என்னைப் பார்த்துச் சிரிக்காத மாரி மயினியை அன்றுதான் பார்த்தேன். நம்ப முடியவில்லை. தயக்கத்தோடு அவர்களின் அருகில் நின்று மயினியின் முகத்தை ஏறிட்டேன். வழக்கமாக அவர்கள் என்னைப் பார்த்ததும், கொழுந்தனாரே ஏன் மெலிஞ்சிட்டே போறிக, என்று கைநீட்டி இழுத்து அணைத்துக் கொள்வார்கள். எனக்கென்று தனியான ஒரு துள்ளல் அவரிகளிடம் வெளிப்படும். பான்ட்ஸ் வாசனையோடு உடல் அதீத கூச்சத்தில் குறுகும், வெட்கம் கொண்டு விலகி ஓடுவேன். ஒவ்வொரு முறையும் இது நடக்கும். கேள்விகள் மாறுமே தவற அன்பு மிகுந்த அணைப்பு மாறியதே இல்லை. மயினிமார்களின் பிரியத்தை வேறு எந்த பெண்ணும் தந்துவிட முடியாதல்லவா?
அன்று அவர்கள் என்னைக் கண்டுகொள்ளவே இல்லை. உண்மையில் அவர்கள் அங்கு எங்களோடு இருக்கவேயில்லை. அசையாத விழிகளில் இந்த மண்ணில் வந்து சென்ற அத்தனைப் பெண்களின் இல்லறத் துக்கத்தைச் சுமந்து நின்றார்கள்.
மாரி மயினி அந்தத் திருமணம் நிச்சயித்தபோது எல்லாப் பெண்களையும் போல மௌனமாகத்தான் இருந்தார்கள். நெருங்கிய அண்ணா ஒருத்தர், மாப்பிள பிடிச்சிருக்கா, என்று கேட்டபோது, பெரியவங்க பாத்துச் செஞ்சா சரிதான், என்றார்கள். மாப்பிள்ளை குட்டையாக இருப்பதோ, கருப்பாக இருப்பதோ, அதைவிட, பள்ளிப் படிப்பை தாண்டாததோ, இதெல்லாம் அவர்களைச் சங்கடப்படுத்தவில்லை.
மாரி மயினியின் ஆண் யாரென்று எனக்குத் தெரியும். நடுநிசி வரை அவர்கள் என்னிடம் சொல்லும் கதைகளில் வரும் அவரின் ஆணை நான் நன்கறிவேன். ஆனால் இந்திய பெண்களின் யதார்த்தம் என்ன என்பது பெண் மரபின் மறைபொருளாக அவர்களுக்குத் தெரிய வந்திருந்தது போலும். எங்கேயும் போல எல்லாம் சுபமாகத்தான் நடந்தது. அவர்களை மறுவீடு அனுப்பிய அன்று நான் அடைந்த இழப்பினை அதன்பின் எப்போதுமே அனுபவித்ததில்லை.
ஆனால் ஆறாவது மாதம் கழித்து அவர்கள் தனியாக திரும்பி வந்ததைக் கேள்விப்பட்டு அம்மாவுடன் சென்றேன். இரண்டு நாட்களாக யார் யாரோ வந்து உபதேசித்துச் சென்றார்கள். அத்தை, மாரி மயினியை கொலை பாதகம் செய்தவரை நடத்துவதைப்போல நடத்தினார்கள். மயினியும் அதை எதிர்க்கவில்லை. கடைசிவரை கட்டிக் கொடுத்த ஊருக்குத் திரும்பிச் செல்ல மறுத்துவிட்டார்கள். கன்னிகாத்த மாரி மயினி திருமணத்தோடு இந்த மண்ணில் இருந்து மாயமாகிவிட்டார்கள். தேவதைத் தருணங்கள் என்பது ஒவ்வொரு பெண்ணிற்கும் அளந்து வழங்கப்பட்ட ஒன்றுதானோ?
அதன்பின் மாரி மயினியை பார்க்கும்போதெல்லாம் வெயில் காலத்தின் வேம்பு நினைவுக்கு வரும். மீண்டும் வசந்தம் வந்தாலும் தளிர்க்கும் முடிவை தள்ளிப் போடும் வைராக்கியத்தை அவர்கள் எங்கிருந்து பெற்றார்கள்? ஆணின் தீமையை அஞ்சியா? அல்லது மீண்டும் ஆறுதல் தேடிவந்த அவர்களை அந்நியப் பார்வையோடு எதிர்கொண்ட அம்மாவை வெல்லவா? எந்தக் காற்றுக்கும் அசையாமல் நின்றெரியும் சுடராகிப் போனார்கள்.