குளியலறைக்குள் நுழைவதற்கு முன் வெளியிலிருந்து எட்டிப் பார்த்தான். இந்த வீட்டிற்கு குடிவந்த முதல் வாரம், குளியலறையில் பக்கெட்டின் அருகில் உயிருடன் இருக்கிறதா இல்லையா என்பது சொல்ல முடியாத பருத்த தவளையொன்று படுத்துக் கிடந்தது. அப்பாவிடம் சொல்லி அதை விலக்கியபின் அடுத்த நாள் மதியம், ‘ரெண்டு நாளாச்சு, சம்மர்ல குளிக்காம இருந்தா வேர்க்குரு இன்னும் அதிகமாகும், ஸ்கின் டிசீஸ்தான் வரும்’ என்று அம்மா சொன்னபின்தான் குளிக்கச் சென்றான். அதன்பின் உள்ளே எந்த ஜந்துவையும் பார்த்ததில்லை. முதலில் கால்களிலும்,வயிற்றுப் பகுதியிலும் நீரை ஊற்றினான். குளிருக்கு உடல் பழகியது. பின் மேலுடம்பில். ‘நாங்களும் இங்கயே வந்துட்டோம்டா’ என்று சத்தம் போட்டுக் கொண்டே வந்த வினோத்தும், ப்ரித்வியும் வெளியே நின்று பேசிக்கொண்டிருக்க, நுரைத்திருந்த உடம்பில் நீரை ஊற்றியபின் உடம்பைத் துவட்டி விட்டு துண்டைக் கட்டிக் கொண்டு போர்ஷனுள் நுழைந்தான். சின்ன ஹாலுக்கு ஒரு புறம் பாத்திரம் வைக்கும் அறை, மறுபுறம் இரண்டு பேர் நிற்கக்கூடிய சமையலறை மற்றும் துணிகளும் மற்ற சாமான்கள் வைத்திருக்கும் அறை. அங்கு உடை மாற்றி வெளியே வந்தபோது ‘தங்கப்பழம் கடை அளவுக்கு ப்ரொவிஷன்ஸ் க்வாலிட்டி இங்க இல்ல’ என்று அப்பா சொல்ல, தக்காளி நறுக்கிக் கொண்டிருந்த அம்மா எதுவும் பேசவில்லை.
மாம்பலம் கிரி ஸ்ட்ரீட்டில் வசித்தபோது தங்கப்பழத்திடம்தான் மளிகை சாமான்கள் வாங்குவது, அடுத்த போர்ஷன் மாமியும் அங்குதான். முதலில் ‘தங்கப்பயம்’ என்று இவன் அழைத்தது திருத்தப்பட, பின் ‘தங்கப்பயம்னு சொல்லக் கூடாது, தங்கப்பழம்னு சொல்லணும்’ என்று கூறியதை இப்போதும் அம்மா நினைவு கூர்கிறாள். இந்த ஏப்ரல் மாதம் ரெண்டு முறை வந்து தவணை பாக்கியை கேட்டுக் கொண்டிருந்த கடைப்பையன், வீடு காலி செய்வதற்கு முதல் நாள் மாலைகூட வந்திருந்தான். அடுத்த நாள் ஞாயிறு மதியம் வீட்டைக் காலி செய்து, பொருட்களை முதலில் வண்டியில் அனுப்பி, ரெயில் நிலையத்திற்கு ஆட்டோவில் செல்கையில், ‘நா சொன்னேன்ல, சண்டே மத்தியானம் கடை கெடையாதுன்னு’ என்று அம்மாவிடம் அப்பா சொன்னதற்கு அம்மா எந்த பதிலும் சொல்லவில்லை. அதற்கு முன்பு திருவண்ணாமலைக்குச் செல்லும் 122ம், மாம்பலம் வழியே செல்லும் 5Bம் மட்டும் அறிந்திருந்தவன், தாம்பரம் வரை ரெயிலில் சென்று, அங்கிருந்து டி-சிக்ஸ்ட்டியில் செங்கல்பட்டிற்கு வந்தான். வண்டி வழியில் நின்ற ஒரு நிறுத்தத்தில், ‘இதான் சிங்கப்பெருமாள் கோவில் இங்கதான் ஸ்கூல் இருக்கு. நரசிம்மர் சக்தி வாய்ந்தவர் கும்புட்டுக்கோ’ என்றாள் அம்மா. அம்மா வேலை செய்யும் பள்ளி இந்த ஊரில்தான். பஸ்ஸிலிருந்து நரசிம்மரை பார்க்க முடியவில்லை, கும்பிட்டுக் கொண்டான்.
மஞ்சள் நிறப் ‘பக்கிள்’ பையில் புத்தகங்களை எடுத்து வைத்துக் கொண்டான். அருகில் இருந்த தகர பெட்டியில் ‘விக்னேஷ் லெண்டிங் லைப்ரரியின்’ மூன்று மூன்று கதைகளாக பயின்ட் செய்யப்பட்ட ரெண்டு ஆஸ்ட்ரிக்ஸ் மற்றும் ஒரு டின்டின் நூல்கள். அங்கிருந்து அப்பாவும் அம்மாவும் படிக்கும் வேறு இரு நூல்கள். மாம்பலத்திலிருந்து கிளம்புவதற்கு ஏழெட்டு நாட்களுக்கு முன் இறுதியாகச் சென்று எடுத்து வந்தவை. வினோத்தும், ப்ரித்வியும் ஏழரைக்கெல்லாம் ரிக்ஷாவில் பள்ளிக்குக் கிளம்பி இருப்பார்கள். இங்கு ஐந்து நிமிடத்திற்கும் குறைவான நடை தூரத்தில்தான்பள்ளி. ஒன்பது இருபதுக்கு கிளம்பினால்கூடச் சென்று விடலாம்.
எட்டே காலுக்கு அம்மா கிளம்பும் போது ‘லஞ்ச் எடுத்து வெச்சிருக்கேன். அப்பா ஸ்கூலுக்கு கூட்டிட்டுப் போவா’ என்று சொல்ல ‘நோ மா ஐ வில் கோ மைசெல்ப்’ என்றான்.
‘பர்ஸ்ட் டே இல்லடா, இன்னிக்கு மட்டும் அப்பா வரட்டும்’
‘வேணாம்மா, த்ரீ பி செக்ஷன் ஐ நோ நா போயிப்பேன்’.
அம்மா அப்பாவை பார்க்க பேப்பரை படித்துக் கொண்டிருந்தவர் எதுவும் சொல்லவில்லை.
‘ரோட்ட க்ராஸ் பண்ணணும்டா, அப்பாவோடையே போ ‘ என்றவளின் வலது மணிக்கட்டை பற்றிக் கொண்டே ‘சின்ன ரோட் தானம்மா’ என்று சொல்ல, ‘அடமென்ட், பாத்து போ. கம் ஸ்ட்ரெயிட் ஆப்டர் ஸ்கூல். தெரியாத பெரியவங்க யாரவது கூப்ட்டா டோண்ட் டாக்’ என்று விட்டு கிளம்ப வீட்டின் பின்புறம் சென்றான். சுவற்றை ஒட்டிய பெரிய காலி மனை. கற்களும், மூன்று தென்னை மரங்களும் இருந்தாலும் இந்த மனையில் கிரிக்கெட் விளையாட முடியும். கிரி ஸ்ட்ரீட்டில் இவன் வீட்டிற்கு இரு வீடு தள்ளி வினோத் குடியிருந்த இடத்திற்கு முன்புறம் இதை விட மிகவும் சிறிய மனை உண்டு, அதில் செஞ்சுரி அடிப்பதெல்லாம் சாதாரணம்.
அதன் மறுமுனையில் அடுத்த தெருவுடன் இணையும் இடத்தில் இரு சின்ன ஓட்டு வீடுகளில் ஒன்றினுள் நுழைந்தவனுக்கும், அதன் வாசலில் இருந்த கயிற்றில் துண்டை உலர்த்தப் போட்டுக் கொண்டிருந்தவனுக்கும் இவன் வயதுதான் இருக்கும். இவன் சேர்ந்திருக்கும் பள்ளியில் படிப்பவர்களாக, ஒரே வகுப்பாகக்கூட இருக்கலாம். மாடியில் வசிக்கும் வீட்டு உரிமையாளரின் மகனும் இவனை விட சிறியவன். மற்ற இரண்டு போர்ஷன்களில் ஒன்றில் கைக்குழந்தை. இங்கு வந்தபின் தெரு முனையை அடுத்திருக்கும் கடைக்குச் சில முறை சென்றிருக்கிறான். பள்ளிச் சீருடை எடுக்க பஜாருக்கு ஒரு முறை. இந்த மாதம் முதல் தேதி மாலை அம்மாவுடன் ரெயில் நிலையத்திற்கு சென்று அங்கிருக்கும் கடையில் ‘அமர் சித்ர கதா’ வாங்கி வந்தான்.
இங்கு வந்தபின் அப்பா அம்மா தவிர யாரிடமும் பேசியதில்லை. ஒன்று வீட்டில், அல்லது இங்கு வந்து அமர்ந்திருப்பது. மனையின் வலது புறம் பாழடைந்த மண்டபம், அதையடுத்து மாட்டுக் கொட்டகை. அங்கிருந்துதான் வீட்டிற்கு பால் வருகிறது. மனையில் மாடுகள் போடும் சாணத்தை பத்து மணிக்கு மேல் அள்ளிச் செல்வார் மாட்டுக்காரர். திருவண்ணமலையில் தாத்தி வீட்டிற்கு
எதிரேதான் பால்காரர் சந்திரன் வீடு, பால் வரத் தாமதமாகும் நாட்களில் சாணி வாசம் நிறைத்திருக்கும் இடத்திற்குச் சென்று இவனே வாங்கி வருவான்.
ஒன்பதே காலுக்குக் கிளம்பினான். வீட்டின் கீழ்த் தளத்தில் உள்ள மூன்று போர்ஷன்களில் கடைசி இவனுடையது. மற்ற இரண்டைத் தாண்டி,குறுகிய நீளமான சந்தொன்றில் நுழைந்து அதைக் கடந்தால் தெரு. இருட்டான பின் கடைக்குச் செல்வதில்லை. தெருமுனையில் வலது புறம் திரும்பினான். நடந்தும், சைக்கிளிலும்பள்ளிக்குச் சென்று கொண்டிருப்பவர்கள். மெட்ராஸில் ‘தாத்தா’ என்று மட்டுமே அதில் செல்பவர்கள் அழைக்கும் முதியவர் ஓட்டும் ரிக்க்ஷாவில் பள்ளிக்குச் செல்வது. சென்ற வருட நவம்பரில் பள்ளிக்குச் சென்று கொண்டிருக்கும் போது சின்னமேட்டில் வண்டி ஏறிக் குலுங்க ஓரத்தில் உட்கார்ந்திருந்தவன் கீழே விழுந்து, அழுதபடி பள்ளிக்கு வந்தவனை ஸ்டாப் ரூமில் அமர வைத்த ராதா மிஸ் சமாதானப்படுத்தியபடியே இருந்தார். அன்று மாலை ஆறு மணியளவில் அடர்த்தியாக மழை பெய்து கொண்டிருக்க வீட்டிற்கு வந்து ‘மன்னிச்சுடுமா, மன்னிச்சுடுமா, தப்பாயிடுச்சு’ என்று குறுகிய உடலில் கைகூப்பியபடி சொல்லி கொண்டிருந்த தாத்தாவை சமாதானப்படுத்தி அனுப்பிவிட்டு வந்த அப்பா ‘ட்ரன்க்’ என்றார். இதுவரை வீட்டை விட்டு வெளியே பஜாருக்குச் சென்று வந்த ஒன்றிரண்டு முறையும் ரிக்க்ஷா தென்படவில்லை. ஊருக்கு வந்த அன்று பேருந்து நிலையத்தில் இருந்து குதிரை வண்டியில்தான் வீட்டிற்கு வந்தார்கள். வண்டியின் படிக்கட்டில் கால் வைத்து தடுமாறியபடி உள்ளே ஏறியவன், ஓட்டுபவர் பின்னால் மிக அருகில் அமர்ந்து குதிரையையே பார்த்து கொண்டு வந்தான்.
‘வாட் இஸ் தட் அரவுண்ட் இட்ஸ் அய்ஸ்’
‘டு மேக் இட் கோ இன் எ ஸ்ட்ரைட் லைன்’
குலுங்கிச் செல்லும் வண்டியில் அவ்வப்போது அதன் உட்புறத்தை பிடித்து கொள்ள வேண்டியிருந்தது. விரிக்கப்பட்டிருந்த கம்பளத்தின் அடியில் இருந்த வைக்கோலின் உறுத்தல். திருவண்ணாமலைல சந்திரன் வீட்ல இருக்கும்மா இந்த ஸ்மெல்’.
‘சும்மாரு’ முழங்கையை தட்டினார் அம்மா.
ஏழெட்டு வீடுகளையும் கடையையும் தாண்டியதும் சாலை பிரியும் இடத்தில் இடது புறம் திரும்பி பத்தடி நடந்தால், சாலையின் மறுபுறம் பள்ளி. ரோட்டை கடந்த சிறு கூட்டத்துடன் சேர்ந்து கொண்டு பள்ளியினுள் நுழைந்தவன், உடனேயே இடது புறம் திரும்பி, த்ரீ பியினுள் இருந்த கூட்டத்தை பார்த்தவாரே அதைக் கடந்து தாழ்வாரத்தின் இறுதி வரை, இரண்டாவது, ஒன்றாவது வகுப்பறைகளைப் பார்த்தபடி நடந்து சென்றான். அதையடுத்து இருந்த படிக்கட்டுக்களில் ஏறிக் கொண்டிருந்தவர்களில் பலர் பேண்ட் அணிந்திருந்தார்கள். திரும்பி வந்து தன் வகுப்பறை
வாசலில் நின்றிருந்தவனை கவனிக்காமல் புதிதாக உள்ளே நுழைந்து கொண்டும், வெளியேறிக் கொண்டுமிருந்தார்கள்.
மணி அடித்ததும் வகுப்பறை காலியாக ஆரம்பிக்க, உள்ளே நுழைந்தவன், அறையின் நுழைவாயில் பக்கமிருந்த மூன்று பேர் அமரும் இருக்கைகளில், இரண்டு புத்தகப் பை மட்டுமே இருந்த கடைசி இருக்கைக்கு முன்பிருந்த பெஞ்ச்சில் தன் பையை வைத்து விட்டு, வெளியேறிக் கொண்டிருந்த மற்றொரு மாணவனின் பின்னால் சென்று மைதானத்தில் ஸ்டேஜிற்கு முன் குழும ஆரம்பித்தவர்களில் இவனுடைய வகுப்பு வரிசையில் இணைந்து கொண்டான். அனைவரும் அடர் நீல நிற டைரி வைத்திருந்தார்கள். ‘அவர் பாதர் இன் ஹெவன்’ என்று ஆரம்பிக்கும் இறைவணக்கத்தில் ‘யுவர் கிங்டம் கம்’, ‘யுவர் வில் பி டன்’ போன்ற சில வரிகள் புரிந்தன. அதற்கும், பின் அனைவரும் சேர்ந்து -சிலர் டைரியை பார்த்தபடி – பாடிய இறை -‘வாக்கிங் வித் தி லார்ட்’ என்று ஆரம்பித்த- பாடலுக்கும் முணுமுணுப்பது போல் வாயசைத்தான். பள்ளிப் புத்தகங்களுடன் தந்திருந்த டைரி விடுப்பு எடுப்பதை குறிக்க தேவைப்படும் என்றுதான் அம்மா சொல்லி இருந்தாள்.
அசெம்ப்ளி முடிந்து வகுப்பறைக்குள் நுழைந்து தன் இடத்திற்குச் சென்றவனை அங்கு அமர்ந்திருந்த இருவரில் ஒருவன் ‘பெயிலா’என்று கேட்டதற்கு பதில் சொல்வதற்கு முன் ஆசிரியர் உள்ளே நுழைந்தார். வருகைப் பதிவேட்டில் முதலாவதாக இவன். இவனுக்கு அடுத்திருந்தவன் கார்த்தி, பெஞ்ச்சின் மறுமுனையில் முரளி. முன்பு படித்த பள்ளியில் ராதா மிஸ் ஆங்கில பீரியட் ஆரம்பித்திருப்பார். அடர் வண்ணச் சேலைகளில் பள்ளிக்கும் வருபவர், தாத்தியை விடச் சிவந்த நிறம். என்ன குறும்பு செய்தாலும் கடிந்து கொள்ள மாட்டார். முதலாம் வகுப்பு படிக்கும் போது இன்டர்வெல்லில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தவன் தனக்கு மிகவும் பிடித்த ஆசிரியை ராதா மிஸ்தான், அவர்தான் மிகவும் அழகு என்று சொல்லிய இரண்டொரு நாட்களுக்குப் பின் கழித்து மதிய உணவு இடைவேளையின்போது ஸ்டாப் ரூமிற்கு இவனை வரச் சொன்னதாக மகேஷ் தெரிவித்தான். உண்டு முடித்து அரைவட்டமாக அமர்ந்திருந்த ஆறேழு ஆசிரியைகளில், வனிதா மிஸ் ‘யூ லைக் ஒன்லி ராதா மிஸ்’ என்று இவன் நுழைந்தவுடன் கேட்க எதுவும் சொல்லாமல் இருந்தான். ‘ஆர் வீ நாட் ப்யுடிபுல்’ என்று மீண்டும் அவர் கேட்டு முடிப்பதற்குள் ‘நோ மிஸ்’ என்று இவன் சொன்னதற்கு அறையில் சிரிப்பு. ‘வாட் நோ’ என்று மீண்டும் கேட்டவரின் பார்வையைத் தவிர்த்து முகத்தை திருப்பியவன் முன் நாற்காலியின் வலது புறம் சாய்ந்து உள்ளங்கையில் தாடையை ஏந்தியபடி ராதா மிஸ். தலையை குனிந்து கொண்டான். ‘அப்போ யூ டோன்ட் லைக் அஸ் இல்லையா ‘ இப்போது சந்திரா மிஸ். ‘யார் நல்லா க்ளாஸ் சொல்லித் தருவாங்க’. அமைதியாக இருந்தான்.
‘அப்போ ஹி நீட் நாட் கம் டு அவர் க்ளாசஸ்’, ‘கரெக்ட்’, தொடர் குரல்கள். ‘ஸாரி மிஸ்’ என்றபடி நிமிர்ந்தவனை ராதா மிஸ் கையசைத்து அழைக்க அருகில் சென்றவனை மடியில் அமர்த்திக் கொண்டார். ‘ஸாரி மிஸ்’ என்று மீண்டும் ஆரம்பித்தவனை ‘டோண்ட் பி அப்ரைட், சும்மா சொல்றாங்க’ என்று இடைமறித்தவரின் காதில் இருந்த ஜிமிக்கியை பார்த்துக் கொண்டிருந்தான்.
இரண்டாவது பீரியட் முடிந்ததும் வகுப்பிலிருந்து வெளியேற ஆரம்பித்தவர்களில் இருந்த முரளியும், கார்த்தியும் இவனிடம் திரும்பி ‘பத்து நிமிஷம் இண்டர்வல், வரியா’ என்று அழைக்க அவர்களுடன் சென்றான். சிறுநீர் கழித்துவிட்டு மைதானத்திற்கு சென்றவுடன் ‘ந்யு அட்மிஷன்தான, எங்க படிச்ச முன்னாடி?’ என்ற கேட்ட கார்த்திக்கு பள்ளியின் பெயரைச் சொன்னான்.
‘எங்க இருக்கு’.
‘அட் மெட்ராஸ், கேகே நகர் ‘.
‘அப்ப செங்கல்பட்டுக்கே புதுசா’,
‘ எஸ், வி கேம் லாஸ்ட் மந்த்’.
‘என்னடா இங்கிலீஷ்லயே பேசற’ என்ற முரளியிடம் ‘இன் மை… அந்த ஸ்கூல்ல..’
‘தமிழ் பேசத் தெரியும்ல’
‘தெரியும் தெரியும்’
‘வீடு எங்கடா’ என்றான் கார்த்தி.
‘பிக் மணியக்கார ஸ்ட்ரீட்’
‘நான் சின்ன மணியக்காரத் தெருடா, அடுத்த தெருதான்’
‘ஒகே, ஒன் வீடு எங்க’ என்று முரளியிடம் கேட்க அவன் ‘என்.ஜி.ஓ நகர்.’
‘அப்பா என்ன பண்றார்’ என்றான்.
‘ஆபிஸர்’
‘எங்கடா’
‘ஆபிஸ்’ என்றிவன் சொல்லும்போது மணி அடிக்க வகுப்பறைக்குச் சென்றார்கள்.
உணவு இடைவேளையில் ‘வாடா போலாம்’ என்றான் கார்த்தி.
‘இல்ல கார்த்தி, எடுத்துட்டு வந்துட்டேன்’
‘வீட்ல போய் சாப்டலையா, பக்கத்துலதான வீடு இருக்கு, நா தினோம் போய் சாப்ட்டு ஒன்றரைக்கெல்லாம் வந்துடுவேன் முரளி இங்கதான் சாப்டுவான்’ என்றுவிட்டு கிளம்பினான்.
‘ஹவுஸ் ரொம்ப டிஸ்டன்ஸ்ஸா முரளி’ மைதானத்தில், ஸ்டேஜின் அருகே சாப்பிட உட்காரும்போது கேட்டான்.
‘ரொம்ப. அர மணி நேரம் நடந்து போணும்’.
ஸ்டேஜை ஒட்டி இருந்த கேட்டின் வழியே வந்துகொண்டிருந்த மாணவர்களைச் சுட்டி, ‘அங்க பின்னாடி என்ன க்ளாஸ், அந்த பசங்க ஷூஸ்,டைலாம் போட்டுக்கல’ என்று கேட்டான்.
‘அது தமிழ் மீடியம், அஞ்சாவது வரைக்கும். நமக்கு பத்தாவது வரைக்கும் இங்க’.
மேல் தளங்களை சுட்டியபடி ‘ஹை ஸ்கூல் க்ளாஸ் அங்க. உருளைக்கிழங்காடா, எடுத்துக்கட்டுமா’
‘எடுத்துக்க முரளி’ என்று அவனிடம் நீட்டியபடி ‘அப்ப லெவன்த்லேந்து’, என்றிவன் கேட்க, ‘அதெல்லாம் மெயின் ஸ்கூல்ல. நத்தம் பக்கம் இருக்கு. இது பிராஞ்ச் ஸ்கூல்.’
‘அது எங்க, தூரமா?’
‘பழைய பஸ்டேண்ட் தாண்டி போணும், தூரம்தான். சிக்ஸ்த்லேந்து தமிழ் மீடியம், அப்பறம் பதினொண்ணு பண்ணெண்டு எல்லாம் அங்கதான்’
டிபன் பாக்ஸ் கழுவி வகுப்பறையில் வைத்து வெளியே வரும்போது எதிரே கார்த்தி. ‘பெரிய மணியக்காரத் தெருல எங்கடா வீடு’
‘நம்ம ஸ்கூல் ரோட க்ராஸ் பண்ணிப் போனா இன்னொரு ஸ்கூல் இருக்குல, அதுக்கு ஸ்ட்ரெயிட்டா இருக்கற ரோட்ல, மிடில்ல இருக்கு’
‘டப்பா இஸ்கூலு, அப்ப நான் ஒன் வீட்டத் தாண்டிதான்டா என் வீட்டுக்குப் போவேன். ஒண்ணாவே போலாம் ‘
‘பாய்ஸ் அன்ட் கர்ல்ஸ் கம் அவுட் டு ப்ளே’ இறுதி பீரியட்டில் வழுக்கை மண்டையில் கொஞ்சம் நரைத்த முடிகள், நெற்றியில் குங்குமம் இட்டிருக்கும் ஸாருடன் அனைவரும் குரலெழுப்பிக் கொண்டிருக்க, விலாவில் தட்டிய கார்த்தி, ‘இங்க பாரு’ என்றான். கையிலிருந்த ரப்பரை தலையில் தேய்த்தபின், அதைப் பாட நூலில் இருந்த சித்திரத்தின் முகத்தில் வைத்து அழுத்தி எடுத்து இவனிடம் நீட்டினான். ரப்பரில் அந்த முகத்தின் அச்சு.
‘இது ஒனக்கு தெரியுமா’என்று கேட்டதற்கு இல்லையென்று தலையாட்டினான்.
‘நீ பண்ணு’
வாங்கித் தேய்த்தான். ‘நல்லா ஸ்ட்ராங்கா தேய்டா’. மற்றொரு முகத்தின் மீது வைத்தழுத்தி எடுத்தபோது ரப்பரில், சாயம் போனது போல் முகத்தின் அச்சு. ‘நல்லா தேச்சு அப்பறம் ஸ்ட்ராங்கா அழுத்தணும்டா’
ஸார் தொடர்ந்து சிறுவர், சிறுமியரை விளையாட அழைத்துக் கொண்டிருக்க மலங்கழிக்கும் உந்துதல். முதலாவது படிக்கும்போதும் இதே போல் நடக்க, மிஸ்ஸிடம் எதுவும் சொல்லாமல் பின்புற அழுத்தத்தை அடக்கிக் கொண்டிருந்தான். ‘மிஸ் மிஸ்’ பின்பெஞ்ச்சில் இருந்து மகேஷின் குரல். ‘இங்க பாருங்க மிஸ்’. காலில் மலம் வழிந்திருந்தது. அன்று புதன், முழு வெள்ளை சீருடை. பெஞ்ச்சுக்கள் அகற்றப்பட்டு, ஆயாவிடம் ஒப்படைக்கப்பட்டான். அவர் துவைத்துத் தந்த, இன்னும் ஈரம் காயாத டிராயரை அணிந்து கொண்டு கிளம்பியவனை ‘டோண்ட் கம் நியர்’ என்று ரிக்க்ஷாவில் செல்லும் போது வினோத்தும், ப்ருத்வியும் கிண்டல் செய்தார்கள்.
‘என்னாச்சு கைய நீவி விட்டுக்கிட்டே இருக்க’ என்ற கார்த்தியிடம் ‘பாத்ரூம் போணும்டா’ என்றான்.
‘அடக்கிக்கடா இன்னும் பதினஞ்சு இருவது நிமிஷம்தான் இருக்கும்’
‘இல்ல கார்த்தி, அது..’
‘டபுள்ஸ்ஸா’
‘ம்ம்ம்’
‘ஸார் இவனுக்கு வாந்தி வருதாம்’ என்று கார்த்தி எழுந்து சொல்ல ‘போ போ, நீயும் போ அவனோட கார்த்தி’ என்றார்.
‘என்னடா இவ்ளோ மெதுவா நடக்கற’
‘முடியலடா’
‘சரி பாத்து வா, தோ வந்தாச்சு, நா இங்க நிக்கறேன்’
வெளியே வந்தவன் ‘ரொம்ப தேங்க்ஸ்டா’ என்றான்.
‘வரேண்டா’ முரளி கிளம்பினான். இவனும் கார்த்தியும் சாலையைக் கடந்தார்கள். ‘இது நாடார் கட, நோட் புக்ஸ், பென்சில் எல்லாம் இங்க
கெடக்கும்’,
‘இங்கதான் நோட்லாம் வாங்கினேன், இது பேரு நாடார் கடையா?’
கடைக்கு எதிர்புறம் இருந்த பள்ளியை சுட்டிக் காட்டி ‘டப்பா ஸ்கூல்ல சாங்காலம், லீவ் நாள்ல வெளையாடலாம்’ என்றான் கார்த்தி.
சிறு சிறு குழுக்களாக விளையாட்டு நடந்து கொண்டிருப்பதை பள்ளியின் திறந்திருந்த கதவு வழியாக பார்த்துக் கொண்டே ‘ஏன் இத டப்பா ஸ்கூல்னு சொல்றாங்க’ என்று இவன் கேட்டதற்கு
தோளைக் குலுக்கினான் கார்த்தி.
‘இங்கதான் இருக்கேன், இந்த சந்துக்குள்ள போனா கடைசி போர்ஷன்’
வீட்டின் முன் நின்றபடி இவன் சொல்ல ‘நேரா போய் ரைட்ல திரும்பி பத்து பண்ணண்டு வீடு தாண்டி என் வீடு, கொஞ்ச நேரம் கழிச்சு வரேன்’ என்றவனை நோக்கி தலையாட்டிவிட்டு சந்தினுள் நுழைந்தான். போர்ஷன் வாசலில் வினோத்தும் ப்ருத்வியும் மற்ற நண்பர்களுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ‘வீ ஆர் ஆல்சோ கோயிங் டு ஸ்டே ஹியர், சேம் ஸ்கூல்’ வேகத்தை அதிகப்படுத்தி சந்தையும், அதையடுத்திருந்த இரண்டு போர்ஷன்களையும் கடந்து போர்ஷனை அடைந்தபோது அம்மா இன்னும் வந்திருக்கவில்லை. ‘காபி குடிக்கறியா?’ என்று அப்பா கேட்டதற்கு வேண்டாமென்று தலையாட்டினான்.
‘ஹவ் வாஸ் ஸ்கூல், தனியா போயிட்டு வந்துட்டியா’ பள்ளியில் இருந்து திரும்பியவுடன் கேட்டார் அம்மா.
‘குட் மா’
‘ப்ரெண்ட்ஸ் கெடச்சாச்சா’
‘எஸ், டூ. ஒன் இஸ் கார்த்தி, நெக்ஸ்ட் ஸ்ட்ரீட் சின்ன மணியக்காரத் தெருல இருக்கான். அனதர் முரளி, என்.ஜி.ஓ நகர்’
‘அதெங்க இருக்கு?’
‘தெரில, ரொம்ப டிஸ்டன்ஸ்ன்னு சொன்னான்’ இவனை அழைக்கும் குரல்.
‘இது கார்த்திமா’
‘உள்ள வாப்பா சின்ன மணியக்காரத் தெருலதான் இருக்கியா’
‘ஆமா’ என்றபடி உள்ளே வந்தவன் அம்மாவிடம் சுவாதீனமாக பேசிக் சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தான். ‘டப்பா ஸ்கூல்ல பசங்க சாயங்காலம் வெளையாடுவாங்கன்னு சொல்றான்மா, போட்டுமா’ என்று இவன் கேட்க ‘ஓகே கோ. தெரு முனைல இருக்கற ஸ்கூல் தானே’ என்றார் அம்மா. சந்தைத் தாண்டி, தெருவிற்கு வந்தார்கள்.
‘அங்க என்ன கேம்ஸ் வெளையாடுவீங்க, க்ரிக்கெட்?’
‘எல்லாமே, கிரிகெட்டு, முதுகு பங்க்சர், கண்ணாம் பூச்சி, அட்டாக் எல்லாம்’
‘முதுகு பங்க்சர்ன்னா’
‘பிளாஸ்டிக் பால்ல முதுகுல அடிக்கறது, நீ வெளையாடினது இல்லையா’
‘நோ, அட்டாக் கூட வெளையாடினது இல்ல’
‘ஒத்தன் தொரத்துவான், மத்தவங்க எல்லாரும் ஓடுவாங்க. அவன் ஒன்ன தொட்டுட்டா நீ அப்படியே அங்கேயே நிக்கணும். அவன் மத்தவங்க, எல்லாரையும் தொட்டப் பின்னதான் நகரணும்’
‘ஓ, எவ்ளோ நேரம்டா நிக்கறது’
டப்பா ஸ்கூலை அடைந்திருந்தார்கள். ‘அட்டாக்’ ஆட்டம். மூன்றாவதாக இவன் பிடிபட்டபின் அடுத்து இன்னுமிருவர். இன்னும் ஓடிக் கொண்டிருக்கும் கார்த்தி ‘ஏண்டா அங்கேயே நிக்கற, போய் ஒக்காரு டா’ என்று சற்றுத் தொலைவில் இருந்து கத்த இவன் சென்றமர்ந்தான். அடுத்து அட்டாக்காகிய கார்த்தி இவன் அமர்ந்திருக்கும் இடத்திற்கு வந்தான்.
‘நீ யாரும் மூவ் பண்ணக் கூடாதுன்னு சொன்னியே’ என்றிவன் கேட்க ‘அதுக்காக அப்படியேவா நிப்ப, அது சும்மா சொல்றது, எல்லாரும் ஒடனேயே வெளில வந்துடுவாங்க ‘ என்றான். வீடு திரும்பும்போது ‘ஒன் வீட்டுக்கு… ‘
‘அப்பறம் கூட்டிட்டுப் போறேன்டா. நாளைக்கு எட்டே முக்காலுக்கு வந்துடறேன்’ என்றான் கார்த்தி.
‘ஏன் அவ்ளோ சீக்கரம்’
‘ஸ்கூல்ல வெளையாடலாம்டா, பிளாஸ்டிக் பால் வெச்சிருக்கேன். முதுகு பங்க்சர்’.
தேன் கிண்ணம் முடிந்ததும் ரேடியோவை அணைத்தார் அப்பா. மெட்ராஸில் இருந்து காலி செய்வதற்கு ஓரிரு வாரங்களுக்கு முன் ஒளியும் ஒலியும் நிகழ்ச்சியின்போது மூன்று புதியவர்கள் வீட்டிற்கு வந்து அது முடியும்வரை பார்த்து விட்டு, வெளியே அப்பாவிடம் பேசிவிட்டுச் சென்றார்கள். உள்ளே வந்தவர் ‘வாங்க ஒத்துக்கிட்டாங்க, நாளைக்கே எடுத்துக்கறாங்க’ என்றார். அடுத்த நாள் மாலை அவர்கள் தொலைகாட்சியை எடுத்துச் சென்றபின் இரவுணவுக்காக ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றார் அப்பா. இவனுக்கு மிகவும் பிடித்த மசால் தோசையை பிட்டுப் பிட்டு வைத்து பாதி கூட சாப்பிடாமல் வந்தான். ‘மாமி வீட்ல போய் பாருடா’ என்று ஞாயிறு திரைப்படத்தைப் பார்க்க செல்லுமாறு அம்மா கூறியதற்கு எதுவும் சொல்லாதவன், அந்த இரவு யாருக்கும் தெரியாமல் அழுது முடித்து தூங்க வெகு நேரம் ஆனது.
விளக்கை அணைத்தபின் இருளில் தெரிந்த சுவற்றை நோக்கியபடி படுத்துக் கொண்டிருந்தான். ராதா மிஸ் இவனைக் குறித்து விசாரித்திருப்பார், விடுமுறைக்காக வெளியூர் சென்று விட்ட
வினோத்திற்கும் ப்ருத்விக்கும் ஒன்றும் தெரிந்திருக்காது. வினோத் பக்கத்து போர்ஷன் மாமியிடம் கேட்டிருக்கலாம். ஆங்கிலத்தில் இலக்கணப் பிழையின்றி எழுதினாலோ, பேசினாலோ இவன் கன்னத்தை வருடித் தருவார் ராதா மிஸ். பல முறை.
‘அம்மா வீட்ல இல்ல?’
‘ஸ்கூல் போயிட்டாங்கடா’
‘டீச்சராடா அவங்க, எங்க’
‘சிங்கப் பெருமாள் கோவில்ல, லெவன்த், ட்வெல்த்க்கு எடுக்கறாங்க எட்டேகாலுக்குலாம் கெளம்பிடுவாங்க’
‘ஓ, அப்ப அவங்களே ஒனக்கு சொல்லித் தந்துடுவாங்க, படிக்கலனா திட்டுவாங்களா’
‘அதெல்லாம் இல்ல’
‘தோ இத வெச்சுதான் முதுகு பங்க்சர் வெளையாடுவோம்’.
வெள்ளை ஆரஞ்சு நிறக் கோடுகள் போட்ட பிளாஸ்டிக் பந்து.
‘அப்பா எப்ப கெளம்புவாரு”‘
இப்ப… கெளம்பிடுவாரு. வெரி ஹார்ட்பா, அடிச்சா ரொம்ப வலிக்குமா’
‘அதெல்லாம் பழகிடும்’
பள்ளி மைதானத்தில் குறைவான பேர்தான் இருந்தார்கள். முரளி முன்பே வந்திருந்தான். ‘இவங்க த்ரீ ஏ’ என்று இருவர் அறிமுகமானார்கள். ‘ஷா பூ த்ரீ’ போட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட முரளிதான் முதலில் பந்தை வீச வேண்டும். மற்றவர்கள் இரண்டு மூன்றடி தள்ளிச் சென்றபின் பந்தை அவனிடம் வீசிவிட்டு ‘ஓடுங்கடா’ என்றபடி கார்த்தி ஓட ஆரம்பிக்க அவனைத் தொடர்ந்த இவன் தலைக்கு மேல் சென்ற பந்து தரையில் விழ த்ரீ ஏவின் பாலாஜி அதை எடுத்து இவனை நோக்கி வீசியதைத் தவிர்க்க திரும்பியவன் தோள் பட்டையில் மோதியது பந்து. ‘எடுத்து அடிடா’. முரளியின் குரல். பந்தை எடுத்துத் துரத்த ஆரம்பித்தவன், ‘என்னடா முதுகே தெரிய மாட்டேங்குது…. சரியா, ஹவ் டு த்ரோ’ என்று மூச்சிரைத்தபடி கேட்க ‘சும்மா அடிடா ஒடம்புல எங்கேயாவது பட்டா போதும்’ என்றான் பாலாஜி.
மதியம் முரளியின் பைண்ட் செய்யப்பட்ட ‘சோசியல் சயின்ஸ்’ புத்தகத்தை வைத்து க்ரிக்கெட். மாலை வீட்டிற்குத் திரும்பும்போது ‘என் வீட்ல வூட்டன் பேட் இருக்கு, மர பேட். அத வெச்சு வெளையாடலாம்’ என்றிவன் சொன்னதற்கு ,’அப்ப ரப்பர் பால்ல கூட விளையாடலாம், அஞ்சு மணிக்கு வரேன்’ என்று கார்த்தி சொல்ல ‘இன்னிக்கு ஒன் வீட்டுக்கு போலாமா’என்றான். ‘நாளைக்கு கண்டிப்பா கூட்டிட்டுப் போறேண்டா’.
போர்ஷனை வந்தடைந்ததும் உடை மாற்றி விட்டு பேட்டை எடுத்துக் கொண்டு பின்புறம் சென்று அதை சுழற்றிக் கொண்டிருந்தான். அப்பா இவனுக்கு ஏற்றார் போல் தானே செய்த பேட். அதன் வெளிப் பகுதியில் நீல நிற ஸ்கெட்ச் பென்னில் அகர வரிசையில் ஆட்டக்காரர்களின் பெயர்கள். முதலில் ‘ஆலன் நாட்’, இறுதியாக அப்பாவுக்கு ஆதர்ச ‘விவ் ரிச்சர்ட்ஸ்’. கிரி ஸ்ட்ரீட்டில் விளையாடிய அந்த சிறிய இடத்தில் கூட பேட்டிங் மட்டும்தான் இவனுக்கு ஓரளவுக்கேனும் இயல்பாக வந்தது, ப்ருத்வி பந்து வீச்சிலும், பீல்டிங்கிலும் வல்லவன். இவர்களை விட இரண்டு வயது மூத்த கிஷோரின் பந்து வீச்சை தொடர்ந்து ஒரு ஓவர் ஆட்டமிழக்காமல் சமாளித்தால் அது பெரிய சாதனை, பந்து வரும் திசையை ஒருவாறு கணித்து அந்தப் பக்கம் பேட்டை சுழற்ற ஆரம்பிப்பதற்குள் ஆடுபவனை தாண்டிச் சென்றிருக்கும். ப்ருத்வி கிஷோரின் பந்துகளை தடுக்கவும் மட்டுமில்லாமல், ‘ஸ்ட்ரோக்கும்’ செய்வான்.
மறுநாள் குளித்து முடித்தவுடன் உடைமாற்றிக் கொண்டு பேட்டை எடுத்து வாசற்கதவின் அருகே வைத்தான்.
‘நல்லா இருக்குடா, ஸ்கூலுக்கு எடுத்துட்டு போ வேணாம், நாளைக்கும் நாளன்னைக்கும் லீவ்வுல டப்பா ஸ்கூல்ல வெளையாடலாம்.’
‘வேற எந்த க்ரவுண்ட் இல்லையா’
‘ஸ்ரீனிவாசா தியேட்டர் கிரவுண்ட் இருக்கு ஆனா அண்ணனுங்கதான் வெளையாடுவாங்க ‘
‘அது எங்க இருக்கு’
‘ஸ்ரீனிவாசா தியேட்டர் போனதில்ல, நம்ம ஸ்கூல் தாண்டி ரைட்ல டர்னிங் வரும், அங்க தான் தியேட்டரு, பக்கத்துல கிரவுண்ட்டு’
‘ஓ இல்லடா இங்க வந்து எந்த சினிமாவும் போல. எங்க போர்ஷன் பின்னாடிகூட க்ரவுண்ட் இருக்கு, அங்க கூட விளையாடலாம்டா. முரளி வருவானா’
‘கஷ்டம்டா, அவ்ளோ தூரம் லீவ் நாள்ல விட மாட்டாங்க, பாலாஜி வருவான் அவன் கிட்டக்கதான் இருக்கான், மணி, ராஜா, அப்பறம் இன்னும் ரெண்டு மூணு பேரு ஒனக்கு தெரியாது யாரும் நம்ம ஸ்கூல் இல்ல ‘
‘ஓகே ரப்பர் பால் வெச்சிருக்கியா’
‘இருக்கு இருக்கு ‘
‘பின்னாடி க்ரவுண்ட் இருக்குலமா, அங்க நாளைக்கு க்ரிக்கட் வெளையாடப்போறோம்’ படுக்கச் செல்லும் முன் அம்மாவிடம் சொன்னான்.’நாளைக்கு எனக்கு ஸ்கூல் இருக்கு’ .
இருளை நோக்கியபடி படுத்துக் கொண்டிருந்தான். மரக் குச்சிகளை உடைத்து ஸ்டம்ப் செய்து விடலாம். மெட்ராஸில் பத்து பண்ணிரண்டு பேர் வரை சேர்ந்து விடுவார்கள். கார்த்தி எத்தனை பேருடன் வருவானோ… சாயம் போன வலது கைக்கான க்ளவுஸ் ஒன்றை வைத்திருந்த ப்ருத்வி, அதை இவனுக்கும் வினோத்துக்கும் மட்டும்தான் அணியத் தருவான். ஆடப் போகும் போதும்,
தொலைக்காட்சியில் பார்த்துள்ளது போல் அதை கையில் அணிந்து கொண்டு இல்லாத ஸ்ட்ராப்பை ஒட்டி மணிக்கட்டை சுழற்றி விட்டுக் கொள்வான்.
ஒன்பதரை மணிக்கு ஐந்து பேருடன் கார்த்தி வந்தான். எலுமிச்சை பழத்தின் அளவில் ரப்பர் பந்து. ‘இங்கதான் சொன்னேன்’ பின்புற மனையைச் சுட்டியபடி இவன் கூறியதற்கு, ‘எடம் இருக்கு, கல்லுலாம் இருந்தாலும் வெளையாடலாம்’ என்றான் கார்த்தி. ‘அந்த பசங்களும் இங்க தான் குடி இருக்காங்க’ மனையின் மறுமுனையில் இருந்த இரு வீடுகளில் ஒன்றிலிருந்து வெளிப்பட்டவர்களை சுட்டி இவன் சொல்ல ‘அது கோபாலு, கிருஷ்ணமூர்த்திடா, ட்வின்ஸ்ஸு. எங்க ஸ்கூல் தான், சிக்ஸ்த் படிக்கறாங்க’ என்ற மணிகண்டனிடம் ‘அப்போ நீ அவங்கள்ட்ட இங்க வெளையாடலாமன்னு கேளு, அவங்களும் வரட்டும்’ என்று கார்த்தி சொல்ல சுவற்றை தாண்டி மனையில் குதித்தவன் அவர்களருகில் சென்று பேசி, மூவருமாக திரும்பும்போது இவர்களையும் வருமாறு சைகை கட்டினான். ‘புதுசா குடி வந்துருக்கீங்கள்ள,நீ சவுத்துல ஒக்காந்துருக்கரத பாத்திருக்கோம்’ என்று கோபால் சொன்னதற்கு தலையாட்டினான். ஸ்டம்ப் நட்டு டீம் பிரிப்பதை பார்த்துக் கொண்டிருந்த சிறுவனையும் சிறுமியையும் சுட்டி அவர்கள் யாரென்று கேட்டதற்கு ‘சித்தப்பா பசங்க’ என்றான் கோபால். விளையாட்டு ஆரம்பித்ததும் அவர்கள் மனையின் ஓரத்தில் இருந்த மற்றொரு வீட்டினுள் செல்ல, சிறிது நேரம் கழித்து வெளியே வந்த பெண் இவர்களின் ஆட்டத்தை சில கணங்கள் கவனித்த பின் வேறு பக்கம் திரும்பி கத்த ஆரம்பித்தார்.
‘என்னடா எதோ கத்தறாங்க, நம்மளத்தானா போயிடலாமா’ என்று கார்த்தி கேட்டதற்கு ‘த்தா, அதெல்லாம் கண்டுக்காத, த்தேவ்டியா முண்ட’ தரையில் எச்சில் உமிழ்ந்தபடி கிருஷ்ணமூர்த்தி சொன்னான்.
மூன்று ஆட்டங்களிலும் இவனுடைய அணிக்கு வெற்றி. கார்த்திக்கு பேட்டை சுற்ற மட்டுமே தெரிந்தது, மணி ஓரளவிற்கு ஆடினான். கோபாலின் பந்து வீச்சை மட்டும் இவன் கவனத்துடன் கையாள வேண்டி இருந்தது. இருவரும் ஒரே அணியில் இருந்திருந்தால் இன்னும் எளிதாக வெற்றி கிடைத்திருக்கும்.
ஆட்டத்தின்போது பந்து ஒருமுறை அருகிலிருக்கும் மண்டபத்தினுள் சென்று விட, கோபாலுடன் அதை எடுக்கச் சென்றான். வேட்டி மட்டும் அணிந்திருந்த,கையில் புத்தகமொன்றை வைத்திருந்த முதியவர் பந்தை எடுத்து சுவற்றில் சாய்ந்தமர்ந்தபடி பார்த்துக் கொண்டிருக்க ‘பந்து விழுந்துடுச்சு தாத்தா, எடுத்துக்கறேன்’ என்று கதவில்லாத பின்புற வாயிலில் நின்று கொண்டு கோபால் சொன்னான். கையசைத்து அழைத்தவரின் அருகில் சென்றவர்களிடம் எதுவும் சொல்லாமல் பந்தை நீட்டினார். அவரருகில் திறந்திருந்த தகர பெட்டி முழுதும் புத்தகங்கள். ‘யார் இவரு, சோடா புட்டி கண்ணாடி’ என்று வெளியே வந்தவுடன் இவன் கேட்க ‘இங்க தான் ரொம்ப நாளா இருக்காரு, ஒரு கண்ணு கெடயாது. இந்த மண்டபம் அவருதுன்னு சொல்றாங்க, அவர் மட்டும் தனியா தங்கிருக்காரு.’ என்றான் கோபால்.
‘எப்படி .. பேக் சைட் டோர்ரே இல்ல, ஓபன்னா இருக்கு’
மதியம் டப்பா ஸ்கூலில் ஆடும் போது காலையில் வந்தவர்களில் மணி மட்டும் இருந்தான். அங்கு புதிதாக இணைந்தவர்கள் இளையவர்கள். ஆட்டத்தில் வெற்றி பெற காலையை விட குறைவான முயற்சியே தேவைப்பட்டது. விளையாடி முடித்து கிளம்பும்போது ‘ஒரு நிமிஷம் இரு’ என்று விட்டு நாடார் கடைக்குச் சென்று எதோ கேட்டு விட்டு திரும்பிய கார்த்தி ‘அஞ்சரை தான் ஆகுது, வரியா ஸ்ரீனிவாசா கிரவுண்ட்டு போலாம்’ என்று கேட்க, ‘ஒகே, ரொம்ப நேரமாகாதில்ல’.
‘கிட்டக்க தான், போயிட்டு ஒடனே வந்துடலாம்’
பள்ளியைத் தாண்டி சாலை இரண்டாக பிரியும் இடத்தில்,’தோ இந்த லெப்ட்ல வேதாச்சல நகர், ரைட்ல தான் ஸ்ரீனிவாசா தியேட்டர், ரோட்ட க்ராஸ் பண்ணலாம் வா’
தியேட்டரில் இருந்த போஸ்டரில் ‘காக்கி சட்டையை’ பார்த்தவாறே ‘ரஜினியா கமல்லா’ என்று கார்த்தி கேட்டதற்கு ‘ரஜினி தான்’ என்றவனின் தோளை இரு கைகளாலும் பற்றியழுத்தியபடி
எழும்பி குதித்து ‘டேய் சூப்பர்… செம ஸ்டைல், பைட்ல. கமல் சுத்த வேஸ்ட். போலிஸ் மாதிரியே இல்ல’
‘எஸ், ஒன்லி டேன்ஸ், பைட் பண்ணவே தெரியாது’
‘என்ன டேன்ஸ்ஸு. போன வாரம் தான் இங்க ரிலீஸ் ஆச்சு, இங்க புது படம்லாம் ரெண்டு மூணு மாசம் கழிச்சு தான் வரும். இதான் கிரவுண்ட்டு’ மைதானத்தில் இவர்களை விட பெரியவர்கள்
கிரிக்கெட் ஆடிக் கொண்டிருக்க இவன் வயதையொத்தவர்கள் அதை பார்த்துக் கொண்டோ, ஓடிப் பிடித்து விளையாடிக்கொண்டோ இருந்தார்கள். ‘இங்க பெரியவங்கதான்
வெளையாடுவாங்க’
புற்தரையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்து விட்டு திரும்பும் போது ‘ஒனக்கு ப்ரதர்ஸ் சிஸ்டர்ஸ் இருக்காங்களா’ என்று கார்த்தியிடம் கேட்டான்.
‘ரெண்டு அக்கா’
‘நம்ம ஸ்கூல்தானா’
‘… அலிஸன் ஸ்கூல்ல படிக்கறாங்க’
‘அது எங்க இருக்கு ‘
‘அதுவும் கொஞ்ச கிட்டக்கதான்..’
‘நாளைக்கும் எல்லாரும் வெளையாட வருவாங்களா, ஆப்டர்நூன் நெறைய பேர் வரலையே’
‘மணி வருவான், மத்தவங்க தெரில’
தெருவினுள் நுழையும் போது ‘ஒன் வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்னியே’ என்று கேட்டான்.
‘..நாளைக்கு கண்டிப்பா போலாம்டா’
சுவற்றை நோக்கித் திரும்பிப் படுக்கும் போது உடலெங்கும் வலி, மேற்புயங்கள் கனத்தன. பத்து பேர் இருந்தால் ஐந்து ஐந்தாக ரெண்டு டீம் நன்றாக செட் ஆகும். கார்த்தி வைத்திருப்பதை விட பெரிய ரப்பர் பந்து ஐந்து ரூபாய்க்கு கிடைக்கக்கூடும், அம்மாவிடம் பணம் கேட்கவேண்டும். அழுந்தும் இமைகள். மண்டப தாத்தாவிடம் என்ன புத்தகங்கள் இருக்கும். நாளை கார்த்தி வீட்டிற்கு செல்ல வேண்டும், முடிந்தால் என்.ஜி.ஓ நகருக்கும். கார்த்திக்கு வழி தெரிந்திருக்கும். நாளை மற்ற யாரும் வராவிட்டாலும் பின் வீட்டில் கோபாலும், கிருஷ்ணமூர்த்தியும் கட்டாயம் இருப்பார்கள். போர்வையை இழுத்து முகத்தை மூடிக் கொண்டான்.