ஒழுகுநீர் ஆரல் பார்க்கும் –

சோ.சுப்புராஜ்

நம்பிராஜனுக்கு சென்னையில் உள்ள CLC என்ற பிரபலமான கட்டுமான நிறுவனத்திலிருந்து நேர்முகத் தேர்விற்கு அழைப்பு வந்திருந்தது. அவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது. அவன் சமீபத்தில் அந்தக் கம்பெனிக்கு வேலைக்கான விண்ணப்பம் எதையும் அனுப்பயிருக்கவில்லை.

நம்பிராஜன் கடந்த மூன்று வருஷங்களுக்கும் மேலாக வேலை இல்லாமல் தான் இருந்தான். அவனுடைய மனைவி சுமித்ரா தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக வேலை பார்த்ததால் அந்த வருமானத்தில் தான் அவர்களின் வீட்டில் உலை கொதித்துக் கொண்டிருந்தது.

இப்போது அதிலும் ஒரு சிக்கல் முளைத்திருக்கிறது. சிக்கல் முளைத்திருக்கும் இடம் சுமித்ராவின் கர்ப்பப் பை. ஆம் அவள் அவர்களின் இரண்டாவது குழந்தையை உண்டாகி இருந்தாள். மருத்துவர் கர்ப்பத்தை உறுதி செய்த நாளில் “இந்தக் குழந்தையைக் கலைச்சுடலாம்ப்பா….” என்றாள் ரகசியக் குரலில் கண் கலங்கியபடி.

”ஏம்மா, நரேனுக்குத் தான் அஞ்சு வயசுக்கும் மேல ஆயிடுச்சுல்ல….”

”நான் கன்சீவ் ஆயிருக்குறது தெரிஞ்சா எங்க ஸ்கூலுல வர்ற ஏப்ரல் மாசத்தோட வேலையிலருந்து நின்னுக்கச் சொல்லீடுவாங்க…..”

”ஏன் அப்படி? உங்க ஸ்கூலுல வேலை பார்த்தா குழந்தை பெத்துக்கக் கூடாதா?”

”ஆமா, வருமானம் வேணுமின்னா குழந்தை பெத்துக்கத்தான் கூடாது….”சொல்லிக் கொண்டிருக்கும் போதே உடைந்து அழத்தொடங்கி விட்டாள் சுமித்ரா. கொஞ்ச நேரத்தில் சுமித்ராவே தெளிந்து சேலைத் தலைப்பால் கண்களைத் துடைத்துக் கொண்டு பேசத் தொடங்கினாள். ”நான் ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூக்குப் பாடம் நடத்துறேன். பாதி வழியில குழந்தை பெத்துக்கப் போயிட்டன்னா புள்ளைங்கள யாரு அரசாங்க பரீட்சைக்குத் தயார் படுத்துறது….?”

”நீ குழந்தை பெத்துட்டு திரும்பவும் ஸ்கூலுல போயி ஜாயின் பண்றது வரைக்கும் இன்னொரு டீச்சர் போட்டு பாடம் நடத்திக்க மாட்டாங்களா உங்க ஸ்கூலுல….”

”அப்படியெல்லாம் செய்றதுக்கு அவங்க என்ன கல்வி சேவை பண்றதுக்கா ஸ்கூல் நடத்துறாங்க? ஏப்ரலோட என்னை வெளிய அனுப்பிட்டு ஜூன் மாசம் புதுசா டீச்சர் அப்பாயிண்ட் பண்ணீடுவாங்க. அவங்களுக்கு மே மாசச் சம்பளம் மிச்சம். அப்படித்தான் யோசிப்பாங்க….!”

”பெண்களுக்கு ஒன்பது மாசங்களுக்கு சம்பளத்தோட மகப்பேறு விடுப்பு குடுக்கனுமின்னு சட்டம் இருக்கேம்மா….!”என்றான் நம்பிராஜன் அப்பாவியாய்.

”கடுப்பக் கிளப்பாதப்பா. அதெல்லாம் அரசாங்கத்துல வேலை பார்க்குறவங்களுக்கு. எங்கள மாதிரி அத்தக் கூலிகளுக்கு இல்ல….!”

சுமித்ரா சொன்னதிலிருந்து நம்பிராஜனுக்கு தெளிவாய்ப் புரிந்தது. ஒன்று மூன்று மாதங்களுக்குள் அவன் ஏதாவது வேலையில் சேர்ந்தாக வேண்டும். அல்லது சுமித்ராவின் கர்ப்பத்தைக் கலைக்க வேண்டும். நினைக்கும் போதே நெஞ்சிற்குள் வேதனையாக இருந்தது.

நம்பிராஜன் படித்து முடித்ததிலிருந்தே சின்னச் சின்னக் கம்பெனிகளில் பிராஜெக்ட் அடிப்படையில் தான் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். பிராஜெக்ட் முடிந்ததும் வீட்டிற்கு அனுப்பி விடுவார்கள். அப்புறம் வேலை தேடும் படலத்தில் இறங்குவான். இரண்டு மூன்று மாதங்களில் வேலை கிடைக்கும். ஆனால் அதுவும் ஒன்றரை அல்லது இரண்டு வருடங்களுக்குத் தான். மறுபடியும் வேலை இழப்பான்.

ஆனால் அதிகபட்சம் மூன்று நான்கு மாதங்களுக்குள் அடுத்த வேலை கிடைத்துவிடும். ரியல் எஸ்டேட் துறையின் கடுமையான வீழ்ச்சியினாலும் பொருளாதாரத்தின் கன்ணுக்குத் தெரியாத சில பாதக அம்சங்களாலும் இந்த முறைதான் மூன்று வருஷங்களைக் கடந்தும் அவனுக்குத் தோதான வேலை எதுவும் அமையவில்லை.

நம்பிராஜனுக்கு கல்லூரியில் படிக்கும் காலத்திலிருந்தே எழுதுகிற கிறுக்கு கொஞ்சம் இருந்தது. வேலை கிடைப்பது இழுத்துக் கொண்டே போகவும் அவன் முழுநேர எழுத்தாளனாக முடிவு செய்து தொடர்ந்து எழுதத் தொடங்கினான். பிரசுரமான கதைகளை எல்லாம் தொகுத்து மூன்று புத்தகங்களாகக் கொண்டு வந்தான்.
மிகச் சரியாக அவன் வேலைக்குப் போயே ஆக வேண்டும் என்கிற சூழலில் CLC கம்பெனியிலிருந்து நேர்முகத் தேர்விற்கு அழைப்பு வந்திருக்கிறது. வேலை கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை; தனக்கு எப்படி இண்டர்வியூக்கு அழைப்பு வந்தது என்பதைத் தெரிந்து கொள்வதற்கேனும் நேர்முகத் தேர்வில் போய்க் கலந்து கொள்வது என்று முடிவு செய்து சென்னைக்குக் கிளம்பினான் நம்பிராஜன்.

நேர்முகத் தேர்விற்கு போய்விட்டு மதுரைக்குத் திரும்புகிற வழியில் செங்கல்பட்டில் இறங்கி கலியமூர்த்தி ஸாரைப் பார்த்துப் பேசிவிட்டு அவருடன் ஒருநாள் இருந்து விட்டு அடுத்தநாள் ஊருக்குப் போய்க் கொள்ளலாம் என்று முடிவு செய்து கொண்டு தான் கிளம்பினான்.

கலியமூர்த்தி என்பவர் அவனுடைய வாசகர். அவன் இதுவரை அவரை நேரில் பார்த்தது கூட இல்லை. போனில் தான் பேசி இருக்கிறான். அதுவும் பெரும்பாலும் அவர்தான் தொடர்பு கொள்வார். மணிக்கணக்காக சலிக்காமல் பேசிக் கொண்டே இருப்பார். இவன் ’கிழம் அறுக்கத் தொடங்கி விட்டது….’ என்று மனதுக்குள் நினைத்தபடி எரிச்சலுடன் கேட்டுக் கொண்டிருப்பான்.

சில மாதங்களுக்கு முன்பு தினப்பத்திரிக்கை ஒன்றின் ஞாயிறு இணைப்பு மலரில் நம்பிராஜனின் சிறுகதை ஒன்று பிரசுரமாகி இருந்தது. அந்த சிறுகதையை கொஞ்சம் வித்தியாசமாக கபிலர் எழுதிய ஒழுகுநீர் ஆரல் பார்க்கும் என்னும் குறுந்தொகைப் பாடல் ஒன்றை அடிப்படையாக வைத்து எழுதி இருந்தான்.

வனத்துறையில் அதிகாரியாக இருக்கும் ஒருவர் அவருடைய பொறுப்பில் இருக்கும் வனப்பகுதிக்கு சுள்ளி பொறுக்குவதற்காகவும் தேனெடுப்பதற்காகவும் அவ்வப்போது மூலிகைகளைப் பறிப்பதற்காகவும் வரும் மலைஜாதிப் பெண்ணொருத்தியைக் காதலித்து வனத்தின் இயற்கையான சூழலில் அவளுடன் உடலுறவும் வைத்துக் கொள்கிறார்.
தனக்கு வன அதிகாரியுடன் இருக்கும் காதல் உறவுபற்றி மலை ஜாதிப்பெண் தன்னுடைய தோழியிடம் பிரஸ்தாபிக்கிறாள். அதைக்கேட்ட தோழியோ அவளிடம் மோசம் போயிட்டியேடி. அவர் பெரிய அதிகாரியாக உயர்ந்த இடத்தில் இருப்பவர். அவர் உன்னை ஏமாற்றிப் போய்விட்டால் என்ன செய்வாய்? உன்னுடைய உறவை எதைச்சொல்லி நிரூபிப்பாய்? என்று ஆற்றாமையில் புலம்புகிறாள். ஆனால் மலைஜாதிப் பெண்ணோ அவர் என்னுடன் காதல் உறவில் இருந்ததை பார்த்த சாட்சிகள் யாருமில்லை தான். அவர் என்னை ஏமாற்றிப் போய் விட்டால் நான் ஏதும் செய்ய முடியாது தான். ஆனால் வனத்தில் இருந்த ஒவ்வொரு மரமும் பசுமையான செடிகொடிகளும் ஓடையில் சலசலத்து ஓடும் நீரும் அதனுள் துள்ளி விளையாடிய மீனும் ஓடைக்கரையில் இருந்த நாணலும் பசிய புல் தாவரங்கள் பலவும் நாங்கள் காதல் உறவில் களித்திருந்த காட்சிகளைப் பார்த்துக் கொண்டுதான் இருந்தன என்று பத்தாம்பசலியாகப் பதில் சொல்கிறாள். தோழியோ இப்படியா ஒருத்தி அசடா இருப்பாள் என்று வேதனைப்படுகிறாள். அவள் பயந்தபடியே சில மாதங்களுக்கு அப்புறம் வனத்துறை அலுவலருக்கு இடம் மாறுதல் உத்தரவு வருகிறது. அதைப்பற்றி மலைஜாதிப் பெண்ணிடம் ஏதும் சொல்லாமல் அங்கிருந்து கிளம்பிப் போய்விடுகிறார். மலைஜாதிப் பெண்ணோ வனத்தில் அவர்களின் உறவிற்கு சாட்சியாக நின்றிருந்த மரம் செடி கொடிகளிடமும் ஓடைத் தண்ணீரில் துள்ளி விளையாடும் மீன்களிடமும் பேசியபடி பைத்தியமாக அலைவதாய்க் கதை முடிகிறது.

எப்போதுமே சிறுகதையோ கவிதையோ பிரசுரமானால் படைப்பை விமர்சித்து பத்திரிக்கை அலுவலகத்திற்கு வரும் வாசகர் கடிதங்களை எல்லாம் ஒளிநகல் எடுத்து அனுப்பி வைப்பார்க்கள். சமீபத்தில் பிரசுரமான சிறுகதைக்கு வந்த வாசகர் கடிதங்களில் ஒரு கடிதம் மிகவும் வித்தியாசமாக இருந்தது. செங்கல்பட்டிலிருந்து கலியமூர்த்தி என்பவர் எழுதி இருந்தார்.

நம்பிராஜன் எழுதியிருந்த சிறுகதை தன்னுடைய பால்யத்தைக் கிளறி விட்டுவிட்டதாகவும் கதை எழுதிய எழுத்தாளரை சந்தித்தே ஆக வேண்டுமென்றும் எழுதி இருந்தார். அவர் எழுதி இருந்ததை பொருட்படுத்தாத நம்பிராஜன் வழக்கம் போல் தனக்கு வந்திருக்கும் வாசகர் கடிதங்கள் ஒவ்வொன்றிற்கும் போஸ்ட் கார்டில் நன்றி தெரிவித்துக் கடிதம் எழுதினான்.

கடிதம் எழுதிய மூன்றாவது நாள் கலியமூர்த்தி நம்பிராஜனை அலைபேசியில் அழைத்தார். ”நீங்கள் எழுதி இருக்கும் கதையை உங்களுக்கு யார் சொன்னது?” என்று எடுத்த எடுப்பிலேயே கேட்டார்.

நம்பிராஜன் அது தன்னுடைய கற்பனையில் உருவான கதைதான் என்று எவ்வளவோ சொல்லியும் அவர் நம்பவில்லை. திரும்பத் திரும்ப அந்தக் கதையை உங்களுக்கு யார் சொன்னது என்றே கேட்டுக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் அது தன்னுடைய வாழ்க்கையில் நிகழ்ந்த கதை என்றும் கதையில் வரும் வனத்துறை அதிகாரி தான் தான் என்றும் சொல்லி அழுது விட்டார்.

பால்யத்தில் தான் மலைஜாதிப் பெண் ஒருத்தியிடம் அவளின் ஏழ்மையைப் பயன்படுத்திக் கொண்டு, அவளைக் காதலிப்பதாய் பாவணை பண்ணி அவளை சீரழித்துவிட்டு அதைப்பற்றி எந்த ஒரு குற்ற உணர்வும் இல்லாமல் அங்கிருந்து மாற்றல் வாங்கிக் கொண்டு போய் விட்டதாகவும் இந்தக் கதையை வாசித்தபின்பு தான் எவ்வளவு பெரிய பாபத்தை செய்து விட்டோம் என்றே உறுத்தியதாகவும், அதற்கு பிராயச்சித்தம் செய்ய வேண்டுமென்றும் அழுதார்.

உங்களுக்கு நீங்கள் எழுதியிருக்கும் கதையைச் சொன்னவர் யார் என்று தயவு செய்து சொல்லுங்கள் என்றார் மறுபடியும் . நம்பிராஜனும் யோசித்துப் பார்த்தான். இந்தக் கதைக்கான கரு தன்னுடைய மனதில் எப்பொழுது விழுந்தது?துல்லியமாய் ஞாபகமில்லை. காலத்தின் புகைபடிந்த சித்திரம் போல் இலேசாய்த் துலங்கியது.

அப்போது அவனுக்கு பதினைந்து அல்லது பதினாறு வயதிருக்கும். அவன் கதைகள் வாசிக்கத் தொடங்கி இருந்தான். ஆனால் எழுதுகிற ஆசைகூட முளைவிடவில்லை அப்போதெல்லாம். அம்மாவுடன் மலைகளிலும் காடுகளிலும் அலைந்து விளையாடிக் கொண்டிருந்த ஏதோ ஒரு நாளில் அம்மாவின் மனதில் சந்தோஷமோ அல்லது அதீத வருத்தமோ கவிந்த ஒரு தருணத்தில் அம்மா தான் அவனுக்கு இந்தக் கதையைச் சொன்னது போல் ஞாபகம் இருந்தது.

ஆனால் இப்போது யோசிக்கும் போது அது அவ்வளவு நிச்சயமாகவும் தெரியவில்லை. அவன் எழுதியிருக்கும் கதையில் அம்மா சொன்னது எந்த அளவிற்கு பதிவாகி இருக்கிறது என்பதிலும் குழப்பமே மிஞ்சியது. பலவாறு யோசித்து நம்பிராஜனும் அந்த நேரத்தில் மனதில் தோன்றியவாறு என்னுடைய அம்மாதான் அவளின் தோழியின் வாழ்க்கையில் நடந்ததாக சொன்ன கதையைத் தான் கற்பனை கலந்து எழுதியதாகச் சொன்னான்.

“உங்களின் அம்மாவின் தோழி இப்பொழுது எங்கிருக்கிறார்கள்?” என்றார் படபடப்புடன்.

அம்மாவின் தோழி பற்றி தனக்கு தகவல் ஏதும் தெரியாது என்றும் கதையைச் சொன்ன அம்மா இப்போது உயிரோடு இல்லை என்றும் சொல்லவும் நல்ல ஆத்மாக்களை ஆண்டவன் சீக்கிரம் தன்னிடம் அழைத்துக் கொள்கிறார்; என்னை மாதிரியான பாப ஆத்மாக்களை வாழ்ந்து துன்பப்பட வைத்து விடுகிறார் என்றார் கனிந்த குரலில்.

அதற்கப்புறம் அடிக்கடி போனில் பேசத் தொடங்கினார். இலக்கியம், தத்துவம், வரலாறு என்று கலந்து கட்டிப் பேசிக் கொண்டிருப்பார். பெரிய அறிவாளி என்பதும், நிறைய வாசிக்கிறவர் என்பதும் அவருடைய பேச்சில் வெளிப்படும். பல சமயங்களில் அவர் என்ன பேசுகிறார் என்பது நம்பிராஜனுக்கே புரியாமல் வெறுமனே காது கொடுத்துக் கொண்டிருப்பான்.

கலியமூர்த்தி எழுபத்தைந்து வயது கடந்த முதியவர். அவருடைய மனைவி ஐந்து வருடங்களுக்கு முன்பு தவறி விட்டார். அவர்களுக்கு ஒரே பையன். அமெரிக்காவில் மனைவி, குழந்தைகளுடன் வசிக்கிறான். அம்மாவின் மரணத்திற்கு அவசர அவசரமாக வந்து போனவன் அதற்கப்புறம் எட்டியும் பார்க்கவில்லை.

செங்கல்பட்டில் இருப்பது சொந்தவீடு. இவரே சமையல் செய்து கொள்கிறார். வீட்டு வேலைகளுக்கும் தேவையான சாமான்கள் வாங்கி வருவதற்கும் ஒரு வயதான பெண்ணை வேலைக்கும் வைத்திருக்கிறார்.

கலியமூர்த்தியின் குற்ற உணர்ச்சியும் தனிமையும் தான் அவரை நம்பிராஜனிடம் அதிகமாகப் பேச வைக்கிறது என்று அவன் புரிந்து கொண்டதால், அவர் பேசுவதை மனசுக்குள் எழும் எரிச்சலையும் மீறி சகித்துக் கொள்ளத் தொடங்கினான்.

அலைபேசி உரையாடல்களில் நம்பிராஜனைப் பற்றியும் அவன் குடும்பம் பற்றியும் அக்கறையாக விசாரிப்பார். ஒருசமயம் அவன் கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக வேலைக்குப் போகாமல் முழுநேர எழுத்தாளனாக இயங்கிக் கொண்டிருப்பதை அறிந்ததும் , ”உங்களுக்கு உட்கார்ந்து அழிக்கிறதுக்கு பூர்வீக சொத்து நிறைய இருக்கோ….?” என்று சிரித்துக் கொண்டே விசாரித்தார்.

”அதெல்லாம் ஒன்னும் இல்லை ஸார்…,”என்று நம்பிராஜன் சொல்லவும், “முதல்ல வயித்துப் பாட்டுக்கு வழிபண்ணிக்கிட்டு ஒழிஞ்ச நேரத்துல இலக்கியம் பண்ணுங்க ஸார் போதும்….” என்றார் கோபமாய்.

“எழுத்தை நம்பி வாழ்றதுங்குறது தற்கொலைக்குச் சமமானது ஸார். பாரதியவே பட்டினி போட்டுக் கொன்ன சமூகம் நம்மளோடது ஸார்….” என்றும் அலுத்துக் கொண்டார்.

”சுஜாதா எவ்வளவு எழுதுனார். ஒரு கட்டத்துல ஒரே சமயத்துல எல்லா வார இதழ்கள்லயும் அவரோட தொடர்கதைகள் வந்துச்சு. அப்படி எழுதித் தள்ளியும் கடைசி காலத்துல அவரோட மருத்துவ செலவுகள சினிமாக்காரர்கள் தான் பார்க்க வேண்டி இருந்துச்சு. அவரோட மனைவி கூட ஒரு பேட்டியில நாங்க அவ்வளவு வசதியா வாழலைன்னு சொல்லி இருந்தாங்களே….! இத்தனைக்கும் அவர் வேலைய விடாமலே தான் எழுதிக் குவிச்சார்….”

”சமீபத்துல இறந்து போன எழுத்தாளர் பிரபஞ்சன் கூட ஒரு பேட்டியில சொல்லி இருந்தத வாசிச்சீங்களா? ’தினசரி ரெண்டுவேளை உணவுக்கு வருமானம் வந்திருந்தால் இன்னும் நெறைய நல்ல படைப்புகளத் தந்திருப்பேன்னு….’ சொல்லி நம்ம சமூகத்தோட நடுமண்டையில நச்சுன்னு போட்டுட்டுப் போய்ச் சேர்ந்துட்டார். அதனால கொஞ்சமும் தாமதிக்காமல் உடனேயே ஏதாச்சும் வேலையில போய்ச் சேருங்கஸார்….”என்று அக்கறையாகக் கடிந்து கொண்டார் கலியமூர்த்தி.

”வேலை தேடிக்கிட்டுத் தான் ஸார் இருக்கேன். ஒன்னும் சரியா அமைய மாட்டேங்குது….”

”சிவில் இஞ்சினியரிங் படிச்சு பத்துப் பதினைஞ்சு வருஷத்துக்கு மேல அனுபவமிருக்கிற உங்களுக்கே வேலை கிடைக்கலையா? ஆச்சர்யமாத்தான் இருக்கு ஸார்…” என்றவர், “மனசைத் தளர விடாமத் தொடர்ந்து முயற்சி பண்ணுங்க ஸார்; கண்டிப்பா வேலை கிடைக்கும்….” என்று நம்பிக்கை ஊட்டினார்.

ஒருநாள் நம்பிராஜன் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்த போது கலியமூர்த்தியிடமிருந்து அழைப்பு வந்தது. நேரம் பார்த்தான். அதிகாலை மூன்று மணியாகி சில நிமிடங்களே கடந்திருந்தது. பதறிப்போய் பச்சையை அழுத்திப் பேசினான். “சொல்லுங்க ஸார்…..”

”அகால வேளையில உங்களத் தொந்தரவு பண்ணீட்டேன். மன்னிச்சுக்குங்க. மனசு ரொம்பவும் பாரமாவும் ஏதோ இனந்தெரியாத பயமாவும் இருக்கிறதாலோ என்னவோ தூக்கமே வரல. உங்ககிட்டப் பேசிக்கிட்டு இருந்தால் மனசு கொஞ்சம் லேசாகும். அதான் சட்டுன்னு யோசிக்காமக் கூப்பிட்டுட்டேன்….”

”அதெல்லாம் பரவாயில்ல ஸார். எதுவும் பிரச்னையா ஸார்….?”

”என்னோட முதுமையும் குற்ற உணர்வும் தான் பிரச்னை. இப்பல்லாம் நீரோடையையும் அதில் விளையாடும் மீன்களையும் பச்சைத் தாவரங்களையும் சாதாரணமாக் கடந்து போக முடியவில்லை என்னால். நீங்க உங்க கதையில எழுதி இருக்கிற சம்பவங்களும் நான் ஏமாற்றி ஓடிவந்த மலைஜாதிப் பொண்ணும் ஞாபகத்தில் வந்து என்னை வதைக்கின்றன.….” என்றவர் அதிகாலை நான்கு மணிவரைப் பேசிக் கொண்டிருந்தார். மேலும் கடவுள், மரணம், மானிட வாழ்வு என்று என்னன்னவோ தத்துவங்கள் எல்லாம் பேசிக் கொண்டிருந்தார். நம்பிராஜனும் அலைபேசியைக் காதில் வைத்துக் கொண்டு புரிந்தும் புரியாமலும் அரைத் தூக்கத்தில் ஆழ்ந்திருந்தான்.

அடுத்த நாள் பகலில் ”நான் கும்பகோணத்துல இருக்கிற ஒரு முதியோர் இல்லத்துல போய்ச் சேர்ந்துடலாம்னு இருக்கேன்…”என்று ஆரம்பித்தார்.

”ஏன் ஸார் திடீர்னு இந்த முடிவு…..”

”எனக்கு வீட்டுவேலைகள் செய்றதுக்கு ஒரு அம்மாவை உதவிக்கு வச்சிருந்தேன்னு சொல்லி இருந்தேன் இல்லியா, ரெண்டு நாளைக்கு முன்னால அவங்க இறந்து போயிட்டாங்க….”

”ஓ… வருத்தமாத் தான் இருக்கு. உங்க உதவிக்கு வேற யாரையாச்சும் வச்சுக்கலாமே ஸார். இல்லைன்னா உங்க பையன் தான் அமெரிக்காவுக்குக் கூப்டுறார் இல்ல. அவர்கூடப் போயி இருங்களேன்…”

”அவன் கூப்புடுறதெல்லாம் சும்மா ஒப்புக்குச் சப்பாணி. என்னை அவனோ அவனை நானோ ரெண்டு மூனு நாளைக்கு மேலகூட சகிச்சுக்க முடியாது. அப்பன் பையன்ங்குறதாலேயே ஒட்டுதல் வரனும்னு அவசியம் இல்லை ஸார். உங்களுக்குப் புரியும்னு நெனைக்கிறேன்….”

”வேணுமின்னா மதுரைக்கு வந்து என்கூடக் கொஞ்சநாள் இருங்களேன் ஸார்…..”

”உங்க அழைப்புக்கு நன்றி ஸார். ஆனால் நான் யாருக்கும் பாரமா இருக்கிறத விரும்பல. அதனால முதியோர் இல்லத்துல போய் சேருறதுன்னு முடிவு பண்ணீட்டேன் ஸார். ஆனால் என்கிட்ட தமிழ், ஆங்கிலம், தெலுங்குன்னு ஐயாயிரத்துக்கும் மேல புத்தகங்கள் இருக்கு. என்னை புத்தகங்களின் காதலன்னே சொல்ல்லாம். கொஞ்சம் கொஞ்சமா வாங்கிச் சேர்த்த புத்தகங்கள். எல்லாமே அரிதான பொக்கிஷங்கள்.

என்னோட தனிமைக்கும் குற்ற உணர்ச்சிகளுக்கும் புத்தகங்கள் தான் மிகப்பெரிய அவுட்லெட். ஆனால் என் பையனுக்கு புத்தக வாசணையே ஆகாது. அவன் இதையெல்லாம் பாதுகாப்பான்ங்குறதுல எனக்குக் கொஞ்சமும் நம்பிக்கை இல்ல. நான் செத்துப் போனதும் அவன் இதையெல்லாம் என்னோட சிதையிலேயே போட்டு விறகுச் செலவு மிச்சமின்னு எரிச்சிட்டுப் போயிடுவான்னு பயமாவும் இருக்கு. ஆனாலும் என்ன பண்றதுன்னே தெரியல..”

”ஏதாவது லைப்ரேரிக்குக் குடுத்துடுங்களேன் ஸார்…..”

”இல்லை. புத்தகங்களோட அருமை தெரிஞ்ச உங்கள மாதிரியான எழுத்தாளர்களால தான் இதையெல்லாம் காப்பாத்த முடியும். நீங்க எடுத்துக்கிறீங்களா?”

”புத்தகங்கள வீட்டுக்குள்ள அடுக்கீட்டு நாங்க வீதியில போய்த்தான் குடும்பம் நடத்தனும். நாங்க இருக்கிறது ஒண்டுக் குடித்தன வாடகை வீடு. வீடு மாத்துறப்பல்லாம் புத்தகங்கள் பெரிய சுமையா இருக்கும் ஸார்….”

”அப்ப சரி. நான் வேற ஏற்பாடு பண்ணிக்கிறேன். நான் முதியோர் இல்லத்துக்குப் போறதுக்கு முன்னால உங்கள ஒருமுறை சந்திக்க முடிஞ்சா சந்தோஷப்படுவேன். நான் வேணா மதுரைக்கு வரட்டுமா ஸார்…..?”

”வயசான காலத்துல நீங்க வந்து சிரமப்பட வேணாம் சார். நானே வர்றேன்….?

நம்பிராஜன் அவனை நேர்முகத் தேர்விற்கு அழைத்திருந்த கம்பெனிக்குப் போனபோது தான் தெரிந்தது. அவன் மட்டுமே நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்பட்டிருந்தான் என்பது. அவனுக்கு இன்னும் குழப்பம் அதிகரித்தது.

ஒரு மணி நேரத்திற்கு தேர்வெழுத வைத்துத் திருத்தி, மூன்று நபர்கள் கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டு, கடைசியாக கம்பெனி சேர்மனின் அறைக்குள் அனுப்பி வைத்தார்கள்.

அவர் நம்பிராஜனின் குடும்பப் பின்னணி பற்றி சம்பிரதாயமாக ஒன்றிரண்டு கேள்விகள் கேட்டுவிட்டு, “சரி, ஹெச்.ஆர். டிபார்ட்மெண்ட்ல போய் அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் வாங்கிக்குங்க. அடுத்தவாரம் ஆபிஸ் வந்து வேலையில சேர்ந்துக்குங்க….” என்றார். நம்பிராஜனுக்கே நம்ப முடியாமல் இருந்தது.

ஆர்டரை வாங்கிக் கொண்டு அவருக்கு நன்றி சொல்வதற்காக மறுபடியும் சேர்மனின் அறைக்குப் போனபோது “உங்களுக்கு கலியமூர்த்தி ஸாரை எப்படித் தெரியும்?”என்றார்.

“அவர் என்னோட வாசகர் ஸார்….”இவர் ஏன் கலியமூர்த்தியைப் பற்றி விசாரிக்கிறார் என்று அவனுக்கு ஆச்சர்யமாக இருந்த்து.

”ஓ…. நீங்கள் எழுத்தாளரா! அவர்தான் நீங்க வேலை இல்லாமக் கஷ்டப்படுறதாகவும், உங்களுக்கு ஏதாச்சும் வேலை போட்டுக் கொடுக்கும் படியும் சொன்னார். அவர் அவ்வளவு சுலபமா யாரையும் பரிந்துரைக்க மாட்டார். நீங்களும் சோடை போகலை; ரொம்ப திறமைசாலியாவே இருக்கீங்க….” என்று பாராட்டினார்.

”அவருக்கும் இந்தக் கம்பெனிக்கும் என்ன ஸார் சம்பந்தம்?” என்றான் நம்பிராஜன் தயங்கியபடி.

”ஒரு சம்பந்தமும் இல்ல; ஒரு காலத்துல எங்க தாத்தாவும் அவரோட நண்பரும் சேர்ந்து பார்ட்னர்ஷிப்ல கன்ஸ்ட்ரக்ஷன் பிஸினஸ் தொடங்குனாங்க. எங்க தாத்தா கடுமையான உழைப்பாளி. ஆனால் கம்பெனியோட கணக்கு வழக்குகளோ நெளிவு சுளிவுகளோ பார்க்கத் தெரியாது. ஒரு கட்டத்துல ஆடிட்டரும் பார்ட்னரும் சேர்ந்துக்கிட்டு கம்பெனி நஷ்டத்துல இருக்குன்னு சொல்லி தாத்தாவைக் கழட்டி உட்டுட்டாங்க. அப்பத் தாத்தா பிழைக்குறதுக்கு வழி இல்லாம நடுதெருவுல நின்னுருக்கார். தாத்தாவுக்கும் சொந்த ஊர் செங்கல்பட்டு தான். அவர் திசை தெரியாமத் தடுமாறிக்கிட்டு இருந்தப்ப கலியமூர்த்தி சார்தான் அவரோட வீட்ட அடமானம் வச்சு பணம் வாங்கிக் குடுத்து இந்தக் கம்பெனியத் தொடங்க உதவினார்….”

நம்பிராஜனுக்கும் மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது

நம்பிராஜன் நேர்முகத்தேர்வு முடிந்து கலியமூர்த்தியைத் தேடிப்போனபோது வீடு திறந்திருந்தது. அழைப்பு மணிக்கும் குரலுக்கும் யாரும் வராததால் உள்ளே போனான். வரவேற்பரையில் ஈஸிச்சேரில் சாய்ந்தபடி ஒரு முதியவர் தூங்கிக் கொண்டிருந்தார். அவர் மார்பில் விரிக்கப்பட்டிருந்த புத்தகம் ஒன்று கவிழ்ந்து கிடந்தது.

அவர் கலியமூர்த்தியாகத் தான் இருக்க வேண்டும் என்று நம்பிராஜனுக்குத் தோன்றியது. இலேசாய் அவருடைய கையைத் தொடவும் விழித்துக் கொண்டார். நம்பிராஜன் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டதும் மிகவும் சந்தோஷப்பட்டார். அவரின் மூலம் தான் தனக்கு வேலை கிடைத்திருக்கிறது என்பதைக் குறிப்பிட்டு நன்றி சொன்னபோது, “நான் ஒண்ணுமே பண்ணல; அவங்களோட கம்பெனிக்கு உங்களை மாதிரியான நல்ல இன்ஜினியர அடையாளம் காண்பித்துக் கொடுத்தேன் அவ்வளவு தான்…” என்றார்.

அவருடைய வீட்டின் மூன்று அறைகளில் நேர்த்தியாக அடுக்கப்பட்டிருந்த புத்தகங்களைக் காண்பித்தார். சலிக்காமல் பேசிக் கொண்டிருந்தார்.

தூங்கப் போகும்போது, பேண்ட் மற்றும் சட்டைப் பைகளில் இருந்தவற்றை எல்லாம் எடுத்து டேபிளில் வைக்கப் போனபோது நம்பிராஜனின் பர்ஸ் தவறி கீழே விழுந்ததில் அது திறந்து கொண்டது. அதில் இருந்த போட்டோவை பார்த்ததும், கலியமூர்த்தி பர்ஸை வாங்கி, “இது யாரு ஸார்…?” என்றார்.

”எங்க அம்மா ஸார்…..” என்றான் நம்பிராஜன். போட்டோவைக் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்த கலியமூர்த்தியின் கண்களிலிருந்து தாரைதாரையாக கண்ணீர் பொங்கி வழியத் தொடங்கியது. அதற்கப்புறம் அவர் எதுவும் பேசவில்லை. தூங்கப் போய் விட்டார்.

அடுத்தநாள் அதிகாலையில் நம்பிராஜன் ஊருக்குப் போவதற்கு முன்பு கலியமூர்த்தி ஸாரிடம் சொல்லிக் கொண்டு போகலாம் என்று அவருடைய அறைக்குப் போய் அவரை எழுப்புவதற்காக தொட்டபோது உடம்பு சில்லிட்டுக் கிடந்தது. மனசுக்குள் அலறி ஆம்புலன்ஸிற்குப் போன் பண்ணி அவர்கள் வந்து பார்த்துவிட்டு கலியமூர்த்தி இறந்து நீண்டநேரமாகி விட்டது என்றார்கள். இரவு ஏதோ மன அழுத்தத்தில் இதயவலி வந்து சர்க்கரை நோய் இருந்ததால் வலியே தெரியாமல் தூக்கத்திலேயே உயிர் பிரிந்திருக்கிறது என்றும் சொல்லப்பட்டது.

கலியமூர்த்தியின் மகன் அப்பாவின் இறுதிச் சடங்குகள் செய்ய அமெரிக்காவிலிருந்து குடும்பத்தோடு வந்திருந்தான். “அப்பாவுக்குப் புத்தகங்கள்னா உயிர் ஸார். அவர் வாங்கி சேர்த்து வச்சிருக்கிற புத்தகங்களத்தான் என்ன பண்றதுன்னே தெரியல…” என்று வருத்தத்தோடு சொன்னான்.

”இதே வீட்ல கலியமூர்த்தி நினைவு நூலகம்னு தொடங்கி பொதுமக்கள் நூல்களப் படிக்க வசதி பண்ணீடுங்க. நானும் அப்பப்ப வந்து பார்த்துக்கிறேன்….” என்றான் நம்பிராஜன்.

”நல்ல யோசணை தான் ஸார். ரெண்டு நூலகர்கள வேணுமின்னாலும் வேலைக்குப் போட்டுடறேன். உங்களப் பத்தி அப்பா போன்ல சொல்லி இருக்கிறார். நீங்க பத்துப் பதினைஞ்சு நாளைக்கு ஒரு தடவை வந்து பார்த்து தேவைகள எனக்குத் தெரியப்படுத்துனா அங்கருந்தே செஞ்சு குடுத்துடுவேன். நீங்க நிச்சயமாப் பார்த்துக்குவீங்களா?”

”கலியமூர்த்தி ஸார் எனக்கும் அப்பா மாதிரித்தான். நூலகத்தைக் கண்டிப்பாகக் கவனித்துக் கொள்கிறேன் நண்பரே….” என்று உறுதி சொன்ன நம்பிராஜனின் கைகளைப் பிரியமாய்ப் பற்றிக் கொண்டான் அவன்.

 

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.