ஜிஃப்ரி ஹாசன்
நாளை முடிக்கப்பட வேண்டிய
வேலை ஒன்று
என்னை உறுத்திக் கொண்டே இருக்கிறது
அது
உண்மையில் இருப்பதாகவோ
அல்லது எனது கற்பனையாகவோ
இருக்கலாம்
நாளைக்குள் அது முடிக்கப்பட்டாக
வேண்டும் என்ற அவசரம்
என்னை பரபரப்பாக்கிறது
அந்த வேலை எப்படிப்பட்டது?
சித்திரம் போல் மனதுக்கு இதமூட்டக் கூடியதா
தீ போல் சுட்டெரிக்கக் கூடியதா
தொடர்ச்சியாய் ஒரே இருப்பில்
செய்யக் கூடியதா
அல்லது இடைநடுவில்
ஓய்வு எடுக்க வேண்டி வருமா?
அது
ஒரு அலுவலகப் பணி போல்
கண்காணிக்கப்படக் கூடியதா
அல்லது சுதந்திரமானதா
அது
இயற்கையானதா
அல்லது செயற்கையானதா
நாளை முடிக்கப்பட வேண்டிய
இன்னதென்று தெரியாத ஒரு பணி
என்னை எப்போதும்
உறுத்திக் கொண்டே இருக்கிறது
அடையாளம் தெரியாத
நாளை முடிக்கப்பட வேண்டிய
உள்ளத்தை உறுத்தும்
அந்தப் பணியின் அவஸ்தையால்
ஒவ்வொரு மனிதனும்
ஒவ்வொரு கணமும் சிதைகிறான்
One comment