1
கடிகாரத்துடன் அவள் நடத்தும் உரையாடல்கள் மிகச் சுவாரசியமானவை
அதுவொரு இயந்திரம் என அவளுக்கு தெரிவதேயில்லை
என்னிடம் சொல்ல வேண்டிய ரகசியங்களையெல்லாம் அதனிடம் சொல்லிக்கொண்டிருப்பாள்
நான் இருப்பதே அவளுக்கு மறந்து போய்விடும்
2
என்னிடம் எதுவும் பேசாத உன்னால் இப்போது என் நாக்குக்கு டயரி எழுதும் பழக்கம் வந்துவிட்டது போலும்
அது எழுதுகிறது
எழுதிக்கொண்டே இருக்கிறது
சின்னஞ்சிறு துயரத்தின் மீது
சின்னஞ்சிறு சந்தோஷங்களின் மீது
3
மின்விசிறிக்கு காலை வணக்கம் சொல்லும் பெண்ணே,
என்னிடமும் பேசு
தலையணையிடம் காபியா டீயா எனக் கேட்டுச்செல்லும் பெண்ணே,
என்னிடமும் பேசு
சுவிட்ச்களுடன் நாட்டுநடப்பை விவாதிக்கும் பெண்ணே,
என்னிடமும் பேசு
இயந்திரங்களுடன் பேசும் பெண்ணே,
என்னிடமும் பேசு
ஏதாவது பேசு
பேசு
பேசு
பேசு
•••