இலைகளற்ற கிளைகளில்
வலசைக்குச்
சென்றுவிட்ட
பறவைகளின் கூடுகள்,
காய்ந்த
சுள்ளிகளாய் சுருங்கி
சோம்பித் தெரிகின்றன
மரத்தில்.
தேவையை மீறி
ஏகார்ன் காய்களை
பதுக்கிக் கொண்ட
குழிகளில்
தங்கள் பிள்ளைகளுடன்
பதுங்கிக்கொண்டு விட்டன
அணில்கள்.
வெட்கத்தை விட்டு
ஆடைகளை களைந்துவிட்ட
மேப்பிள் மரங்களை,
தன்
தடையின்மைகளால்
தொடர்ந்து
புணர்ந்து கொண்டிருக்கிறது,
வட திசையிலிருந்து
வீச ஆரம்பித்திருக்கும்
குளிரின் காற்று.
விசும்பிலிருந்து
துளிர்த்துத்
தெறிக்கிறது
முதல் துளியின்
பனி.