பிறவிப் பெருங்கடலை நீந்திக் கடப்பதை மெய்ஞானப் புலம்பல் என்பார் மேலோர்…நீந்திக் கடப்பது கிடக்கட்டும். நினைத்த போது கரையில் அமர்ந்து களித்து, அலையில் கால் நனைத்து, பின் “வீடு” திரும்ப, பிறவிப் பெருங்கடல் ஒன்றும் மெரீனா பீச் அல்ல என்ற அறிவு நமக்கு எட்டுவதற்குள்ளாகவே ஆயுளில் பாதி பூமியில் புதையுண்டு விடுகிறதே! பெருங்கடலில் கலக்கும் சிற்றின்ப நதிகளின் வழியே கழிமுகத் துவாரங்களை தேடியபடி பருவத்தின் படகில் சஞ்சலத் துடுப்பு போட்டுத் திரிவதுதானே நம்மில் பலருக்கு சாத்தியப்படுகிறது!
இந்நதிகளில் பெரும்பாலும் ஒரு கரை “பெண்” எனலாம். “பெண்மை” என்று எழுத மனது விழைந்தாலும், முன்னர் ஒருபொருட் பன்மொழி போல் தெரிந்த “பெண்”ணும் “பெண்மை”யும் இப்போது காலம் போகும் போக்கில் இரட்டுற மொழிதல் ஆகி விட்டதோ என்ற ஐயம் இருப்பதால் “பெண்” என்று எழுத வேண்டியாயிற்று. ஆனால் வேணுகோபால் தனது “ஆட்டத்தில்”, “உள்ளுக்குள் கனலாய் பொங்கி எரியும் அணங்கு. நெருப்புக்குள் தீமை தங்காது. உண்மையே சுடர். சரி தவறு, நிறை குறை, கற்பு கறை எதுவும் பெண்ணிற்கில்லை. அவள் தாய். பெண்மை என்றாலே தாய்மைதான்” என்று இந்த ஐயத்திற்கு ஒரு தெளிவும் மேன்மையுறு வடிவும் கொடுக்கிறார். இதை வாசிக்கும்பொழுதே “பெண்” என்பதை “பெண்மை” என்று எழுத வேண்டும் என்று தோன்றுகிறதல்லவா?
இப்படி ஒரு கரை பெண்ணாகி (பெண்மையாகி) விட்டபோது மறுகரை மட்டுமே பிறவிப் பெருங்கடல் பயணத்தில் அனுபவ மாறுபாடுகளை உருவாக்குகிறது. இந்த “மறு கரை”யின் பண்பு மற்றும் வாழ்வியல் வடிவங்கள் ஆகியவற்றின் சாரம் பெரும்பாலும் மண் சார்ந்து இருக்கிறது. இப்படி பெண்ணுக்கும் மண்ணுக்கும் இடையே சுழலும், சிற்றின்பச் சுழலில் உழலும் உள்ளத்தின் ஊசலாட்டங்களை நம்முன் நிறுத்துவதே வேணுகோபாலின் படைப்புகள்.
சு வேணுகோபாலின் சிறுகதை மற்றும் நாவல் கட்டமைப்புகளில் குறிப்பிடத்தக்க வேறுபட்ட அடிப்படை கோணங்களை நாம் கண்டடைய முடியும்…அவரின் சிறுகதைகள், பெண்களின் பார்வையில், அவர்களையே மையமாக்கி கதை சொல்கிறது. அவரின் குறுநாவல்களோ ஆணின் மனக்கண்ணாடி வழியே, பெண்ணைப் பேசுகிறது. ஆனால் அவரின் அனைத்து படைப்புகளுமே, மேற்சொன்ன கழிமுகங்களே கதியென்று நகரும் கதை நாயகன் நாயகிகளை அடுத்த கட்டத்திற்கு முன்னகர்த்தி முதிர்ச்சியின் முகவரி காட்டி பெருங்கடலின் பொருள் புரிபடத் துவங்கும் பூரிப்பை முன்னிறுத்தியே முடிகின்றன.
ஒவ்வொரு படைப்பிலும், நம்மை வெவ்வேறு அனுபவ பரிசலில் அமர்த்தி வைத்து “இரு கரைகள்” ஊடே சலனத்தின் வழி “பெருங்கடல்” நோக்கி நம் முதிர்ச்சியின்மையை செலுத்துவதே வேணுகோபாலின் கதைசொல்லும் பாங்கு. அத்தகைய பாங்கு, சாமானிய மனித மனங்களுக்குள்ளும் பிரத்யேக அனுபவங்களைக் கண்டடையும் சாத்தியங்களை படைப்புகளின் அடியில் தாங்கி நிற்பதோடு, படைப்புக்கும் நமக்கும் ஒரு “தொடுகை” ஏற்படுத்தும் ஊக்கியாகவும் உருவெடுக்கிறது. அந்தத் தொடுகைக்கான நொடியை காலம் எங்கே பதுக்கி வைத்திருக்கிறது என்பது எப்போதும் ஆச்சரியம் தருவதாக இருக்கிறது.
கல்லூரி சேர்ந்த புதிதில் நண்பர்கள் குழாமுடன் அவ்வப்போது அழகர் கோயில் செல்வதுண்டு. அருகில் சாலையோர மரங்களின் அடியில் கவிந்திருக்கும் நிழல்களில் சைக்கிளில் இளநீரும் நுங்கும் விற்போர் நிறைய தென்படுவார்கள். அத்தகைய ஒரு பயணத்தில், எங்கள் குழு, ஒரு முதியவரிடம் நுங்கு வாங்க நின்றது. என் நண்பன் எங்கள் அறியாமையை வெளிப்படுத்தும் வண்ணம் “நிறைய வரும்படி வெட்டுங்க” என்றான். “எந்த காயை சீவினாலும் மூணுதான் தம்பி இருக்கும்” என்ற முதியவர் ஏதோ தோன்றியது போல், சற்று நேரம் கழித்து, அங்க பாருங்க என்று தொலைதூரம் கைகாட்டினார். எங்களுக்கும் தொலைவில் தெரிந்த யானைமலைக்கும் இடையே, கூட்டத்தில் இருப்பது போல் தோன்றினாலும் பனை மரங்கள் ஆங்காங்கே ஒன்றுக்கொன்று பகை கொண்டது போல் தனித்திருந்தன.
பனைமரங்கள் பார்க்கும்பொழுதெல்லாம் ஏன் அவை சந்தோஷத்தின் சாயல் கொண்டவையாக இருப்பதேயில்லை என்ற எண்ணம் எனக்குத் தோன்றுவதுண்டு. தனிமை, வெறுமை இவற்றின் உணர்வுகளை ஊட்டுவதாகவே பனை இருக்கிறது. ஆங்கு தெரிந்த பனைகளில் ஒன்றைச் சுட்டி, “அதுக்கு பேரு கூந்தப்பனை, காய்க்காது” என்றார். முதல் பார்வைக்கு வித்தியாசம் தெரியாவிடினும், கூர்ந்து நோக்கின் பனைத் தோகைகள் தலைகீழாய் கவிழ்த்து வைத்தது போலிருந்தன. சுமார் பத்து வருடங்கள் கழிந்திருக்கும். சென்னையில் புத்தகக் கடை ஒன்றில் “கூந்தப்பனை” என்னும் புத்தக அட்டை பார்வையில் பட்டபொழுது அழகர் கோயில் செல்லும் சாலையும் அன்று முதியவர் காட்டிய பனை, அதன் பொருள்தனை நினைவில் நிறுவிச் சென்றது. வேணுகோபாலின் படைப்புகளுக்கும் எனக்கும் “தொடுகை” நேர்ந்த நொடி அது.
அன்புக்குரியவர்களோ அல்லது அன்புக்குரியவர்கள் என்று தப்பிதமாக நாம் புரிந்து கொண்டவர்களின் மகிழ்ச்சியின் பொருட்டு என்ற நம் நினைப்பின் பிழையால் நிகழ்ந்து விடும் விட்டுக்கொடுத்தல்களிலும் விட்டுவிடுதல்களிலும் அக்கணத்தின் மகிழ்ச்சி மறைந்தபின் மனம் எதிர்கொள்ளும் அலைகழிப்புகளின் பரிமாணங்களே வேணுகோபாலின் பல படைப்புகளின் அடிநாதம். கூந்தப்பனையும் அத்தகை ஒரு கதையே. மண் சார்ந்த உள்ளுறை உவமங்களின் மூலம் கதையின் கருவை உள்ளீடு செய்யும் வேணுகோபாலின் நேர்த்திக்கு இக்கதையின் அறிமுகப் பத்தியே சான்று. “சாகும் தறுவாயை உதறிய சில மரங்களின் குருத்து ஓலைகள் இளம் பச்சையை நீட்டிக் கிடந்தாலும் ஓரங்கீற்று நுனிகள் ஏற்கெனவே காய்ந்து கிடந்தன. துளிர்த்திருக்கின்ற கீற்று அவனுக்கு நிம்மதியைத் தந்தது” என்னும் வரிகளின் வழியே மொத்தக் கதையையும், கதை நாயகனின் மனம் மேற்கொள்ளவிருக்கும் பயணத்தையும் சொல்லி விடுகிறார். மண், இயற்கை இவற்றையே இடுபொருளாய் வைத்து அவர் மிக எளிதாய் ஆழமான தத்துவ விசாரங்களை அடுக்கிக் கொண்டே போவதை பல கதைகளில் பல இடங்களில் காணலாம்…கூந்தப்பனையில்கூட, காமத்தின் பிடியில் நகரும் கதையை இவ்வாறே அவர் ஞானத்தின் நிழலுக்குத் தள்ளுகிறார். அற்புதமான அந்தப் பத்தியை படித்துப் பாருங்கள்: “மரம் அழகைச் சொரிகிறது. பூக்களையும் இலைகளையும் உதிர்க்கிற இலையுதிர்காலம் மரத்திற்கு அழகற்றதா? ஜீவன்களின் பரிதவிப்பில் அழகு துடிப்பதாகத் தோன்றுகிறதே… …அழகு கிழண்டு போகுமா? அழகிலிருந்து அழகு விடைபெறுமானால் அழகின் உயிர் எப்படிப்பட்டது? தங்கியிருந்த இடத்தின் பொருள் என்ன? உயிர்ப்பு எது? அழகு புறம் என்றால் அதன் கரு?…” இம்முதிர்ச்சியின் வழியே, பெண்ணிலிருந்து துவங்கும் மனதின் அலைக்கழிப்பு, மண் சார்ந்த மனதின் தழுவலில் ஒரு மகானுக்குரிய மேன்மை அடைகிறது. கதை முடிகிறது.
“அபாயச் சங்கு” கதையில், “அகத்திமர இலைகள் தூங்க ஆரம்பித்து விட்டன. கீரைக்குன்னாலும் ஆட்டுக்குன்னாலும் ஆறு மணிக்கு முன்னாடி பிடுங்கணும்” என்று எளிதாய் ஏதோ சொல்வது போல் சொல்லி, “ஆனால் களவு போவது என்னமோ ராத்திரியில் தான்” என்று ஒரு பொடி வைத்து, “எதை சொல்லி வைக்கிறோமோ அதற்கெதிரான துருவம் இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது. இருந்தாலும் சொல்லி வைப்பதையே பிரதானப்படுத்துகிறார்கள். மீறலில் விளைந்த நிறமாலை” என்று அதனடியில் பரவும் தத்துவ மணத்தை நாம் நுகரத் தருகிறார்! மெதுவாக இறங்கும் தத்துவம் மட்டுமில்லை, நம் அனுபவ எல்லைகளை மீறி கால் வைக்கையில் நம்மை பிளக்கும் கண்ணி வெடிகளும் உண்டு! உதாரணமாக:
“மனக்கடலின் மீனுக்குக் கரையில்லை…”
“புகை மூட்டத்துக்குள் தூங்கும் கங்கு…”,
“கருங்கூந்தல் அதுவாக வெண்மையைத் தழுவிக் கொள்வதுபோல் ஆனந்தம் சோகத்தைத் தழுவத் தன்னையறியாமல் பயணம் மேற்கொண்டிருந்தது…”
என அவரின் வரிகளுக்கிடையில் நம் நொடிகள் தேங்கிக் கிடப்பதுண்டு.
வேணுகோபாலின் பிரதான கதைமாந்தர்கள் அனைவருமே “வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்” என்ற எண்ணத்தை அடியொற்றிருப்போராகவே இருக்கின்றனர். அதன் குறியீடு போன்றே, கதைக்களத்தில் உணர்வுத்தறியின் ஊடுபாவு போல மண் செடி கொடி மரங்கள் ஒன்றி வலம் வருகின்றன. எனவேதான், தங்கள் வாழ்வில் பெருத்த அவலத்தில் தவிக்கும்பொழுதும் “திராட்சைக் கொடியை பிஞ்சில் வெட்டுவது பாவமில்லையா” என்று அறுபது கடந்த முதியவரால் யோசிக்க முடிகிறது [“கண்ணிகள்”]
மோட்டார் போடு தாத்தா தென்னை மரம் பாவம்” என்று ஐந்து வயது சிறுவனாலும் யாசிக்க முடிகிறது [“உயிர்ச்சுனை”]. கொடுக்காப்புளி மரத்தை விவரித்துக் கொண்டே போய் “வீட்டையே உயிர்ப்பித்து விடும் மரம்” என்று முடிக்க முடிகிறது [“புற்று”]…ஒரு தொட்டிச் செடி கூட வைத்துக் கொள்ள இடமின்றி, அதனுடன் ஒட்டிக் கொள்ள நேரமின்றி ஓடும் நம் வாழ்வின் வறட்சியை உணர்ந்து ஏக்கம் கொள்ள வைக்க முடிகிறது…தன் வாழ்க்கை ஞாபகங்கள் முழுவதையும் தோட்டத்தின் பொழுதுகளாய், அத்தோட்டத்தின் நினைவுகளையெல்லாம் தன் பிள்ளைகள் வளர்ந்த காலத்துக்குள் அடைக்க முயல்கிறது [“தாய்மை”]…தன்னை கண்டதும் தீவனம் கொண்டு வந்திருக்கிறானோ என்று பசு எழுந்து நிற்பதாக எண்ண வைக்கிறது…வைக்கோலை திருட வைக்கிறது [“புத்துயிர்ப்பு”]…ஒவ்வொரு கதையிலும், ஒரு முறையேனும் விவசாயம் சீரழிந்து போன விசனத்தை விபரமாக தன் எழுத்தில் வித்திட முடிகிறது… வேணுகோபாலால்…
வேணுகோபாலின் சிறுகதை சாளரத்தில் வழி தெரியும் பெண்மையின் விசாலங்களும் வேதனைகளும்தான் எத்தனை எத்தனை! “இளவெயிலில் உலகமே ஒரு குழந்தை” என எண்ண வைக்கும் “பேதை”…, ஒரு நாய்க்குட்டி, பெண் என்பதாலேயே அதனை தெருவில் விடச்சொல்லும் அம்மாவிடம் சிறுமி, “அம்மா நான் உங்கூடயே இருக்கேம்மா என்னை தொலைச்சிடாதம்மா” எனக் கெஞ்சும் “புற்று”…, கனவுக்கும் நனவுக்கும் இடைப்பட்ட ரணங்களை ஒற்றைச் சிரிப்பைக் கொண்டே மருந்து போட்டுக்கொள்ளும் “கிடந்த கோலம்”…,”அவளின்” நடுங்கும் கரங்களை வைத்தே நம் மனசாட்சியை நடுங்க வைக்கும் “வெண்ணிலை”…,வாழ்ந்து கெட்ட “காரைவீட்டுக்காரி”யின், ஊருக்கு செழிப்பு வேண்டும் என்ற வரம் கேட்கும் “தாய்மை”…, நாள்தோறும் சாலையில் நம்மை கடக்கும் கணக்கற்ற பெண்களின் அடியில் உறங்கும் “உள்ளிருந்து உடற்றும் பசி”…
தன் எழுத்து ஒவ்வொன்றையும் இழைத்து, மனிதத்தின் கூறுகளை அதன்வழி நுழைத்து, நமக்குள் அகம் பற்றிய சிந்தனை ஆர்த்து அவர்பால் நம்மை ஈர்த்து விடும் வேணுகோபாலின் ஒவ்வொரு படைப்பை படித்து முடிக்கையிலும், நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் ஆற்றாமைகளும் ஆதங்கங்களும், தீதும் சூதும் சற்று நேரமேனும் கழன்று நம்மைச் சுற்றியிருக்கும் அனைத்தின் உயிர்ப்பின் மீதும் பெருங்கருணைப் பார்வை விரிந்து அன்பு நெகிழ்ந்த மனதின் மணம் உள்ளிருந்து உவகையாய் ஊற்றெடுப்பதை உணர முடியும்.
One comment