சுடுசொல் வீசியவர்
கொஞ்சிப் பேசியதும்
சிரிக்கும் குழந்தையின்
ஆசிர்வாதம் போல,
விடுத்த சொல்லும்
அது கொண்டு சேர்த்த பொருளும்
முரணாகி நிற்கும்
அபத்தம் போல,
தாடையில் ஒரு
குமிழ்கம்பி குத்தியிருந்த
தாடி இளைஞனின்
‘நாளை சந்திப்போம்’ என்ற
பிரிவுபசார முகமன் போல
கோலுயர்த்தி நிற்கும்
இரும்புத்தலையரெதிரே
தாள்பணியாது நிற்கும்
கலகக்காரரின் சுயவாதையைப் போல
தீராப்பசியுடன்
தெருவை விழுங்கும்
சக்கரங்களிடையே
ஓடிக் கடக்கும்
அணிற்பிள்ளையைப் போல,
ஒரு நாள் குமிழியிட்டு மறைகிறது.