சரியாக ஐம்பது ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட நூல்.இன்றும் வாசிக்கையில் அதன் மொழியால் அதே வசீகரத்துடன் இருக்கிறது.மொழி ஒரு பேரழகியாய் இந்த நாவல் முழுக்க தன் ஔியை நிறைத்து வைத்திருக்கிறது.
வயோதிகத்தில் தன் முதல்பெண்ணை சந்திக்கச் செல்லும் அம்பியின் எளிமையான ஒரு திரும்பிப்பார்க்கும் கதை.ஆனால் அதன் மொழியின் கவித்துவத்தால்,வயோதிக அம்பியின் முன்பின் கலங்கிய மனத்தால், தான் பிறன் என்ற கோடழியும் தடுமாற்றத்தால் ,நூற்றிபத்துபக்கங்கள் உள்ள இந்த நாவலை வாசித்து முடிக்கையில் ஒரு அழகிய கனவுக்குள் வாழ்ந்துவிட்டு வெளியறியதைப்போல உணரமுடிகிறது.
ஒரே அமர்வில் வாசிக்கமுடிந்தால் அது பேரனுபவம்.அது இன்னொரு வசீகரம்.சிறியநாவல்களின் சிறப்பியல்பு அல்லது அதன் பலம் என்பது ஒரே அமர்வில் வாசிக்கத்தக்கனவாக இருப்பது.நீண்ட ஒற்றைக்கனவு.அப்படி ஒரே அமர்வில் வாசித்தநாவல்களில் அம்மாவந்தாள்,அபிதா இரண்டும் மனதை ஆட்டிவைத்தவை. வாசித்துமுடித்து வேறெதும்வாசிக்காமல் அடுத்தநாளே மீண்டும் வாசித்தவை.
நாவலில் அம்பி சொல்வதைப்போல் உள்ளே ஒரு கோடழியும் அவரின் மனம், அவரின் நடப்பிலும், கனவிலுமாக தவிக்கிறது.நாவலின் நடைமுறை அம்சம் என்பது இளம்வயதின் ஈர்ப்பு அல்லது காதல் அல்லது சினேகம்.அது மனதின் ஆழத்தில் கிடந்து நினைவில், கனவில் எழுந்து கொண்டேயிருக்கிறது.
அதை பற்றி பேசாத மனிதர்கள் இல்லை.யாருக்கும் அப்படியான ஒரு பேரன்பு ஒருவர் மேல் இருக்கவே செய்யும்.அதற்கு எப்படி வேண்டுமானாலும் பெயர் வைத்துக்கொள்ளலாம்.நடைமுறை வாழ்வில் எந்தபயனும் இல்லாதது.அவரவர் மனதிற்கினிய தெய்வத்தைப் போல தான்.உடனிருந்தும் ஒன்றும் பயனில்லை ஆனால் அது உடனில்லாவிடில் வேறெதுமில்லை.
நாவலின் தத்துவத்தளம் என்று நான் உணர்வது இவ்வுலகப்படைப்பின் பேரெழில் மீது எளியமனம் கொண்ட மையல்.வயதாகும் போது இவ்வுலகின் மீது உண்டாகும் பெரும் பிடிப்பு.இந்தப்படைப்பையே பெண்ணுருவாக காணுதல் அல்லது பெண்ணுருவையே படைப்பாக காணுதல். தன்படைப்பு அனைத்திலும் தன்னையே பிரதிபலிக்கும் பிரபஞ்சத்தின் பேரெழில்.
அம்பி தான் இளமை வரை வாழ்ந்த கரடிமலைக்கு,அவரின் மனதின் வலி உடலின் வலியாக மாறியிருக்கும் நேரத்தில் வருகிறார்.அழகு ஆட்சி செய்யும் பசுமையான இடம்.அதுவே ஒரு குறியீட்டுத்தளம்.இளமையை குறிக்கும் தளம்.பசுமை, இளமை, செளந்தர்யம்.ஒருவேளை முதிய மனதின் இளமைக்கான ஏக்கம் அல்லது இளமை பற்றிய கனவுதான் இந்தநாவலாக இருக்கலாம்.நாவலின் மொழியும் கூட இன்றும் அத்தனை வசீகரமானது.கதையின் களம் ,பேசுபொருள் மொழி அனைத்தும் குன்றாத எழில் கொண்டவை.
வாழ்வின் மறுகரையில் வந்து நின்று அந்தக்கரையை பார்க்கும் கனவு.கனவை அதே போன்ற ஒரு உன்மத்த மொழியில் தானே சொல்ல முடியும்.
‘மல்லாந்த முகத்தின் பனித்த காற்று தான் மீண்ட நினைப்பின் முதல்உணர்வு’
‘நானின் மாறாத மட்டற்ற மெளனத்தின் தனிமை’
‘அத்தனையும் உன்:நீ யின் சட்டையுரிப்பு’
அத்தனை பசுமையான கரடிமலையின் உச்சியில் கருவேலங்காட்டில் திருவேலநாதர் வானமே கூரையாக, மழையும், வெயிலும், காற்றும், பனியும், பறவைகளும் அபிஷேகம் செய்ய அமர்ந்திருக்கிறார்.அத்தனை சிறுமுட்கள் சூழ வீற்றிருக்கும் தாதை, அன்னையை மனதில் நிறுத்தி காத்திருக்கும் யோகன்.
மானுடவாழ்வின் முட்களுக்கு எதிரே பசுமையென விரிந்திருப்பது அவர்களின் பதின் வயதுகள் தானா? என்று இந்நாவலை வாசிக்கையில் தோன்றுகிறது.உடலும் மனமும் நடைமுறையில் சிக்காது பறக்க எத்தனிக்கும் காலம்.சுற்றிநடப்பவைகள் எங்கோ எனத் தெரிய தன்கனவில் தான் வாழும் பருவம்.
ஊரில் திருமணங்கள் என்றால் ஒலிபெருக்கியில் சினிமா பாடல்களை ஒலிக்கவிடும் பழக்கம் இன்றும் உண்டு.சிறுவயதில் அப்படி கேட்டு பதிந்தபாடல் ஒன்றின் வரிகள் இந்தநாவல் வாசிப்பின்போது நினைவில் எழுந்தது. ‘ஆகாயம் நீர் நிலம் யாவும் அழகே உன்காட்சி’ என்ற பாடலாசிரியர் வாலியின் வரி.முதலில் அது மானுடருக்காக இருந்து படிப்படியாக பிரபஞ்ச அழகை ஆராதிக்கும் நிலையாகிறது. கனவில் தொடங்கும் வாழ்வு இடையில் நடைமுறையில் சிக்கி மீண்டும் கனவை நோக்கி செல்வதுதான் இந்தநாவல் சொல்லும் வாழ்வு.
இந்தநாவலின் கனவுமயமான பகுதிகள் கரடிமலை சூழலில் வருகின்றன.அப்படியான சூழலில் வரும்பாதே அவற்றின் கனவுத்தன்மை என்பது தீவிரமடைகிறது.மலையும் மலையைச்சார்ந்த இடமும்.
அன்பின் பெருங் காவியங்கள் அனைத்தையும் போலவே இதிலும் பிரிவே அந்தஅன்பின் நிறத்தை, சுவையை அடர்வு கொள்ளச்செய்கிறது.அடையபட முடியா நிலையே ஒன்றை பெருமதிப்புடையதாக, பேரழகுடையதாக மாற்றுகிறது.அதுவே எதிர்நிலையில் பெரும் சினமாக ,வெறுப்பாகவும் மாறுகிறது.ஒன்றின் இருநிலைகள்.உளவியல் சார்ந்தும் இதுவே உண்மை.
இந்தநாவலில் அபிதா மீதான அம்பியின் பொசசிவ்னஸ் எனக்கு அதிர்ச்சியளித்தது. தோழிகள் அந்தசொல்லை பயன்படுத்தும் போது ‘நோய்வாய்ப்பட்ட அன்பு’என்று அதற்குபொருள் சொல்வேன். இந்தநாவலில் வாயோதிக அம்பியின் நோய்வாய்ப்பட்ட அன்பாக அதை இணைத்து புரிந்து கொள்ளமுடிகிறது.
வாழ்வில் நம்பால்யத்தின் மனிதர்கள் மீதான அன்பு கள்ளமற்றது,மிகத்தூயது.அந்தவயதுகளில் நம் வாழ்வில் வரும் மனிதர்கள் நம் மனதில் அழியா நித்தியத்துவம் பெறுகிறார்கள்.நாம் எங்கு சென்றாலும் மனதின் ஆழத்தில் அந்தமனிதர்களும்,அந்த இடங்களுமே நம்முடனிருக்கின்றன.
மழைப் பெய்த புதுநிலமாக மனம் இருக்கையில் விழும் விதைகள். புதுமனிதர்களை,புதுஇடங்களை நாம் பால்யத்தின் மனிதர்கள் இடங்களுடனே ஒப்பிட்டுக்கொள்கிறாம்.புறத்தோற்றத்தில்,குணத்தில் என்று இரண்டிலுமே.அவ்வகையில் இந்தநாவலின் புறசூழலும்,அம்பியின் மனஆழமும் அபிதாவாக எழுந்திருக்கிறது. லா.ச.ரா தன் அழகிய கனவை எழுத்தில் இறக்கி வைத்திருக்கிறார்.
இந்தநாவலை என் தோழியிடம் பகிர்ந்த பொழுது அவள் சலித்துக்கொண்டாள்.பெண் சார்ந்த இன்றைய, நேற்றைய, நாளைய பார்வைகள் பற்றி பேசினாள்.என்னால் அவளுக்கு புரியவைக்க இயலவில்லை.அதன் பின்தான் இந்தவாசிப்பனுபவம் பற்றி எழுத நினைத்தேன்.இலக்கியம் என்பது நடைமுறை தளத்திலிருந்து பறப்பது அல்லவா ?அதன் சிறகில் அமரும் நம்மனதின் புழுதிகள் அந்தப்பறவையின் ஜிவ்வென்ற ஒரே எழும்புதலில் பறந்துவிடும்.அந்தப்பறவை பிரபஞ்சத்தை அளப்பது.
பிரபஞ்சத்தின் பேரழகை காணமுடியும்…ஒரு எல்லையில் உணரமுடியும்.ஆனால் ஒருபோதும் உடைமையாக்கமுடியாது.இதில் லா.ச.ரா தொடுகை என்பதேயே உடமையாக்குதல் என்ற பொருளில் சொல்கிறார்.உடமையான எதன் மதிப்பையும் நாம் உணர்வதில்லை.பிரபஞ்சம் தன்னின் ஒருதுளியை நமக்களித்தது…அதை நாம் என்ன செய்துகொண்டிக்கிறோம் என்பது நமக்கே தெரியும்.அதனால்தான் மற்றவைகளை பிரபஞ்சம் நம் முன்னால், கழுதைக்கு முன் கேரட்டைப் போல தொங்கவிட்டுள்ளது.
இந்தநாவலை வாசித்துமுடிக்கையில் கண்எதிரே நீண்டிருக்கும் கொல்லிமலையைப்பார்க்கிறேன்.கோடையில் கருகித்தீய்ந்து உயிர்ப்பிடித்திருக்கிறது.முதல்மழை கண்டுவிட்டது.இன்னும் ஓரிருமழை…மலை சிலிர்த்துக்கொண்டெழும் பேரழகை ஜீன்மாதத்தில் காணலாம்.இந்தநாவல் இயற்கையை காண ,அதன் பேரழகில் மனதை வைத்து தன்னையிழக்கும் சுகத்தை நமக்கு சொல்லித்தருவதையே இதன் பெருமதிப்பாக நான் உணர்கிறேன்.பெண்ணழகிலிருந்து பேரழகிற்கு.என்னால் இந்தநாவலை அப்படிதான் அர்த்தப்படுத்திக்கொள்ளமுடிகிறது.