சகானோ மற்றும் நரூசேவுக்காக புது தில்லி விமான நிலையத்தில் இன்டர்நேஷனல் பிரிவில் எக்சிட் கேட் வாசலில் காத்துக் கொண்டிருந்தேன். இந்தியாவிற்கு வரும் சர்வதேச விமானங்கள் போல் இதுவும் இரவு பன்னிரண்டு மணிக்கு மேல்தான் வந்திறங்கும். அதற்குப் பிறகு அவர்கள் இம்மிக்ரேஷன், கஸ்டம்ஸ் எல்லாம் தாண்டி வெளியில் வர ஒரு மணிக்கு மேல் ஆகிவிடும். அவர்கள் ஜப்பானிலிருந்து வரும் எங்கள் வாடிக்கையாளர்கள். முதல் முறையாக இந்தியா வருவதினால் ப்ராஜெக்ட் மேனேஜரான நான் இங்கு அவர்களுக்காக அரை தூக்கத்துடன் காத்துக் கொண்டிருக்கிறேன்.
மெதுவாக கட்டிடத்திலிருந்து பயணிகள் வெளியே வரத் தொடங்கினார்கள். ‘வெல்கம் வெல்கம்’ என்று ஒருவர் கத்திக் கொண்டே தன் மகளை அணைத்துக் கொண்டார். அடுத்தவர், முகத்தில் எந்த சுவாரஸ்யமும் இல்லாமல் பெட்டியை இழுத்துக்கொண்டு பெயர்ப் பலகையுடன் நின்ற கார் ஓட்டுனர்களைப் பார்த்து ஒருவர் வைத்திருந்த பெயர்ப் பலகையில் தன் பெயரைக் கண்டு அவருக்குச் சைகை காட்டினார். ‘ப்ளீஸ் வெயிட் ஹியர் சார்’ என்று கூறிவிட்டு கார் எடுத்துக் கொண்டு வர டிரைவர் ஓடினான்.
இப்படி பலர் வந்துக் கொண்டிருக்க, சட்டென்று அவள் எல்லோர் கண்ணிலும் பட்டாள். காக்கி நிறத்தில் பாண்ட் மற்றும் வெள்ளை நிறத்தில் முழுக்கை சட்டை. ஆபிஸ் போகும்பொழுது போட்டுக் கொள்ளும் ஃபார்மல் உடை. முப்பது வயது இருக்கும். வட்டமான முகம், பாப் செய்யப்பட்ட கருத்த முடி. இது போல் அழகான பலரை\ நாம் விமான நிலையத்தில் பார்க்கலாம். ஆனால் அவள் மேல் எல்லோர் கண்களும் திரும்பக் காரணம், அவள் கண்களில் கண்ணீர்.
அவளுடன் அவள் கணவன் இருந்தான். இருவரும் மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்தார்கள். அவள் தோளில் ஒரு பை இருந்தது. அவள் கையில் ஒரு ஹாண்ட்பேக். இரண்டு அடி எடுத்து வைத்திருப்பாளோ என்னவோ, திடீர் என்று அழ ஆரம்பித்து அவள் கணவன் கையை இறுக்கமாகப் பற்றி கீழ்நோக்கி இழுத்தாள். இன்னொரு தோளில் இருந்த பையைக் கீழே வைத்துவிட்டு இடது கையால் அவளை மெதுவாக அணைத்தான் அவன், அவள் காதில் ஏதோ சொன்னான். சொல்லிவிட்டு மெதுவாக தலையைத் தடவிக் கொடுத்தான்.
அவள் கைக்குட்டை எடுத்து கண்ணீரை துடைத்துக்கொண்டு ஒரு பெருமூச்சு விட்டாள். அவனைப் பார்த்து தலையாட்டினாள். சமநிலைக்கு வந்துவிட்டாள் போல் தோன்றியது. அவள் கணவன் பையைத் தன் தோளில் மாட்டிக்கொள்ள இருவரும் நடக்க ஆரம்பித்தார்கள்.
என் அருகில் நின்று கொண்டிருந்த ஒரு டிரைவர், “என்ன ஆச்சு சார்?” என்று என்னைக் கேட்டான். “தெரியல” என்றேன். “என்ன அப்படி அழுவுது?” என்று கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.
அவர்கள் என்னைத் தாண்டிச் சென்றார்கள். அந்தப் பெண்ணின் கண்ணில் இன்னும் ஈரம் இருந்தது. என்னைத் தாண்டி நான்கு அடிகள் சென்றிருப்பார்கள். அந்தப் பெண் மறுபடியும் அழ ஆரம்பித்தாள். இந்த முறை அவள் கணவனை இறுக்கமாகக் கட்டிக்கொண்டாள். அவன் மறுபடியும் பையைக் கீழே வைத்துவிட்டு அவளை ஆணைத்துக் கொண்டான். அவள் தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தாள். வெளியே வரும் பாதையின் நடுவே அவர்கள் இருந்தார்கள். வெளியே வரும் எல்லோரும் அவர்களை குழப்பத்துடன் பார்த்துக்கொண்டே சென்றார்கள்.
யாரோ என் கையைத் தொட்டார்கள். திரும்பிப் பார்த்தால் சகானோவும் நரூசேவும் என் முன்னால் இருந்தார்கள். ‘கம் கம்’ என்று அவர்களை அழைத்துக் கொண்டு எங்கள் கார் இருந்த இடத்தை நோக்கி செல்லும் பொழுது திரும்பி பார்த்தேன். அவள் அவன் மேல் சாய்ந்தபடி மெதுவாக நடந்து கொண்டிருந்தாள்.
ஒளிப்பட உதவி- Etsy.com