ராய் மாக்ஸமின் ‘உப்பு வேலி’ நூல் குறித்து அக்களூர் இரவி

காந்தியின் தண்டி யாத்திரை, வேதாரண்யம் உப்பு சத்யாக்கிரகம் பற்றி முகநூலில் தொடர்ச்சியான பதிவுகளும் அவற்றிற்கான பின்னூட்டங்களும் ’உப்பு வேலி’ புத்தகத்தை வாசிக்கத் தூண்டின. நண்பர் எழுத்தாளர் யுவன் அவர்கள் புத்தகம் கொடுத்துதவினார். இந்த மொழிபெயர்ப்பிற்குத் தூண்டுகோலாக எழுத்தாளர் ஜெயமோகன் இருந்திருக்கிறார்.

பழைய புத்தகக்கடை ஒன்றிலிருந்து வாங்கிவந்த புத்தகத்தில் அவர் படித்த அடிக்குறிப்பு ராய் மாக்ஸமின் கவனத்தை ஈர்க்கிறது. அந்தக் குறிப்பு இதுதான்: இந்தியாவில் உப்பு வரியை நீண்ட காலமாக விமர்சனம் செய்துகொண்டிருந்த சர் ஜான் ஸ்ட்ரேச்சி, ‘உப்பு மீதான சுங்கத்தை வசூலிக்க பெரும் பூதாகரமான அமைப்பு உருவாகி வந்தது…நாகரிகமடைந்த எந்த நாட்டிலும் இதற்கு இணையான ஒன்றைக் கண்டுபிடிப்பது இயலாத ஒன்று… முள் மரங்களால் ஆன பெரும் புதர்கள் அந்த வேலியில் முக்கியப் பங்கு வகித்தன’ என்று சுட்டிக்காட்டியிருந்தார்.

இதற்குப்பின் ராய், ஒரு பெருந்தேடலில் இறங்குகிறார். ’பிரிட்டானிய போலிப் பெருமிதத்தின் விசித்திரமான சாட்சியங்களில்’ ஒன்றைத் தேடி மூன்று முறை அவர் இந்தியாவிற்கு வருகிறார். 1996, 1997, 1998.

ராய் மாக்ஸம் லண்டன் பல்கலைக்கழக நூலகத்தில் காப்பாளராக பணிபுரிந்தவர். குறிப்பில் காணப்பட்ட புதர்வேலிக்கான ஆதார நூல்களை, ஆவணங்களை, வரைபடங்களைத் தேடியலைகிறார். இந்திய ஆவணங்கள் குறித்த அலுவலகம், பிரிட்டிஷ் நூலகம், தனியார் ஆவணக் காப்பகங்கள் என்று இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அந்த வேலி இருந்த பாதையை, பகுதியைக் காட்டும் வரைபடத்தைத் தேடுகிறார்.

கிடைத்த ஆவணங்கள், வரைபடங்களுடன், ஒரு ஜி.பி.எஸ் கருவியும் ஏற்பாடு செய்துகொண்டு இந்தியாவில் புதர்வேலியைத் தேடத் தொடங்குகிறார். இந்திய நண்பர்கள் சிலர் அவருக்கு உதவி செய்கின்றனர். அந்த வேலி இருந்ததாக வரைபடம் சொல்லும் பல இடங்களுக்கு, மின்விளக்குகளோ, டாய்லெட் வசதிகளோ இல்லாத அந்தக் குக்கிராமங்களுக்குs சென்று, அங்கு தங்கி வேலியைத் தேடுகிறார். 1996ல் தொடங்கிய தேடலுக்கு இறுதியில் நவம்பர் 1998ல் விடை கிடைக்கிறது. ’பர்மத் லைன்’ என்ற சுங்கவேலியின் மிச்சத்தைக் கண்டுபிடித்தத் திருப்தியுடன் நாடு திரும்புகிறார்.

வங்காளப் பிரதேசத்தைக் கையகப்படுத்திக் கொள்ளும் கிழக்கிந்திய கம்பெனி, சிறிதுசிறிதாக தன்னைப் பலப்படுத்தி, விரிவாக்கிக் கொள்கிறது. பிளாசி யுத்தத்திற்குப் பின் அசைக்கமுடியாத சக்தியாக உருவெடுக்கிறது. உப்பு, பாக்கு, நெய், அரிசி, நாணல், மூங்கில், மீன், சணல் ஆகியவற்றை நான்கில் ஒருபங்கு விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்கிறது. வங்காளத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட சர்க்கரைக்கும் வரி விதிக்கப்பட்டது. கிழக்கிந்திய கம்பெனியும், கிளைவ் தொடங்கி வாரன் ஹேஸ்டிங்ஸ் வரையும் சாதாரண ஆங்கிலேய அலுவலர்களும், அவர்களுக்கு அடிவருடிய முதலாளிகளும் இந்தியர்களைச் சுரண்டிக் கொழுத்தனர்.

. மௌரியப் பேரரசர் சந்திரகுப்தர் காலத்திலிருந்து, பிரிட்டிஷாருக்கு முன் ஆண்ட மொகாலயர்களும் சாதாரண மக்களும் பயன்படுத்தும் உப்பிற்கு வரி விதித்துக் கொண்டுதான் இருந்தனர். அதை ஆங்கிலேயர்களும் விடாமல் தொடர்ந்தனர் ஆனால், அவர்களைப்போல் செலுத்தக் கூடியதாக இல்லாமல், பன்மடங்கு அதிகமாக வரி விதித்தனர். ஆகவே, சாதாரண மக்கள் வேறு வழியின்றி விற்ற விலைக்கு உப்பை வாங்க வேண்டியதாயிற்று. இந்த நிலை தான் நாடு முழுவதும்.

பதினெட்டாம், பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் இந்தியாவில் சில பகுதிகளில் குறிப்பாக மேற்கிலும், தெற்கிலும்தான் உப்பு உற்பத்தி இயல்பாக நடந்தது. குறிப்பாக ராஜாக்கள் ஆளும் சுதந்திர பிரதேசங்களில் நடந்தது. அவ்விடங்களில் இருந்துதான் வங்காளப்பகுதிக்கு, ஆங்கிலேயர் ஆண்ட பகுதிக்கு இறக்குமதியானது. இந்தப் பகுதியில் உப்பு உற்பத்தி மிகவும் குறைவு. இந்தப் புவியியல் குறைபாடுதான் இந்தியாவிற்குள் உப்பின் போக்குவரத்தை வேலி போட்டு தடுத்தது. உப்பின் விலை ஏற ஏற, உப்புடன் வேறு சில பொருட்களும் கடத்தப்பட்டு கம்பெனியின் ஆட்சிப்பகுதிக்குள் வர ஆரம்பித்தன. உப்பின்மீது வரி விதித்து வருமானம் பார்த்த ஆங்கிலேய நிர்வாகம், இடைஞ்சலாக இருந்த கடத்தலைத் தடுக்க சுங்கச் சாவடிகளை உருவாக்கியது. கண்காணிப்பையும் தீவிரமாக்கியது. காலப்போக்கில் அது நீண்ட பிரும்மாண்டமான சுங்க வேலியாக மாறியது.

இதன் முக்கிய நோக்கம் உப்புக் கடத்தலை தடுப்பது. அத்துடன் போதைப்பொருட்கள் கடத்தலையும் தடுப்பது.

இமயமலை அடிவாரத்திலிருக்கும் அன்றைய பஞ்சாபின் தர்பேலாவில் அந்த வேலி தொடங்குகிறது. முல்தான், சட்லெஜ் நதி, பசில்கா, பின் தென்கிழக்கில் திரும்பி, டில்லிக்கு மேற்காக சென்று, ஆக்ரா, அங்கிருந்து ஜான்ஸி, சாகர், ஹோசங்காபாத், காந்த்வா, புர்ஹான்பூர், மகாராஷ்ட்ரம்மத்தியப்பிரதேச எல்லையைத் தொட்டு, பின் கிழக்கே திரும்பி, வங்கக் கடல் நோக்கி ஒரிஸ்ஸா வழியாகச் சென்று முடிகிறது. ஏறத்தாழ 2504 மைல்கள் நீளம். சுமார் 4030 கி.மீ. லண்டனுக்கும் இஸ்தான்புல் நகருக்கும் இடையிலான தூரம்.

ஆலன் ஆக்டேவியன் ஹியூம் 1869-70ம் ஆண்டு அறிக்கையில் ”ஹெர்குலிஸ் சுமக்கும் சுமையைப்போல் பெரும் உழைப்பு இது… … பெரும் உழைப்பிலும் பாதுகாப்பதிலும் சீனாவின் பெருஞ்சுவருக்குச் சமம்” என்கிறார். அழிந்துபோகாமல், காப்பாற்றப்பட்டு அப்படியே இருந்திருந்தால், சீனப் பெருஞ்சுவர் மாதிரி சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் சரித்திர சின்னமாக இருந்திருக்கக் கூடும் என்கிறார் ராய்.

உயிருள்ள செடிகள், காய்ந்த முட்புதர்கள், வேலி அமைக்கமுடியாத இடத்தில் கற்களால் ஆன சுவர் என்பதாக சுங்க வேலி அமைக்கப்பட்டது அந்தந்தப் பிரதேசங்களில் விரைவாக வளரும் முட்செடிகள், கருங்காலி, இலந்தை மரங்கள், கிலாக்காய், சப்பாத்திக் கள்ளி போன்ற பல்வேறு கள்ளிச் செடிகள். இவற்றை ஒன்றாக இணைக்க கழற்சிக்கொடிகள் வளர்க்கப்பட்டன. குறைந்த பட்சம் பத்தடி அகலமும், அதிகபட்சம் இருபதடி உயரமுமாக இந்த சுங்கவேலி அமைந்திருந்தது.

ஏழை மக்களுக்கு அவசியமான பொருள், சுவைகூட்டி, உப்பு. அதன்மீது கம்பெனி மிக அதிகமாக வரிவிதித்தது; உப்பளத்தொழிலை நம்பியிருந்த லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வயிற்றில் அடித்தது. அத்துடன் முடியவில்லை என்கிறார் ராய் மாக்ஸம். அதாவது 1870களுக்கு முன்னும் பின்னும், அதாவது சுங்கவேலி கைவிடப்பட்ட கடைசி பதினைந்து ஆண்டுகளில் வடமேற்கு மாகாணங்களில் 37,61,420 பட்டினிச்சாவுகள் நடந்தன என்பது அரசாங்க கணக்கு. உண்மையான கணக்கு 50 லட்சமாக இருக்கலாம் என்கிறார் ராய். வெயிலிலும் பட்டினியாலும் வாடிய ஏழைகள் காய்ச்சலிலும் வயிற்றுப்போக்கிலும் இறந்தபோது அவர்களின் சாவை உப்புச் சத்துக் குறைபாடு துரிதப்படுத்தியது என்கிறார் ராய் மாக்ஸம். எவ்வளவு பெரிய கொடூரம்! மனித உடலுக்கு உப்பின் முக்கியத்துவத்தை விளக்க ஒரு அத்தியாயமே அவர் ஒதுக்கியுள்ளார். ஆசிரியரின் இந்தத் தகவல் வேதனைகொள்ள வைக்கிறது. கதிகலங்க செய்கிறது. ஆட்சியாளர்கள் சாதாரண மக்களைப் பற்றி என்றும் கவலை கொண்டதில்லை.

பிரிட்டிஷாரின் திமிர்த்தனமான போக்காலும் நடவடிக்கைகளாலும் தவிர்க்கமுடியாமல் அரங்கேறிய 1857ம் ஆண்டு சிப்பாய் புரட்சிக்குப்பின், கம்பெனி ஆட்சி விலக்கப்பட்டு, மகாராணியின் நேரடி ஆட்சி கொண்டுவரப்பட்டது. . கல்கத்தாவைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கிய பிரிட்டிஷ் அரசாங்கம் 1869ல் துண்டு துண்டாக இருந்த சுங்க வேலியை ஒன்றாக இணைக்கும்படி உத்தரவிட்டது. அதிக பட்சம் 14,000 காவலாளிகள் இந்த சுங்க வேலியை காவல் காத்திருக்கிறார்கள். நான்கு கி.மீக்கு ஒன்றாக ’சோக்கி’ எனப்படும் சுங்கச் சாவடி; பிரிட்டிஷ் வாரண்ட் ஆபிஸருக்கு இணையான ஒரு இந்தியர், ஜமேதார் பொறுப்பில். அவருக்கு கீழே பத்து பேர். அரைமைல் தூர ரோந்துக்கு ஒரு ஆள். சுங்கக்காவலாளிகளின் முக்கியப் பணி உப்புக் கடத்தப்படுவதை எக்காரணம் கொண்டு தடுப்பது. ஆனால், 1870ல் சுங்கவேலி கைவிடப்படுகிறது.

புத்தகத்திலிருந்து சில சுவாரஸ்யமான தகவல்கள்:

  • ஒரு சாதாரண இந்தியக் கூலியின் குடும்பத்திற்கு அரை ’மாண்ட்’ உப்பு தேவைப்பட்டது. 1788ல் இதன் விலை இரண்டு ரூபாய். அவனது இரண்டு மாத சம்பளம்

  • ஆங்கிலேயர் வரும்வரை உப்பின்மீதான வரி குறைவு.

  • பத்தொன்பதாம் நூற்றாண்டில் உப்பின் விலை அரிசியின் விலைக்குச் சமமாக இருந்தது.

  • வங்காள மாகாணத்தில் 1781-82இல் உப்பு மூலம் வருவாய் ரூ.29,60,130. வரி உயர்த்தியதும், 1784-85ல் வருவாய் ரூ.62,57,470.

  • 1869-70ல் சுங்க எல்லையில் மொத்த வரி வசூல் ரூ.4,35,00,000. பராமரிப்புச் செலவு ரூ.16,20,000.

  • 1876-78 பஞ்சத்தில் பிரிட்டிஷார் ஆண்ட பிரதேசத்தில் மட்டும் குறைந்தது 6,50,000 பட்டினி சாவு.

  • ஆக்டேவியன் ஹியூம் கூறுகிறார்: “எங்கள் பணியாளர்கள் 3,50,000 மைல்கள் ரோந்து போயிருக்கிறார்கள். ஞாயிறு ஓய்வே கிடையாது உலகில் இப்போது இதுபோன்று ஆட்சி நடக்கும் எந்த நாட்டிலும் இந்த ஊதியத்திற்கு வேறெந்த நிர்வாகமும் இவ்வளவு கடின உழைப்பை வாங்கியிருக்காது.

  • கடத்தல்காரர்கள் எல்லா சாதிகளையும் சேர்ந்த ஆண்களும் பெண்களும்.

  • ஒரு கட்டத்திற்குப் பின், இந்தியாவில் பல பகுதிகளில் உப்பு உற்பத்தி நிறுத்தப்பட்டு இங்கிலாந்திலிருந்து உப்பு இறக்குமதி செய்யப்பட்டது.

சம்பல் பள்ளத்தாக்கின் சகநகர் என்ற இடத்தில் நாபல் சிங் என்ற பெரியவர் மூலம் சுங்கவேலி (’பர்மத் லைன்’) இருந்ததை உறுதிசெய்யும் ராய் மாக்ஸம், மனது கேளாமல் மறு நாளும் சகநகர் வருகிறார். ஓய்வுபெற்ற பேராசிரியர் ஒருவரின் துணையோடு மிச்சமிருந்த பர்மத் லைனை, இருபது அடி அகலமுள்ள வேலியின் மிச்சங்களைக் கண்டுபிடிக்கிறார். ‘ஒருவர் குரல் கொடுத்தால் கேட்கும் தொலைவில்தான் அடுத்த ஆள் இருப்பான். ஏதாவது செய்தி யாருக்காவது சொல்லவேண்டும் என்றால், இப்படியே குரல் கொடுத்தே சொல்லிவிடலாம். ஆக்ராவுக்குக் கூட, ஏன் டில்லிக்கும் கூட’ என்று மூதாதையர் சொல்லக் கேள்வி என்கிறார் அந்த பேராசிரியர். வேலியைப் பாதுகாக்க பிரிட்டிஷார் செய்திருந்த ஏற்பாடு பிரமிப்பைத் தருகிறது.

ஒரு சாகசத் தேடலைப் போல விறுவிறுப்பாக இந்த நூலை எழுதியிருக்கிறார் ராய். சுவாரஸ்யம் குன்றாத, எளிய நடையிலான மொழிபெயர்ப்பு நம்மையும் அந்தத் தேடலில் ஈடுபடுத்துகிறது.

ஒரு பெரும்பணியை ராய் செய்துள்ளார் என்கிறார் முன்னுரையில் திரு.ஜெயமோகன். இந்திய மக்களின் இரத்தம் உறிஞ்சப்பட்டு இந்தியா கொள்ளையடிக்கப்பட்டு அதன் செல்வ வளம் பிரிட்டனுக்குக் கொண்டு செல்லப்படுவதை ‘drain of wealth theory’ மூலம் 1867ல் திரு.தாதாபாய் நவ்ரோஜி ஆவேசமாக எடுத்துரைத்தார். ராய் மாக்ஸம் இந்த நூலில், உப்பு வரி, சர்க்கரை வரி மூலம் கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியாளர்களாக இருந்த கிளைவ் தொடங்கி வாரன் ஹேஸ்டிங்கஸ், ஆக்டேவியன் ஹ்யூம் வரையிலும் கோடிகளைக் கொண்டுசென்றதை ஆதாரங்களுடன் விவரிக்கிறார்.

இந்திய மண்ணின் பண்பாட்டுக் கூறுகளை, உணவோ, பழகுவதோ, போக்குவரத்தோ, டிக்கெட் ரிசர்வேஷனோ, ரயில் பயணமோ, குதிரை வண்டியோ, டோங்கா, ஷேர் ஆட்டோ பயணமோ, கோவிலோ, பழங்கால கட்டிடங்களை தங்குமிடங்களாக பயன்படுத்துவதோ, கிராமங்களின் பெருசுகள் அன்போடு நடந்துகொள்ளும் முறையோ, உபசரிப்பதோ இவற்றையெலாம் ஆங்காங்கே சிரிப்போடும், ஆதங்கத்தோடும், வருத்தப்பட்டும், பாராட்டியும் ராய் பேசுவது, ’எப்படியாவது இன்று புதர் வேலியைக் காட்டிவிடு’ என்று கடவுளிடம் அவர் வேண்டுவது உட்பட நூலிற்குச் சுவாரஸ்யத்தைக் கூட்டுகின்றன.

காந்தி உப்பு வரிக்கு எதிராக போர்க்குரல் எழுப்பியபோது, அவருடன் இயக்கத்திலிருந்தவர்கள் இந்த முன்மொழிவைக் கேட்டு வியப்புற்றதாகப் படித்திருக்கிறோம். காந்திக்கு, ‘காற்றுக்கும் நீருக்கும் அடுத்து உப்புதான் அதிமுக்கியமானது. அது ஏழைகளுக்கான ஒரே சுவையூட்டி…. இது சூழ்ச்சித் திறன் கொண்ட மனிதன் சுமத்தும் உச்சபட்ச மனிதத் தன்மையற்ற வரி.’

1931 காந்தி இர்வின் ஒப்பந்தத்தின் போது, இந்தப் போராட்டம் குறித்துப் பேசப்பட்டது. உப்பின் மீதான வரி விலக்கப்படும் என்று காந்தி நம்பினார். 1946 செப்டம்பரில் அமைந்த இடைக்கால அரசிடம் இது பற்றி குறிப்பு ஒன்றையும் காந்தி கொடுத்தார். ஆங்கிலேயர்கள் 1947, பிப்ரவரி 28ல் இந்தியாவை விட்டு வெளியேறுவதற்கு ஆறுமாதங்களுக்குமுன் இந்த வரி விலக்கப்பட்டது. சந்திரகுப்தர் காலத்திலிருந்து ஏழைகளைத் துரத்திய உப்புவரி ஒரேயடியாகத் தொலைந்துபோனது.

துணைக்கண்டத்தின் குறுக்காக இப்படி ஒரு வேலி அமைத்தது, பிரிட்டானியரின் பெரும் சாதனையே: ஆனால் பஞ்சத்தால் வாடியவர்கள் உப்புக்காக எவ்வளவு பாடுபட்டிருப்பார்கள்.”

ஒரு ஆங்கிலேய மடமையின் ஆதாரமாகத்தான் வேலியை நினைத்திருந்தேன்; உண்மையில் ஆங்கிலேய அடக்குமுறையின் அசுர முகமாக அதைக் கண்டடைந்தேன்; அதிர்ச்சியுற்றேன்” –ராய் மாக்ஸம்.

இந்தியா குறித்த ஒரு முக்கிய ஆவணம் இந்தப் புத்தகம்.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.