நீட்சி – சரவணன் அபி கவிதை

சரவணன் அபி

செயலின்மையின் செய்நேர்த்தி
உச்சம்கொண்ட
ஒரு காலம் கடந்தோம்
மனிதத்திரளின் அத்தனை உன்னதமும்
உறைந்து கிடந்ததோர்
காலமும் கடந்தோம்

விடிவதும் கதிர் முடிவதும்
இடையே
எழுவதும் விழுவதும்
உண்பதும் கழிப்பதுமான
தொடர்நியதிகளின் சூழ்வே
வாழ்வென விதித்துக்
கிடந்ததொரு காலமும் கடந்தோம்

ஒரு குரலில்லை அழுகையில்லை
அழுந்திக் கிடக்குமோர் உணர்வுமில்லை
செய்தே அறியமுடியுமெனின்
யாதும் செய்யாதிருத்தல்
யார் நலன் பொருட்டு
என்றும் வினவாதிருந்தோம்

இன்றோ
தவறெனப்படும் பாதைகளிலும் பயணம்
குறையொளியெனினும் திரியேறும் சிறுதீபம்
இயைந்தெழும்
இயக்கத்தின் வெளிப்பாடு
காண்கிறோம்

ஆயினும் கேட்கிறோம்
இன்னும் புதிதாய் சில குரல்கள்
இத்தனைக் காலம்
உறங்கிக் கிடந்த குரல்கள்
பாதையின் வளைவை இடரை
ஒளியின் போதாமையை
சுட்டும் குரல்கள்
அவலம் சிறிதும் தொனிக்கா
கயமைக் குரல்கள்
வேண்டுவது ஒன்றே
இயக்கமின்றி
இம்மானுடத்திரள் தேங்கியழிதல்

முன்னகர்வில்லை
இயங்காதிருப்பின்
இயக்கம் போற்றுதும்
இயக்கம் போற்றுதும்
இன்மை களையும்
இயக்கம் போற்றுதும்

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.