கரையும் நிழல்

வைரவன் லெ ரா

‘கன்னியாரில என்ன கூட்டம், சவத்து பயக்களுக்கு பொறுமையே கிடையாது, குண்டிய ஆட்டிட்டு திரியானுவ. செத்தவனுக்கு காரியம் பண்ணவந்தா, கடைசி அவனுகளுக்கு தான் காரியம் பண்ணனும். வரிசையா நூறு இருநூறு பூசாரி சப்பணங்கால் போட்டு உக்காந்து, என்ன எழவு மந்திரத்தையோ சொல்லி.. கையிலே நாலு அரிசி. தாயோளி எண்ணித்தான் கொடுப்பான் போல, எண்ணிப்பாத்தா நாலு அரிசி. நாம உறக்க சிக்குல போய், உள்ளத செஞ்சு. சவத்துமூதி சின்ன குளிரா அடிக்கி, கடல்ல அல அன்னைக்குனு பாத்து நான்தான் ஆளுன்னு எழும்பி வரும். இதுல எங்க! அப்பன, அம்மையை நினைச்சி முங்கி எழும்ப. ஒரு கை தர்பணத்துலயும் இன்னொன்னு அவ அவன் செயினு, வெள்ளி அருணாகைருல இருக்கும். கூதிமவனுகள நினச்சா, சிரிச்சிட்டே இருக்கலாம். நமக்கு பஸ்ஸுக்கு கைல கொஞ்சம், அப்புறம் ஒரு டீ வட, நாலு செய்து பீடி அவ்வளவுதான் கணக்கு. முருகா, எட்டி பூஜை முடிஞ்சா. இவ பூஜைய முடிச்சாதான் நான் பூஜைய ஆரம்பிக்க முடியும். ஒரு குட்டிப்பையன இடுப்புல சொருவி வச்சுருக்கேன். பய குய்யா முய்யானு கத்துகான். எட்டி சீமைராணி அடுப்பங்கரைலியே கிட. என்னாச்சிட்டி, நா போகாண்டாம’.

‘அவியலு அடுப்புல கிடக்கு, ஒரு அடுப்புதானே இருக்கு, பொட்டச்சி என்ன பண்ணுவா. ஒருநாள் லேட்டாய் குடிச்சா. மண்னென்ன மணக்காதோ. கிடையும் பொடைய மூடிட்டு’.

‘இதுகாத்தாண்டி சொன்னனான் எம் பயக்க அப்பவே, நாரோயில் காரி வேண்டாம்னு. நான் கேக்கல.’

அப்பாவின், அம்மாவின் குரல் இரயிலின் சத்தத்தோடு கேட்டுக்கொண்டிருந்தது. எங்கள் வீட்டில் அம்மைவழி, அப்பாவழி அவர்களின் அய்யா , பாட்டா என வீட்டின் மங்களா முழுக்க சுவரையொட்டி நீட்டமாக வாழையிலை போட்டு, பின் பூஜை கழியும், அம்மையின் கையில் முதலில் சாம்பிராணித்தட்டு, அடுத்து சூடத்தட்டு என வரிசையாக இலைகளின் மேலே காட்டி, கடைசியில் தண்ணீர் தெளித்துவிடுவாள். நாங்கள் விருப்பப்பட்ட ஆச்சி தாத்தா இலையில் அமர்ந்துண்போம். நாட்களை நினைத்துக்கொண்டே, மணியைப்பார்த்தேன், ஐந்தரை ஆகிவிட்டது. திருநெல்வேலி தாண்டி கன்னியாகுமரி விரைவுவண்டி சென்றுகொண்டிருக்கிறது. நாளை ஆடி அமாவாசை, இந்த வருடம் அப்பாவுக்கு முதல் வருடம். கண்டிப்பாக வரவேண்டும் என்ற நிர்பந்தம் ஏதுமில்லை, ஆனால் கிளம்பிவிட்டேன். இதில் அவ்வளவு நம்பிக்கை இல்லை.

‘எட்டி லெட்சுமி, ஒ வீட்டுக்காரரு குமார் தியேட்டர் முன்னாடி கிடந்து அவயம் போடுகாரு. உம்பயல எங்க. மக்கா அப்பாவ போய் கூட்டிட்டு வா ல.’,

‘நல்ல நாளு அன்னைக்குமா நிம்மதியா திங்க முடியா, யம்மா குடிகாரனுக்கு கட்டி வச்சு வாழ்க்கைய நாசமா ஆக்கிட்டியே. நீ கட்டி வச்சுட்டு செத்துட்ட, லேய் விஷத்த குடிச்சு செத்துருவோம். நாம யாம்ல சாவணும், அவனை நடைல ஏத்த மாட்டேன் ‘.

‘மக்கா ராத்திரி நேரமாச்சு, அப்பா எங்கயாச்சும் இருக்கானு பாத்துட்டு வால, ரூவாய மட்டும் முருகன்ட்ட கொடுத்து அமிச்சிருக்காரு. மீன் குழம்பு அவருக்கு ரொம்ப பிடித்தம். இங்கன எங்கயாச்சும் குமார் தியேட்டர் கிட்டயோ, சாத்தாங்கோயில் முன்னாடியே நிப்பாரு. டிவிய அணைச்சுட்டு போய்ட்டு வா என் ராசா’.

‘தெருவுல ஆம்பள இருந்தா வெளிய வால. நெஞ்சுல கை வையுங்களா தாயோளிகளா. அம்மைக்க அண்டைல கிடங்க. கோயில் நடைல கண்ட பயக்க ஒக்காந்தா உனக்கு ஏம்ல மூலம் கடுக்கு. உங்க கோயில் நடைல ஒக்காந்தா, திண்டுல வெண்ணிய ஊத்துவீளோ, இப்போ நா இந்த நடைல ஒண்ணுக்கு அடிக்கேன், இன்னா ஓடத்தண்ணிய நடைல தெளிக்கேன். பன்னீர் அபிஷேகம். எந்த மாடன் வாரான் பாப்போம்.’.

சாராய வாசனை எங்கிருந்தாலும் சட்டென அங்கே நின்றுவிடுவது பழக்கமாகிவிட்டது. அது அப்பாவின் வாசனை. சபரிமலைக்கு மாலை அணியும் மாதம் தவிர மற்றநாள் அப்பா குடிக்காமல் இருந்ததில்லை. உண்மையிலே அப்போதெல்லாம் அப்பாவை அவ்வளவாக பிடிக்காது. நெற்றியில் திருநீர் சாத்தி, கையில் செய்யது பீடியுடன், சட்டை அணியாமல் வெள்ளியில் கோர்த்த சந்தனமாலையை அணிந்த அப்பா வேறொருவராக தெரிவார். தெருவின் முனையில் அவர் நுழையும் போதே வீட்டிற்குள் குரல் கேட்கும். சட்டையில் ரூபாயை சுருட்டி வைத்துக்கொள்வார். போதை தெளியவும், மடக்கில் ருபாய் இருக்காது. அம்மையோ பாலை உண்டு எதுவும் அறியாத பூனைபோல அங்குமிங்கும் நடப்பாள். முறைத்தபடி வெளியே சென்றுவிடுவார்.

கல்லூரி நாட்களில் அப்பாவின் சட்டைப்பாக்கெட்டில் கைவிட்டு பணம் திருடியதெல்லாம் இல்லை. மாறாக பழைய புத்தகப்பையை எதற்காகவோ தேடியதில் கையில் கிடைத்தது ஓல்ட் மங்க் கால்குப்பி. அதற்கு முன்பாகவே ரம் பழக்கப்பட்டாலும் இது அப்பாவின் குப்பி, இருந்ததையோ எடுக்க மனமில்லை. ஒரு வாரம் விட்டு வைத்தேன். வைத்தது அவருக்கு நியாபகமில்லை போலும், பின் வீணாகாமல் நானே குடிக்க வேண்டியதாயிச்சு.

ரயிலில் காற்றின் வேகம் அதிகரிக்க ஆரல்வாய்மொழி வந்ததை அறிந்துகொண்டேன். வெள்ளிக்கோடாய் வேளிமலை வரைந்து வைத்த ஓவியத்தின் சாயலில் இருந்தது. ரயிலிறங்கி வீடு செல்லும் போது வாசற்படி தெளிக்கும் பெண்கள் தெருவில் ஆங்காங்கே நின்றனர். அம்மை கதவை திறந்துபோட்டபடி அடுக்காளையில் நின்றாள். உள்ளே போனதும், வந்தது தெரிய தோளில் இருந்த பையை பட்டென வெளிக்கட்டிலில் போட்டேன். “வந்துட்டியா மக்கா. நைட் தூங்கினியா, கண்ணுலாம் கிடங்குல கிடக்கு, கண்ணம்லாம் ஒட்டி, நேரத்துக்கு திம்பியா” என்றாள் வந்தவள். “எல்லாம் நேரத்துக்கு திங்கேன், வந்ததும் ஏதாச்சும் சொல்லணும், டீய கொண்டா முத” சலிப்புடன் அமர்ந்தேன். அப்பா சிரித்தபடி புகைப்படத்தின் உள்ளிருந்து இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருப்பார்.

அடுத்தநாள் அதிகாலை, கன்னியாகுமரிக்கு அம்மையும் உடன்வந்தாள். நண்பனின் இருசக்கர வாகனத்தை முந்திய இரவே வாங்கிக்கொண்டேன். கோட்டார் கடைவீதியை நெருங்கவும் வண்டிகளின் எண்ணிக்கையும் கூடியது. கன்னியாகுமரியில் வண்டி நிறுத்த ஐம்பது ருபாய் கொடுத்து, சங்கிலித்துறையை நெருங்கவே இருபது நிமிடம் ஆகிவிட்டது. அவ்வளவு கூட்டம், அம்மை வழக்கம் போல கையை இழுத்து, கூட்டத்தில் நுழைந்து எனக்கேற்றார் போல ஒல்லியான பூசாரி முன் நிறுத்த, அவரும் முன்னால் உள்ளவர்களின் எண்ணிக்கையை பார்த்து, “எல்லாரும் சப்பணக்கால் போட்டு உக்காருங்கோ, இன்னா பிடி, இத இதுல போடுங்கோ, யாருக்கு கொடுக்கீலோ அவாளை நினச்சுண்டு, நா சொல்ல சொல்ல போடுங்கோ” அவர் பேசிக்கொண்டே போக, எனக்கு உட்காரவே இடமில்லை, ஒருவழியாய் அமர, கையில் அவர் கொடுத்த அரிசியை எண்ணினேன். அப்பா சொன்னது போல நான்கு அரிசி. எதையெல்லாம் சொல்லி, கையில் கொடுத்து, தும்பு இலையில் போட்டு முடிக்கவும், “கடல்ல போய், திருப்பி போட்டுட்டு ஸ்னானம் பண்ணிட்டு வாங்கோ” என்றார். நானும் கடலை நெருங்க, கூட்டம் என்னை தள்ள, கடலலை காலில் பட “சவம் சின்ன குளிரா குளிருது” என்றபடி முங்கி எழுந்தேன். உடல் முழுக்க பனிக்கட்டியால் தேய்த்துவிட்டது போல குளிர, கூடவே வாடைக்காற்றும் அதன்பங்கிற்கு வீசியது. வெளியே வரவும் அம்மை “அப்பாவை நினைச்சியா மக்கா, தெய்வமா நின்னு உனக்கு எல்லாம் கொடுப்பாரு” கண்களை துடைத்தாள். நானோ குளிரில் நடுங்கிக்கொண்டிருந்தேன். “எழவு என்னா குளிரு, முத ஒரு டீய குடிப்போம்” என்று எண்ணியபடியே ஒல்லி பூசாரியை நோக்கி போனேன். அவர் கையில் நூறை கொடுக்க, அவரும் திருநீறை கையில் கொஞ்சமாய் கொடுத்தார், சரியாய் ஒரு ஆள் பூசிக்கொள்ளும் அளவுக்கு.

வீட்டை அடைந்து ஈர உள்ளாடையை மாற்றியதும் தான் நிம்மதி வந்தது. அம்மையோ வழக்கம் போல அடுக்காளைக்குள் போனாள். காலை உணவை உண்டு, வெளியே செல்லவும், அம்மை கூறினாள் “மத்தியானம் வேண்டாம் மக்கா, சாயந்தரமா போல. இன்னைக்கு அவருக்கு முத அம்மாசி. அடிச்சாலும் பிடிச்சாலும் கூட கிடந்தாரு. துணைக்கு இருந்தாரு.” என்றபடியே மறுபடியும் கண்களை துடைத்தாள். ஊருக்கு வந்தாலே மது ஒரு வழக்காமாகிவிட்டது. அதைத்தான் ஜாடையாக சொல்கிறாள் “சரி, இப்போ எதுக்கு. இருக்க வர, அந்த மனுசன ஏசிட்டு, எதுக்கு அழுக”, “அவரத்தான நான் ஏச முடியும். உன்னைய முடியுமா. ராத்திரி ஆச்சுன்னா பட்டி போல வீட்டுக்கு வந்திருவாரு” என்றபடியே அமைதியானாள். மாட்டிய புகைப்படத்தில் இருந்தபடி அப்பா இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தார். வெளியே செல்ல மனமில்லாமல் அமர்ந்தேன்.

அப்பாவை எனக்கு பிடிக்குமா? உண்மையிலே அம்மையை விட, அவரைத்தான் அதிகம் பிடிக்கும். இருக்கும் காலம் வரை, ஊரில் யாருக்கும் பயப்படாமல் மனதில் பட்டதை பேசிய ஒருவர். இன்னார் இவர் என்றெல்லாம் கணக்கில் கொள்வதில்லை, எல்லாருக்கும் ஒரே அளவு மரியாதை. ஆனால் இவரைத்தான் அதிகம் வெறுத்தேன். மதுவின் சுவை அறிந்த நாள் முதல், அவ்வாசனையை நுகரும் பொழுதெல்லாம் மனதில் தோன்றும் இது அப்பாவின் வாசனை. அவருக்கும் ஆடி அமாவாசை மீதெல்லாம் நம்பிக்கை உண்டா? அப்படியெல்லாம் தெரியாது, பின் ஏன் சென்றிருப்பார். ஒருவேளை என்னுடைய இன்றைய மனநிலையில் அவரும் இருந்திருப்பார்.

ஒருவழியாய் பூஜை முடிந்து, அம்மை கையில் இலையோடு வெளியே கா கா என கத்திக்கொண்டிருந்தாள். “இப்போ காக்காவ வந்துதான் அவர் திங்க போறாரு, வாம்மா உள்ள, பசிக்கு”, “அப்பனுக்கு தப்பாம பொறந்திருக்க டே” திட்டியபடியே வந்தாள். அப்பாவுக்கு படைத்த இலையில் அமர்ந்து உண்டேன். பின் நேரமாய் எழுந்த காரணம் மதியம் தூங்கவேண்டியதாகிவிட்டது. மாலை எழுந்து, நண்பர்களோடு மதுவிருந்து. எல்லை இல்லாமல் போக, அப்பாவின் நினைவில் “அப்பாக்கு என்ன பிடிக்கும், ஓல்ட் மங்க். அப்பா, இன்னா வாரேன். ” தள்ளாடியபடியே நடந்தேன். கையில் ஒரு கோப்பையும், கொஞ்சம் தண்ணீருமாய் நடந்தேன். அப்பா இறந்தது ஒருவகையில் விபத்து. ரயில் பாலத்தின் தடுப்புசுவரில் முழுபோதையில் அமர்ந்திருப்பது, சிலநேரம் தூங்குவது அவரது பழக்கம். விதி, அன்றைக்கு பத்தடி கீழே பள்ளத்தில் விழுந்து விட்டார். நேரம் எல்லாம் தெரியாது. அடுத்தநாள் யாரோ பார்க்க விஷயம் தெரியும். அது வேறுகதை.

நடக்க, நடக்க பாதைகள் கீழே இறங்கிக்கொண்டிருந்தது. முன்னாலே ஒரு நிழல், சுற்றியும் பார்த்தேன். யாருமில்லை, “அய்யோ, அப்பா காக்கவா வந்துலா குடிக்கணும். நைட் காக்கா வருமா” என்றெல்லாம் யோசிக்க, நிழல் மட்டும் என் முன்னாலே சென்றது. “அப்பா, நீதானா அது. வாரேன், அம்மைக்கு மண்டைக்கு வழியில்லை. உமக்கு என்ன பிடிக்கும்னு எனக்கு தானே தெரியும். அங்கேயே வாரேன்”, யாரிடம் பேசிக்கொண்டிருக்கிறேன், என்னிடம் தான். அதேவிடத்திற்கு வரவும் நிழலும் நின்றது. அவர் விழுந்ததாய் சொன்ன இடத்திலே அமர்ந்தேன், நிழலும் அருகில் வந்தது. குப்பியை திறந்து, கோப்பையில் பாதி ஊற்றி, மீதி தண்ணீரால் நிரப்பினேன். சுற்றியும் யாருமில்லை “அப்பா, செய் இல்ல இல்ல, கா கா கா கா” ஆம் கத்தினேன். எங்கிருந்தோ காகத்தின் கரையும் குரல் கேட்டது, “அப்பா, சீக்கிரம் வா. இல்ல நா குடிச்ருவேன். பாக்கியா. வாப்பா”, ‘வாப்பா, நீ என்ன சாய்ப்பால. அப்பான்னு கூப்டு’ அப்பாவின் குரல் கேட்டது. சட்டென படபடக்கும் ஓசையோடு காகம் ஒன்று முன்னால் அமர்ந்தது. நிழலை தேடினேன். எங்குமேயில்லை. “கா கா கா” என்றபடி, கோப்பையை அதன் முன்னே நகர்த்தினேன்.

காகம் எங்குமே பறக்கவில்லை, “நைட் காக்கா வருமா. அப்பா நீதானா. எப்பப்பா நீ விழுந்த, உனக்கு ஓர்மை இருக்கா. இல்ல எவனோ தள்ளிட்டானா. உனக்கு வலிச்சா. சீக்கிரம் போய்ட்டியேப்பா. அப்பா” நானா அழுவது, நானேதான். காகம் இப்போதும் அங்கேயே நின்றது. இருட்டில் அதன் கண்கள் மின்னியது, ஈரத்தோடு இருப்பது போல தெரிந்தது. என் முன்னே தலையை ஆட்டியபடி வந்தது. கரைய ஆரம்பித்தது. அப்பாவின் வாசனை வீசியது. நான் கோப்பையை இன்னும் அதன் பக்கம் நகர்த்தினேன், என்னை உற்றுநோக்கியபடியே நின்றது, சிலநிமிடம் கோப்பையை வெறித்த காகம், பறந்தபடி கால்களால் கோப்பையை தட்டியபடி அங்கிருந்து பறந்தது. என்ன நடக்கிறது என் முன்னே, பின் மீண்டும் அதே நிழல் வந்தது. அது மெதுவாக நகர்ந்தது. காகத்தை தேடினேன், தென்படவே இல்லை. நிழல் நகரும் திசையிலே சென்றேன். அது என் வீட்டிற்கு சென்றது.

கனம் கூடிய தலை, உடலெல்லாம் வலிக்க, தாகம் வேறு உயிரை எடுத்தது. எழுந்து ஒரு லோட்டா தண்ணீரை குடித்தேன். “நைட் ஆகாரம் வேண்டாமால. வெறும் வயித்துல, சரி நீ எப்போ மெட்ராஸ் போற. உனக்கு இங்க சரிப்படாது. ” அர்ச்சனை கூடிக்கொண்டே இருந்தது. நேற்று நடந்தது நினைவில் வர, இல்லை கனவாக இருக்கும். ஒருவேளை நிஜமாக இருந்தால், அம்மை கொடுத்த டீயை குடித்து வெளியே சென்றேன். அதேவிடம், இப்போதும் யாருமில்லை, கவிழ்ந்தபடி கோப்பையும், ஓல்ட் மங்க் மீதி குப்பியும் அங்கேயே கிடந்தது. அங்கும் இங்கும் பார்த்தேன், எல்லாம் கனவாய் இருக்காதா என யோசிக்க. கரைந்தபடி காகம் ஒன்று பறந்து வந்தது. நான் அமர்ந்தேன், என்னருகில் வந்தது. நேற்று வந்த அதே காகமோ, அதன் கண்களை கண்டேன், அது ஈரமாய் இருந்தது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.