1
இதோ இப்போது நான் ஒரு கொலை செய்தாக வேண்டும். கொலை என்றவுடன் மனிதக் கொலை என்று எண்ணிவிட வேண்டாம். இது நாய்க் கொலை. ஒரு நாயை போட்டுத்தள்ள வேண்டும்.
இந்த எண்ணம் முதலில் எழும் போது வெறும் சாத்தியமாக மட்டுமே இருந்தது. இப்போது அது உருண்டு திரண்டு ஒரு முடிவாக மாறியுள்ளது. எப்படி கொல்லலாம்? அதிக வன்முறை எனக்கு ஆகாது. அளவான வன்முறை ஆனால் காரியம் ஆகியிருக்க வேண்டும். அதனால் கல், கத்தி, கடப்பாரை லிஸ்டில் இல்லை. விஷம் வைக்கலாம் அல்லது சுருக்கு விடலாம். அந்த நாய்க்கு இருக்கும் வெறியை கணக்கில் கொண்டால் அதுவாக வந்து சுருக்கு மாட்டிக்கொள்ளும் என்ற நம்பிக்கையில்லை. நாயை மட்டை செய்ய எவ்வளவு கேட்பார்கள்? முதலில் என்னிடம் எவ்வளவு இருக்கிறது? பேசாமல் ஒரு வளர்ந்து வரும் ரவுடியை அணுகலாமா? ஹ்ம்ம்.. எல்லை மீறி யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
அப்படியே கொலை செய்துவிட்டால் என்றாலும்கூட சடலத்தை எப்படி மறைப்பது. கார்ப்பரேஷன்க்காரன் கணக்கு வைத்து இருப்பானோ? சடலத்தைப் பல துண்டுகளாக்கி திசைக்கு ஒன்றாக கொண்டு வீசி விட்டால்? அல்லது கொன்றார் பாவம் தின்றால் போச்சு என்பார்கள், நாய்க்கறி எப்படி இருக்கும்? ஒருமுறை சிறுமுகை காட்டிலிருந்து பிடித்துக் கொண்டு வந்த மான் கறியை சாப்பிட்டிருக்கிறேன். நல்ல மொறு மொறுவென்று இருக்கும். ஆட்டுக்கறி அத்துப்படி. அதன் மார்க்கண்டன் சாப்பிட்டால் மார்க்கண்டேயன்.
நாய் க் கொலையை பற்றி மட்டுமே சுற்றி சுற்றி யோசித்துக்கொண்டு இருந்தால் ஏதாவது வழி பிறக்கும். இக்கொலைக்கான காரணங்களே இனி தேவையில்லை. இதைப் பற்றி சிந்திப்பதில் இவ்வளவு சக்தியை வீனடித்துள்ளேன் இனி காரணம் ஒரு கேடா?
தெளிவாய் பார்த்தால் ஒன்று புலப்படும். அதிகம் சிந்திப்பவன் செயல் புரிவதில்லை. செயல்படும்போதே சிந்திப்பவன் மட்டும்தான் செயலைக் கடக்கிறான். சும்மா சிந்திப்பவன் கற்பனையின் மூலமாகவே அந்நிகழ்வை ஆயிரம் முறை நடத்தி பார்த்திருப்பான். அந்தக் கற்பனையே அச்செயலுக்கு நிகரான அகநிறைவு தந்துவிடுகிறது.
இனி சிந்திப்பது வீன். ஆகவே அர்ஜுனா கொலை புரிவாயாக.
2
சமீபமாகத் தான் இந்த வீட்டை சம்பாதித்தேன். சொந்த வீடு. ஓன் ஹவுஸ். வாழ்வில் முதல் முறையாக எனக்கே எனக்கான இடம். எனக்கு மட்டுமே பாத்தியப்பட்டது. நான் ஆட்சி செய்யும் ஸ்தலம். அனைத்து பிரத்தியங்கமும் உணர்ந்த பிரத்தியட்ச உண்மை. இந்த வீட்டுக்காக காதல், உத்தியோகம் என்று பலவற்றை இழந்து உள்ளேன்; பல நாட்கள் பசியில் திரிந்துள்ளேன் என்றாலும் அதன் துயர் இப்போது இல்லை. மொத்தமும் மூன்று அறைகள் மட்டுமே உள்ள இந்த வீடு ஒண்டிக் குடித்தனம் வகைமையில் வரும். என்றாலும் எனக்கு இது மாளிகை. இது வந்த பின்பு தான் நடையில் மிடுக்கு உடலில் நிமிர்வு பேச்சில் தீர்க்கம் வந்து சேர்ந்தது. தீர்க்கம் என்றால் நான் இங்கே இருக்கிறேன் என்னை பொருட்படுத்துங்கள் என்பதுபோல. குத்துவிளக்கு வாங்கியதிலிருந்து சாமி கும்பிடுகிறேன். சாமி கும்பிடுவதால் என்னவோ வீட்டுக்கு வெளியே திருஷ்டி பொம்மை வைத்துள்ளேன். புதிதாக பல வெள்ளை நிற சட்டை வாங்கியுள்ளேன். வெள்ளை நிறத்தில் இவ்வளவு வகைகள் உள்ளது என்பது எனக்கு இப்போதுதான் தெரியும். என்னை அடையாளப்படுத்தும் அனைத்து ஆவணங்களையும் வம்பாடு பட்டாவது வாங்கிவிடவெண்டும். ஒரே விலாசத்தில். இந்த விலாசத்தில். ஏனென்றால் நான் இப்போது ஒரு புள்ளி. சமூகத்தின் ஆள். இங்கே பெரும்புள்ளிகள் பல இருந்தாலும் நானும் ஒரு புள்ளி. இப்போது நான் ஏதாவது ஒரு அசோசியேஷனில் சேரலாம். சேர்ந்த இடத்தில் கருத்து தெரிவிக்கலாம். யாரிடமாவது தைரியமாக கடன் வாங்கலாம். முக்கியமாக எவ்விடத்திலும் அமர்ந்து பேசலாம். இது அனைத்தையும் நான் வீட்டோடு சேர்த்து சம்பாதித்தது. இவ்வுணர்வு எனக்கு பிடித்துள்ளது ஆகையால் இது எதையும் நான் இழந்துவிடக்கூடாது. இழந்துவிடக்கூடாது என்ற எண்ணம் வந்ததிலிருந்து பயம் ஒட்டிக்கொண்டது. யாராவது பிடுங்கிக் கொண்டால்; ஆக்கிரமித்துக் கொண்டால்; உனது கிடையாது போடா என்று விட்டால்? விடப்போவதில்லை விடவே போவதில்லை. எனது அனைத்து சக்தியையும் திரட்டி போராடுவேன் அந்த கொடூரனை அந்த அரக்கனை எதிர்த்து போராடுவேன். இது நான் உருவாக்கியது என்னுடையது. அவனை சும்மா விட மாட்டேன். அவனை முற்றொழித்து என் வீட்டை மீட்டெடுப்பேன். கோர்ட்டுக்கு செல்வேன்; அரசியல் தலைவர்களை நாடுவேன்; ஊடகத்திற்கு செல்வேன்; வீதிக்கு வருவேன்; மக்களைத் திரட்டுவேன். அறம் உள்ளோர் அனைவரும் எனக்காக போராடுவார்கள்.
அன்று அலுவலகம் விட்டு வீடு திரும்பும் போது தான் கவனித்தேன் அந்த நாயை முன் வாசலில் கட்டிப் போட்டு வைத்திருந்தான் அந்த முதல் வீட்டுக்காரன். அதை பார்த்த மாத்திரத்திலேயே திடுக்கிட்டு நின்றேன். எனக்கு மூச்சடைத்து. ஆங்காங்கே வெண்புள்ளிகளுடன் கன்னங்கரேல் என்ற நாய். அந்த வெண்புள்ளிகள் ஏதோ ஒரு தேமல் போல் இருந்தது. எனக்கு பயத்தால் நெஞ்சம் படபடக்க உடல் அதை ஏற்று லேசாக கிடுகிடுவென்று ஆடியது. காம்பவுண்ட் சுவரை ஒட்டியவாறு மெல்லிய நடை எடுத்து வைத்தேன். என் பயத்தை மோப்பம் பிடித்த நாய் சட்டென்று எழும்பி வல்வல் என்று ஆரவாரத்துடன் என் மேல் பாய முற்பட்டது. அதை கட்டி வைத்த சங்கிலி என்னை காப்பாற்றியது. நான் விழுந்தடித்து எகிறி என் வாசல் அருகே வந்து நின்றேன். அது என்னை பார்த்து குரைத்துக் கொண்டே இருந்தது. மடமடவென்று கதவைத்திறந்து உள்ளே பாய்ந்து ஓடினேன். உள்ளே வந்து நெஞ்சு படபடப்பு நின்றபாடில்லை. வெகுநேரம் அன்று அது குரைத்துக் கொண்டே இருந்தது. சத்தம் ஒருவாராக அமுங்கிய போது என் நெஞ்சு சத்தமும் நின்றது. தைரியலட்சுமி வேண்டிக் கொண்டு கதவை ஓசையில்லாமல் திறந்து லேசாக எட்டிப் பார்த்தேன். அது முழு விறைப்புடன் வாசலையே பார்த்துக் கொண்டு நின்றது. என் தலை தட்டுப்பட்டதும் மீண்டும் குரைக்க ஆரம்பித்தது. நான் மீண்டும் பொந்து பதுங்கினேன்.
சற்றும் எதிர்பார்க்காத எதிரி. இதற்கான உருப்படியான மறுமொழி என்று என்னிடம் ஏதுமில்லை. என் உள்ளத்தில் அனைத்து விதமான எதிரிகளுக்கும் அவர்களுக்கு உண்டான மறுமொழியையும் செயல் திட்டத்தையும் நான் ஏற்கனவே வகுத்து வைத்திருந்தேன். இப்படிப்பட்டவர்களுக்கு இவ்வாறு அப்படிப்பட்டவர்களுக்கு அவ்வாறு என்று. ஆனால் இதுவோ நான் சற்றும் எதிர்பார்க்காதது. நான் வாயடைத்து மனமடைத்துப் போயிருந்தேன். உள்ளத்தில் இறுதியில் குழப்பமே மிஞ்சியது. சரி அதன் எஜமானனை கூப்பிட்டு பேசியே ஆகவேண்டும். அதுதான் ஒரே தீர்வு. ஆனால் அவனை முன்பின் நான் பார்த்ததே இல்லை.
நினைக்கையில் பதற்றமாகவும் மலைப்பாகவும் உள்ளது. கொஞ்சம் நெளிவு சுளிவுடன் நடந்துகொண்டால் இவையனைத்தையும் தவிர்க்கலாம். இழப்பதற்கு ஒன்றுமில்லாத போது கருத்து பேசினேன் கை ஓங்கின்னேன். இப்போது வீடு உள்ளது. பையில் கணம் உள்ளது. சூதானமாகத்தான் இருக்கவேண்டும். நான் வரித்துவைத்திருந்த எதிரி வெளுத்த உடல்க்காரன். பணம் படை அதிகாரம் உள்ளவன். அதாவது நான் எதிர்த்து புரட்சி செய்யும் லட்சிய எதிரி.
இரண்டே வீடுள்ள அந்த குறுகிய காம்பவுண்டில் இரண்டாவது வீடு என்னுடையது. முதல் வீட்டு வாசற்படியில் என்னை மறிக்கும் இந்த நாயைக் கட்டிப்பொட்டுள்ளான் உள்ளே உள்ள அந்த நாய். நான் இந்த வீட்டை வாங்கி குடி புகுந்து ஒரு மாதமாகிறது. ஆனால் இந்த ஒரு வாரமாகத்தான் இந்த பிரச்சனை. இதற்கு முன் அந்த நாய் கொல்லைப்புறமாக கட்டியிருந்தது என்பதை நான் அறிவேன். ஒரு சைக்கிளைத் தள்ளிக்கொண்டு மட்டுமே செல்லும் அளவிற்கு உள்ள காம்பவுண்டை முழுதும் மறித்து நிற்கும். சைக்கிளை கேடயம் போல் தடுத்து உள்ளே சென்று விடுவேன் என்றாலும் பெடல் மற்றும் ஹேண்டில் பாரை மென்று சக்கை செய்துவிடும். அன்று என் நல்ல கால் சட்டையை அரை நிஜாராக்கியது. இதற்கு பயந்தே சைக்கிளை வெளியே நிறுத்தி பூட்டிவிட்டு அடுத்த தெருவை சுற்றி வந்து காம்பவுண்டை ஏறி குதித்து உள்ளே வரவேண்டும். சைக்கிளையும் கால் சட்டயையும் இந்த நாய்க்கு காவு கொடுக்க என்னால் முடியாது.
அடுத்து வந்த அநேக நாட்களில் அந்த நாய் முன் வாசலிலேயே நின்றது. அதனால் நான் காம்பவுண்ட் சுவரை குதிப்பது லாவக தேர்ச்சி அடைந்திருந்தேன். ஒரு அதிசய அதிகாலையில் அந்த நாய் முன் வாசலில் காணவில்லை. உடனே சென்று அந்த முதல் வீட்டின் கதவை தட்டினேன். அந்த வீட்டின் கொல்லைப்புறத்தில் இருந்து நாயின் சத்தம் கேட்டது. யாரும் கதவை திறக்காதது மேலும் எரிச்சலூட்டியது. கதவை ஓங்கி ஓங்கி உடைப்பது போல் தட்டினேன். எங்கிருந்தோ என் எண்ணத்திரையில் எனது லட்சிய எதிரியின் உருவம் நிழலாடியது. என் நெஞ்சம் சட்டென்று துணுக்குற்ற போது அந்த கதவு மெலிதாக திறந்தது. உள்ளிருந்து ஒரு நோஞ்சான் ஆசாமி வந்து எட்டிப் பார்த்தான். அவனைப் பார்த்ததும் எனக்கு வீர லட்சுமியின் அருள் இருப்பது தெரிந்தது.
அவன் தூக்கம் தடைபட்டு மயக்கத்தில் இருப்பது போல் இருந்தான். நான் எடுத்த எடுப்பிலேயே, “ஏன்பா உனக்கு அறிவு மயிரே இல்லையா?” என்றேன்.
அவன் இன்னும் குழப்பமாக வெளியே வந்து நின்று கண்களை இடுக்கிக்கொண்டு கதவின் விளிம்பை தாங்கலாக பிடித்து “யாரு” என்று கேட்டான். பல நாட்களாக சவரம் செய்யாத முகத்தில் மூக்கு மட்டுமே இருப்பதுபோல் இருந்தது.
“இப்படி வாசலிலேயே நாய கட்டிப் போட்டா நாங்க எல்லாம் எப்படி அத தாண்டி போறதுங்குற அறிவு இல்லையா?”
“ஓ! நீங்கதான் அந்த பக்கத்து வீட்டுக்கு வந்தவரா”
நான் மல்லுக்கு நிற்பதையே அவன் இன்னும் உள்வாங்கவில்லை, “இங்க பாருடா அடுத்த தடவ உன் நாய இங்க வெளியே பாத்தன்னா அப்புறம் நடக்குறதே வேற”
“கொஞ்சம் மரியாதையா பேசு” அவனும் தயாராகிவிட்டான்.
“முதலில் நான் கேட்டதுக்கு பதில் சொல்லுடா”
“அடா புடான்னா, நான் நாய அவுத்து விட்டுருவேன் பாத்துக்கோ”
“அடிச்சேன்னா மீசை பிச்சிக்கிட்டு போயிடும் ஆமா” அவன் நோஞ்சான் என்பதால் நான் வீரனாய் இருந்தேன்.
“இங்க பாரு எனக்கு யாரோடும் சண்டை போடுற சக்தி இல்லை. நீ பெரிய பலசாலின்னா அதோடவே சண்டை போட்டுக்கோ.” என்றுவிட்டு என் மறுமொழியை கேட்காமலேயே உள்ளே செல்ல எத்தனித்தான்.
நான்,”உன்னையும் அதையும் கார்ப்பரேஷன்க்காரன் அள்ளிட்டு போற மாதிரி செய்யறேன்னா இல்லையான்னு பாருடா”
அவன் கதவை சாத்தியம் சாத்தாமலும் இடுப்பை பிடித்தவாறு கூன் முதுகுடன் உள்ளே சென்றான்.
நான் மேல்மூச்சும் கீழ்மூச்சும் வாங்கியவாறு வெளியே நடையைக் கட்டினேன்.
வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த இஸ்திரிக்காரன். “சார், அவன்கிட்ட வெச்சுக்காதீங்க. அவன் மெண்டலு. நாள்பூரா வருசம்பூரா வஞ்சிக்கிட்டே கிடப்பான். நிம்மதியாவே விடமாட்டான். நாங்க யாரும் அவன்கிட்ட வச்சிக்கிறது இல்ல. நிம்மதியாவே விடமாட்டான். இவனமாரி ஆள கம்ளைண்டும் பண்ண முடியாது. எடுத்துக்க மாட்டானுங்க.” என்றான்.
“ஏன்?”
“அதான் சொன்னேனே மெண்டலு”
3
“என்ன பண்ணட்டும்ன்னு நீயே சொல்லு.” சுரேஷிடம் கேட்டேன். அவன் ஆம்புலன்ஸ் டிரைவராக இருக்கிறான். நானும் அவனும் சோற்றுக்கு கஷ்டப்பட்ட காலத்திலிருந்தே நண்பர்கள். பசியுடன் சாலையில் ஒன்றாக அலைந்திருக்கிறோம். என் பசி அறிந்தவன். எனக்கும் அவனுக்கும் பொதுவில் இருப்பது பசி ஒன்றுதான். எந்தக் கருத்தும் ஒத்துப் போகாது. என்றாலும் நண்பர்கள். சந்தித்தால் சாப்பிடுவோம். பசித்தால் சந்திப்போம். பசி பொதுக்காரணம், சாப்பாடு பொதுக்காரியம். இப்போதெல்லாம் காரணமே இல்லையென்றாலும் காரியம் நிகழ்த்த செல்வோம்.
அவன்,”இதுவரைக்கும் என்ன ஒரு நாய் தொறத்துன நியாபகமே இல்லை” என்றான்.
“அந்த நாய்க்கு அப்படி ஒரு ஆக்ரோஷம். நான் அதுகிட்ட புடிங்கிக்கவோ அது என்கிட்டே இருந்து காப்பாத்திக்கவோ அதுகிட்ட அப்படி என்ன இருக்கு.”
“பக்கத்து தெருவுல நெறய பணக்காரனுங்க நாயா வெளிக்கு கூட்டி வருவானுங்க. அதுவெல்லாம் நல்ல கொளுக்குமுள்ளுக்குன்னு அமைதியா இருக்கும்” என்றான்.
நான், “அத சும்மா விட்டு வைக்கக்கூடாது. என் சொந்த வீட்டுக்கு பயந்து பயந்து போக முடியாது. அந்த நாயா கொல்றனோ இல்லையோ அந்த வீட்டுக்காரன போட்டுத்தள்ளனும்.”
நான் சொல்வதை அவன் உள்வாங்கினானா இல்லையா என்று உறுதியாக தெரியவில்லை. அவன் வேறெங்கோ பார்த்துக்கொண்டும் சொல்லிக்கொண்டும் இருந்தான்.
“டேய், நான் சொல்றத கேக்குறியா இல்லையா?” என்று கேட்டேன்.
“சொல்லப்போனா ஆர்டிபிசியல் செலெக்ஷன்ல நாய் மனுசனோட சேர்ந்துதான் பரிணாமம் அடைஞ்சது. மனுஷனும் கொஞ்சம் மாறித்தான் இருக்கான்.”
“என்ன!!!, நான் என்ன சொல்றேன் நீ என்ன சொல்ற”
“அது இல்லடா. நான் கேட்டுக்கிட்டு தான் இருக்கேன்”
“நான், இன்னும் ஒரு வாரம் பாப்பேன். அப்புறம் சத்தமில்லாம சோலிய முடிக்கவேண்டியதுதான்.” நான் எனக்கே சொல்லி தீர்மானித்துக்கொண்டேன்.
“சினவுக் கொள் ஞமலி” என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டான்.
நான் “என்ன!!” என்று எரிச்சலுடன் கேட்டேன்
“அது இல்லடா, சும்மா யோசிச்சேன். சங்க இலக்கியத்துல நாய ஞமலி, ஞாளி அப்படின்னு சொல்றாங்க. பக்தி இலக்கியத்துல ஆஊன்னா ‘நான் ஒரு நாயிற்கடையன்’ அப்படின்னு சொல்லிக்கிறானுங்க. உண்மைதான் போல” என்றான்.
நான் கோபமாக எழுந்து கிளம்பினேன்.
“டேய் சாரிடா. நில்லு… நில்லுகிறேன்னுல்ல..”
“பின்ன என்னடா. அவனவன் பிரச்சனை அவனவனுக்கு.”
“சரி அத கொல்றதுதான் ஒரே வழிய?”
“பின்ன என்ன செய்ய சொல்ற?”
நான் உணர்ச்சி வேகத்தில் கத்தும் போதெல்லாம் சுரேஷ் அமைதிக்கு செல்வான். நானும் அடங்கினேன். இருவருமே கொஞ்ச நேரம் பேசிக்கொள்ளவில்லை.
“அதுக்கு இல்லடா.. எதையுமே முதல்ல பகையா பார்க்கக் கூடாது” என்றான்.
“அதுக்காக கடிக்க வர்ற நாய புடிசிச்சு முத்தங்கொஞ்ச முடியாது” மீண்டும் கத்தினேன்.
“சரி நாளைக்கு நான் வர்றேன். வந்து பாக்குறேன்”
“இரு, அந்த நாய்ட்ட உன்ன புடிச்சு தர்றேன். நீ அப்ப பேசு.”
அவன் சிரிக்க நானும் சிரித்தேன். என்னை ஆறுதல் படுத்த கலப்புக்கடைக்கு கூட்டி சென்றான். முதலில் ஆளுக்கு ஆறு இட்டிலி அடுக்கினோம். அப்புறம் இன்னுமொரு ஆறு. அடுத்த ஆறு அவன் தனியாக சென்றான். அவனே காசு கொடுத்தான். சந்தோசமாக இருந்தது. சந்தோஷமோ துக்கமோ சாப்பிடுவோம்.
4
அடுத்தநாள் சுரேஷை வீட்டிற்கு கூட்டிப் போனேன். தூரத்திலிருந்து பார்த்தான். அது அமைதியாக படுத்திருந்தது.
“போட்டாட்ட படுத்து கெடக்கு..”
“என்ன?”
“பசு மாதிரி படுத்து கெடக்குதுன்னு சொன்னேன்”
“பூரா.. நடிப்புடா.. எங்க பக்கத்துல போ பாப்போம்”
“டேய், நான் புஸ்தகம் படிக்கிறவன் கருத்து மட்டும்தான் சொல்வேன். நீ தான் மீதி எல்லாம் பண்ணிக்கோணும்”
நான் ஒரு சிறிய கல்லை எடுத்து அதன் மீது போட்டேன். அது அசைவேதும் இல்லாமல் இருந்தது. “உஸ்… உஸ்…” சோகையாக நிமிர்ந்து பார்த்துவிட்டு தலை கவிழ்ந்து கொண்டது. சுரேஷ் என்னையே பார்த்துக் கொண்டிருந்தான். அவன் என்ன சொல்லுவான் என்று எனக்கு தெரியும்.
அவன்,”இங்க பாரு.. யாரு கிட்டயும்னாலும் எதுனாலும் ஒரு நட்பு வேணும். அதுக்கு ரெண்டு பேர்கிட்ட இருக்க பொது விஷயத்திலிருந்து ஆரம்பிக்கணும். உன் எதிரிக்கும் உனக்கும் ஒரு பொது காரணம் பொது ஆர்வம் இருக்கும். அந்த பொது ஆர்வத்திலிருந்து ஆரம்பிக்கணும். எடுத்த எடுப்பிலேயே சண்டைக்கு நிக்கக் கூடாது.”
“உன்கிட்ட இருக்குற ஒரே ஃபிலாசபி இது தான்.”
“வேலை செய்யுதான்னு பாருடா” என்றான்.
ஒன்றும் சொல்லாமல் இருந்தேன். “
“சரி வா பீஃப் பிரியாணி சாப்பிடலாம். பக்கத்துல இருக்குற ரோட்டு கடை நல்லா இருக்கும்” அவனே கூட்டி சென்றான். பிளேட்டு முப்பது ரூபாய். தொன்னூறு ரூபாய்க்கு ஆர்டர் செய்தோம். இருவரும் சேர்ந்து எழுவது ரூபாய்க்கு போஜனம் செய்தோம். மீதமான இருவது ரூபாயை பார்சல் கட்டி வாங்கிக்கொண்டான் சுரேஷ்.
போகும் வழியில். “இந்தா இத அந்த நாய்க்கு போட்டிரு” என்றான்.
நான் முறைத்துவிட்டு சொன்னேன், “நீ எப்படி என்னை ஃபிரெண்டு புடிச்சியோ அதே மாதிரி நான் அந்த நாய ஃபிரெண்டு புடிக்கணும். அதுதான? ஏன்டா இந்த ரேஞ்சுக்கு என்ன கொண்டு வந்துட்ட.”
“சொல்றதைக் கேளு..இத நாய்க்கு போட்டிரு..”
அதை வாங்கிக்கொண்டு,”சரி இதுல கலக்குறதுக்கு விஷம்?” என்றேன்.
நான் சிரிக்க அவனும் சிரித்தான்.
“பொதுவான விசயத்துல இருந்து ஆரம்பி டா. உனக்கும் பிரியாணி புடிக்கும். எந்த நாயா இருந்தாலும் அதுக்கும் பிரியாணி புடிக்கும்.” என்றான்.
“ஃபிலாசபி ஓகே தான். ஆனா அந்த நாயோட ஓனர் கிட்ட சண்டை போட்டுட்டேன். அவன் பாத்துட்டான்னா?”
“சேம் ஃபிலாசபி தான்.”
“எது இந்த பொதுவா- ன்னு ஆரம்பிக்குமுங்களே அதுவா? நீ ஒரு ஆம்புலன்ஸ் டிரைவர் டா.. பிலாசபர் இல்ல.. ” என்றேன். இருவரும் சிரித்துக் கொண்டோம்.
அவனை விட்டுவிட்டு வீடு வந்து சேர்ந்தேன். தயங்கித் தயங்கி காம்பவுண்டை எட்டிப் பார்த்தேன். வாசம் பிடித்து டக்கென்று எழுந்து நின்றது. அதன் கண்கள் எனக்கு வந்து படையல் இடு என்பது போல் அதிகாரம் இருந்தது. பொட்டலத்தை பிரித்தேன். அதனிடமிருந்து ஏதோ வினோதமான கரகரப்பான உறுமல். என்னை இறைஞ்சுகிறதா அல்லது அதட்டுகிறதா என்று தெரியவில்லை. நாய் பாஷை தெரியாது. பிரித்த பொட்டலத்தை தரையில் வைத்து தள்ளி விட்டேன். அது பாதி சிதறி நாயிடம் போய் நின்றது. நாய் உடனேயே முழுதாக ஈடுபட்டது. நாய்க்காரனது வீடு சாத்தியே தான் இருந்தது. நான் அதை தாண்டி செல்ல வேண்டும். இந்த ஒருமுறை காம்பவுண்டை சுற்றி வந்து பல்டி அடிக்க எனக்கு விருப்பமில்லை. அதுதான் சுங்கம் கட்டியாகிவிட்டதே. மெல்ல சுவர் ஓராமகா அடி எடுத்து வைத்தேன். நாய் லக்லக் என்று விழுங்கிக்கொண்டிருந்தது. அதன் சங்கிலி வளையத்திற்குள் சென்றபொது விழுங்குவதை நிறுத்திவிட்டு தலையை எடுக்காமலே பற்கள் அத்தனையு காண்பித்து உர்ர்ர் என்றது. நான் அசையாமல் நின்றேன். ஏதோ சுமூகம் கண்டவுடன் மீண்டும் போஜனம் செய்ய எத்தனித்தது. நான் மடக்கென்று ஒரே தாவலில் என் கதவை அடைந்தேன். உடல் முழுவதும் நீர் வழிந்திருந்தது. மூச்சு இறுகி மேலும் கீழும் நடனமாடியது. ஆனாலும் ஒரு திருப்தி. நறுவிசாக முடித்துவிட்டு பக்கத்திலிருந்த சிறிய தொட்டியில் சளக் சளக் என்று நீர் குடித்தது. பேய்ப்பசியில் இருந்திருக்கும் போல. முடித்துவிட்டு அங்குமிங்கும் பார்த்தது. திரும்பி என்னை பார்த்தது. அதன் உடல் மொழியில் ஒரு மாற்றம் இருந்தது. ஆனால் என்னவென்று புடிபடவில்லை. அதன் கண்களை சந்திக்காமல் உள்ளே சென்றேன்.
காலையில் தயிர் சாதம் சுங்கம் கட்டிவிட்டு அலுவலகம் சென்றேன். வரும்போது புரோட்டா. மெண்டல் வெளியே நின்றிருந்தான். “இது வெஜிடேரியன். இதுக்கு நான்வெஜ் நீங்கதான் போடறதா” என்றான். “நீ மொதல்ல அதுக்கு எதாச்சியும் வெய்யு. போறவன் வாறவனா வெச்சிக்கிட்டு இருப்பான். இந்த நாபீய எடுத்து வீசு. குடலைப் புரட்டுது.” என்றுவிட்டு மறுமொழிக்கு நிக்காமல் உள்ளே சென்றேன்.
நாய் பாஷை புரிய ஆரம்பித்தது. நாய் என்னை தேர்ந்தெடுத்துக் கொண்டது. பிஸ்கட், காபிபைட், வடை, பண் என்று என் சம்பளத்தில் ஒரு பங்கை கரைத்துக் கொண்டிருந்தேன். என்றாலும் சந்தோஷம்தான். தினமும் காலையில் அதுக்கு ஒரு குட் மார்னிங். நான் இரவு வரும் வரை அது காத்து நிற்கும். இத்தனை தூரம் வந்த பின்னரும் அதை தொடவோ தடவிக்கொடுக்கவோ நான் முனைந்தது இல்லை. என்ன இருந்தாலும் இது மெண்டலுடைய நாய். நான் சோறு வைப்பதால் மெண்டலும் கண்டுகொள்வதில்லை போலும். எப்போதாவது வெளியே வருவான். நான் உள்ளே சென்று விடுவேன்.
உலகத்தார் அனைவரும் நண்பர்கள் ஆகியதுபோல் இருந்தது. எல்லோரையும் புதுசாகப் பார்த்தேன். நேற்றைய என்னை நேற்றோடு விட்டுவிட்டேன். நேற்றைய யாரையும் இன்று இழுத்து வருவதில்லை. ஓரிருமுறை மெண்டலைக் கூட பார்த்து சிரித்தேன். இதெல்லாம் நாயிடம் இருந்து வந்த பழக்கம். அதற்கு பெயர் வைக்க விரும்பினேன். சுவீகாரம் செய்ய வேண்டும். என்னுடைய நாயாக்க வேண்டும். நினைத்துப் பார்த்தேன். நானும் நாயைக் கூட்டிக்கொண்டு நடை செல்வேன். சமூகத்தில் பெரிய ஆள்தான். நாய் கண்காட்சி என்று யோசித்தவுடன் சிரிப்பு வந்தது.
அன்று ஃபீப் பிரியாணி வாங்கிக்கொண்டு சுரேஷயும் அழைத்துக்கொண்டு உற்சாகமாக வந்தேன். வெறும் காம்பவுண்டு எங்களை வரவேற்றது. சங்கிலியையும் காணவில்லை. நெஞ்சு கனத்தது. உலகம் மீண்டும் தன் சுயரூபம் காண்பிக்கிறது. எனக்கு பாத்தியப்பட்டதை எடுத்துக்கொள்ளப் பார்க்கிறது. அவன் கதவைத் தட்டினேன். திறக்கவில்லை. விடாமல் தட்டினேன். இஸ்த்திரிக்காரன் வழக்கம் போல் எட்டிப் பார்த்தான். கொஞ்ச நேரம் விட்டு “என்னடா வேணும் உனக்கு?” என்று கதவைத் திறந்தான். சொல்லின்றி நாக்கு தடுமாறியது. “நாய்…” என்று சுரேஷ் இழுத்தான். “நாயா? எந்த நாய்? அதுவா? அத அவுத்து விட்டுட்டேன். இல்ல வித்துட்டேன். இல்ல அதுவே ஓடிடுச்சு.” என்று சொல்லிவிட்டு மெண்டல் திரும்பினான். நான் “டேய்…” என்று கத்தினேன். அவன் திரும்பியவாறு முதுகை காண்பித்து அப்படியே நின்றான். எனக்கு பேச்சு தடுமாறியது. கொஞ்சம் இறைஞ்சுவது போல “உண்மைய சொல்லு… நான் அதுக்கு மட்டுமா சோறு வாங்கியாந்தேன். உனக்கும் செத்துத் தாண்டா. சத்தியம் பண்ணி சொல்லு. நான் வெச்சுட்டு போன பார்சலை நீ எடுக்கலேன்னு. அந்த நாய் எங்க?” அவன் அப்படியே நின்றான்; பிறகு ஒன்றும் சொல்லாமல் உள்ளே சென்றுவிட்டான். நான் சுரேஷைப் பாத்தேன். எனக்கு அழுகை வந்தது. சுரேஷ் கூடவே இருந்தான்.
புது வீடு வாங்கிய சந்தோசமோ அந்தஸ்து சம்பாதித்த பெருமையோ இல்லாமல் போனது. நான் பழையபடி பதட்டமான ஜீவன் என ஆனேன். “வீட்ல வளர்ந்த நாய் ரோட்டுக்கு போச்சுன்னா பொழைக்காதுடா.” சுரேஷிடம் சொன்னேன். “ரோட்ல இருந்து வந்தவன் நான் சொல்றேன். நாய விட கேவலமான பொழப்பு பொழச்சவன்டா. நாய்க்கும் அது வேண்டாம். நான் கொஞ்சம் முந்தி இருக்கணும். அத நான் வாங்கியிருப்பேன். கைல கால்ல விழுந்தாவது வாங்கி இருப்பேன்.” புலம்பிக் கொண்டே இருந்தேன். அலுவலகம் செல்லாமல் விடுப்பு எடுத்து ஊரையே அலசினேன். மீண்டும் மெண்டலிடம் கேட்க வந்தேன். எவ்வளவு தட்டியும் அவன் திறக்கவில்லை.
மனம் புதுப்புது எதிரிகளை மீண்டும் உருவாக்கியது. வேலை போய்விடுமோ? வீடு கைவிட்டு போகுமோ? மீண்டும் தெருவுக்கு வருவேனா? என்ன வந்தாலும் பிச்சை எடுக்கக் கூடாது. மீண்டும் முடியாது. ச்சே… என்ன நினைப்பு இது. என் ராசியே இது தான். அப்படி அந்த நாயின் மீது பாசம் வைக்க இன்னும் அதன் நிபந்தனை அற்ற அன்பைக் கூட நான் அனுபவிக்கவில்லை. இல்லாத, கைவிட்டுப் போன அனைத்தும் என்னை எப்போதும் ஆட்டிப் படைக்கும். பதட்டம் என் இயல்பு. இயல்புக்கு மீண்டதால் எப்போதும் போல் முரடனாக இருந்தேன். வெள்ளை சட்டை போடுவதில்லை. சாமி அறவே கும்பிடுவதில்லை.
5
நாட்கள் செல்ல செல்ல நாய் இல்லாத வாழ்க்கையும் பழகி இருந்தது. சுரேஷ் அன்று வேறொரு சின்ன நாய் வாங்கி வந்தான். மொசு மொசுவென்று இருந்தது.
“எதுக்குடா இதெல்லாம். இதுவும் ஓடிப் போகும்”
“நம்ம ரெண்டு பேருக்கும் பொதுவா இதை வச்சுக்கலாம். நீ ஒரு வாரம் நான் ஒரு வாரம்”
என்னால் சிரிக்க முடியவில்லை.
சுரேஷ், “இந்த வாரம் நான் வச்சுக்கிறேன். அடுத்த வாரம் உனக்கு. சும்மா காமிக்கலாமுன்னு வந்தேன்” என்றுவிட்டு எடுத்து சென்று விட்டான்.
அந்த ஒரு வாரத்தில் இல்லாத புது நாய் என்னை பீடித்துக் கொண்டது. நானே சென்று அதை தூக்கிக் கொண்டு வந்தேன். பால் பிஸ்கட் தயிர் சாதம். நானும் அதுவே சாப்பிட்டேன். வீடு முழுதும் சென்று அலசியது. சமயல் அறையை நாசம் செய்தது. கால் கையை நக்கும் போது நான் அனுமதித்தேன். என் மூக்கை வாயை நக்க அது உரிமை எடுத்துக்கொண்டது. புது வாழ்க்கை ஆரம்பித்தேன்.மீண்டும் சமுதாயத்தில் ஒரு புள்ளி ஆனேன்.
அன்று ஞாயிற்று கிழமை. தூங்கிக்கொண்டு இருந்தேன். சுரேஷ் போனில் அழைத்தான். “எங்க இருக்க? வெளில என்ன நடக்குதுன்னு பாக்க மாட்டியா? வெளியே வாடா”. ராக்கி கதவைப் பிராண்டிக் கொண்டிருந்தது. கதவைத் திறந்தேன். சுரேஷ் ஆம்புலன்சுடன் நின்றிருந்தான். சொற்பமானவர்கள் தான் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள். மெண்டலின் உடலை தூக்கிக் கொண்டு சென்றார்கள்.
இஸ்திரிக் காரன் வந்தான்.”யார் துப்புக் கொடுத்தாங்கன்னு தெரில. நீங்களா?” என்றான்.
“இல்லை. நான் இப்போதான் எந்திரிச்சேன். என்னாச்சு.”
“கேசு தாங்காதுன்னு சொல்றாங்க. மெண்டலு அடிக்கடி இப்படி ஆகும். யாரோ ஊர்ல இருந்து வந்து பாத்துட்டு போவாங்க. என்ன ஆச்சுன்னு தெரில. இந்த ஏரியால மெண்டல் இல்லேன்னா சந்தோசப் படறதுக்கு நிறைய ஆள் இருக்காங்க.”
இஸ்த்திரிக்காரன் பேசிக்கொண்டிருக்கும் போதே பாதியில் விட்டுவிட்டு சுரேஷிடம் சென்றேன். அவன் ஆம்புலன்ஸ் எடுக்கும் அவசரத்தில். “என்ன நியூஸ்ன்னு கேட்டு சொல்றேன்” என்றுவிட்டு விறுவிறுவென்று பணியில் இறங்கினான். ஆம்புலன்ஸ் புறப்பட்டு சென்றது.
நான் அந்த பழைய நாயை நினைத்துக் கொண்டேன். மெண்டல் மீண்டும் வருவதற்குள். அலுவலக நண்பர்கள் அனைவரையுமே அல்லது ஒவ்வொருவராக வீட்டுக்கு அழைத்து வர வேண்டும். தரகரையும் வரச் சொல்ல வேண்டும்.
வந்தவர்கள் அனைவருக்கும் என் ராக்கியை பிடித்து போய்விட்டது. அவர்கள் வளர்த்திருந்த வளர்த்துக் கொண்டிருக்கிற நாயைப் பற்றி சொன்னார்கள். நாய் ஆஸ்பத்திரி, விளையாட்டு ஜாமானம், கொடுக்க வேண்டியது கொடுக்கக்கூடாதது என்று பல யோசனைகள். ரோட்டில் போனால் குழந்தைகள் பயம் இல்லாமல் என்னுடன் பேசினார்கள். கல்லூரிப் பெண்கள் திரும்பிப் பார்த்தார்கள். பணக்கார புள்ளிகள் கை காண்பித்து விட்டு சென்றனர். பழைய பதட்டம் இப்போது சுத்தமாக இல்லை.
பத்து நாட்கள் கழிந்திருக்கும். சுரேஷிடம் இருந்து எந்த தகவலும் இல்லை. போனும் எடுக்கவில்லை. நான் அவனைத் தேடி வீட்டுக்கு சென்றேன். அவன் கைலியுடன் வெளியே நின்றிருந்தான்.
“என்னடா போன் பண்ணா எடுக்க மாட்டியா?”
“புது போன் வாங்கணும்டா.. உள்ள வாடா.. ராக்கி எப்படி இருக்கு?”
“டேய், அத விடு. மெண்டலுக்கு என்ன ஆச்சு. அத பத்தி வாயே தொறக்க மாடீங்கற..”
என் பார்வையை தவிர்த்தான். “அத விடு டா. அது யாருக்கு தெரியும். நாம நம்மோட பொழப்ப பாக்கவே நேரம் சிக்க மாட்டேங்குது.”
என்னவோ அந்நியத்தனமாக பேசினான். நான் உணர்ந்து கொண்டேன். “என்னடா ஆள் செத்துட்டானா?”
“ஆமா..”
“அதுதான் நீ என்கிட்டே சொல்ல முடியாம இருக்கியா?”
“ஆமா…”
“எப்படி செத்தான். போஸ்ட் மாட்டம் ரிப்போர்ட் பாத்தியா? என்ன காரணமாக்கும்?”
…….
“என்னடா… என்ன காரணம்?”
“எல்லாம் பொதுவான காரணம்தான் …” என்றுவிட்டு வேறுபக்கம் திரும்பிக் கொண்டான்.
6
நாங்கள் அதற்கு பிறகு ஒன்று சேர்ந்து சாப்பிடுவதே இல்லை.