டு காலம் முனனர், மனநலம் பாதிக்கப்பட்டிருந்த தனது தாயை இழந்திருந்தார் ஹார்பர் லீ (“மாக்கிங்பேர்ட் பதிப்பிக்கப்பட்டு இரண்டாண்டுகளுக்குப்பின் அவரது தந்தை மறைந்தார். வழக்கறிஞராக இருந்த அவர்தான் அட்டிகஸ் பாத்திரத்தின் முன்மாதிரியாக இருந்தவர்).

பதிக்கப்படாத எழுத்தாளர்கள் பலரையும் போலவே ஹார்பர் லீ தன் ஆற்றல்கள் குறித்து சந்தேகங்கள் கொண்டவராக இருந்தார். “வாட்ச்மேன்” நாவல் “மாக்கிங்பேர்ட்“டாக வளர்ந்தது குறித்து இவ்வாண்டு வெளியிட்ட அறிக்கையில் அவர், “நான் முதல்முறை எழுதுபவளாக இருந்தேன், எனவே சொன்னதைச் செய்தேன்,” என்று குறிப்பிடுகிறார்.

லிப்பின்காட் நிறுவன வரலாறு குறித்து எழுதும்போது ஹோஹோஃப் இதைப் பற்றி இன்னும் விவரமாகச் சித்தரிக்கிறார். “முதலில் ஓரிரு முறை தோல்வியடைந்த முயற்சிகளுக்குப்பின், கதைப்போக்கு, பாத்திரங்களுக்கு இடையிலான உறவு, எங்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பது அனைத்தும் திருத்தி எழுதும் ஒவ்வொரு முறையும் இன்னும் தெளிவாயிற்று- கதை வலுவாகும்போது சில சிறு மாற்றங்கள் நிகழ்ந்தன, கதை குறித்த அவரது பார்வையும் இன்னும் வலுவானதாக மாறியது- நாவலின் உண்மையான மதிப்பு என்ன என்பது தெளிவாகப் புலப்பட்டது,” என்கிறார் அவர் (1978ஆம் ஆண்டு லிப்பின்காட் ஹார்ப்பர் அண்ட் ரோ நிறுவனத்தால் வாங்கப்பட்டது. அதுவே பின்னர் ஹார்ப்பர் காலின்ஸ் ஆனது, இவர்கள்தான் “வாட்ச்மேன்” நாவலைப் பதிப்பிக்கின்றனர்).

எழுத்தாளருக்கும் எடிட்டருக்கும் இடையே ஒரு இயல்பான, விட்டுக் கொடுக்கும் புரிதல் இருந்தது போலிருக்கிறது. “என் பரிந்துரையை அவர் ஏற்றுக்கொள்ள மறுத்தபோது அதைப் பேசித் தீர்த்தோம், சில சமயம் மணிக்கணக்காகப் பேச வேண்டியிருந்தது. சில சமயம் அவர் என் எண்ணங்களை ஏற்றுக் கொண்டார், சில சமயம் நான் அவர் சொல்வதை ஒப்புக் கொண்டேன், சில சமயம் எங்கள் விவாதம் முற்றிலும் புதிய ஒரு பிரதேசத்துக்குச் செல்லும் திறப்பை அளித்தது,” என்று பினனர் எழுதினார் ஹோஹோஃப்.

ப்ரூக்லின் பகுதியில் ப்ராஸ்பெக்ட் பார்க் அருகே, பல தலைமுறையினரும் ஒன்றாய் வாழ்ந்த க்வேக்கர் குடும்பத்தில் வளர்ந்தவர் ஹோஹோஃப். அவர் படித்ததும் ப்ரூக்லின் பிரெஞ்ச் என்ற க்வேக்கர் பள்ளியில்தான். இப்படிப்பட்ட ஒரு வளர்ப்பு முற்போக்குத்தன்மை கொண்ட சில விழுமியங்கள் இருப்பதை உணர்த்துகிறது. ஆனால், ஹார்பர் லீ “மாக்கிங்பேர்ட்” நாவலைத் திருத்தி எழுத உதவும்போது அவரது மனநிலை எவ்வாறு இருந்தது என்பதற்கான மிகத் தெளிவான திறப்பு, அப்போது அவரே எழுதிக்கொண்டிருந்த புத்தகத்தில் இருக்கிறது. ஹோஹோஃப் இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் நியூயார்க்கில் வாழ்ந்த சமூக ஆர்வலரும் மானுட நேயம் மிக்கவருமான ஜான் லவ்ஜாய் எலியட்டின் வாழ்க்கைக்கதையை அப்போது எழுதிக் கொண்டிருந்தார். அவர் தன் வாழ்வை அந்நகரின் ஏழைகளுக்கு உதவ அர்ப்பணித்துக் கொண்டவர். அந்த நூல், “A Ministry to Man,”  “மாக்கிங்பேர்ட்” வருவதற்கு ஓராண்டு முன், 1959ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டது.

வாட்ச்மேன்” நாவலை, “இனவாத வெறுப்பை உமிழும் பாத்திரங்கள் நிறைந்த, மனதைத் துவளச் செய்யும் கதை,” என்று நியூ யார்க் டைம்ஸின் பிரதான நூல் விமரிசகர் மிசிகோ ககுடானி விவரிக்கிறார். இதை சுவாரசியமான கதையோட்டம் கொண்ட மீட்சிக்கதையாக மாற்றும் வகையில் ஹார்பர் லீக்கு வழிகாட்டும்போது ஹோஹோஃப் தன்னளவில் ஒரு இலக்கியப் பயணத்தை நிறைவு செய்கிறார். இந்தப் பயணத்தின் மையம் லீயின் பயணத்துடன் இணைத்தன்மை கொண்டது. அவர் ஜான் லவ்ஜாய் எலியட்டின் சரிதையை எழுதிக் கொண்டிருந்தாரல்லவா, அந்த எலியட், எலிஜா பாரிஷ் லவ்ஜாயின் சந்ததியைச் சேர்ந்தவர். எலிஜா பாரிஷ் லவ்ஜாய், அடிமைமுறையை ஒழிக்கப் போராடிய கிருத்தவ மதபோதகர். அடிமை அமைப்புக்கு ஆதரவான ஒரு கும்பல் அவரை 1837ஆம் ஆண்டு கொலை செய்திருந்தது.

ஹோஹோஃப் இருமுறை மணம் புரிந்து கொண்டவர். அவரது முதலாம் திருமணம் 1929ஆம் ஆண்டு விவாகரத்தில் முடிந்தது. அதன்பின், 1931ஆம் ஆண்டு அவர் லிடரரி ஏஜண்ட் ஆர்தர் டோரியை மணமுடித்தார். அவருக்கு ஒரு மகனும் மகளும் பிறந்தனர்.

1942ஆம் ஆண்டு லிப்பின்காட்டில் வேலைக்குச் சேர்ந்த அவர், பின்னாளில் அதன் சீனியர் வைஸ் பிரசிடெண்ட் பதவியை அடைந்தார். அந்த நாட்களில் எந்த ஒரு பெரிய பதிப்பகத்திலும் உயர்நிலை எடிட்டோரியல் பதவியில் பெண்களைப் பார்ப்பது அபூர்வமாகவே இருந்தது. ஆனால் ஹோஹோஃப் தன் பதவியில் பிரச்சினையில்லாமல் பணியாற்றியதாகவே தெரிகிறது. “அவர் அதிகாரம் செய்யக்கூடியவர். பழுப்பு நிறச் சிகை. தனக்கு எது வேண்டும் வேண்டாம் என்பதில் தெளிவாக இருந்தார். ஒளிவு மறைவின்றி பேசக்கூடியவர்”, என்று பர்லிங்கேம் சமீபத்தில் கூறியிருக்கிறார். “Grasse 3/23/66” நாவலின் முதல் வரைவு வடிவம் குறித்து ஒரு மதிய உணவுச் சந்திப்பின்போது அவர் கூறியதை டெல்பான்கோ நினைவில் வைத்திருக்கிறார். “”நிகோலாஸ், இது கொருஸ்கேட்டிங்காக இருக்கிறது,” என்று அவர் சொன்னார். நான் எல்லாம் தெரிந்தது போல் தலையாட்டினேன், ஆனால் அவர் என்ன சொல்ல வருகிறார் என்று ஒன்றும் புரியவில்லை. அவர் தன் இரண்டாம் மார்டினி குடித்து முடித்தபின் நான் என் வீட்டுக்கு ஓட்டம் பிடித்து, அந்த வார்த்தையின் அர்த்தத்தை எடுத்துப் பார்த்தேன்,” என்கிறார் அவர்.

அப்போதுதான் அந்த நிறுவனத்தில் இணைந்திருந்த பர்லிங்கேமுக்கு எழுதிய, தட்டச்சு செய்யப்பட்ட ஆறரை பக்க கடிதத்தில் தனது ஆளுமை, மற்றும் 1969ஆம் ஆண்டுவாக்கில் இருந்த பதிப்புலகச் சூழல் குறித்த ஒரு சித்திரத்தை அவர் அளிக்கிறார். வெவ்வேறு இடங்களில் தன்னையே ஏளனம் செய்து கொள்வதாகவும், வம்பு பேசுவதாகவும், வேடிக்கையாகவும் ஆணித்தரமாகவும் உள்ள இந்தக் கடிதம் மீண்டும் மீண்டும் நிறுவனத்தின் மது அருந்தும் கலாசாரத்தைக் குறிப்பிடுகிறது.

“மது உட்கொண்டபின் அவர் சமநிலையில் இருப்பது கடினம், உட்கொண்டதன் பெருஞ்சுமையும் அதிகம்தான்,” என்று தன்னுடன் பணிபுரியும் ஒருவர் பற்றி ஹோஹோஃப் எழுதினார். வேறொருவரை, “அவர் இந்த மண்ணின் உப்பு,” என்று கூறிவிட்டு, “பெண் என்ற வகையில் தனிப்பட்ட முறையில் எனக்கு மிளகு, மிளகாய், பூண்டு, வெங்காயம், வைன் என்று வேறு சுவைகளே உணவில் பிடித்தமானவை. ஆனால் அவரும் எனக்குப் பிடித்தமானவர்தான்” என்று எழுதுகிறார்.

ஹார்பர் லீயுடன் இருந்த உறவைப் பார்த்தால், ஹோஹோஃப் பதிப்பாசிரிய வழிகாட்டுதலுக்கு அப்பாலும் உதவினார் என்பது தெளிவு. “Mockingbird: A Portrait of Harper Lee,”  என்ற புத்தகத்தில் சார்லஸ் ஜெ ஷீல்ட்ஸ் ஒரு குளிர்க்கால இரவுப்பொழுதில் நடந்ததை எழுதுகிறார். தன் கைப்பிரதியை ஜன்னல் வழியே வெளியில் பனியில் தூக்கி வீசிவிட்டு லீ ஹோஹோஃபை அழுதுகொண்டே அழைக்கிறார். ” உடனே வெளியே போய் எழுதி வைத்திருந்த பக்கங்களை எடுத்துக் கொண்டு வரும்படி டே அவரிடம் சொன்னார்,” என்று பதிவு செய்கிறார் ஷீல்ட்ஸ்.

மாக்கிங்பேர்ட்“டுக்குப் பின்னரும் அதன் ஆசிரியரும் பதிப்பாசிரியரும் நெருக்கமாகவே இருந்தனர். தன் அபார்ட்மெண்ட்டில் ஒரு குழாயின் கீழ் ஒடுங்கிக்கிடந்த, பாதவிரல்கள் பன்னிரெண்டு கொண்ட பூனைக்குட்டி ஒன்றைக் கண்டெடுத்த ஹார்பர் லீ அதை ஒரு மரக்கூடையில் வைத்து, ஹோஹோஃப் வீட்டுக்குக் கொண்டு சென்று கொடுத்தார். “இவன் இருக்க ஒரு வீடு வேண்டும்,” என்றார் அவர். தன் செல்லப்பிராணிகள் பற்றி ஹோஹோஃப்,  “Cats and Other People,” என்று ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். “அவர் எங்களை நன்றாக அறிந்திருந்தார், என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்து ஏற்றுக்கொள்ளச் வைத்தார்”.

ஒவ்வொரு ஆண்டும் ஹார்பர் லீயிடம் இன்னொரு புத்தகம் எழுதி வாங்க முயற்சி செய்து கொண்டிருந்தார் ஹோஹோஃப். அதே சமயம், பொறுமையிழந்திருந்த தன் சகாக்களிடமிருந்தும் லீயைப் பாதுகாத்தார் அவர்.

“ஹார்பர் லீயின் லாண்டரி கணக்கைக்கூட லிப்பின்காட் நிறுவன விற்பனைத் துறை பதிப்பித்திருக்கும்,” என்றார் பர்லிங்கேம். “ஆனால் நெல்லை டே கவனமாகப் பார்த்துக் கொண்டார். நெல்லைப் பெருமைப்படுத்துவதாகவோ அவளுக்கு நியாயம் செய்வதாகவோ இல்லாத எதையும் பதிப்பிக்க மிகையான வணிக அழுத்தம் கொடுக்க அவர் யாரையும் அனுமதிப்பதாயில்லை. ஹார்பர் லீயின் இன்னொரு புத்தகத்தைப் பதிப்பிக்க வேண்டும் என்ற ஆர்வம் எங்கள் அனைவருக்கும் இருந்தது, ஆனால் அவரது முடிவை நாங்கள் அனைவரும் ஆதரித்தோம்”.

1970களின் துவக்க ஆண்டுகளில் லிப்பின்காட்டிலிருந்து ஹோஹோஃப் ஓய்வு பெற்றபோது, “டு கில் எ மாக்கிங்பேர்ட்” பதிப்பிக்கப்பட்டு பத்தாண்டுகளுக்கும் மேல் ஆகியிருந்தது. என்றாலும் இரண்டாம் புத்தகம் வரவில்லை. 1974ஆம் ஆண்டு, ஹோஹோஃப் தூக்கத்தில் மரணமடைந்தபோது அது ஹார்பர் லீக்கு தாங்கிக்கொள்ள முடியாத துயராக இருந்தது என்கிறார் ஷீல்ட்ஸ்.

லிப்பின்காட்டில் இருந்தவரை “கோ செட் எ வாட்ச்மேன்” நாவலைப் பதிப்பிப்பது குறித்து எந்த விவாதமும் நடந்ததில்லை என்கிறார் பர்லிங்கேம். இந்தப் புத்தகம் வெளியிடப்படுவதை ஹோஹோஃப் எப்படி எடுத்துக் கொண்டிருப்பார் என்பதை நாம் யூகிக்க மட்டுமே முடியும். ஹார்பர் லீயை இன்னும் ஆழமாக நாம் புரிந்து கொள்ள உதவும் முக்கியமான இலக்கியத் தரவு இது என்று அவர் நினைத்திருப்பாரா? அல்லது, மாக்கிங்பேர்ட் நாவல் எப்படி வாசிக்கப்படுகிறது என்பதை வாட்ச்மேன் நிரந்தரமாக மாற்றிவிடும் என்று வாதிட்டு, ஹார்பர் லீயின் மனதை மாற்ற முயற்சி செய்திருப்பாரா?

“அட்டிகஸ் ஃபிஞ்ச் இத்தனை ஆண்டுகளாக நாம் நேசித்த நாயக பாத்திரமாக, நம்மை உயர்த்திக்கொள்ள நினைக்கச் செய்யும் தாக்கம் செலுத்துபவராக, இப்போதும் இருந்திருப்பாரா?” என்று கேட்கிறார் பர்லிங்கேம். “இது போன்ற காரணங்களால்தான் இத்தனை காலம் நெல்லும், உயிருடன் இருந்தவரை டேயும் இதைப் பதிப்பிக்க மறுத்தார்களா?”

நன்றி- The New York Times

2 comments

    1. நன்றி நண்பர் பாலா…

      தங்கள் கடவுச்சொல்லையே யூஸர்நேமாகப் வைத்துக் கொண்டிருக்கிறீர்கள் போலிருக்கிறதே?

      புதுமை!

Leave a reply to natbas Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.