உலர்ந்திட்ட ஒருசொட்டு கிருபை
எண்ணிறந்த கபாலங்களுக்கப்பால்
கல்வாரியில் ஒன்றுமில்லை
களைத்திட்ட மிகப்பெரும் மக்கட்திரள்
கருத்தியல்களின் உன்னத
கல்லறைகளுக்கப்பால் மெக்கா
வாரணாசி இரண்டுமில்லை
இரகசிய பன்னாட்டு இராணுவ தளமியங்கி
போதிமரத்தடியும் எல்லாமிருக்க
வெறிச்சிட்டதொரு கல்லறையாகிட
யப்பப்பா இதென்ன இழவென்று
நீண்ட நின் விழிப்பொன்றிலிருந்து
நான் விழித்திட்ட தருணத்தில்
யப்பப்பா இதென்ன களைப்பென்று
இதுகாறும் முறித்திராத சோம்பல் முறித்து
வேதாகமம் நாத்திகம் பௌதிகவாதம்
ஆத்திகம் வேதாந்தம் கடந்ததிட்டவொரு
சின்னஞ்சிறு மக்கட்திரளொன்று
உருப்படியாக ஏதாவதுண்டெனில்
இவ்வியாபித்துள்ள பிராமணியமெனும்
வினோத சிக்குப்பின்னலுக்கப்பாலன்றி அது
வேறெங்குமிருந்திட வாய்ப்பேயில்லையென்று
தயக்கமேதுமின்றி ஆளரவமற்ற அதற்கப்பால்
அடிமேலடி யெடுத்து பொடிநடை போடுகின்றது