மெட்ரோ- ராம்குமார் சிறுகதை

ராம்குமார் 

அப்பாவும் மகனுமாக ரயிலில் சைதாப்பேட்டை வந்திறங்கி, கொத்தால்சாவடித் தெருவில் சென்று நாலாவது சந்தில் திரும்பி அந்த  ப்ளாட் வாசலை அடைந்ததும் வாட்ச்மேன் இவர்கள் இருவரையும் வரவேற்கும் தொனியில், “வாப்பா, இன்னாபா அன்னிக்கு உன்ன புடிக்கவே முடியாம போயிடுச்சு .ரெண்டு நாளு முன்னாடி ரொம்ப சீக்காயிடுச்சுப்பா, ஆஸ்பத்திரிக்கு கூப்ட்டாலும் வர்றல, உனக்கு போன் பண்ணலாம் பாத்தாலும் உன்கிட்ட போன் இல்லையாமே, அந்த கோயிலே கதின்னு கடந்துட்டு இந்த மாரியாத்தா என்ன விட்டுட மாட்டானு சொல்லிக்கிட்டு இருந்துச்சி, நேத்து தான் தேறி வந்துச்சு, பின்னாடிதான் இருக்குது போங்க,” என்று அனுப்பி வைத்தார்.

வேலு தன் பத்து வயது மகனுடன் ப்ளாட்டின் பின்புறம் சென்றான். கூட்டிக்கிட்டு இருந்த ஜானகியம்மா எதெச்சையா இவர்கள் பக்கம் பார்த்து, ‘’அட வாங்க வாங்க,” என்று துடப்பத்தை கீழே போட்டுவிட்டு பேரனை அணைத்து கன்னத்தில் முத்தமிட, பேரன் ஆயாவைப் பார்த்து ரொம்பநாள் ஆனதால் என்ன செய்வது என்று தெரியாமல் புன்னகைத்தான். ”இருங்க,” போய் குழாயில் கை கழுவிவிட்டு ‘’வாங்க போகலாம்,’’ என இவர்களை அழைத்துக்கொண்டு வெளியே வந்தாள்.

தன் அறையில் இருந்த வாட்ச்மேனிடம் போய் ஜானகியம்மாள், ‘’ரவி ஒரு ஐநூறு இருந்தா கொடென் அடுத்த மாசம் சம்பளம் வந்த்தும் தந்திடுறேன்’’

“புள்ள பேரன பார்த்ததும் பரபரனு இருக்கா,’’ எனச் சிரித்தபடியே தன் சட்டைப்பையில் இருந்து ஐநூறு ரூபாய் தாளை எடுத்து இவளிடம் தந்தார்.

“வாங்க போலாம்,”  என அவர்களை அழைத்து டீக்கடைக்கு வந்தார்கள்.

”இன்னா கஜா எப்படியிருக்க கல்லால பாக்கவே முடியல”

”டி.நகர் கடைக்கு போயிடுறேன்மா”

தன் பால்ய நண்பன் வேலுவைப்பார்த்து, ”இன்னா வேலு எப்படி இருக்க, வேலைக்குலாம் ஒழுங்கா போறியா? இல்ல பழையபடி சீட்டு , குடினு தான் இருக்கீயா ?”

வேலு பேருக்கு பதில் சொல்லிவிட்டு வெளிய வர, ஆயா பேரனுக்கு பிஸ்கட் எடுத்துக் கொடுக்க, கஜா அத பார்த்துகிட்டே வெளிய வந்து வேலு தோளில் கையைப்போட்டு,  “இன்னா மச்சி ஏதாச்சும் நினைச்சிக்கிடியா? நான் சும்மாதான் கேட்டேன்டா. எப்படி அங்க ஏரியாலாம் செட் ஆகிடுச்சா?”

“என்னத்த செட் ஆகிச்சு, இங்கதான் நமக்கு வேலை இருக்கு. அங்க வாரத்துல நாலு நாள் தான் கிடைக்குது..”

கஜா அதை காதில் வாங்காமல்,  “நம்ம முத்தம்மா  ஆயா செத்துடுச்சு தெரியுமா?”

‘’எப்படி?” என  இவன் துக்கத்தை அவன் காது கொடுக்காததால்  சுரத்தை இல்லாமல் கேட்டான்.

“ஆக்சிடெண்ட்டா ரோடு கிராஸ் பண்ணப்போ…”

”உங்கம்மாவ அங்கேயே கூட்டிட்டு போயிடலாம்ல… இங்கேயே கடந்து லோல்படுது பாவம்… ”

‘’ நான் வா அங்கனு தான் சொல்றேன்… இதான் இங்கதான் பொறந்தேன் இங்கதான் கல்யாணம் கட்டிக்கிட்டேன் இங்க தான் என் உயிர் போகணும்னு பெனாத்திக்கிட்டு இருக்கு’’

‘’ஆமா அதுக்கும் அம்பது, அறுபது வருசமா இருந்த இடத்தவிட்டு போனா பேஜாராதான் இருக்கும் …”

“இன்னாதான் குடிசைய காலி பண்ணி கல்லு வீடு கொடுத்தாலும் நான் இங்கதான் பிழைப்பேன்னு இருக்கு”

மாரியம்மன் கோவிலை தாண்டும்போது பேரனிடம், “இப்போ ஆயா வூடு இதான் கண்ணு,”  என சொல்லி வாசலில் இருந்தே, “ஆத்தா என் புள்ளையும் பேரனையும் காப்பாத்தும்மா,” என சற்று உரக்க சொல்லி வெளியில் எரிந்துக் கொண்டிருந்த சூடத்தை ஒத்தி பேரன் கண்ணில் ஒத்தினார்..

அடுத்த தெருவுக்கு சென்று இன்னொரு ப்ளாட்டினுள் நுழைந்து கீழ்தளத்து காலிங் பெல்லை அழுத்திவிட்டு, “இந்தம்மா வீட்ல நேத்துதான் வேலைக்கு சேர்ந்தேன், உன் புள்ளையும் பேரனும் வந்தா கூட்டிட்டு வாம்மானு சொல்லிச்சு, நல்லவங்க, ரீஜண்டானவங்க,” என சொல்லி இன்னொரு முறை காலிங் பெல்லை அழுத்த முற்படும்போதே கதவு திறக்கப்பட்டது.

அந்தம்மா, ஜானகியம்மாவைப் பார்த்துவிட்டு அவர்களையும் பார்த்தார்.

“புள்ள, பேரன் மா”

”உள்ள வாங்க”

சோபாவில் இருவரும் குறுகியபடி உட்கார்ந்திருந்தனர். அந்தம்மா ஜூஸ் எடுத்து வந்து கொடுக்க, இருவரும் கண்ணால் வீட்டை மனதுக்குள் கிரகித்துக் கொண்டிருந்தனர்..

“குடிங்க, அப்பறம் உங்க வைஃப் எப்படி இருக்காங்க ..”

வேலு சற்று தயங்கி, “அதுக்குன்னாங்க நல்லாருக்கு ”

காலிங் பெல் அடிக்கப்பட்டு கதவு திறக்கப்பட்டு ஒரு வாட்டசாட்டமான ஆள் வியர்வை வழிய உள்ளே வந்து இவர்களை கண்டும் காணாமல் போக, அந்தம்மா அவரிடம், “ஏங்க இவங்க ஜானகியம்மா பையன் , பேரன்,” என அறிமுகப்படுத்த அவர் செயற்கையாய் ஒரு புன்னகையை அவர்கள் மேல் வீசிவிட்டுச் சென்றார்.

“அவர் இப்போ கொஞ்சம் பிசிங்க, இந்த மெட்ரோ ப்ராஜக்ட் ஆரம்பிச்சதுல இருந்து நேரங்காலம் இல்லாம வேலை செய்ய வேண்டியதா இருக்கு… உங்க அம்மாக்கு இங்க எந்த பிரச்சினையும் இல்லே… என் அம்மாவப்போலதான் பாத்துக்குறேன்….”

வேல் சற்று கலக்கத்தோடு, சரி, என்பது போல மௌனமாக தலையசைத்தான்..

“சரி, நான் சமைக்கணும், அம்மாவ அனுப்புறேன்”

அந்த ஆள் ஒரு அரை நிஜாருடன் புத்துணர்ச்சி பொங்க வந்து மற்றொரு சோபாவில் குதித்தமர்ந்தார். அவர் இவர்களை பார்த்து ஏதும் கேட்பார் அல்லது புன்னகைப்பார் என்ற ஆவலில் அவரையே பார்த்துக் கொண்டிருந்தனர். அவர் டி.வி ரிமொட்டை எடுத்து சேனல்களை மாற்றிக்கொண்டே, இவர்கள் பார்ப்பதை உனர்ந்தவராய் திரும்பி, ஒரு சிறு புன்னகையை வீசி, மீண்டும் டி.வியில் மூழ்கினார்.

பின் இவர்களைப் பார்த்து ”எங்க இருக்கீங்க இப்போ?”

“பெரும்பாக்கம்”

“அது எங்க இருக்கு”

“மேடவாக்கம் தாண்டி போகணும்”

“ஓ சாரி எனக்கு மேடவாக்கமே தெரியாது.. பையன் என்ன படிக்கிறான்.?”

“ஐஞ்சாவது படிக்கணும். ஆறு மாசமா ஸ்கூலுக்கு போகல சார்..அங்கிருந்து இவ்ளோ தூரம் அனுப்ப வேணாம்னு வீட்ல சொல்லிடுச்சு, ஒரு வருசம் படிப்பு போச்சு,” சொல்லிக் கொண்டிருக்கும்போதே ஜானகியம்மா சமையல் கட்டிலிருந்து வேலையை முடித்து வெளிவந்து இவர்களை அழைத்து,“வாங்க போகலாம், அவங்ககிட்ட சொல்லிட்டு வாங்க,” என்று சொல்லி, “அம்மா அம்மா கிளம்புறாங்களாம்” என்றதும் உள்ளிருந்து கைகளில் பத்து ரூபாய் தாள்களை எண்ணியபடி வந்த வீட்டுக்காரம்மா பையனிடம் கொடுத்து, “வைச்சுக்க” என்றதும் அவன் கூச்சப்பட, ஜானகியம்மா, “வாங்கிக்கோடா செல்லம், ஆண்ட்டிதானே கொடுக்குறாங்க,” என்றதும் தலையை கழுத்தோடு ஒட்டியபடி வாங்கினான்.

தெருவில் வந்ததும் பையன் அப்பாவின் கையை விடுத்து ஆயாவின் கையை பற்றிக் கொண்டான். ஆயாவும் பேரனை வழியெல்லாம் கொஞ்சிக்கொண்டே வந்தாள்.

ரயில்வே பாலத்தை தாண்டும்போது மதிய வெயில் அவர்களை பின் தொடர்ந்தே வந்த்து. வழியில் வந்த ஜூஸ் கடையில் நின்று, பேரனை பார்த்து ”இன்னா கண்ணு குடிக்கிற”

பையன் சற்று யோசித்தபடி ”ரோஸ்மில்க் ஆயா”என்றான்.

மூவரும் குடித்துவிட்டு போகும்போது பையன் உதட்டோரம் நாவினால் துடைத்துக் கொண்டே சென்றான்.

மீன் மார்க்கெட்டையே கடக்கும்போது, “இப்போலாம் நம்ம ரஜினிய பார்க்கிறியா?” என்றான்

“இல்லியே. அவன் ஏதோ பெயிண்ட் வேலைக்கு போயிட்டானாம்”

பின் ஆம்பூர் பிரியாணி என்று எழுதப்பட்டிருந்த கடையினுள் நுழையும்போதே இருந்த சிக்கன் லெக் பீஸ் படங்களை பார்த்து உள்நுழைந்த பையன் நாக்கில் எச்சில் சுரந்தது. மூன்று பேருக்கும் பிரியாணி தனித்தனி தட்டில் வந்ததும் பையன் ஆர்வமாக சாப்பிட ஆரம்பித்தான். ஜானகியம்மா தன் தட்டில் இருக்கும் கறித்துண்டுகளை களைந்து எடுத்து பேரனுக்கு ரெண்டு துண்டும் பையனுக்கு ஒரு துண்டும் என தட்டில் வைத்ததும் வேலப்பன், “எல்லாத்தையும் எங்களுக்கு வெச்சிட்டு நீ இன்னா துன்னுவ இந்தா,” என மறுபடியும் அவள் வைத்ததை அவளுக்கே வைக்கப் போக, அவள் கத்தி கொண்டு வருபவனை தடுப்பவள் போல தன் தட்டை வெடுக்கென பின் இழுத்து, ”அய்யோயோ எனக்கு வேணாம்பா சூடு அதிகமாயிடுச்சு அதான்” என்று சமாளிக்க அம்மாவை அறிந்தவனாக வேலப்பன் விட்டுவிட்டான்.

வெளியே வந்ததும் வள்ளியக்கா இவர்களைக் கடந்து சென்று யாரு என யூகித்து பின்வந்து, “என்ன ஜானகியக்கா எப்படி இருக்க, என்னப்பா வேலு கண்டுக்கவே மாட்றியேப்பா. அக்கா அங்க இருந்தவரை யக்கா யக்கானு இருந்த…”

“இப்போ எங்க கா இருக்க?”

“இதோ இங்கதான் அந்த மசூதி சந்து இருக்குல அதுல ராமர் கலரு வீட்ல..”

“வீட்ட வித்துட்டு இங்க வந்தப்புறம்தான் நாலுவீட்ல பத்து பாத்திரம் தேய்ச்சாவது காலத்த ஓட்டலாம், அங்கிருந்து நம்ம மனுசாளுங்க வாசனை இல்லனா செத்துடுவோம் போல இருந்துச்சு, அதான்”

“செல்வி எப்படியிருக்கு? கேட்டனு சொல்லுப்பா ”

ரயில்வே நிலையம் வந்ததும் காத்திருக்கும் நேரம் வேலு அம்மாவை, “நீ போ…அந்தம்மா ஏதோ வாங்கி வர சொன்னாங்கள,” என்றான்

“அது பரவால்ல,இப்போ போயிட்ட்டா அப்புறம் எப்போ என் பேரன் கூட இருக்கிறது?”

வேலப்பன், ” நீ வேணா அங்கேய வந்துடேன் .பக்கத்துல கூட எங்காயச்சும் வேலைக்கு போ,” என்றான்.

ஜானகியம்மா புன்னகைத்து, “வீடு வேணாம்பா இந்தக் கட்டை இங்கதான் கிடக்கணும்னு இருக்கு. என்னிக்காவது எதும் வேலை செய்ய முடியாத நெலம வரும்போது வேணா பாக்கலாம், அப்பக்கூட காசி, ராமேச்வரம்னு போயிடுலாம் இருக்கேன்..”

“ஆமா அங்கதான் எங்கப்பன் எடம் வாங்கி மாளிகை கட்டி வைச்சிருக்கான் உனக்கு. அந்த குவட்டர்ச வித்திட்டு இங்க வர்லானாலும் அந்த சனியன் இப்போதான் என் புள்ளைங்க பேருக்கு ஒரு வீடு இருக்க போவுதுனு அலையுது. எதோ அரண்மனைய இவளுக்கு எழுதி கொடுத்துட்ட மாதிரி. மூணு பேரு கைய கால விரிச்சு படுத்து தூங்க முடியுதா..”

“அப்புறம் ஏன் என்ன கூப்பிடுற?”

மௌனமாக இருந்தான்.

“என்னத்த பண்ண”

பையன் இருவரையும் பார்த்துக் கொண்டிருக்க, ரயில் சத்தம் கேட்கவும் பேரனின் கன்னத்தை இழுத்து எச்சில் படிய முத்தமிட்டாள்.பேரன் ஆயாவின் வாயின் துர்நாற்றத்தை வெளிக்காட்டாமல் அவனும்  பதிலுக்கு முத்தமிட்டான்..

வேலு தன் மகனுடன் ரயிலெறி படியில் நின்றபடி டாட்டா காட்ட, ஜானகியும் கண்களை முந்தானையால் துடைக்க, வேலு அதை காணாததுபோல வேறெங்கோ பார்த்தான். பேரனுக்கு அடிவயிற்றில் இருந்து ஏதோ உருண்டு பொங்கி வந்து தொண்டையை அடைத்து கண்கள் கலங்கின.

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.