கண்ணாடிச் சில்லுகளும் கருங்குழல் நோட்டுகளும் – சுரேஷ் பிரதீப்

சுரேஷ் பிரதீப்

அக்கா வீடாகவே இருந்தும் வீட்டு முற்றத்தில் யாரும் இல்லாதது உள்ளே செல்வதற்கான ஒரு தயக்கத்தை அளித்தது. காலர் வைத்த நைட்டி அணிந்தபடி விமன்யா எதிர்பட்டாள். என் தயக்கத்தை பார்த்து சிரித்தபடியே என் முகத்தில் இருந்து பார்வையை எடுக்காமல் “ம்மா” என சத்தமாக அழைத்தாள். பள்ளிச் சீருடை தான் அவளை எடுப்பாக காட்டும் ஒரு உடை. மெலிந்து உயர்ந்த பெண்களின் முகம் எவ்வளவு திருத்தமாக இருந்தாலும் அவர்களின் அசைவுகளில் ஒரு கவர்ச்சியின்மையும் நம்பிக்கை குறைவும் வெளிப்படவே செய்கிறது. போட்டுப் பழகிய சீருடையிலேயே சற்றே மிளிர்வு தெரியும் அவளிடம்.

அக்கா கூடத்தின் இடப்புற அறையில் இருந்து மூக்கை ஊறிஞ்சியபடி வெளியே வந்தாள். கார்த்திகாவின் மீது கடுமையான துவேஷம் எழுந்தது. அவளுக்கும் என் அக்கா வயது தான் இருக்கும். விமன்யாவை விட பெரிய பெண் ஒருத்தி அவளுக்கு இருக்கிறாள். ஆனால் அவளிடம் இன்னமும் இளமை தீரவில்லை. அக்காவின் முகம் பழுத்துச் சிவந்திருந்தது. வழக்கம் போல் இடக்கையால் தலையை சொறிந்த படி “தம்பி வாடா” என்றாள். அவள் தலையில் கை படும் போது உதடு வலது ஓரத்தில் லேசாக சுளித்துக் கொள்ளும். அவ்வழகை கார்த்திகா என்றுமே தொட்டு விட முடியாது என மனம் ஆசுவாசம் கொண்டது அல்லது கொள்ள விழைந்தது.

ஜீவா வந்து மேலே ஏறிக் கொண்டான்.

“என்னா மாமா” என இழுத்தான்.

“என்னா மாப்ள” என நானும் இழுத்தேன். அவன் என் தலையில் ஏறிக் கொண்டு பேன் பார்க்கத் தொடங்கினான்.

“அபபா இல்லையாடி” என்றேன்.

“இல்ல மாமா” என்ற விமன்யாவின் விழிகளில் என்னிடம் சொல்ல ஏதோ எஞ்சி இருந்தது.

“என்னடி” என்றேன்.

“உங்க போன வேற யாரும் எடுக்க மாட்டாங்கல்ல” என்றாள். அதிர்ந்த மனதை கட்டுப்படுத்தி “ஓ நீயா அது. வாட்ஸ் அப்ல மெசேஜ் பண்றது இந்த கொரங்குன்னு நெனச்சேன்” என ஜீவாவை கை காட்டினேன் அவள் அந்த நாசூக்கின்மையை வெறுக்க வேண்டும் என்ற உட்சபட்ச வேண்டுதலுடன். விமன்யா மேலே ஏதும் பேசவில்லை.

பசித்தது. அது அவளுக்குத் தெரிந்திருக்க வேண்டும். “டின்னர் இங்க சாப்ட்றீங்களா மாமா” என்றாள். ஏற்பின் அசைவுகள் என்னுள் எழுவதற்கு நேரம் கொடுக்காமல் “கெளம்புறீங்களா” என்றாள். இவ்வளவு சிறிய பெண்ணுக்கு எங்கிருந்து வருகிறது இவ்வளவு கூர்மை என எண்ணும் போதே பதினைந்து பெண்ணுக்கு சிறு வயது அல்ல என்றும் தோன்றியது. பல பெண்களிடம் ஆடுவது தான் என்றாலும் அச்சிறுமியிடம் அவ்விளையாட்டை நிகழ்த்த மனம் ஒப்பவில்லை. அவள் எதிர்பார்க்கும் சங்கட உணர்வை முகத்தில் நிலைக்க விட்டால் என்ன என்று கூட ஒரு கணம் தோன்றியது. ஆனால் உள்ளுக்குள் ஒன்று தீர்மானமாக அதை மறுத்தது. நல்லவேளையாக “தூங்குற நேரத்த நீ எப்படி கொறச்சுப்பன்னு சொன்ன மாமா” என்றபடியே அக்கா வெளிவந்த அதே அறைக்குள் இருந்து வந்தாள் விமன்யாவின் தங்கை கீர்த்தி. எதை முதன்முறையாக கேட்டாலும் ஏற்கனவே அதை என்னிடம் கேட்டது போலத்தான் சொல்வாள்.

சிலரிடம் எச்சூழலிலும் ஒளியேற்றிவிடும் ஒரு தீ இருக்கும். கீர்த்தி அத்தகையவள்.

“ரொம்ப நேரம் தூங்கணும்னு அவசியம் இல்லடா. கண்ணுக்கு மட்டும் கொஞ்சம் ரெஸ்ட் வேணும். அதனால பஸ்ல போறப்ப வண்டில பின்னாடி உக்காந்து போறப்பவெல்லாம் கண்ண மூடிப்பேன்” என்றேன்.

“இப்ப நா கேட்டுட்டு தான இருக்கேன் நானும் கண்ண மூடிக்கிறேன்” என்று கண்களை மூடிக் கொண்டு அமர்ந்து விட்டாள்.

திடீரென நினைவெழுந்தவளாய் “மாமா அந்த கதைய கண்டினியூ பண்ணே. தலமுடியும் துளிக் குருதியும்” என்றாள்.

குருதி என்ற வார்த்தையை அவள் உச்சரிப்பது மகிழ்ச்சியாக இருந்தது. நான் சொல்லியிருந்தது எனக்கே மறந்து விட்டது. நெருங்கி நண்பர்கள் அனைவரின் ஒரேயொரு முடியையும் ஒரு துளி ரத்தத்தையும் எடுத்து பாடம் செய்து வைப்பவனின் கதை. யார் என்னிடம் அதைச் சொன்னார்கள் எனத் தெரியவில்லை. ஆனால் அதைக் கதையாக இன்னொருவரிடம் சொல்லும் வரை உள்ளுக்குள் ஏதோ அரித்துக் கொண்டிருந்தது. இப்போது கீர்த்தியிடம் கூட இயல்பாக சொல்லக்கூடியதாகிவிட்டது அக்கதை. விமன்யாவின் கடுப்பான முகத்தைப் பார்க்க எழுந்த இச்சையை மிகுந்த சிரத்தையுடன் கட்டுப்படுத்திக் கொண்டேன்.

“பஸ் ஸ்டாண்டுக்கு எப்படி மாமா போவீங்க” என இடை வெட்டினாள் விமன்யா.

“கீறி என்ன தூக்கிட்டுப் போகும்” என கீர்த்தியை கை காட்டினேன்.

“நானும் தூக்குவேன் நானும் தூக்குவேன்” என ஜீவா தலையில் இருந்து முதுகுக்கு இறங்கி விட்டான். விமன்யா மேலு‌ம் எரிச்சல் அடைவது தெரிந்தது.

“நான் பிரசன்னாவ வந்து விட்டுட்டு வரச் சொல்றேன்” என்றாள். அந்நேரம் அவள் மீது கடுமையான வெறுப்பு எழுந்தது. இவளுக்கு என்ன வேண்டும்? என்னிடம் என்ன சொல்ல விழைகிறாள்? நான் அவளிடம் என்ன சொல்ல வேண்டும் என நினைக்கிறாள்?

பிரசன்னா வந்தான். நெடுநெடுவென இருப்பவன். அப்படி மெலிந்து உயரமாக இருக்கும் இளைஞர்கள் தான் சாதிக்க தகுந்தவர்கள் என்ற ஒரு பொது புத்தி இருப்பதாக எனக்குத் தோன்றியது. ஆனால் விமன்யா போன்ற மெலிந்த பெண்கள் அப்படி நினைக்கப்படுவதில்லை.

“வர்றண்டி கீறி வர்றங்க்கா வர்றேன் மாப்ள” என ஒவ்வொருவராக விடைபெற்ற பிறகு “இது லைஂபோட பிககனிங் ஸ்டேஜ் விமி. பிகேவ் யுவர்செல்ப் ” என விமன்யாவிடம் சொல்ல வந்ததை முழுங்கி “சி யூ விமி” என்று மட்டும் சொல்லிவிட்டு இரு சக்கர வாகனத்தில் ஏறினேன். அப்படி அவளிடம் சொல்லாதது ஒரு ஆறுதலையும் அளித்தது.

பிரசன்னாவிற்கு பின்னே வண்டியில் நான் ஏறியதும் ஒவ்வொரு தெரு விளக்காக அணைந்ததை எட்டு மணிக்கே கடைத்தெரு காலியாகக் கிடந்ததை பிரசன்னா என்னிடம் ஒரு வார்த்தை கூட பேசாததை பேருந்தில் ஏறிய பிறகே எண்ணிக் கொண்டேன். ஓட்டுநரையும் நடத்துநரையும் தவிர வேறு யாருமே இல்லாத பேருந்து மெல்லிய துணுக்குறலையும் மகிழ்ச்சியையும் அளித்தது யானையின் உட்புறம் இருப்பது போல . விளக்குகள் அணைந்திருந்ததால் அமர்ந்திருந்த நடத்துநரின் முகம் தெரியவில்லை. டிக்கெட் எடுத்து பிறகு பேருந்தின் மைய இருக்கை ஒன்றில் அமர்ந்தேன்.

எல்லா இருக்கையும் காலியாகக் கிடந்தும் என் இருக்கை ஓரத்தில் அவன் வந்து அமர்ந்தான். நான் ஏறிய பிறகு பேருந்து எங்குமே நிற்கவில்லை இவன் எப்படி ஏறினான் என்ற எண்ணம் எழுந்ததும் ஒரு பயம் பிடித்துக் கொண்டது. அந்த பயமும் பலமுறை ஏற்கனவே உணர்ந்தது போலவே இருந்தது. தமிழ்ச்செல்வி அக்காவின் வீட்டின் இருண்டு அகன்ற கூடத்தில் அவள் தனியே அமர்ந்து அழுது கொண்டிருப்பதைக் கண்ட போது எழுந்த பயம் அது. காட்சியை விட சத்தங்களே அதிக பயத்தை கொடுத்தது. அவள் குரல் அந்த குளிர்ந்த பெருங்கூடத்தின் எல்லா மூலைகளிலும் பட்டு எதிரொலித்துக் கொண்டிருந்தது நாய்கள் ஒன்றிணைந்து ஊளையிடுவது போல.

நம்பிக்கை இன்மையை மட்டுமே வெளிப்படுத்தும் உடலசைவுகளைக் கொண்டிருந்தான். அவன் செய்யப் போகும் ஒவ்வொன்றையும் முன்னரே என்னால் கணிக்க முடியும் எனத் தோன்றியது. அப்படி நான் கணிப்பவற்றையே அவன் செய்வது அவனை மேலும் வெறுக்க வைத்தது. அசிங்கமான ஏதோவொன்று காலில் ஒட்டியிருப்பது போல நெளிந்து கொண்டே இருந்தேன். அழகானவற்றால் அப்படி ஈர்த்து அருகில் வைத்துக் கொள்ள முடியாது.அவற்றால் சலிப்பு தட்டக்கூடும். ஆனால் வெறுக்கிறவற்றை நோக்கி எழும் ஈர்ப்பை எப்போதும் போல் அப்போதும் புரிந்து கொள்ள முடியவில்லை.

ஒரு பர்ஸை சட்டைப் பையிலிருந்து எடுத்தான். சில பத்து ரூபாய் தாள்கள் மட்டுமே இருந்த பழைய கிழிந்த பர்ஸ் அது. அதிலிருந்து இரண்டு பத்து ரூபாய் தாள்களை எடுத்து அந்த பர்ஸின் இன்னொரு மூலையில் சொறுகினான். அதனை ஒரு சிறிய நோட்டில் குறித்துக் கொண்டான். ஒரு பழைய தோளில் மாட்டக் கூடிய பை. அவன் அதைத் திறந்த போது உளராத துணிகளில் இருந்து வரும் ஊமை வாடை அடித்தது. பை முழுக்க புத்தகங்கள் சீரில்லாமல் கிடந்தன. வாசிக்கும் பழக்கமுடைய இன்னொரு பைத்தியம் என எண்ணிக் கொண்டேன். அனுவனுவாக அவன் மீது வெறுப்பு பெருகியபடியே வந்தது. கூர்மையற்ற மங்கலான முகம். தொப்பை வெளித்தள்ளத் தொடங்கி இருக்கும் உடல். எண்ணெய் வைக்காத தலை. முகம் முழுவதும் படராமல் அங்கொன்றும் இங்கொன்றுமென தென்பட்ட தாடி. என்னைப் பார்த்து அவன் லேசாக சிரித்த போது பற்றிக் கொண்டு வந்தது எனக்கு. அந்தப் குறுகிய நேரப் பயணம் எப்போது முடியும் என்றிருந்தது.

“சார்” என நான் கேட்டதிலேயே கேவலமான குரலில் என்னை அழைத்தான்.என் வயதோ என்னை விட சற்று மூப்பாகவோ இருக்கக்கூடியவன் என்னை அப்படி அழைப்பது மேலும் வெறுப்பேற்படுத்தியது.

ஒன்றும் சொல்லாமல் அவனை நிமிர்ந்து பார்த்தேன்.

“நீங்க புரோகிராமரா” என்றான். எனக்கு திக்கென்றிருந்தது.

“இல்லை” என்றேன்.

“பொய் சொல்லாதீங்க பிரகாஷ்” என்றவனின் முகம் கணம் கணம் மாறுவது போல இருந்தது.

“எப்படித் தெரியும்?” என்றேன்.

“என்னத் தெரியலையா” என்றவனின் முகத்தை எங்கோ பார்த்தது போல் இருந்தது. இருந்தும் அம்முகத்தை நான் நினைவுமீட்ட விரும்பவில்லை.

மேலு‌ம் சிலர் பேருந்தில் இப்போது அமர்ந்திருந்தனர். அவர்களும் எனக்குத் தெரிந்தவர்களாகவே இருந்தனர். என்னையறியாமலே அவன் யார் என நான் ஊகித்திருந்தேன். விசித்திரமாகத் தோன்றினாலும் ஓட்டுநர் இருக்கை காலியாக இருந்தது எனக்கு எந்த அதிர்ச்சியையும் ஏற்படுத்தவில்லை. பேருந்து விரைந்து கொண்டிருந்த போதே நடத்துநர் குதித்து விட்டார். அவர் மேல் பேருந்து ஏறி இறங்கியதால் ஏற்பட்ட குலுக்கலில் என் அருகே அமர்ந்திருந்தவன் முன் இருக்கையின் கம்பியில் இடித்துக் கொண்டான்.

“விமன்யாவ ஏன் தேவிடிச்சின்னு சொன்ன?” என்று அவன் குரலுக்கு வாய்க்கவே முடியாத கடுமையுடன் சொன்னான்.

“நான் சொல்லல” என்றேன். அவன் சிரித்தான்.

ஏதோ ஒரு உள்ளுணர்வில் திரும்பிப் பார்த்தேன். கடைசி இருக்கையில் விமன்யா அழுதபடி அமர்ந்திருந்தாள்.

“இப்ப என்னடா பண்ணனுங்கிற நீ” என்றேன் என்னுடைய வழக்கமான கடுமையுடன். பழகிய நாய் போல அவன் முகம் சுண்டியது. அது மேலும் தன்னம்பிக்கையை அளிக்கவே “அப்படி பேசினாத்தான் பதினஞ்சு வயசுலயே கண்ட நெனப்புலயும் அலையாம ஒழுங்கா படிப்பா. அதோட நான் தூக்கி வளத்த பொண்ணுடா அவ” எனச் சொல்லும் போது என் சொற்களின் நம்பிக்கை இன்மையை உணர்ந்து அவன் மீண்டும் சிரித்தான்.

“மரியாதையா இறங்கிப் போயிடு” என்றேன்.

ஒரு சிறிய ஊசியால் என் விரல் நுனியில் குத்தி ஒரு துளிக் குருதியை எடுத்தான். ஒரேயொரு முடியை மட்டும் லாவகமாக பிடுங்கினான். அச்செய்கை பால் புகட்டி விடுவது போல இருந்தது. பெருமூச்சுடன் எழுந்துகொண்டு மெலிதாக சிரித்தான்.

“இறங்கப் போறியா” என்றேன். அவ்வளவு கனிவுடன் அதை கேட்டிருக்கத் தேவையில்லை.

“ஆமா இதுக்குத்தான வந்தேன்” என்றேன்.

ஏதோ வருத்தம் நெஞ்சை அழுத்தவே “போகாதடா” என்றேன்.

படபடப்புடன் “ப்ளீஸ் டா பிரகாஷ் போகாத” என்றேன் மீண்டும்.

அவன் அமர்ந்தான்.

பிரகாஷ் மீண்டும் அந்தக் கதையை என்னிடம் சொன்னான். பலமுறை கேட்ட பலமுறை சொன்ன அதே கதை. அக்கதையை கேட்காமல் அதன் உச்சத்தில் திளைக்காமல் வதைபடாமல் அவனை என்னால் என்னிடமிருந்து பிரித்தனுப்ப முடிந்ததேயில்லை.

அந்தப் பழக்கம் நான்காம் வகுப்பு படிக்கும் போது ஏற்பட்டது. அப்பாவின் தலையில் இருக்கும் நரைமுடிகளை அம்மா அழகாகப் பிடுங்குவாள். “வெடுக்” என்ற சப்தத்துடன் அந்த முடிகள் பிடுங்கப்படுவது என்னுள் ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தும். அந்த முடி பிடுங்கப்பட்டதும் அப்பா அம்மாவைப் பார்த்து மெலிதாகச் சிரிப்பார். இவ்வளவு அழகாக என் அப்பாவால் சிரிக்க இயலுமா? உலகத்தில் எந்த மனிதராவது இவ்வளவு அழகாக சிரித்துவிட முடியுமா? அச்சிரிப்பை அம்மாவுக்காக மட்டுமே சேர்த்து வைத்திருந்தார் போல. ஒருமுறை கூட அவர் அப்படி என்னைப் பார்த்து அப்படி சிரித்ததில்லை. என்னால் பொறுத்துக் கொள்ளவே முடியாத ஒரு கருணை மட்டுமே அவர் சிரிப்பில் இருக்கும். அது என்னை துன்புறுத்தும்.

அப்பா அம்மாவையோ என்னையோ அடித்ததில்லை. மிக நிதானமாகப் பேசுவார். தூய கண்ணாடியின் கூர்மை கொண்ட பேச்சு. லாவகமாக வயிற்றுக்குள் இறக்கி உள்ளுறுப்புகளை அறுத்து ரத்தம் கொப்பளிக்க வைக்கும் பேச்சு. அவரின் நிதானமான பேச்சினை அழாமல் கேட்பது அம்மாவுக்கு மற்றொரு பாடு. ஒருவேளை அழுதுவிட்டால் அவர் தன்னையே துன்புறுத்திக் கொள்ளத் தொடங்குவார். அதனால் அம்மா அவரின் கண்ணாடிப் பேச்சுகளை நெஞ்சில் பொங்கும் அழுகையையும் ஆற்றாமையையும் பற்களில் தேக்கி உதட்டை கடித்தபடி கேட்டு நிற்பாள். அவள் திரும்பி நடக்கும் நேரங்களில் கண்ணீரோடு சில துளிகள் குருதியும் சிந்தும்.

நெற்றிப் பொட்டு போன்ற சத்து மாத்திரை கொடுப்பதெற்கென அரை நாள் பள்ளி வைக்கும் போது மருத்துவமனை அழைத்துச் செல்வார்கள். அரை கிலோமீட்டர் தாண்டி இருக்கும் மருத்துவமனைக்கு பின் கை கட்டியபடி வரிசையாகச் செல்வோம். சில நாட்களில் வலது கை ஆட்காட்டி விரலின் நுனியைப் பிடித்து ஊசியால ஒரு குத்து குத்தி ஒரு துளி ரத்தம் எடுப்பார்கள். அதனை ஒரு சிறிய செவ்வக வடிவ கண்ணாடி சில்லில் தேய்ப்பார்கள். குத்தும் போதிருந்ததை விட அந்த கண்ணாடி கையில் படும் போது உடல் கூசும்படியாக வலிக்கும். வரிசை முடியும் வரை வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் கண்ணாடிச் சில்லுகளையே பார்த்து நிற்பேன். வரிசையாக அடுக்கப்பட்ட பொருட்களின் மீது ஒரு மோகம் உருவாகத் தொடங்கியிருந்தது அப்போது. அம்மா மௌனித்துப் போய்விடும் நாட்களில் என் உலகம் ஓடாமல் நின்று போய்விடும். அது போன்ற நாட்களில் பயன்படுத்தி தூக்கி எறியப்பட்ட தீப்பெட்டிகள் அப்பாவின் பிளேடு பாக்கெட்டுகள் கொட்டாங்குச்சிகள் அம்மாவின் உடைந்த கண்ணாடி வளையல்கள் என அனைத்தையும் அடுக்கியபடியே இருப்பேன். அது என் ரகசியப் பொழுது போக்கு. யாருக்கும் தெரிந்து விடக்கூடாது என்பதில் கூடுதல் கவனத்துடன் இருப்பேன். அதோடு புளியங்காயை லேசாக வாயில் வைத்தால் வாய் நிறைய உமிழ்நீர் சுரந்து விடும். அதனை நூறு மிடறாக துளித்துளியாய் அருந்துவேன். இதுவும் பிறருக்குத் தெரியாது.

வரிசையாக அடுக்கப்பட்ட ரத்தம் தோய்ந்த கண்ணாடிச் சில்லுகளை பார்த்த போது மற்ற அனைத்தும் அற்பமாகத் தெரிந்தது.

“இதெல்லாம் என்னக்கா பண்ணுவீங்க” என்று ஊசியால் குத்தும் பெண்ணிடம் கேட்டேன்.

என்னை குறும்புடன் கூர்ந்து நோக்கியவள் “இந்த கிளாஸ் எல்லாத்தையும் வெந்நீர்ல போட்டா ரத்தம் எல்லாம் தண்ணிக்கு போயிடும். அதோட காபி பவுடர் கலந்து குடிப்போம்” என்றாள். எனக்கு வாயில் அந்த நீரை வைத்துக் கொண்டு மிடறு மிடறாக அருந்த வேண்டும் போலிருந்தது. தியாகராஜனிடம் அதைச் சொன்ன மறுநாள் முதல் என்னிடம் அவன் பேசுவதை நிறுத்தி விட்டான்.

ஆனால் என்னால் தான் முடியவில்லை. நான் முதலில் எடுத்ததே அவன் விரல் குருதியைத் தான். மறுமுறை மருத்துவமனைச் சென்ற போது குருதியற்ற கண்ணாடிச் சில்லுகள் கொண்ட பெட்டியை எடுத்து விட்டேன். ஒவ்வொரு ரூபாயாக சேர்ப்பது போல ஒவ்வொரு துளி குருதியாக எடுத்தேன். பெரும்பாலும் நண்பர்கள் தனிமையில் இருக்கும் போது தான் எடுப்பேன். ஒருவன் விரலில் எடுப்பதை மற்றவன் அறிந்துவிடாதபடி பார்த்துக் கொள்வேன். சில சமயம் எதேச்சையாக சில சமயம் மிரட்டி சில சமயம் பயமுறுத்தி என எப்படியெல்லாமோ குருதிச்சில்லுகளை சேகரித்தேன். என் காக்கி கால்சட்டையின் டிக்கெட் பாக்கெட்டில் இரண்டு சில்லுகள் எப்போதும் இருக்கும்.

யார் விரலில் என்றைக்கு எடுத்தேன் என்பதை ஒரு தனி நோட்டில் குறித்து வைத்துக் கொள்வேன். அந்த நோட்டையும் கண்ணாடிச் சில்லுகளின் பெட்டியையும் ஒரு பாலிதீன் பையில் போட்டு ஆற்றங்கரையில் புதைத்து வைத்திருந்தேன். குருதி எடுப்பதை விட முடி பிடுங்குவது எளிது. அதற்கும் தனி நோட்டு. முடிகளை முதலில் கோணி ஊசிகளில் கட்டி வைத்திருந்தேன். பின்னர் மெல்ல மெல்ல அந்த பழக்கம் குறைந்தது. முடிகளை நோட்டுப் புத்தகத்தில் வைத்து அது யாருடைய முடி என்று என்பதை குறித்து வைப்பேன். அப்படி குறித்த போது தான் கண்ணாடிச் சில்லுகளின் நினைவெழுந்தது. அதில் குறித்து வைக்கவில்லை என்றபோது திக்கென்றிருந்தது. பின்னர் ரத்தக் குறிப்புகள் எடுக்கப்பட்டிருந்த நோட்டைப் புரட்டி அடுக்கி வைத்திருந்த வரிசையையும் நோட்டில் குறித்திருந்த சீரியல் நம்பரையும் ஒப்பிட்டு நுனி விரலால் தொட்டெடுக்கக்கூடிய சிறிய காகித நறுக்கில் சீரியல் நம்பர் போட்டு ஒட்டி வைத்தேன். மிகத்தீவிரமாக ஒரு செயலில் நான் ஈடுபாடு கொண்டிருந்ததாக அது என்னை நம்ப வைத்தது. அதைத்தவிர அனைத்துமே அவசியம்றறது என எண்ணத்தலைப்பட்டேன். அம்மாவின் கடித்த உதடுகளும் அப்பாவின் கண்ணாடிப் பேச்சுகளும் எனக்கு பொருட்டல்ல என்றாயின.

கல்லூரி இறுதி ஆண்டுகளில் வீட்டிற்கு வரும் போது கண்ணாடிச் சில்லுகளின் வரிசை எண்ணைப் பார்த்து அது என்று எடுக்கப்பட்டது என்பதை நினைவு மீட்டுவதும் ஒரு இஞ்சில் இருந்து இரண்டு அடி வரை உள்ள மயிரிழைகள் யார் தலையில் இருந்து என்று எடுக்கப்பட்டன என எண்ணிக் கொள்வதும் என் தனிமையைப் போக்கும் முக்கிய பொழுது போக்குகள். வரிசையாக அடுக்கப்பட்டிருக்கும் அந்தச் சில்லுகளை கண்களை மூடியபடி வருடுவேன். முடிகளின் மென்மையை விரல்களில் உணரும் போது உடல் சிலிர்க்கும்.

அதன்பிறகு நானே அறியாமல் நான் கொல்லப்பட்டுக் கொண்டிருந்தேன். முதலில் நான் செத்துக் கொண்டிருப்பது எனக்குத் தெரியவில்லை. அதன்பிறகே என் கனவுகளில் அவனை காணத் தொடங்கினேன். என் கனவில் வருபவனை எல்லோரும் விரும்பினர். அவன் யார் என அறிவதற்காக நான் வெகு நேரம் உறங்கினேன். வெகுநாட்கள் உறங்கினேன். உறங்கி எழுந்த போது நான் முழுமையாக இறந்து விட்டிருந்தேன். கண்ணாடிச் சில்லுகளும் கருங்குழல் நோட்டுகளும் எங்கோ புதையத் தொடங்கின. மீண்டும் அம்மாவின் கடித்த உதடுகள் கண்ணில் படத் தொடங்கியது.

பிரகாஷ் சொல்லிக் கொண்டிருந்த போதே அவன் முகத்தில் அச்சமூட்டும் வெறுப்பு படர்ந்தது.

“ஒம்மால நீ தாண்ட என்னக் கொன்ன” என விபரீதமான குரலில் கத்தினான்.

எனக்கு தொண்டை அடைத்தது. விமன்யா இளித்தபடி எழுந்து சென்றாள்.

“இல்ல எனக்குத் தெரியாது எனக்குத் தெரியாது” என்றபோது எனக்கு அழுகை வந்துவிட்டது.

“உனக்கு ஒன்னும் தான் தெரியாதே. உங்கிட்ட எவ்வளவு சொன்னேன். என் கண்ணாடிகள உடைக்காத உடைக்காதன்னு. தேவடிப்பயலே கேட்டியாடா நீ. போட்டு ஒடச்சேல்ல. நீ ஒடச்ச பிறகும் எவ்வளவு கெஞ்சு கெஞ்சினே உன்னைய. அத அப்படியே கரச்சாவது என்ன குடிக்க வுட்றான்னு. வுட்டியாடா வுட்டியாடா என்னைய நீ” என்றபோது அவன் முகத்தில் அச்சமூட்டக்கூடிய உக்கிரம் படர்ந்தது.

நான் அவனைத் தடுத்ததாக நினைவில்லை.

“தட்டி விடலேன்னா நீ செத்துருப்படா நாயே” என்றதும் சட்டென ஒரு ஆவேசம் எழுந்தவனாய் “நா உன்னோட மீட்பன்” என்றேன்.

“தூ ஒலுக்க குடுக்கி. நான் ஏன்டா சாவுறேன். எனக்கு சாவே கிடையாது. நீ செத்துருப்படா. அன்னிக்கு நீ செத்துருப்ப” என்றான்.

கை கால்கள் எல்லாம் படபடத்து நடுங்கத் தொடங்கின. அவனை அடித்துக் கொல்ல வேண்டும் போலிருந்தது.

“இப்பனாச்சும் ஒத்துக்கடா. இப்பனாச்சும் ஒத்துக்கடா” எனக் கெஞ்சத் தொடங்கினான். புண்ணைக் கிண்டியது போல ஒரு வெறி ஏற்படுத்தும் நமைச்சல் உடல் முழுக்கப் பரவியது எனக்கு.

“எத ஒத்துக்கணும்” என்றேன்.

மண்டையே தெறித்து விடுவது போல “அய்யோ அய்யோ அய்யோ என்னக் கொல்லுடா. என்னால முடியாதுடா என்னால முடியலடா. நான் என்னடா பாவம் பண்ணினேன் உனக்கு. அல்லாத்தையும் உட்டுத் தொலச்சுட்டு போகத் தான்டா உன்ன கேக்கிறேன்” என தலையில் அடித்துக் கொண்டு அலறினான்.

என்னுள் மேலும் மகிழ்ச்சி பரவியது. மகிழ்ச்சியாக மட்டுமே இதனை எனக்கு நான் சொல்லிக் கொள்ள வேண்டும். இல்லையெனில் அவன் வென்று விடுவான். அவன் என்னை வென்றால் நீங்கள் என்னை மதிக்க மாட்டீர்கள்.

“நீ போகலாம்” என்றேன். பேருந்து உச்ச விரைவில் சென்று கொண்டிருந்தது. கூரையை பிய்த்துக் கொண்டு பேருந்தின் மேலேறினான். தலைகுப்புறக் குதித்தான். அவன் மண்டை சிதறுவதைக் கண்டேன்.

பேருந்தில் இருந்து இறங்கியதும் அலைபேசியை எடுத்தேன்.

“கீரி அந்த கதைய கண்டினியூ பண்ணலாமா?” என்றேன். சொல்லச் சொல்ல எனக்கு நானே சொல்லிக் கொண்டேன் அது கதை தான். கதை மட்டும் தான்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.