யஷ்வந்த் ராவ்

காஸ்மிக் தூசி –

images

 

நீங்கள் கடவுளை தேடுபவரா?
எனக்கு ஒரு நல்ல கடவுளைத் தெரியும்.
அவரது பெயர் யஷ்வந்த் ராவ்
அவர் மிகச்சிறந்த ஒரு கடவுள்.

கடவுள்களின் தரவரிசையில்
அவர் ஒருபடி கீழேதான்
என்றாலும்
அடுத்தமுறை ஜெஜூரிக்குப் போகும்போது
தவறாமல் பாருங்கள்.

வியாபாரிகளுடனும் குஷ்டரோகிகளுடனும்
சேர்ந்தவரைப்போல
அவர்கள் மத்தியில்
பிரகாரத்துக்கு வெளியே, அதுவும்
சுற்றுச்சுவருக்கு அப்பால்தான்
அவர் இருப்பது.

இன்னும் அழகான முகமுடைய
இன்னும் நீளமான உடையுடைய
கடவுள்களை நான் கண்டதுண்டு.

உங்களின் தங்கத்திற்காக
உங்கள் தங்கத்தை வசூலிக்கும் கடவுள்கள்
உங்கள் ஆன்மாவுக்காக
உங்களின் ஆன்மாவை வசூலிக்கும் கடவுள்கள்

எரியும் கரியின் மீது
உங்களை நடந்து வரச்செய்யும் கடவுள்கள்
உங்கள் எதிரிக்குள் கத்தியையும்
உங்கள் மனைவிக்குள் குழந்தையையும்
அருளும் கடவுள்கள்.

நீங்கள் எப்படி வாழவேண்டும்
என்பதை போதிக்கும் கடவுள்கள்

உங்கள் பணத்தை இரட்டிப்பாக்கும்,
நிலமதிப்பை மும்மடங்காக்கும்
கடவுள்கள்

அரைமைல் தூரம் நீங்கள்
அங்கபிரதட்சணம் செய்து வருகையில்
புன்னகையை அடக்க முடியாத கடவுள்கள்.
புதிய கிரீடம் வாங்கத்தவறினால்
உங்களை நீருக்குள் மூழ்கடித்து
சாகடித்து விடும் கடவுள்கள்.

ஏராளமாக புகழப்பட்டாலும்
என்னைப் பொறுத்தவரை,
அதிகப்படியான சமச்சீருடனோ
மிகையான நடிப்புடனோ
கூடிய கடவுள்கள்
அவர்கள்.

யஷ்வந்த் ராவ்,
கருங்கல் வடிவானவர்
தபால் பெட்டியைப்போல பளபளப்பானவர்.

வடிவமற்ற அமீபா போல
பெரிய ஒரு இனிப்பு எரிமலையை
சுவரில் அறைந்து எறிந்ததைப்போல

கையோ காலோ ஏதுமின்றி, ஒரு தலைகூட
இல்லாத வடிவெடுத்த
தனித்தன்மையானவர்,
யஷ்வந்த் ராவ்,

குறிப்பாக
நீங்கள் பெரும் குழப்பத்தில் தளர்ந்திருக்கையில்
கைகொடுத்து தூக்கிவிடுபவர்
என்பதால்
நீங்கள் சந்தித்தே ஆகவேண்டியவர்

யஷ்வந்த் ராவ்
எந்த அற்புதத்தையும் ஆற்றுபர் அல்லர்.

பூமியையோ
சொர்க்கத்துக்குச் செல்லும் ராக்கெட்டில்
உங்கள் இடத்தையோ
உறுதியளிப்பவர் அல்ல.

உங்களின் உள்முறிவுகளுக்கு
ஊக்கமளிப்பவர்
உடலின் எந்த ஊனத்தையும்
நிறைவாக்கி
உங்களை குணப்படுத்துபவர்- என்பதால்,
ஒருவகையில்
அவர் ஒரு மிகச்சிறந்த
எலும்புமுறிவு மருத்துவர்.

முக்கியமான விஷயம்
அவருக்கு கையோ, காலோ
தலையோகூட இல்லை
என்பதால்
எவரை விடவும்
உங்களை நன்கு புரிந்து கொள்பவர்.

Yeshwant Rao, Arun Kolatkar (மொழியாக்கம்)

ஒளிப்பட உதவி- Jejuri – Kadepathar Darshan, Flickr

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s