மயானத்திலிருந்து
வீடு திரும்பியபிறகு
அடுத்து என்ன செய்வது என்பது
அவ்வளவு எளிதில்
தீர்மானிக்க முடிவதல்ல
இறந்தவர்
குடும்பத்தில் ஒருவர் எனில்
ஒரு கோப்பை
மதுவோ தேநீரோ அருந்தி
துயரத்தை சிறிதளவு
மறைக்கலாம் மறக்கலாம்.
நெருங்கிய நண்பர் எனில்
ஒரு மாதம் கழித்து
இறந்தவர் வீடு சென்று
தற்செயலாய் அவ்வழி
செல்ல நேர்ந்ததாய்
பொய்சொல்லி
தேநீர் பருகி
உரையாடி திரும்பலாம்
மரக்கன்று ஒன்றை
ஊன்றி வைத்து
நினைவை தினமும்
நீர் ஊற்றி வளர்க்கலாம்.
தூரத்து உறவு எனில்
கூடுகையில் இறந்தவரின்
பிடிக்காத குணங்களை
குறிவைத்து மறைத்து
நல்லதை மட்டும் சிலாகித்து
விவரித்து பேசலாம்.
வேறு எவராகினும்
இறந்தவர் பற்றி
விமர்சிக்க, குறை கூற
குறைந்தது ஆண்டு ஒன்றாவது
காத்திருத்தல் நல்லது.
இறந்தது
நம் முன்னாள் காதலி எனில்
நிலைமை சற்றே சிக்கலானது.
குறிப்பிடும்படி
எதுவும் நிகழாததுபோல்,
வெயில் தாழ்ந்த
மாலை ஒன்றில்
நடைப்பயிற்சி முடித்து
வாசலுக்குள் வருவது போலவோ
வருடத்தின் ஏதோவொரு
சனிக்கிழமை காலையில்
பலசரக்கு மளிகை வாங்கி
வீட்டுக்கு திரும்புவது போலவோ
அன்றாட வாழ்க்கைக்குள்
வந்துவிடுவதைத் தவிர
சற்றுமுன் இறந்துவிட்ட
முன்னாள் காதலி பற்றி
நாம் வேறெதுவும்
செய்வதற்கில்லை.
என்றாவது ஒருநாள்
கூடத்தின் நடுவே
குடும்பத்துடன் பார்க்கும் திரைப்படத்தில்
துயரக்காட்சி தோன்றும்போது
இயல்பாய் கண்கள் பனிக்கையில்
கூடவே இறந்துவிட்ட காதலியையும்
நினைத்துக்கொள்ளலாம்.
தட்டிலிருக்கும் பண்டத்தை
எடுக்க குனியும் சாக்கில்
யாருக்கும் தெரியாமல்
கவனமாய் கண்களை
துடைத்துக்கொண்டு
படம் சிரிப்புக்காட்சிக்கு
மாறிய பிறகு
இறந்தவருடன்
தொடர்புடைய
ஏதாவதொரு ஹாஸ்யத்தை
நினைத்துக்கொண்டு
வாய்விட்டு சிரிக்கலாம்
நாம் பனித்ததும்,
குனித்ததும், சிரித்ததும்
ஏன் ஏனென,
நம்மைத்தவிர
வேறு எவர்தான்
அறியப்போகிறார்?