முகிழ்தல்

– காலத்துகள்-

வீட்டைப் பூட்டிவிட்டு சாவியை சுந்தரி அக்காவிடம் கொடுக்கும்போது அவனுக்குச்  சற்று கூச்சமாக இருந்தது. பள்ளிக்குச் செல்ல சைக்கிளை எடுத்தான். கோகுலபுரத்திற்கு குடி வந்து ஒரு வருடமாகியும் அந்த இடம் அவனுக்கு அன்னியமாகவே இருந்தது. அந்த ஏரியாவில் இருந்த வீடுகளும் மனிதர்களும்  இன்னும் அவன்  மனதில் பதியவில்லை.   புதிய இடத்தில் உண்டாகும் அசௌகர்ய உணர்வுடன் எப்போதும் போல் சற்று வேகமாகவே  மிதித்தான்.

கோகுலபுரத்தைத் தாண்டி -அவன் பத்தாண்டுகளுக்கு மேலாக, செங்கல்பட்டுக்கு வந்ததிலிருந்து வசித்திருந்த-, மணியக்காரத்  தெருவிற்குள் நுழைந்தவுடன் சைக்கிளின் வேகம் குறைந்தது.  ஒரு முறைகூட பேசியதில்லை என்றாலும் பல ஆண்டுகள் தொடர்ச்சியாக பார்த்துக் கொண்டிருந்ததால் பழகியவை போல் உணரச்செய்யும் முகங்கள், வீடுகள், பரிச்சயமான கடைகள். மதிய நேரமென்பதால் கூட்டம் இல்லாத கடையில் நாடார் ஏதோ படித்துக்கொண்டிருந்தார். படித்தபின் எடைக்கு போடப்பட்ட  ஏதேனும் காமிக் புத்தகமாக இருக்கும். இவனும் நாடார் கடையில் அப்படி பல புத்தங்கங்கள் படித்தவன்தான் (பழைய கல்கி பத்திரிக்கைகளில் இருந்து எடுத்து பைண்ட் செய்யப்பட்டு, அட்டை பிய்ந்து போயிருந்த சிவகாமியின் சபதத்தின் அனைத்து பாகங்களையும் ஐந்து ரூபாய்க்கும் குறைவான விலையில் அங்கு வாங்கி இருக்கிறான்).

கோகுலபுரத்திற்கு குடி வந்த புதிதில் கடைக்குச் செல்ல வேண்டியிருந்தால், மணியக்காரத் தெருவுக்குத்தான் வருவான், ஆனால் நடைமுறைக்கு அது சரி வராது என்பது விரைவில் தெரிய அங்கிருந்த நாடார் கடைக்கே செல்ல ஆரம்பித்தான். ஆனால் இவனுக்கு நாடார் என்றால்  மணியக்காரர் தெருவில் கடை வைத்திருப்பவர்தான் என்றாகி விட்டது, கோகுலபுர நாடாரிடம்   ‘இத தாங்க, அது இருக்கா’ என்று பொதுவாகத்தான்  கேட்பான்.

இவன் சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொண்ட ‘சைக்கிள் ராஜ்’  கடையும்  அதற்கடுத்து மீராவின் வீடும் தூரத்தில் தெரிந்தன. காற்றடிக்கும் சாக்கில் அங்கு வண்டியை நிறுத்தலாமா என்று யோசித்தவன், மனதினுள் சிரித்தவாறே அந்த எண்ணத்தையும், மீராவின் வீட்டையும் கடந்து சென்றான். விடுமுறை நாளொன்றின் விடிகாலையில் இந்தப் பக்கம் வர வேண்டிய வேலை இருக்க, வீட்டின் வெளியே இன்னும் தூக்கம் மிச்சமிருக்கிற கண்களுடன் வாடிய மலர்ச்சரத்தை  தலையிலிருந்து எடுத்தவாறு மீராவின் அம்மா கோலம் போடுவதைப் பார்த்தபடி இருந்ததும், அன்று அவள் அணிந்திருந்த மேலாடையின் கைப்பக்கம் சிறியதாக இருந்ததால், வெளிச்சம் படாத கையின் பகுதி அவளின் மாநிறத்திற்கு நேர்மாறாக வெண்மையாக இருந்ததும் நினைவிற்கு வர சைக்கிளுக்கு அழுத்தம் கொடுத்தான்.

உமாவின் வீடு மணியக்காரர் தெருவிற்கு மறுபுறம் இரண்டொரு தெருக்கள் தள்ளி இருந்ததாக கேள்வி. அந்த வீட்டையும் தாண்டி அவன் சென்றிருந்தாலும் அவளை அங்கு பார்த்ததில்லை. சுஜாதா வீடு எங்கு என்று இதுவரை அவன் யோசித்ததில்லை, யாரிடமாவது சந்தேகம் எழாதவாறு  கேட்க வேண்டும் என்று நினைத்தவாறே செட்டித் தெருவினுள் நுழைந்தான். மதிய நேர புழுக்கத்தை அதிகப்படுத்திக் கொண்டிருந்த மின்விசிறிகளின்கீழ் கடைக்காரர்கள் அமர்ந்திருந்தார்கள். சில கடைகளில் அப்போதும் கூட்டமிருந்தது. அரிசிக் கடையில் இறக்கப்பட்டுக் கொண்டிருந்த மூட்டைகளில் இருந்து தூசும், முடை நாற்றமும் முகத்தில் அறைந்தன. ஓடியே பார்த்திராத மணிக்கூண்டை கடந்தான். அந்த இடத்தில்  முன்பிருந்த  குதிரை வண்டி நிறுத்தத்திலிருந்து வண்டி வாடகைக்கு பிடித்து  அதில்  வைக்கோல் மணத்துடன்   பயணம் செய்திருக்கிறான்.

பரீட்சை இன்னும் முடியாததால் உள்ளே செல்ல முடியாமல் பள்ளிக்கு வெளியே பெரிய கூட்டம் நின்றிருந்தது. தன் வகுப்பு பசங்களுடன் சேர்ந்து, முழு கவனமும் இல்லாமல் வழக்கமான அரட்டையில் கலந்து கொண்டான். சைக்கிளில் வந்த பெண்கள் பள்ளியை நெருங்கியதும் பெடல் மிதிப்பதை நிறுத்தி,   வண்டியின் வேகத்தைக் குறைய விட்டு சட்டென இறங்கி, லாகவமாக காலை எடுத்துக் கொள்வதில்  உள்ள நளினத்தை எப்போதும் போல் ஓரக்கண்ணால் ரசித்தான்.   பரீட்சை எழுதியவர்கள்  வெளியேறியபின் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட,  வண்டி நிறுத்தும் இடத்தில்  எப்போதும் போல் நெருக்கடி. அதையொட்டி  இருந்த வகுப்புக்களில் மாணவர்கள் உள்ளே சென்று அமர  ஆரம்பித்திருந்தனர். அவன் படித்த ஒன்பதாம் வகுப்பறையை தாண்டும்போது  ஜன்னல் வழியே  வகுப்பினுள் சில நொடிகள்  பார்த்துக் கொண்டிருந்தவன், கூட்டத்தால் முன்னே உந்தப்பட்டான்.

பள்ளியாண்டு இறுதியில் மதிய நேரத்தில் வெளியே வர அனுமதி தருவதில்லை என்பதால் பிரதான வாயிலினுள் நுழைந்தவுடன் பள்ளி வெறிச்சோடி இருப்பது போல் முதற் கணம் தோன்றினாலும், அனைத்து வகுப்புகளிலிருந்தும் பேச்சொலி ஒன்றிணைந்து ஆண், பெண், மெல்லிய, கனத்த  குரல்  போன்ற தனித்தன்மைகளை இழந்து அடர்த்தியான ஒற்றை ரீங்காரமாக ஒலித்துக் கொண்டிருந்தது பள்ளி இயங்க ஆரம்பித்துவிட்டதை உறுதி செய்தது. வகுப்பு அடைந்தவுடன் அவ்வொலி இழைகளாக பிரிந்ததைப் போல அக்குரல்களில் சிலவற்றை அடையாளம் காண முடிந்தது. சுஜாதா  வந்து விட்டாள், ஓரக்கண்ணால் மீராவும் வந்திருப்பதை கவனித்தான். புத்தகப்பையை வைத்துவிட்டு தண்ணீர் குடிக்கச் சென்றவன், பள்ளியின் பின்புறமிருந்த மைதானத்தை நோக்கியபடி நின்றான்.  யாருமில்லாத வெட்டவெளியாக இருந்த மைதானம்  வெளிச்சம் நிறைந்திருந்தது. மைதானத்தின் ஓரத்தில்    சைக்கிளை நிறுத்திவிட்டுச் ஒளியை ஊடுருவி வருவது போல் பெண்கள் சிலர் நடந்து வருவதைக் கண்கள் கூச இடுக்கிக் கொண்டு பார்த்தான். முதல் வகுப்புக்கான மணி அடிக்க இவன் வகுப்புக்கு திரும்பிக் கொண்டிருக்கும்போது சில மாணவிகளையும் அவர்கள் சூடிக்கொண்டிருந்த மல்லியின் மணத்தையும் கடந்தான்.

பாடத்தில் எந்த கவனமும் இல்லை.  மின்விசிறி இல்லாத வகுப்பறையில் மதிய நேர புழுக்கத்தில் வியர்வை மணத்தையும், அதனுள் கலந்துள்ள மலர்களின் மணத்தையும் உணர்ந்தான். உடல் மணத்தில் மூச்சடைக்க மூழ்க வேண்டுமென்று தோன்றிய கையோடு பெண்களின் மணத்தை தனியாக உணரமுடிவது தன் கற்பனையோ என்ற சந்தேகமும் எழுந்தது. பெண்களின் மணத்தினூடே காலையில் முதல் முறையாக  முகர்ந்தற்கு நகர்ந்து அங்கிருந்து  தான் இன்னும் மாற்றிக்கொள்ளாத உள்ளாடைக்குச் சென்றான். அதை அருகில் உள்ளவர்கள்  உணர்வார்களோ என்று ஒரு கணம் யோசித்து அந்த அபத்த எண்ணத்தை  விலக்கினான். உடலும் மனமும் மீண்டும் தன்னை மீறிச் செல்வதை உணர்ந்தவனுக்கு  வகுப்பில் அம்மூவர் மட்டும் –மீரா, சுஜாதா, உமா- ஆடையில்லாமல் இருப்பதாக ஒரு நினைப்பெழுந்ததும் இன்று ஏன் என்றுமில்லாத அளவிற்கு  தறிகெட்டு அலைகிறோம் என்று  பயமேற்பட்டது. தவறு செய்கிறாய் என்று உள்ளுக்குள் சொல்லிக்கொண்டே மனக்கண்ணை மூடாமல் அதில் விழும் பிம்பங்களை துளித்துளியாக நினைவுக் கிடங்கில் சேகரித்தபடி இருந்தான். மூவரும் மாநிறம், அதிக பருமன் இல்லாத, கிட்டத்தட்ட ஒரே மாதிரியான உடல்வாகு. நிர்வாணமான உடலில் தலையில் மட்டும் ஏன் ரெட்டை ஜடையும் ரிப்பன்களும்? அவற்றையும் அவிழ்க்க நினைத்தவனுக்கு அது மட்டும் சாத்தியப்படவில்லை. எங்கோ  வகுப்பறையில் மாணவர்கள் கூட்டாக  ஒப்பிப்பதன் ஒலி அவனை  கலைக்க தலையை அழுத்திக்கொண்டான்.  ‘என்னடா கடி தாங்கலையா’ என்ற சுந்தரின் கேள்விக்கு தலையசைத்து வைத்தான்.

அடுத்து வந்த தமிழ் ஐயா பாடத்தை  இயந்திரம் போல் ஒப்பிக்க ஆரம்பித்தார். பத்தாம் வகுப்பு வரை முக்கியத்துவம் கொடுக்கப்படும் மொழிப்பாடங்கள், அதன்பின் மாணவர்களாலும் (வெளிப்படையாக), நிர்வாகத்தாலும் (சூசமாக), இரண்டாம் நிலைக்கு தள்ளப்படுவது இவன் பள்ளியில் இயல்பான ஒன்று.  மொழிபாட  ஆசிரியர்களும் அதை உணர்ந்திருந்ததால் அவர்களும் மாணவர்கள் மீது அதிகம் கவனம் செலுத்துவதில்லை என்பதால் மற்ற வகுப்புக்களை ஒப்பிடும்போது சற்றே இறுக்கம் குறைந்தவை அவை. தமிழர்களின் வீரம் பற்றி ஐயா சொல்லிக்கொண்டிருக்க, காளையை எல்லாம் என்னால் அடக்க முடியாது என்று நினைத்துக் கொண்டான்.  வேறேதேனும்  இக்கட்டில் இருந்து வேண்டுமானால் காப்பாற்றலாம். சைக்கிளில் இருந்து  சுஜாதா தடுமாறி தெருவில் கீழே விழ , மிக  வேகமாக பேருந்தொன்று அருகில் வந்துகொண்டிருக்க இவன்  சைக்கிளை மிதிக்கும் மிதியில் அது அந்தரத்தில் பறந்து அவளருகில் சென்று  அவளை கைதூக்கி காப்பாற்றுவதை பார்த்துக் கொண்டிருந்தான். தசரா சந்தையின்போது  உமாவை இரண்டு மூன்று மாணவர்கள் கிண்டல் செய்ய அவர்களை அடித்து விரட்டுகிறான். இவன்  பரிட்சையில் முதல் மதிப்பெண் பெற, மீரா கண்களில் ஆர்வம் மின்ன இவனைப் பார்க்கிறாள். மூவரில் யாரை தேர்வு செய்ய என்ற குழப்பத்துடன்  அவர்களுக்கு  என்ன வயது என்ற சந்தேகமும், ஓரிரு மாதங்கள் கூட அவர்கள் பெரியவர்களாக இருந்தால் என்ன செய்வது என்ற கவலையும் தோன்றின.

உண்மையில் இத்தனை வருடங்களில் அவர்களுக்கு இவன் மீது கொஞ்சமேனும் ஆர்வமிருக்கிறது என்பதற்கு ஏதேனும் சிறு குறிப்பையேனும் பார்த்திருக்கிறேனா என்று யோசித்தவனுக்கு ஆறாவதோ ஏழாவதோ படிக்கும்போது, பாடப் புத்தகம் எடுத்து வர மறந்த ஒரு நாளில், தன் புத்தகத்தை மீரா அளித்தது ஞாபகம் வந்தது ( ‘அன்று நாலைந்து மாணவர்கள் பாடப் புத்தகம் எடுத்து வராத நிலையில் தனக்கு அவள் இரவல் தந்ததில் ஏதேனும் சூட்சுமம் இருக்குமோ?’). தன் கற்பனைகளின் அபத்தம் குறித்து யோசித்தபடி பின் பெஞ்சின் மீது சாய, ‘தூங்காத நாயே’ என்ற குரல்  தலையை தட்டியது.

வீரத்தை விதைத்துவிட்டு தமிழ் ஐயா செல்ல, ஆங்கில ஆசிரியர் வந்தார்.   தமிழுக்காவது தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் இருக்க,  மேல்நிலை வகுப்புக்களுக்கு ஆங்கிலத்திற்கென்று தனி ஆசிரியர் கூட இல்லாத நிலையில்  இயற்பியல் எடுப்பவரே அதையும்  -‘Kennelனா   அது ஒரு விதமான கரடிக் குகை’ என்ற அளவில்- கற்றுக் கொடுத்தார்.

ஏதோ வகுப்பிலிருந்து  பி.டி.க்காக சென்று கொண்டிருந்தார்கள். சென்று கொண்டிருந்தவர்களில் மாணவிகள் டையை மட்டும் கழற்றி இருக்க, மாணவர்கள் சட்டையையும் கழற்றி இருந்தார்கள். சில வருடங்கள் முன் இத்தகைய ஒரு வகுப்பில் சட்டையின்றி பெண்கள் அருகில் நிற்க சில மாணவர்கள் தயங்கியதையும், விளையாட்டு ஆசிரியர் அதை கிண்டல் செய்ய, அதைப் பார்த்து பெண்கள் சிரித்ததும் நினைவுக்கு வந்தது. தயங்கிய கும்பலில் தான் இருக்கவில்லை என்றாலும், உள்ளுக்குள் இவனுக்கும் உதறல் தான். குறிப்பிடத்தக்க வகையில்  உறுதியான உடற்கட்டோ அதே நேரம்  மிகு  பருமனோ   இல்லாத உடல் இவனுடையது. அதுவே கூட அவனுக்கு சில நேரங்களில் தாழ்வு மனப்பான்மையை உருவாக்குவதாக இருந்தது,  குறிப்பாக விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களை பார்க்கும் போது.  கொஞ்சமே கொஞ்சம்  கனிவு கொள்ள ஆரம்பித்திருந்த சூரியன் அகன்று விரிந்திருந்த ஜன்னல்களின் வழியே வகுப்பறைக்குள் நிறைத்துக் கொண்டிருந்த பொன்னிற வெளிச்சத்தை பார்த்துக்கொண்டிருந்தவன், பாடப்புத்தகத்தை புரட்டி, அவன் தேடிய பாடத்தை எடுத்தான்.

“Shall I compare thee to a summer’s day?
Thou art more lovely and more temperate:
Rough winds do shake the darling buds of May,
And summer’s lease hath all too short a date: “

என்று தொடங்கும் ஷேக்ஸ்பியரின் சானட். இது கற்பிக்கப்பட்டபோது (ஆசிரியரால்  ஒப்பிக்கப்பட்ட என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்) மற்ற பாடங்களைப் போல இதையும் கடந்து சென்றவனுக்கு இப்போது இந்த வரிகள் -இப்போது  மார்ச் மாதம் தான் என்றாலும்- அணுக்கமாகத் தோன்றின.   ஜன்னலோரம் அமர்ந்திருந்த உமாவின்  முகம் முன் மாலை நேர ஒளியில் இன்னும் பொலிவு பெற்றிருந்தது போல் தோன்றியது. அவள்  கழுத்தோர வியர்வைத் துளிகள் இவன்  கற்பனைதான் என்று தெரிந்தாலும்  அவற்றை நாவால் வருடத் தோன்றியது.   பள்ளிக்கு வரும் போது துலக்கப்பட்டது போலிருந்த அவர்களிருவரின்  முகங்கள் சற்று  களை இழந்திருந்தாலும் முகத்திலிருந்த அந்தச் சோர்வும்கூட அழகாகத்தான் இருந்தது. மீராவின் கைகளில் மருதாணி பூசப்பட்டிருந்ததை அப்போததான் கவனித்தான். ஜன்னலருகில் அமர்ந்திருந்தால் அவர்களும் ஜொலித்திருப்பார்கள் தான். ஆசிரியர் கைகடிகாரத்தை  அவ்வப்போது  கவனிக்க ஆரம்பிக்க அதுவரை அமைதியாக இருந்த வகுப்பில் உடல்கள் அசையும் ஒலிகளும்  பரபரப்பும் எழுந்தன. ‘மீதி நாளைக்கு’ என்று சொல்லி ஆசிரியர் புத்தகத்தை மூடி வாசலை பார்த்தபடி நின்றிருக்க, புத்தகப் பைகளை ஒழுங்குப் படுத்தியவாறு, மெல்லிய குரலில் பேசும் சிறு சப்தங்கள் வகுப்பை நிறைத்தன.

சாவியைத் தரும்போது  ‘என்னடா ஒடம்புக்கு முடியலையா’ என்ற சுந்தரி அக்காவின் கேள்விக்கு ‘அதெல்லாம் இல்லக்கா, வெயில் ஜாஸ்தி’ என்று சொல்லி தன் போர்ஷனுக்குச் சென்றான். இனி  ஏழெட்டு மணி அளவில்  பெற்றோர் திரும்பும்வரை தனிமைதான். ‘எதாவது சாப்டறியாடா, மூஞ்சியே சரியில்லையே,’ என்று அக்கா வந்து கேட்க, ‘வேணாம்க்கா, ப்ரெட் ஸ்லைஸ் சாப்டுப்பேன்’, என்றவனுக்கு அவர்  சென்றவுடன், காலை முதல் தவறுக்கு மேல் தவறாக செய்துகொண்டிருக்கிறோம்  என்ற குற்றவுணர்வு மீண்டும் ஏற்பட்டது.  அந்த சஞ்சலத்துடனேயே ஒரு வழியாக   வீட்டுப் பாடங்களை முடிக்கும்போது  மணி ஆறு தாண்டி இருந்தது.

கண்களை ஓரிரு நிமிடங்கள்  மூடித் திறக்க ட்யூப்லைட்டின் ஒளி இன்னும் பிரகாசமாக கண்களை நிறைக்க மனமும் சற்று அமைதியாவது  போல் இருந்தது.  திரும்ப ஓரிரு நிமிடங்கள்  கண்களை மூடித் திறந்தான். சிறிது  நேர ஆசுவாசத்துக்குப் பின் மனம் மீண்டும் காலையிலிருந்தே பயணித்துக்கொண்டிருந்த பாதையில் நடைபோட  ஆரம்பிக்க,  இவன்   வெளியே  படிக்கட்டின் அருகே சென்றான். நாட்கள் நீளத்  தொடங்கியிருந்த,  இன்னும் சிறிது வெளிச்சம் மிச்சமிருக்கும் முன்னந்தி நேரம். பின்புற வீட்டில் புழக்கடை கதவு சாத்தப்பட்டிருக்க, அங்கு பொருத்தப்பட்டிருந்த பல்ப் அந்த இடத்திற்கு சற்றும் போதாத  மெல்லிய ஒளியை பரப்பிக்கொண்டிருந்தது. மல்லி, அரளிச் செடிகள் மற்றும் தென்னை வாழை மரங்களின் நிழல்கள் நீண்டிருந்தன. அவற்றையே பார்த்தபடி இவன் நின்றிருக்க, அவை  நெளிந்து பெண்ணுருக்கள்  கொண்டன.  பாடப் புத்தகமொன்றுடன் வந்த உமாவிடமிருந்து   சுஜாதா அதை பறித்து எறிய, மீரா  ஏதோ சொல்லிச் சிரித்தாள்.  இவன் காலையில் பார்த்தவளும் இப்போது அம்மூவருடன் சேர்ந்து கொண்டாள் (“இவளுக்கு எப்படி இவளுங்கள தெரியும்”). மல்லிச் செடியருகே அவர்களை அவள் அழைத்துச் செல்ல, அனைவரும் அதிலிருந்து பறித்த  பூக்கள் தாமாகவே   சரமாக, அவற்றை   தலையில் சூடிக் கொண்டார்கள். தான் சூடிய சரத்தை தோளின் முன்னே உமா போட்டுக்கொண்டாள். மெல்லிய காற்று வீசியதில்  பவழ மல்லியின் வாசனை எங்கும் பரவ , அதனூடே அவர்களின்  மணங்களையும் சேர்த்தே நுகர்ந்தான். மலர்களின், வியர்வையின், நகப்பூச்சின், மருதாணியின்,  கண் மையின், அணிந்திருக்கும் ஆடைகளின் மணமாக அவர்கள் தன்னை சூழ்த்து நிற்பதை உணர்ந்தவன்  அதன்  அழைப்பை ஏற்று சுவற்றைத் தாண்டி அந்த வீட்டினுள் குதித்தான்.

oOo

கரைதல்

One comment

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.