உன்னிடம் சிறிது காலம்
சிறைப்பட்டிருந்தேன்
என்னை மீட்டுக்கொள்ள
எந்தப் பிரயாசையும் இருந்ததில்லை
நான் அதை விரும்பி இருக்கவுமில்லை
எனது சாளரங்களில் அப்போதெல்லாம்
நிலவு போல் உன் முகம் தெரிந்தது
என் சாளரங்களில் ஒளியேற்றிய
நிலவை மூடிச் சென்றது மேகம்
சாளரத்தின் கதவு போல!
எனக்குள்ளிருந்த இருள் குறித்த ஏக்கங்களை
ஒளியேற்றிக் கலைத்த
மாயச்சிறையிலிருந்து
யாரது மாயக்கரங்கள் என்னை மீட்டன?
மௌனமாய் இருக்கவும்
மிக அமைதியாக என்னை வெளிப்படுத்திக்கொள்ளவும்
என் சாளரங்கள் சாத்தப்பட்ட பின்
நான் பழகிக் கொண்டேன்
உன்னைப் போல் எப்போதும்
நிலவை இரசிப்பதற்காக
நான் இருட்டை இன்னும் நேசித்துக்கொண்டே
இருக்கிறேன்.
இருள் எத்துணை அழகு!