தமிழில் நவீனத்துவ, யதார்த்தவாத இலக்கியம் வலுவாக உள்ள நிலையில் அதன் மீது படைப்பு மற்றும் சிந்தனைத்தளங்களில் தமிழ்ச் சூழலில் தாக்குதல்களைத் தொடுத்து வந்தவர்கள் ரமேஷ்-பிரேம், எம்.ஜி.சுரேஸ், தமிழவன், எம்.டி.முத்துக்குமாரசாமி, அ. மார்க்ஸ் போன்றோர். ஜெயமோகன், சாருநிவேதிதா, எஸ். ராமகிருஷ்ணன் போன்றோர் நவீன தமிழ் இலக்கியத்தில் மும்மூர்த்திகள் என்றொரு குரல் தமிழ்ச் சூழலில் ஒலிக்கிறது. அது வேடிக்கையான ஒரு மதிப்பீடாகவோ அல்லது சீரியஸான ஒரு மதிப்பீடாகவோ இருக்கலாம். ஆனால் இந்தக் கட்டுரை மூலம் நான் சீரியசாகவே தமிழ்ச் சூழலின் பின்-நவீன இலக்கிய மும்மூர்த்திகளாக ரமேஷ்-பிரேம், எம்.ஜீ. சுரேஸ், தமிழவன் ஆகியோரைப் பிரகடனம் செய்ய விரும்புகிறேன். ஆயினும் அவர்களின் படைப்புகளிலும் அநேகமானவை முழுமையான பின்நவீனப் படைப்புகளாகவன்றி பின்நவீனத்துவத்தை நோக்கிய படைப்புகளாகவே உள்ளன. தமிழ்ச் சூழலில் சாரு நிவேதிதாவும் கதைகூறலில் பின்-நவீன உத்திகளைக் கையாண்ட ஒருவர் என்பதையும் குறிப்பிட்டே ஆக வேண்டும்.
இந்த பின்-நவீன மும்மூர்த்திகளோடு வேறு பலரும் படைப்பிலக்கியம் குறித்த பின்நவீனக் கருத்துநிலைகளை தமிழ்ச் சூழலில் பேசியும் அதற்கான சோதனை முன்னோடிப் படைப்புகளை முன்வைத்தும் வந்துள்ளனர். எனினும் இவர்கள் அதிகமாக படைப்பிலக்கியம் குறித்த பின்நவீனக் கோட்பாட்டை தமிழ்ச் சூழலில் அறிமுகம் செய்வதை விடவும் அதற்கான படைப்பு முயற்சிகளை தமிழில் முன்னெடுப்பதிலேயே கூடுதல் அக்கறை எடுத்துக் கொண்டனர்.
தமிழ்ச் சூழலில் பின்-நவீனப் படைப்புகள் பெருக்கமுறவும் அதன் முழுமையான தன்மைகளோடு பரவலடையவும் வேண்டுமெனில், மிக முக்கிய பின்நவீனக் கோட்பாட்டாளரான இஹாப் ஹாஸனின் பின்நவீனக் கோட்பாடுகளும், அதுதொடர்பான அவரது ஆய்வுக் கருத்துகளும் நமது தமிழ்ச் சூழலில் போதியளவில் பேசப்பட வேண்டியுள்ளது. இவரது பின்-நவீனத்துவ சிந்தனைகள், ஆய்வுகள் குறித்து தமிழ்ச் சூழலில் ஒரு ஆழ்ந்த மௌனமே நிலவி வருகிறது. எம்.ஜி.சுரேஷின் “பின்நவீனத்துவம் என்றால் என்ன?“ என்ற நூலில் மட்டுமே அவருக்கு ஒரு சிறு இடம் வழங்கப்பட்டது. தமிழ்ச் சூழலில் பின்நவீனப் படைப்புகள் எந்தளவு வெளிவந்துள்ளன என அறிந்துகொள்ளவும் அது தொடர்பான ஒரு வாசகக் கருத்துநிலையை உருவாக்கிக் கொள்ளவும் இவர் போன்ற பின்நவீனக் கோட்பாட்டாளர்களின் சிந்தனைகள் பற்றிய அறிமுகமும் உரையாடலும் தமிழ்ச் சூழலுக்கு மிகவும் அவசியமாகின்றன.
50 க்கு மேற்பட்ட புத்தகங்களையும், 300க்கு மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதிய உலகின் மிக முக்கிய பின்-நவீனக் கோட்பாட்டாளர் பேராசிரியர் இஹாப் ஹாஸன். பின்நவீனத்துவம் குறித்த ‘Dismemberment of Orpheus’, The Postmodern Turn: Essays in Postmodern Theory and Culture’, ‘From Postmodernism to Postmodernity’, ‘Toward Concept of Postmodernism’ போன்ற இவரது கட்டுரைகள் சமகால பின்நவீன சிந்தனையில் மிகவும் கவனிக்கத்தக்கவையாகவும், மிக முக்கியமான திருப்பங்களை ஏற்படுத்திய கட்டுரைகளாகவும் கருதப்படுவன.
பின்நவீனத்துவம் முன்வைக்கும் மிக முக்கிய கதையாடல்களையும், அதன் தன்மைகளையும் சரியானதொரு அர்த்தத்தில் விபரிப்பதில் இஹாப் ஹாஸன் பெரியளவில் பங்களிப்புச் செய்திருக்கிறார். இவரது விமர்சன எழுத்துகள் மற்றும் கட்டுரைகள் இலக்கிய கலாசாரத்திலும், கோட்பாட்டிலும் ஒரு பெருந்தாக்கத்தை உண்டு பண்ணின.
பின்-நவீன இலக்கியத்தின் தன்மைகளை நவீனத்துவத்தோடு ஒப்பீட்டு முதன் முதலில் சிறப்பாக வேறுபடுத்திக் காட்டினார். ரொபர்ட் ஸ்டோர் போன்ற சிந்தனையாளர்கள் கூட பின்-நவீனம் என்ற பதம் எப்போதும் தங்களைக் குழப்பும் ஒன்றாக இருப்பதாக அறிவித்திருந்த நிலையில் இஹாப் ஹாஸன் அதனைத் தெளிவுபடுத்திக் காட்டினார்.
“நான் இந்த சொல்லுடன் மிகவும் பிணைந்திருந்து புதிய தோற்றப்பாடான அந்த இயக்கத்தை தெளிவுபடுத்த முயற்சித்தேன் என்று ஊகிக்கிறேன்” என்று பின்நவீனக் கோட்பாட்டுக்கான தனது பங்களிப்பை இஹாப் ஹாஸன் தனது நேர்காணலொன்றில் குறிப்பிடுவார்.
இஹாப் ஹாஸன் உருவாக்கிய நவீனத்துவத்துக்கும், பின்-நவீனத்துவத்துக்குமிடையிலான வித்தியாசங்களைத் தெளிவாக முன்வைக்கும் இரட்டை எதிர்நிலை அட்டவணை மிகவும் புகழ்பெற்றது. அதுவரை எல்லோரையும் குழப்பிக்கொண்டிருந்த பின்நவீனக்கருத்தியலின் சரியான தன்மையை முதன் முதலில் இந்த அட்டவணையில் இஹாப் ஹாஸன் வரையறுத்தார். இதனால் அந்த அட்டவணை லிண்டா ஹட்சன் போன்ற உலகின் மிக முக்கிய விமர்சகர்களாலேயே அங்கீகரிக்கப்பட்டது. பின்னர் இக்கட்டுரை பல மறுபதிப்புகளைக் கண்டது.
“நவீனத்துவத்திற்கும், பின்–நவீனத்துவத்துக்குமிடையிலான வித்தியாசங்களைப் பட்டியலிட்டிருந்த இரண்டு செங்குத்து வரிசையில் சில பக்கங்கள் அடிக்கடி மறுபதிப்புச் செய்யப்பட்டன“
என்று இஹாப் ஹாஸனே தனது நேர்காணலொன்றில் அவரது இரட்டை எதிர்நிலை அட்டவணைக்கு கிடைத்த பரவலான அங்கீகாரம் பற்றிக் குறிப்பிடுகிறார். இதுதான் அந்த அட்டவணை:
நவீனத்துவம் | பின்நவீனத்துவம் |
---|---|
புனைவுவாதம்/குறியீட்டுவாதம் | டாடாயிசம்(கலைவேடிக்கை வாதம்) |
உருவம் (மூடிய நிலை) | எதிர்-உருவம் (திறந்தநிலை) |
நோக்கம் | விளையாட்டு |
வடிவமைப்பு | சந்தர்ப்பம் |
அடுக்கு நிலை | குலைத்துவிடல் |
தேர்ச்சித் திறன் | சோர்வுநிலை |
தொடர்செயல்/ நிகழ்த்துகை | கலை புறவயமானது/முற்றுக்பெற்ற ஆக்கம் |
படைப்பு/ ஒட்டுமொத்தப்படுத்தல் | சிதைவு/ கட்டுடைப்பு |
ஒன்றிணைவு | முரண்படல் |
இருப்பு | இன்மை |
மையப்படுத்தல் | சிதறடித்தல் |
வகைமை/ எல்லைப்படுத்தப்பட்டது | பிரதி பரஸ்பரம் சார்ந்திருத்தல் |
பொருண்மை சார்ந்தது | அலங்காரமானது |
உருவகம் | ஆகுபெயர் |
விருப்பத் தேர்வு | பலவற்றின் கலவை |
வேர்/ ஆழம் | மேல்பரப்பு |
விளக்கவுரை/ வாசிப்பு | எதிர்-விளக்கவுரை |
குறிப்பீடு | குறிப்பான் |
கதையாடல் | எதிர்க்கதையாடல் |
தேர்ச்சியான சொற்கோவை | சாதாரணமாக புழங்கும் சொற்கள் |
அறிகுறி | விழைவு |
பௌதீக அதீதம் | முரண்நகை |
உறுதிப்பாடு | உறுதியற்ற தன்மை |
அவர் உருவாக்கிய இந்த இரட்டை எதிர்நிலை அட்டவணை நவீனத்துவத்துக்கும், பின்-நவீனத்துவத்துக்குமிடையிலான வேறுபாட்டினைத் தெளிவாக முன்வைப்பதோடு எது பின்-நவீன இலக்கியம் என்பதை ஒரு வாசகன் இலகுவில் அடையாளங் கண்டுகொள்வதற்கும், ஒரு எழுத்தாளன் பின்-நவீனப் பிரதிகளை உருவாக்குவதற்கும் அது மிகவும் உதவியாக அமைந்திருக்கிறது. இந்த அட்டவணையில் பின்-நவீனத்துவப் பண்புகளாக குறிப்பிடப்பட்டுள்ளவை தமிழ்ச் சூழலில் ரமேஷ்:பிரேம், தமிழவன், எம்.ஜி. சுரேஷ், எம்.டி. முத்துக்குமாரசாமி போன்றவர்களின் புனைவெழுத்துகளில் வெளிப்பட்டு வருகிறது.
இந்த இரட்டை எதிர்நிலை அட்டவணை மொழியியல், இலக்கியக் கோட்பாடு, தத்துவம், மானுடவியல், உளப்பகுப்பாய்வு, அரசியல் விஞ்ஞானம் மற்றும் இறையியல் போன்ற துறைகளிலும் கூட கவனப்படுத்தப்பட்டு வருகிறது.
பின்நவீனத்துவக் கோட்பாடுகளை மேலும் மக்கள்மயப்படுத்துவதில் அக்கறை எடுத்துக்கொண்ட இஹாப் ஹாஸன் புதிய சொற்களை உருவாக்கவும் செய்தார்.
“ஒரு தடவை பின்–நவீனத்துவத்தின் சிறப்பியல்புகள் அல்லது தூண்டு விசை அல்லது பாணி பற்றி விபரிக்கும் போது நான் ‘indeterminance’ (உறுதியற்ற தன்மை) எனும் சொல்லை உருவாக்கினேன். இது ஒரு போதாமையான விபரணமாகவே இருந்தது. ஏனெனில், பூகோள அரசியல் சூழலில், பின்–நவீனத்துவமானது மேற்கத்திய கலாசாரங்களில் மட்டுமன்றி, ஒவ்வொரு வகையினதும் (கலாசாரத்தினதும்) மையங்களுக்கும் விளிம்புகளுக்கும், விளிம்புகளுக்கும் விளிம்புகளுக்கும், மையங்களுக்கும் மையங்களுக்கும், இன்மைகளுக்கும் இன்மைகளுக்குமிடையிலான புதிய உறவுகளிலும் தொடர்புபட்டது. இது உலகமயமாக்கல்/ உள்ளூர்மயமாக்கலின் சிக்கலான மற்றும் புதிய சொற்றொடாரியல் ஆகும்“.
என்று அவர் தனது நேர்காணலொன்றில் குறிப்பிடுகிறார். பின்நவீனத்துவத்தின் இயல்பு பற்றி விபரிக்கும் போது அவர் உருவாக்கிய ‘indeterminance’ எனும் சொல் ஆங்கிலத்திற்கு ஒரு புதிய வரவாகவும், பின்-நவீனக் கோட்பாட்டின் மைய ஆன்மாவையே விபரித்துவிடுவதாகவும் இருந்தது.
பின்-நவீனத்துவம் குறித்து விபரிக்கையில் இஹாப் ஹாஸன் உருவாக்கிய இந்த ‘indeterminancy’ எனும் பதமானது பின்நவீனக் கோட்பாட்டின் முக்கிய போக்குகளான நிச்சயமற்ற அர்த்தம் (ambiguity), தொடரறு நிலை (discontinuity) பன்மைத்துவம் (pluralism), தற்செயல் தன்மை (randomness), கலகம் (revolt) நெறிபிறழ்வு ( perversion), சிதைவாக்கம் (deformation) போன்றவற்றுக்கு ஒரு கருத்தியல் வலுவை வழங்கியது.
அநேகமாக தமிழ்ச் சூழலில் பின்-நவீனப் படைப்பாளிகளின் புனைவெழுத்துகளில் இந்த குணாம்சங்கள் சில படைப்புகளில் ஓரளவும், சில படைப்புகளில் முழுமையாகவும் உள்வாங்கப்பட்டிருக்கின்றன. இந்தக் கட்டுரைகூட பின்நவீனம் குறித்த அவரது முழுக் கருத்தியலையும் கவனத்திற் கொள்ளவில்லை. இக்கட்டுரையின் இரண்டாம் பாகத்தில்தான் அது குறித்து எழுத முடியும்.
குறிப்பு: பின்-நவீனக் கோட்பாட்டுக்கான இஹாப் ஹாஸனின் முழுமையான பங்களிப்புக்காகவே அவரது மரணத்தை ஒட்டி இரங்கல் செய்தி வெளியிட்ட nytimes.org எனும் இணையத் தளம் ‘Father of postmodernism dies at 89’ என இரங்கல் குறிப்பு வெளியிட்டது.
One comment