மாயக் கதவுகளுக்கு முன்…

சித்ரன் ரகுநாத்

ஒவ்வொரு புத்தாண்டு பிறக்கும்போதும் நம் எல்லோரிடமும் இரண்டு கேள்விகள் முன் நிற்கும். 1) சென்ற ஆண்டு என்ன செய்தோம் அல்லது என்ன நடந்தது? 2) புத்தாண்டில் என்ன செய்யப்போகிறோம்?

சென்ற வருடம் நிகழ்ந்த அனுபவங்கள், சம்பவங்கள், நிகழ்வுகள், துக்கங்கள், மகிழ்ச்சிகள், ஏமாற்றங்கள், சாதனைகள், இழப்புகள், கிடைத்தது, கிடைக்காதது, நடந்தது, நடக்காதது என்று ஃப்ளாஷ்பேக்குகளில் மனது உலா வரும். அது சந்தோஷமான நிகழ்வாக இருப்பின் அதுபோல் மீண்டும் வருங்காலங்களில் தொடரவேண்டும் என்று ஆசைப்படுவதும், விரும்பத்தகாத சம்பவமாக இருப்பின் அது திரும்பவும் நிகழ்ந்துவிடக்கூடாதே என்ற பதட்டத்துடன் வரும் புதிய நாட்களை எதிர்கொள்வதுமாக ஒவ்வொரு புத்தாண்டு பிறக்கும் போதும் சில பல கலவையான எண்ண ஓட்டங்களில்தான் நாம் இருப்போம்.

நாம் எங்காவது வெளியே கிளம்பலாம் என்று நினைக்கும் போதுதான் மேகங்கள் கவிந்து  மழைத்துளிகள் விழ ஆரம்பிக்கும். இன்றைக்கு ரசம் சாதத்துடன் சமையலை முடித்துக் கொள்ளலாம் என்று நினைக்கும்போது விருந்தினர் வந்து நிற்பார். அவசரத் தேவைக்கு பணம் எடுக்கப் போனால் ஏ.டி.எம்மில் காசில்லை என்று வரும். ஏன் குறுக்கே போகும் ஒரு பூனைக்குட்டிகூட நமது தினத்தைத் தீர்மானிக்கக்கூடும்.

எதிர்மறையான விஷயங்கள் நம்மைச் சுற்றிப் பெருகிவிட்டன என்பதை மறுப்பதற்கில்லை. எதையாவது புலம்பிக்கொண்டிருப்பதற்கான  சந்தர்ப்பங்களும் பெருகிவிட்டன. நாம் சுவாசிக்கும் காற்று மாசுபட்டிருக்கிறது. நாம் சாப்பிடும் உணவு வேதிப்பொருள்களின் ஆதிக்கத்தால் விஷமாகிக் கொண்டிருக்கிறது. உலகமயமாகுதல், உலகம் வெப்ப மயமாகுதல் தரும் நேரடி பாதிப்புகளை நாம் ருசிக்கத் துவங்கிவிட்டோம். குடிதண்ணீரை பாட்டிலில் வாங்கிக் குடிப்பதும், வியாபாரமயமாகிவிட்ட மருத்துவமனைகளில் கட்டுக்கட்டாக பணத்துடன் டிவி பார்த்தபடி வரிசையில் காத்திருப்பதும் நமக்கு பழக ஆரம்பித்துவிட்டது. குண்டு வீசப்பட்டு நாசமான கட்டிட இடிபாடுகளுக்குள்ளிருந்து கேட்கும் குழந்தைகளின் அலறல்கள், அழுகைகள் செய்திகளாக நம்மைச் சிதறடிக்கின்றன.

நிமிர்ந்தால் குட்டுவதும், குனிந்தால் நெட்டுவதுமான மனிதர்களின் போக்கு. சுயநலக்காரர்கள் பெருகிவிட்டார்கள். அடுத்தவர் மீது யாருக்கும் அக்கறையில்லை. நம் மீது நம்மை ஆளும் அரசாங்கத்திற்கும் அக்கறையில்லை. இவையெல்லாவற்றையும் தினசரி கடந்துதான் போகிறோம். இதெல்லாம் அடுத்த ஆண்டும் இப்படியேதான் தொடரப் போகின்றன. அதில் மாற்றமில்லை. யாரும் அதை மாற்றப் போவதில்லை.

ஆனால் எல்லாவற்றிக்கும் நடுவே புத்துணர்ச்சியுடன் ஒரு புதிய தினத்தை, நமக்கான ஒரு புதிய உலகைக் கண்டடையும் உத்வேகத்துடன்தான் நாம் வாழ்க்கைப் பாதையில் பயணிக்கிறோம். எதிர் மறைகளுக்கிடையேயும் நேர் மறைகளைத் தேடிக் கண்டெடுக்கிற உத்வேகம் அது.  விரும்பாத விஷயங்களின் முன் ஒரு வெண்திரையைப் போட்டு அதற்குமுன் நமக்கு வேண்டிய, நாம் காண விரும்புகிற விஷயங்களைத் திரையிட்டுப் பார்த்து மகிழ்வதற்கான முயற்சியை நாம் எப்போதும் செய்து கொண்டேதான் இருக்கிறோம்.

புத்தாண்டில் என்ன செய்யப் போகிறோம்? நாம் வாழ்வில் எதை அடைய விரும்புகிறோம் என்கிற முனைப்பில், உறுதியில் இருக்கிறது இந்தக் கேள்விக்கான பதில். எதிர்மறையாய் என்ன வேண்டுமானாலும் நடந்துவிட்டுப் போகட்டும், கவ்விப் பிடித்திருக்கும் எந்த இருட்டிற்கும் வில்லனாக இருக்கும் ஒரு ஒளி உண்டு. தூரத்தில் எப்போதும் தெரியும் அந்த ஒளியைப் பார்த்து ஓடலாம். நடந்ததெல்லாம் நன்மைக்கே, நடக்கப்போவதும் நன்மைக்கே என்ற நம்பிக்கை வரிகளைத் தாங்கிய கண்களுக்கு மட்டுமே அந்த ஒளி தெரியும். அது மிக உயரிய மனோபாவம் சம்பந்தப்பட்டது. எல்லா நலன்களையும், வளங்களையும், நிலைத்த சிரிப்பையும், நீடித்த ஆயுளையும் தரும் ஒளி அது.

நமக்கு எது வேண்டும் என்று நாம் தீர்மானிப்போம். நம் உணர்வுகளைச் சிறுமைப்படுத்தும் விஷயங்களை சவால்களாகப் பார்க்கும், சமாளிக்கும் திறனை, உறுதியை வளர்த்துக் கொள்வோம். இடைவிடாது கற்றுக்கொள்வோம். கற்றுக்கொடுப்போம். இழந்தவைகளை மீட்டெடுப்பதற்கான சந்தர்ப்பங்களை உருவாக்க முயற்சி செய்வோம். நம்மால் அடுத்தவர்க்கு ஏற்பட்ட காயங்களுக்கு முடிந்தால் மருந்திடுவோம். நமக்கேற்பட்ட காயங்களை மறந்திடுவோம். திறமைகளைத் திரும்பக் கொணர்வோம்.

நாம் உருவாக்கிய, நம்மை உருவாக்கிய சமூகத்திற்கு நம்மாலான துரும்பைக் கிள்ளிப்போடுவோம். மனோபாவமே வாழ்வில் எல்லாம் என்பதை தாரக மந்திரமாக்கிக் கொள்வோம். எதுவும் அடைய முடியா உயரமல்ல என்பதை எப்போதும் நினைவு கொள்வோம். செவ்வகக் கருவித் திரைகள் மூலம் மனிதர்களைத் தேடாமல் நேரில் சென்று கைகுலுக்க முயற்சி செய்வோம். நம் வாழ்வை எந்த விதத்திலாவது அர்த்தப்படுத்திவிட முடியாதா என்ற கேள்வியை புத்தாண்டில் புதிதாய் முன்வைப்போம். அதற்கான பதிலை மித மிஞ்சிய நம்பிக்கையுடன் கண்டறிய முயற்சி செய்வோம்.

நம்பிக்கைகளைக் கொண்டு நமக்கான உலகத்தை இந்தப் புத்தாண்டில் நிர்மாணிக்க நினைப்போம். நமது நம்பிக்கைகள் நமக்கானவை. அவை உறுதியானதாக இருக்கட்டும். இந்தப் புது வருடத்தில் திறக்கப்படாத மாயக் கதவுகளையும் அது தட்டித் திறக்கட்டும். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்!

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.