பின்னிரவில் ஓர் அழைப்பு. நண்பனின் தாய் இரு வருட புற்றுநோய் போராட்டத்தின் முடிவில் மறைந்த செய்தி. என் தாய் மிக நீண்ட நோய்ப்படுக்கையில் கிடந்து மறைந்த வருடத்திற்குள் இன்னொரு அன்னையின் ஈமச்செய்தி. சிறு வயதில் அவன் வீட்டிற்கு விளையாடச் சென்று எத்தனையோ நாள் அவள் கையால் பசியாறியிருக்கிறேன். கனிவே குரலும் உருவுமானவள்.
நண்பன் மிக அமைதியானவன்; உணர்வுகள் மீதான கட்டுப்பாடு பிடிகிட்டிய வரம் பெற்றவன். அழாமல், குரல் நடுங்காமல் சொன்னான் – ‘அருகிலிருந்தேன், கையைப் பற்றியிருந்தாள். முகத்தைப் பார்த்தவாறிருந்தேன் – வேறெங்கும் நான் பார்த்திருந்திருக்கலாம். ஆனால் பார்க்கவில்லை. ஒரு விக்கல், இமையின் ஓர் அசைவு. என் கைவழியே போய்விட்டாள்’.
அவன் எப்படி அந்தக் கணத்தைக் கடந்தானோ தெரியாது.
நான் எப்படி அந்தக் கணத்தைக் கடக்கப் போகிறேன் என்றும் தெரியவில்லை.
யாரின் தாயும் யாவரின் தாய்தானே.