உயிரணுக்களால் உண்டாவது உடம்பு. நினைவணுக்களால் உருவாவது மனது. ஓயாமல் மனது உருப்பெற்றுக் கொண்டே இருக்கிறது. இந்த உருவாக்கத்தின் தொடர்வினையாக, ஒரு நிகழ்வின் நொடியை நினைவின் பிரதியாய் மனது சேகரிப்பதை நாம் அனுபவம் என்று அழைக்கலாம். ஆனால் எந்தவொரு நிகழ்வின் நொடியும் தனித்திருப்பதில்லை என்பது காலத்தின் விதி. அதன் முன்னும் பின்னுமாய் கோர்க்கப்பட்ட நிகழ்வுகளுக்குரிய நொடிகளின் பிரதியை கொண்டே குறிப்பிட்ட நிகழ்வை உள்வாங்க முடியும் என்பது காலம் ஏற்படுத்திய உயிரியல் கட்டமைப்பு. ஓரறிவு துவங்கி ஆறறிவு வரை அனைத்திற்கும் இதனை பொது விதி எனக் கொள்ளலாம். இவ்விதியை கொண்டு காலம் நம் மனதை கையாளும் பாங்கு அலாதியானது. நினைப்பின்றி நிகழ்வில்லை, நிகழ்வின்றி நினைப்பில்லை என்னும் விசித்திர வளையத்திற்குள் நம்மை சுற்ற விட்டு வேடிக்கை பார்க்கும் காலத்திற்கு நாம் வைத்திருக்கும் பெயர் வாழ்க்கை. உலகில் உலவும் அனைத்து விதமான விழுமியங்களும் அது தனிமனித தத்துவ விசாரங்கள் சார்ந்ததோ, சமூகம் சார்ந்ததோ, மதம் சார்ந்ததோ…அறிவியல் சார்ந்ததோ…எப்படியிருப்பினும் இந்த விசித்திர வளையத்தில் அடங்கி விடும். இவ்விசித்திர வளையம் தரும் வியப்பினால் எழுதுகிறேன் அவ்வியப்பை பற்றி எழுதுகிறேன்.இத்தகைய வியப்பை ஊட்டும் படைப்புகளை பற்றியும் எழுதுகிறேன் அவற்றின் வாசிப்பு அனுபவங்களை சுற்றியும் எழுதுகிறேன்.
இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் என்று மூன்று காலங்கள் இருப்பதாக நமக்கு கற்பிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் காலம் ஒன்றே எனத் தோன்றுகிறது. அது இறந்த காலம் தான். அதுவே, நாம் பார்த்த இறந்த காலம், பார்த்துக் கொண்டிருக்கும் இறந்த காலம், நாளை பார்க்கப் போகும் இறந்த காலம் என்று திரிகிறது…ஒரு நினைப்பிலிருந்து மற்றொரு நினைப்புக்கு மனம் நகரும் கால அளவை நிகழ் காலம் என்றும் ஒரு நினைப்பிலிருந்து மற்றொரு நினைப்பை உருவாக்கும் மனதின் விழைவை எதிர் காலம் என்றும் சொல்லலாம் இல்லையா? காலம் என்பதே நினைப்பு தான். நினைப்பும் நினைப்பை பற்றிய நினைப்பும்…! காலம் சில சமயங்களில் நம் தோள் அணைத்து அழைத்துச் செல்கிறது. சில சமயங்களில் தரதரவென்று இழுத்துச் செல்கிறது. இரண்டும் இவ்வாழ்வின் இயல்பென்று புரியத்துவங்குகையில் காலத்தை ஒரு அற்புதமான ஆசானாய் பார்க்கும் ஆர்வம் சுரக்கிறது. அதன் விளைவாய் ஒவ்வொரு நொடியையும் கூர்ந்து பார்க்கும் நோக்கம் கிடைக்கிறது. கூர்ந்து பார்த்தல் என்பதே கூடுதல் அனுபவத்திற்கான வழி என்ற பக்குவம் பிறக்கிறது. இவ்வாறு சேர்க்கும் அனுபவத்தின் அச்சாணி நினைப்பு. நினைப்பு என்பது ஒரு விசித்திர வஸ்து. ஒரு நினைவு, அது நினைக்கப்படும் பொழுதில் என்ன பொருள் தரும் என்பது காலத்தின் கையில் இருக்கிறது. இடைப்பட்ட பொழுதுகளில் கிடைக்கும் மேற்கூறிய அனுபவத்தின் ஆழ நீளங்களின் அமைப்பைப் பொறுத்து இருக்கிறது. நினைப்பின் பரிமாணங்கள் நினைப்பை பற்றிய ஒவ்வொரு நினைப்பு தோறும் மாறிக்கொண்டே இருக்கும் விசித்திரம் நிகழ்கிறது. இத்தகைய நினைப்பு தரும் உணர்வை, அதன் விசித்திரத்தை, அதற்கு நிகரான சொற்களின் வடிவேற்றி படிமப்படுத்தும் படைத்தல் அனுபவம் தரும் பரவசத்திற்காய் எழுதுகிறேன்…
காலம் நம் நினைப்புடன் உறவாடும் மாயம் தான் எத்தனை வியப்புக்குரியது? காலம் ஒரே அலகில் தான் உலகில் உலவுகிறது. ஒரு இலையின் அசைவுக்கும் ஒரு இறுதி மூச்சுக்கும் காலத்தின் அலகு ஒன்றே. ஆனால் அதைப் பார்ப்பவர் அவற்றுடன் கொண்ட நினைப்பின் பரிமாணங்களைப் பொறுத்து அந்நிகழ்வும், பின் அந்நிகழ்வு சார்ந்த நினைப்பும் கால அலகின் கணக்கில் அடர்த்திமிகு நீளம் கொண்ட நினைப்பாக மாறும் மாயம் சொல்லி அடங்குமா சொல்லில் தான் அடங்குமா? நாளும் பொழுதும் நிகழும் இம்மாயத்தை மொழியின் வழியே சேகரித்துக் கொள்ளும் தீராத ஆவலில் எழுதுகிறேன்.
“நெருப்பு என்று எழுதினால் சுட வேண்டும்” என்பார் லா.ச.ரா. அது போல் நினைப்பென்று எழுதினால் நெகிழ வேண்டும். மனதின் நெகிழ்வு உள்ளிருக்கும் மனிதத்தை உரமேற்றிக் கொண்டே இருக்கிறது. அதை வேண்டி எழுதுகிறேன். வாசிப்பவருக்கும் அத்தகைய நெகிழ்தல் நேரும் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன்.
நினைப்பு உறவுகளாலும் உணர்வுகளாலும் உண்டான கலவை. இங்கே உறவு, உணர்வு என்பதை மனிதருடன் மட்டும் தொடர்புபடுத்திக்கொள்ளாமல், நம் அகத்திற்கும் புறவெளிக்குமான உறவும் உணர்வும் என்று பொருள் கொள்க. இத்தகைய நினைப்பு காலத்துடன் உறவாடும் நிகழ்வுதானே வாழ்க்கை? இந்த உறவைப் பற்றி எழுதுகிறேன்…இந்த உறவின் உன்னதம் பற்றிய புரிதல் தரும் விசாலமான பார்வைக்காய் எழுதுகிறேன்…
காலம் நொடி தோறும் நினைப்பை பிரசவித்தபடி நகர்ந்து கொண்டே இருக்கிறது. காணும் திசையெங்கும் கடக்கும் பொழுதெங்கும் நினைப்புக்கான கருவை சுமந்தபடி திரிகிறது காலம். உறவையும் பிரிவையும் உட்பொருளாய் கொண்டது காலம். அதை உள்வாங்கி ஊழ்வினையாய் மாற்றுகிறது நினைப்பு. இந்த ரகசியத்தை, அதிசயத்தை, அதன் உட்பொருள் பற்றிய என் புரிதலை பகிர்ந்து கொள்ள எழுதுகிறேன்.
நிகழ்கால நாக்கில் நினைப்பை அள்ளி தடவுகையில் மனதில் ஊறும் சுவைதானே நம் வயது? எனவே வயதின் வார்ப்பு பற்றி எழுதுகிறேன் அதன் சாரமான அனுபவ ஈர்ப்பு பற்றி எழுதுகிறேன்.
இதுவரை சொன்ன அகம் சார்ந்த “எதற்காக?” தந்த எழுத்துக்கள், பிறர் வாசிக்கும் நிலையை அடையும் பொழுது, ஒரு மிக முக்கியமான “எதற்காக?” நிகழ்கிறது. இங்கும் காலமே கருவியாய்…ஆம்.ஒரு நுனியை மற்றொன்றில் கோர்த்து விடுவதில் காலம் வெகுவாய்த் தேர்ந்தது!
எனவே, இவ்வாறு, என் நினைப்பை தேக்கி வைத்த சொல்லடுக்கு ஒன்றை வாசிக்கும் ஒருவர் எதிகொள்ளும் ஒற்றைவரியின் அடியில் அவரின் நினைப்பின் நுனி ஒன்று ஒட்டிக் கொண்டிருக்கக் கூடும். அதன் பின் என் வரி அவரின் பிரதி. அவருக்கான பிரதி. நினைப்பின் பிரதி என்பது வெறும் நகலன்று. அதன் பொருளடக்கம் வாசிப்பவரின் நினைப்புக்கேற்ப மாறிக்கொண்டே இருக்கும் பண்பு உடையது. இப்பண்பு பயில வாசிக்கிறேன். இப்பண்பு பகிர எழுதுகிறேன்.
குமரன், அருமையான பதிவு….