ஊர்வனம்
மெலிந்த தீராத விளையாட்டுக் குழந்தைகளாலும்
மழையினாலும் தோகைகள் அகற்றப்பட்ட
மயில்கள் வசிக்கும் தென்னந்தோப்பிற்கு
இப்புறமுள்ள இன்னும் சாலையாகாத
மேடு பள்ளங்களாலான பாதையோரத்தில்
சற்று புதைந்த வெண்கல்லை அகற்றப்போய்
ஆதார் அட்டைக்குள் இன்னும் அடைபடாத
பெயரில்லா வெட்டுக்கிளிகள் எறும்புகள்
இத்யாதிகள் அடங்கிய ஓருலகம் கண்டு
சற்றும் இயற்கையை
உற்று நோக்காத மனம் துணுக்குற்றது
அகற்றிய கல்லை மீண்டும் வைத்து
அப்புறமென்ன
அக்கல்லுக்கடியில் இன்னும் பல அடுக்குகள்
அவ்வடுக்குகளில் ஊர்வனங்கள்
இன்னும் இருக்கலாம்
இருக்கட்டும்
oOo
மெல்லிசா
மெல்லிசா மெல்லிசானவனெனினும்
மெல்லிசானவனில்லை
மெல்லிசானவன் விழுந்தால் எலும்புகள்
முறியலாமெனினும்
திருகாதிருப்பதில்லை
மெல்லிசானவன் முட்டினால் தசைகள்
பிசகலாமெனினும்
அதிராதிருப்பதில்லை
மெல்லிசானவனின் அலகானது
அகத்தின் கட்டுமானமெனினும்
முகத்தில் தெரியாதிருப்பதில்லை
மெல்லிசானவன் பறந்தால் இறக்கைகள்
சிதறலாமெனினும்
விரியாதிருப்பதில்லை
மெல்லிசானவனின் அண்ணத்தை முட்கள்
தைக்கலாமெனினும்
பற்கள் மெல்லாதிருப்பதில்லை
மெல்லிசா மெல்லிசானவனில்லையெனினும்
மெல்லிசானவனே