நிழல்கள்
வான் தொட எத்தனிக்கும்
பனையினடியில் வேறெதுக்கோ
ஒதுங்கி நிழலைத் தேடியவனின்
நிழலில் ஒதுங்கியது
மரப்பல்லியொன்று
நிழலென்று மரப்பல்லிக்கும்
ஒன்றுண்டு போலும்
அருகினில் எறும்பும்
தனது நிழலை இழுத்தபடி
ஊர்ந்து வருகிறது
தூரத்தில் நீள்கழுத்தில்
தலையசையாத் தலையாக
பனையின் நிழல்
அத்தினம் அரைவட்டமிட்டு
கதிரவனை உச்சந்தலைக்கு
கொணரும் கணம் வரை
எவரும் காத்திருக்கவில்லை
அவரவர் நிழல்களோடு
…
நிலக்காட்சி
அரை நூற்றாண்டுக்கு இருமுறை நிகழும் நிலக்காட்சியில்
விற்போர் நிலம் விற்பனைக்கென்று துடிக்கும்
மெலிந்து நலிந்த உடல்களைக் கிடத்தியிருக்க
நன்றாய் வளர்ந்த வாங்குவோர் நிலம் விற்பனைக்கல்லவென்று
உடலை நிறுத்தியிருந்த இவனைச் சூழ்ந்திருக்கத் தேவையில்லை
நா நுனியில் வசைகள் வரிசையில் நெருக்க
இவன் தும்மினால் நாசியில் ரீங்கரிக்கும் தேனீ
சொரிந்தால் தலையை வட்டமிடும் சிட்டு
ரத்தநாளத்திலிருந்தெழும் செடி கொடிகள்
முதுகுத்தண்டிலிருந்தெழும் தேக்குகள்
எலும்பிலிருந்தெழும் அத்தி மரங்கள்
நரம்பிலிருந்தெழும் புற்கள்
நெளியும் கம்பளிப்புழுக்களும்
மினுக்கும் மின்மினிகளும்
இவையும் இன்னபிறவும் யாவும் எவையும்
குளிரூட்டியே கதியெனக் கிடக்கும் மஞ்சள் பார்வைக்குத்
தத்தம் இயல்பில் புலப்படாது போனதில் ஆச்சரியமொன்று மில்லை
அதிலும் திமிர்ந்து நிமிர்ந்த உடலில் முளைவிடும் பச்சையக்
குருத்துகள் அநியாயத்துக்கு மயக்கமளிப்பவை
இவன் விசிலடித்துக்
காளையாய் நின்றான்
விற்போரும் வாங்குவோரும்
பிரமை விலகி
மும்முறை திடுக்கிட்டனர்
எல்லாம்
சட்டெனத்
துலங்கினாற்போல்