ரா.கிரிதரனின் “காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை”,2009 ல் தொடங்கி 2019 வரை வெவ்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்டுள்ள பன்னிரண்டு சிறுகதைகளின் தொகுப்பு இந்தப் புத்தகம்.
புத்தக தலைப்பாய் அமைந்துள்ள “காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை” சிறுகதை ஜெர்மன் சிறையில் நடந்த ஒரு இசை அரங்கேற்றம் குறித்து எழுதப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியின் வரலாற்று பின்புலம் எதுவும் அறியாது நாம் வெறுமனே இந்தக்கதையை வாசிக்கையில் எழும் அடிப்படையான கேள்வி “நாம் ஏன் கடினமான சூழல்களில் இசையை நாடி செல்கிறோம் ? ” என்பது.
நடந்த இசை அரங்கேற்ற நிகழ்ச்சியின் பின் புலம் குறித்து, வரலாறு குறித்து ஒரு புத்தகமே எழுதப்பட்டுள்ளது – For the End of Time: The Story of the Messiaen Quartet – Rebecca Rischin என்னும் ஒரு clarinet கலைஞரால் இப்புத்தகம் எழுதப்பட்டுள்ளது. . இந்த சிறுகதை உண்மையில் நடந்த நிகழ்ச்சியின் பிரதியாக இருப்பதால், நிகழ்ச்சியை விட இந்நிகழ்ச்சி குறித்து விளக்க ஆசிரியர் எடுத்துள்ள தேர்வுகளே நாம் கணக்கில் கொள்ள வேண்டியது.
கடினமான சிறை சூழல் , ஒரு இசை மேதைமை குறித்த வியப்பு அதே நேரத்தில் அந்த இசை மேதைமையை இறுக்கமான சூழலோடு பொருத்தி பார்த்து எடை போடும் தன்மை , இசைமேதையின் பதில் – இதுவே இந்த நிகழ்ச்சியை விவரிக்கும் சிறுகதையின் வடிவம் -கதையில் சிறை சூழலின் புற விவரிப்பு நன்றாக அமைந்து வந்திருக்கிறது, அதே நேரத்தில் வாசகனுக்கு இவ்வரலாற்று நிகழ்வு குறித்த அனுமானங்களை வலிந்து வந்து கூறுவது போல் கட்டுரை போல் அமைந்து விட்டது , இந்தக் கதையில் ஆலிவர் போன்ற இசை மேதை அல்லாது வேறு ஒரு பெயர் அறியாத கலைஞன் இசைத்திருந்தால் ?அந்த இசை தொகுப்பு ” quartet for the end of time ” போல் அல்லாது யாருமறியா ஒரு இசை கலைஞனின் ஆத்ம சங்கீதமாக இருந்திருந்தால் ? இங்கு நாம் “மோகமுள்” நாவலில் வரும் ஒரு வடக்கத்திய பாடகரையும் அவரது மகனையும் நினைவு கூறலாம்.
இந்தத் தொகுப்பில் என்னை மிகவும் கவர்ந்த கதை ” நந்தாதேவி” என் கணிப்பில் இச்சிறுகதை தொகுப்பின் தலைப்பாக வைத்திருக்க பட வேண்டிய ஒன்று . இந்திய ராணுவத்தின் மலையேற்ற குழுவின் அனுபவம் குறித்து அட்டகாசமான நிகழ்த்து தன்மையுடன் அமைந்துள்ள சிறுகதை – ஜாக் லண்டன் முதல் அசோகமித்திரனின் “மிருகம்” வரை மனித வாழ்வின் விளிம்புகளை நினைவூட்டும் தொடர்ச்சியாக அமைந்திருக்கிறது,
“நீர் பிம்பத்துடன் ஒரு உரையாடல் ” – நூறு ஆண்டு கால வரலாற்று நிகழ்வுகளின் சரளமான தொகுப்பு போல் அமைந்துள்ளது – ஆசிரியர் தேர்ந்தெடுத்து இருக்கும் உத்தி முறை ரசிக்கும் வண்ணம் அமைந்திருந்தது தொடர் நிகழ்வுகளின் அவலங்களின் சித்திரத்தை அதே நேரத்தில் எந்த ஒரு பார்வையையும் கோணத்தையும் வலிந்து திணிக்காது கால மாற்றத்தின் மௌன சாட்சி போல் அமைந்துள்ளதே இந்தக் கதையின் சிறப்பு. நீண்ட நீண்ட வாக்கியங்களை படிக்கையில் தமிழின் சிறந்த நாவல்களின் ஒன்றான ” தாண்டவராயன் கதை ” நினைவுக்கு வந்தது – வரலாற்று நிகழ்வுகளின் குறிப்பிடத்தக்க ஒரு நிகழ்ச்சியை மையமாக வைத்து எழுதப்படும் கதைகள் ஒரு புறம் , வரலாற்றையே ஒரு மாபெரும் புனைவு வெளியாக்கி எழுதப்படும் கதைகள் இன்னொரு புறம் , பின்னதின் சாயலில் அமைந்துள்ள ” நீர் பிம்பத்துடன் ஒரு உரையாடல் ” எந்த ஒரு இலக்குமற்று எதேச்சையின் கரங்களால் உந்தப்பட்டு செல்லும் காலம் குறித்த நினைவலைகலாக அமைந்துள்ளது.
இசை குறித்தும் வரலாற்று பின்புலத்தில் அமைந்துள்ள கதைகள் யாவும் தகவல் செறிவு காரணமாகவும் நிகழ்ச்சியின் முக்கியத்துவம் காரணமாகவும் கவனத்தை கோருகின்றன , அதே நேரத்தில் அரசியல் சரி நிலைகள் குறித்த பிரக்ஞை காரணமாக நிகழ் தன்மை குறைந்து கட்டுரை போல் நீளும் இடங்கள் ஆசிரியர் கவனத்தில் கொள்ள வேண்டியவை.
இருள் முனகும் பாதை – நாவலாக வந்திருக்க வேண்டிய சிறுகதை – ஷுமன் கிளாரா என்னும் இசை துருவங்கள் குறித்த ஒரு கோட்டு சித்திரமாக அமைந்து விட்டது – பென்னட் என்னும் பார்வையாளன் ஷுமனின் மேதைமையை புரிந்து கொண்டவன் , இயந்திரத்தனமான வெற்றியை நோக்கி பயணித்த கிளாரா,பென்னெட்டிடம் , தன் மொத்த இருப்பின் பொய்மையை உணர்ந்து உருகுகிறாள், இயந்திரம் Vs இயற்கை என்று சட்டகம் வழியே கதையை அணுக நினைக்கையில் ஷுமன் என்னும் காதலன் தன் காதல் கடிதங்களை நமக்கு வாசிக்க அளிக்கிறான் , கடைசி ஸ்டாப்பை அறிந்திருந்தாலும் , கடைசிக்கு முந்தைய ஸ்டாப்பில் எந்த ஒரு பெரிய கலைஞனும் இறங்கி விடுவான் என்பதின் சாட்சியாக ஷுமன் கிளாரா காதல். இந்த இடத்தில சங்கர ராமசுப்ரமணியனின் இந்த கட்டுரை மிக முக்கியமானது , அனைத்துக்கும் ஆசைப்பட்டபடியே அத்வைதம் போதிக்கும் கலைமனதை உணர்கையில் மேலும் நாம் ஷுமனின் தவிப்பை புரிந்து கொள்ள முடியும் – (https://www.shankarwritings.com/2019/12/blog-post_26.html?m=1)
பலி மற்றும் மௌன கோபுரம் சிறுகதைகளில் தலைப்பு மற்றும் குறிப்புகள் சுட்டும் விஷயங்கள் நேரடியாக உள்ளது. பலி சிறுகதை ஒரு “abstract ” தன்மையுடன் அழகாக உள்ளது ,” பலி” என்னும் தலைப்பு வலிந்து வந்து ஆசிரியர் கூற விரும்புவதை சுட்டுகிறது , வேறு ஒரு மெல்லிய உருவக தலைப்பு பொருத்தமாக இருக்கக் கூடும் – இவ்விடத்தில் ஆல்பர்ட் காம்யுவின் ” The guest ” குறித்து இணைத்து வாசிக்க சில விஷயங்கள் உள்ளன – ” கதாபாத்திரத்தின் பெயர் நேரடியாக ” அரபி” என்றும் தலைப்பு ” தி கெஸ்ட் ” என்றும் உள்ளது – இக்கதையில் சுமி மற்றும் லியோன் , கதையின் தலைப்பு “பலி” – இந்த வலிய தலைப்பு எதிர்மறை அம்சம் கொண்டதாக உள்ளது – மொத்த கதையின் சாரமும் ஏன் இரண்டு அல்லது மூவர் சேர்ந்து இருக்க முடிவதில்லை ஸ்தூலம் இல்லாத எதோ ஒன்று எப்படியோ அதை ஏன் தடுத்துவிடுகிறது என்ற கேள்வியில் இருக்கிறது , இந்த சிறுகதை Godard ன் Bande à part திரைப்படத்தை நினைவூட்டியது.
வரலாறு இசை மற்றும் புலம் பெயர் வாழ்வு என்கிற வெவ்வேறான தளங்களில் ஒரு நிறைவான வாசிப்பு அனுபவமாக “காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை” சிறுகதை தொகுப்பு அமைந்துள்ளது
2 comments