மூலம் : மனோஜ் குமார் கோஸ்வாமி
ஆங்கிலம் : ஜோதி மகந்தா
தமிழில் : தி.இரா.மீனா
சில மனிதர்களின் முகபாவங்கள் அவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்களா அல்லது இல்லையா என்று புரிந்து கொள்ளமுடியாத அளவுக்குப் புதிரானதாக இருக்கும். மேகமற்ற வானம் போல வெறுமையான பாவனை முகத்தில் பதிந்திருக்கும். என் முன்னால் உட்கார்ந்திருக்கும் ஹிரு தத்தா, அந்த வகையான ஒருவர். ஐம்பது வயது, மிக உயரம், தயக்கமானவர், முகத்தில் சிறிது சுருக்கங்கள், சக்தி வாய்ந்த கண்ணாடியின் பின்னால் வெளுத்த இமைகள், வழுக்கைத் தலையில் இங்குமங்குமாக நின்று கொண்டிருக்கும் முடி, குனிந்த தோற்றம் என்று வயதுக்குரிய தள்ளாமை.
“குறுக்கீட்டிற்கு மன்னியுங்கள்.” மரியாதையாகச் சொன்னார்.
“பரவாயில்லை, நான் இந்தப் புத்தகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். தேநீர் குடிக்கிறீர்களா?” அவருடைய சங்கடத்தைத் தளர்த்தும் வகையில் கேட்டேன்.
“இல்லை, இல்லை..” குறைந்தது ஆறு முறை இல்லை, இல்லை என்று சொல்லிவிட்டு, ”நான் வேறு ஏதோ கேட்பதற்காக வந்தேன்,” என்றார்.
எதிர்பாராமல் வந்திருந்த அந்த விருந்தாளியைப் பார்த்தேன். ஆமாம், ஹிரு தத்தா என் வீட்டிற்கு வந்த எதிர்பாராத விருந்தாளி. தெருவில் இந்த மனிதர் நடப்பதைப் பல முறை பார்த்திருக்கிறேன். காலையில் வானொலியில் வட்டாரச் செய்திகள் முடியும் நேரத்தில் அவர் அலுவலகம் செல்வார். வேகமில்லாத இயல்பான நடை, எளிமையான, ஆனால் சுத்தமான உடைகள், கையில் தினசரி சாமான்களுக்கான பை, பிற்பகலில் அலுவலகத்திலிருந்து திரும்பும்போது நிறைந்திருக்கும். பஸ் பயணத்தினால் சட்டை கசங்கியிருக்கும், முகம் களைத்திருக்கும், ஆனால் நடை மட்டும் சீராகவும், ஒரே மாதிரியாகவுமிருக்கும். அந்தக் குறுக்குச் சந்தின் கோடியில், ஒரு வாடகை வீட்டில் அவர் வசித்து வந்தார்.
மற்றவர்களுடன் அதிகம் பேசுகிறவர் மாதிரி தெரியவில்லை. எளிய முறையில் மிகச் சாதாரணமான வாழ்க்கை வாழ்கிறவர். இரண்டு வருடங்களுக்கு முன்னால் இந்தப் பகுதிக்கு வந்தவர்.
கணேஷ் குரியருகே உள்ள அலுவலகத்தில் பணி புரிபவர்- அது தவிர வேறு விவரம் தெரியாது. சொல்லப் போனால் இங்கு யாரும்அவர் மீது அவ்வளவு அக்கறை காட்டவில்லை; அவருடைய ஒரே மகள் சில வருடங்களுக்கு முன்னால் தற்கொலை செய்து கொண்டு விட்டாள்- இவ்வளவுதான் அவரைப் பற்றி நான் கேள்விப்பட்டவை.
“உம், சொல்லுங்கள்?” என்றேன்.
வருத்தமாகச் சுற்றிலும் பார்த்துவிட்டு, “நான் ஒரு ஸ்கூட்டர் வாங்க விரும்புகிறேன். ஏறக்குறைய பேசி முடித்து விட்டேன்,” என்று சொல்லிவிட்டு என் பதிலென்ன என்பது போலப் பார்த்தார். பிறகு “பழைய வண்டிதான், என் நண்பரின் தோழருடையது. நாளைக்குத் தருவதாக அவர் சொல்லியிருக்கிறார். நம்பகமானவராகத் தெரிகிறார். நான் ஆவணங்களில் கையெழுத்து போட்டு விட்டேன். இப்போது சிக்கல் என்னவென்றால்…” தத்தா சங்கடமான ஓர் அரை புன்னகையைக் கசியவிட்டார். “எனக்கு ஸ்கூட்டர் ஓட்டத் தெரியாது.”
“இந்த மனிதர் இரு சக்கர வாகனத்தில்,“ நான் சிரிப்பை அடக்கிக் கொண்டேன். “நீங்கள் ஒரு நல்ல முடிவை எடுத்திருக்கிறீர்கள். நகரப் பேருந்துகளில் கட்டுக்கடங்காத கூட்டம், ரிக்ஷாக்கள் செலவை அதிகரிப்பவை; நீங்கள் நேரத்தையும் சேமிக்கலாம்,” அவருக்கு ஆதரவாகப் பேசினேன்.
“நான் அதைக் கற்றுக் கொள்ள நீங்கள் உதவி செய்வீர்கள் அல்லவா? அதாவது உங்களுக்கு ஓய்வு நேரம் கிடைக்கும்போது..” தன் வேண்டுகோளைச் சொல்லிவிட்ட நிம்மதி தத்தாவிடம் தெரிந்தது.
என் நண்பர்களின் பைக்குகளை நான் அடிக்கடி ஓட்டுவதை அவர் பார்த்திருக்க வேண்டும். வெள்ளம் காரணமாக என் கல்கத்தா பயணம் தாமதப்பட்டு இருக்கிறது. அதனால் இந்த நாட்களில் எனக்கு ஓய்வு நேரம் அதிகம். தத்தாவிற்காக நேரம் ஒதுக்குவதில் எனக்கு மகிழ்ச்சியே.
அடுத்த நாள் நான் அந்த ஸ்கூட்டரைப் பார்த்தேன். பலவீனமான ஒரு பழைய இயந்திரம். உண்மையாகவே அது நீண்ட தூரம் பயணித்தி்ருக்கிறது. முன்பக்கக் கண்ணாடி உடைந்திருந்தது. சைலென்ஸ் பைப்பட்டை இல்லாமலிருந்தது. இருக்கைகளும் அதிகம் கிழிந்திருந்தன.மொத்தத்தில் தத்தா அதற்கு கொடுத்திருந்த விலை மிக அதிகம். பல முறை உதைத்த பிறகு அதன் பிடிமானம் தளர்ந்து போயிருந்ததை உணர்ந்தேன், தவிர பிளக்கில் மின்சாரம் சரியாகப் பாயவில்லை, ஒரு வழியாக அது புறப்பட்டபோது அதிலிருந்து எழுந்த இரைச்சல் குறுக்குச் சந்து முழுக்க எதிரொலித்தது; என்ஜினின் அளவற்ற குறைகளை அறிவிப்பது போல.
என்னுடைய தந்திரமான செயல்பாடுகளை தத்தா ஆர்வமாக கவனித்துக் கொண்டிருந்தார். இடையிடையே தன் மனைவியையும் பார்த்துக் கொண்டிருந்தார். வராந்தாவிலிருந்த ஒரு தூணின் மேல் சாய்ந்து கொண்டு அந்தப் பெண்மணி என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
“சரியாக இருக்கிறதா?” தத்தா அந்த உறுமலுக்கிடையே சத்தமாகக் கேட்டார்.
“பரவாயில்லை. சிறிது சர்வீஸ் தேவைப்படுகிறது.”
நான்கு நாட்களின் கடுமையான முயற்சிகளுக்குப் பிறகு, வண்டியின் இருக்கையில் தத்தாவால் தனியாக உட்கார முடிந்தது. தலையில் நிறம் மங்கிப் போன ஹெல்மெட், உதட்டில் வரண்ட சிரிப்பு, இறுக்கமாக கைப்பிடிகளைப் பிடித்துக் கொண்டு பார்ப்பதற்கு தொலைவிலுள்ள நட்சத்திரங்களுக்குள்ளே பறக்கும் விண்வெளி வீரர் போல அவர் இருந்தார்.
“கிளட்சை திடீரென தளர்வு செய்யாதீர்கள். ஆக்சிலேட்டரை மெதுவாக இழுங்கள்,” நான் அவரை எச்சரித்தேன்.
“நிச்சயமாக.” தத்தாவின் அசௌகரியமான பதில். நான் ஸ்டார்ட் செய்து கொடுத்தேன். கண்ணுக்குத் தெரிந்த அங்கிருந்த ஒவ்வொரு சுவரிலும் அந்தச் சத்தம் எதிரொலித்தது. “பிரேக்கை திடீரென இழுக்காதீர்கள்,” நான் மீண்டும் எச்சரித்தேன்.
அவருடைய ஸ்கூட்டர் மெதுவாக நகர ஆரம்பித்தது. காற்று அவருடைய சட்டைக் காலரை, மீதமுள்ள முடியை சிலிர்க்கச் செய்தது. மெதுவாகக் குறைந்த இரண்டு சக்கர வாகனத்தின் ஒலி அவர் வீட்டின் முன்னால் நின்று கொண்டிருந்த எனக்குக் கேட்டது. இப்போது அந்த இடம் அமைதியாகிவிட்டது. வட்டாரச் செய்திகள் ஒரு வீட்டிலிருந்து கேட்க, சின்னப் பையன்ஒருவன் தொடர்ந்து மணி அடித்தபடி தன் மூன்று சக்கர சைக்கிளை ஓட்டிக் கொண்டிருக்க, ஒரு காய்கறி வியாபாரி தன் வழக்கமான குரலில் கத்திக் கொண்டிருந்தான்- இருந்தபோதிலும் தத்தாவின் வேதனையான ஸ்கூட்டரின் சப்தமின்றி தெரு அமைதியாக இருந்தது.
“உள்ளே வந்து உட்காருங்கள்,” திருமதி தத்தா கேட் அருகே வந்து என்னை அழைத்தார். மெல்லிய தோற்றம், இங்குமங்குமாக நரைமுடி, நீண்டகால நோய் காரணமாக முகம் தன் பொலிவை இழந்திருந்தது; இவையெல்லாம் இருந்தபோதிலும், அந்தக் கணத்தில் அவர் உற்சாகமாக இருந்தார்.
“மன்னியுங்கள். இப்போது முடியாது, மாலை வரமுடியுமா என்று பார்க்கிறேன்,”என்றேன்.மாலை அங்கு போனேன். விரைவில் அது ஒரு பழக்கமாகி விட்டது. நாங்கள் மூவரும் மாலை நேரங்களில் மணிக்கணக்கில் பேசுவோம். பெரும்பாலான நேரங்களில் வராந்தா விளக்கு அணைக்கப்பட்டு விடும். நிலா வெளிச்சம், தெருவிலுள்ள விளக்கின் ஒளியோடு வேலியினூடே புகுந்து வராந்தா தரையில் பலவித வண்ணங்களை உருவாக்கும். விளையாட்டு, அரசியல், சமூகம் என்று உலகியல் சம்பந்தமான விஷயங்களைப் பேசுவோம். ஒரு பக்கத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் ஸ்கூட்டர் நிலவொளியில் பிரகாசமாகத் தெரியும்.
முன்பெல்லாம் தத்தாவை பார்க்கவே முடியாது. இப்போது அந்தக் குறுக்குத் தெருவில் அவர் ஓட்டுவது சத்தமாகவும், நிச்சயமாகவும் இருந்தது. குறுகிய அந்தச் சாலையில் ஸ்கூட்டர் ஏற்படுத்தும் இடியொலி, அக்கம் பக்கத்தவரால் அவ்வளவு சுலபமாகக் கடந்து விட முடியாததாக இருந்தது.
தினமும் ஜன்னலின் வழியாக அவருடைய வருகை, புறப்பாடு இரண்டையும் பார்ப்பேன். பெரும்பாலும் மனைவி பின் இருக்கையில் இருக்க,ஒரு நன்றி உணர்வோடு என்னைப் பார்த்துக் கையசைப்பார். என்ஜின் அந்தக் கொடூர ஒலியை மறக்காமல் ஏற்படுத்த, கைகள் உறுதியாக இருக்க ,தலை லேசாக வளைந்திருக்க, நேராகப் பார்த்தபடி, அவர் ஓட்டுவார்.
ஒரு நாள் மாலை அவர் ஸ்கூட்டர் என்னருகே க்ரீச் என்ற ஒலியோடு நின்றது. “வாருங்கள் ஆற்றின் கரையையொட்டி ஒரு சவாரி போய் வரலாம்,” என்றார். எனக்கு எந்த வேலையும் இல்லாததால் நான் மகிழ்ச்சியாகப் புறப்பட்டேன். நகரத்தின் சுறுசுறுப்பான மாலைப் பொழுது அது என்பதால் தத்தாவின் ஸ்கூட்டர் கூட்டத்தினிடையே புகுந்து போனது. காற்று அவருடைய முடியையும், சட்டைக் காலரையும் குலையச் செய்தது.
“ஆமாம், இந்த வேகம், இதுதான் நான் விரும்பியது. மனிதன் ஒரு போதும்…” கடந்து சென்ற ஒரு லாரியின் ஓசையில் அவர் குரல் கரைந்து போனது.
“என்ன?” என்று சப்தமாக கேட்டேன்.
“ஒருவர் எந்த நாளிலும் நின்றுவிடக் கூடாது. செயலிழப்பு என்பது சாவைப் போன்றது.”
வெறுமே நான் புறநகர்ப் பகுதிகளை சுற்றிப் பார்த்துக் கொண்டே வந்தேன். வெளிச்சமான கடைகள், சுறுசுறுப்பான கூட்டம், மற்ற கார்களின் பின்புறசிவப்பு விளக்குகள், வெவ்வேறு ஒலிகளில் வெளிப்படும் ஹார்ன் ஒலிகள் ஆகியவற்றை வேகமாகக் கடந்து கொண்டிருந்தோம். சிறிது தொலைவில், ஒரு சிறிய ஊர்வலம் சமீபத்திய பாலிவுட் இசையுடன் நகர்ந்தது. தத்தா ஓர் இளைஞன் போல சவாரியை சந்தோஷமாகச் செய்தது பற்றி் நான் யோசித்துக் கொண்டிருந்தேன். அவர் மிக தைரியமாக, கஷ்டமின்றி கியரை மாற்றிக் கொண்டும், பிரேக்குகளை இழுத்தும் ஓட்டினார்.
நாங்கள் ஆற்றுப் பகுதியை அடைந்தோம். நகரம் இந்த இடத்திலும் தன் குப்பைகளைப் பரப்பியிருந்தது. ஆனால் இங்கு சிறிது சுத்தமான காற்று கிடைக்கிறது.
“உண்மையில் எனக்கு இந்த மாற்றம் தேவைப்பட்டது,” சந்தோஷமான சிரிப்புடன் தத்தா சொன்னார். வண்டியை மிகக் கவனமாக நிறுத்தினார்.
“வாருங்கள், இந்த பெஞ்சில் உட்காரலாம்.”
அஸ்தமிக்கும் சூரியனைப் பார்த்துக் கொண்டிருந்தோம். ஆறு இரத்தச் சிவப்பிலிருந்தது. சிறிது தொலைவில் உள்ளே மங்கிய வெளிச்சத்துடன் இரண்டு இயந்திரப்படகுகள் நின்று கொண்டிருந்தன. மற்றொரு பக்கத்தில் குன்றுகள் கருமையைப் பரப்பி இன்னொரு இரவிற்குத் தயாராகிக் கொண்டிருந்தன.
“எனக்காக நீங்கள் நிறைய உதவி செய்திருக்கிறீர்கள்…” திடீரெனச் சொன்னார்.
“ஓ, இல்லை, அதில் எனக்கு மகிழ்ச்சிதான்.”
அது எனக்கு நல்ல பலன் தந்திருக்கிறது. நீங்கள் எனக்கு ஒரு மாற்றத்தை, செயல்பாட்டை ஏற்படுத்தித் தந்திருக்கிறீர்கள். நான் உண்மையாகவே உங்களுக்குக் கடன்பட்டிருக்கிறேன்.” அவர்குரல் மிக மெல்லியதாக இருந்தது.
நான் மௌனமாக இருந்தேன். மங்கும் சூரியனின் லேசான இழைகளைப் பார்த்தபடி பெஞ்சில் உட்கார்ந்திருந்தேன். நகரின் எந்தச் சாயலும் இங்கு இல்லை,தெருவிலிருந்து அபூர்வமாகக் கேட்கும் ஹாரன் ஒலி தவிர.
“சில அந்தரங்கமான விஷயங்களை உங்களிடம் சொல்ல வேண்டும் என்று சில நாட்களாகவே நினைத்துக் கொண்டிருக்கிறேன்.” தத்தாவின் குரல் வேறொரு கோளிலிருந்து கேட்பது போல மிக மெல்லியதாகக் கேட்டது.“பல வருடங்களுக்கு முன்னால் இது நடந்தது. எங்களுக்கு நீரா என்றொரு மகள் இருந்தாள். அவள் பிறந்த பிறகு கருவுறும் இயல்பை என் மனைவி இழந்து விட்டாள். அதனால் அந்தக் குழந்தையின் மீது நாங்கள் கண்மூடித்தனமான அன்பு வைத்திருந்தோம். நான் சாதாரணமான ஒரு கிளார்க்தான் என்பது உங்களுக்குத் தெரியும். ஆனாலும் எப்படியோ வாழ்க்கை எங்கள் மூவருக்கும் அமைதியானதாக இருந்தது. நான் மிக அப்பாவியான ஆத்மா; சிறிது கோழை என்று கூட நீங்கள் சொல்லலாம். ஆனாலும் நான் என்னளவில் உண்மையானவனாக இருக்க முயற்சிக்கிறேன். மனமறிந்து நான் யாரையும் காயப்படுத்தியது இல்லை என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். என்னால் இயன்றவரை எங்கள் மகளை மிக நல்லவளாக வளர்க்க முயன்றேன். அவள் யாரையோ காதலிப்பது எனக்குத் தெரிந்தது. அவளுக்கு அப்போது பதினாறு வயதுதான்.அந்தப் பையன் எனது உயர் அதிகாரியின் மகன்தான். ஆரம்பத்தில் எனக்கு வருத்தம், சொல்லப்போனால் கையற்றவனாக உணர்ந்தேன். “உன் எதிர்காலம் தீர்மானிக்கப்பட்டு விட்டது. நம் அதிகாரியின் மகன்தான் உன் மருமகன்,” என்று உடன் வேலை செய்தவர்கள் என்னைக் கேலி செய்தார்கள். நான் முட்டாளைப் போலச் சிரிப்பேன். இந்த உலகம் எத்தனை கொடூரமானது என்பதைப் புரிந்து கொள்ள எனக்குச் சில காலம் தேவைப்பட்டது. ஒரு நாள் அதிகாரியின் மகன் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு அசாமை விட்டுப் போய்விட்டான். சில நாட்களுக்குப் பிறகு, ஒரு குளிர் காலைப் பொழுதில் எங்கள் அருமை மகள் தற்கொலை செய்து கொண்டாள். அந்தச் சமயத்தில் அவள் கருவுற்றிருந்தாள்.”
ஒரு கார் பெரிய சைரன் ஒலியோடு திடீரென்று அந்த இடத்தைக் கடந்தது. ஆச்சர்யத்தோடு தத்தாவின் முகத்தைப் பார்த்தேன். பூங்காவின் ஒரு பக்கம் விளக்கு வெளிச்சத்தால் மின்ன, மற்றொரு பக்கம் இருட்டாகத் தெரிந்தது.
“அந்தச் சம்பவத்திற்குப் பிறகு ஏழு வருடங்களாகி விட்டன. ஏழு வருடங்களாக நாங்கள் அந்தக் கொடுமையை ஒவ்வொரு நிகழ்வுகளிலும், மௌன கணங்களிலும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். இது மாதிரியே இருந்து எப்படியோ சமாளித்து விடலாம் என்று நான் நினைத்தேன். ஆனால் என் மனைவி?நான் ஏன் ஏதேனும் அவளுக்கு செய்யக் கூடாது? ஒரு ஸ்கூட்டர் வாங்கினாலென்ன? சில சந்தோஷப் பயணங்களாவது எங்களுக்குக் கிடைக்கும்! வீட்டிற்கு வெளியே ஓர் உலகம் இருக்கிறது என்பதை அவள் பார்ப்பாள். புதிய வண்டியொன்றை என்னால் வாங்க முடியாது, அதனால் இதை வாங்கினேன். நகரப் பேருந்து நெரிசல், நேர மிச்சம் இவைகள் எல்லாம் பிரச்னைகளில்லை. நான் விரும்புவது செயல்பாட்டைத்தான். ஏறக்குறைய நாங்களிருவரும் படிம நிலைக்குத் தயார் ஆகிக் கொண்டிருந்தோம், ஏதாவது ஒரு செயல்பாடு எங்களுக்கு மிக அவசியமானதாக இருந்தது, ஒரு வேகம்,ஒரு நடமாட்டம் இல்லையெனில் எங்களால் உயிருடன் இருக்க முடியாது.”
“ஒரு நகரப் பேருந்து, பிறகு ஒரு பைக், அம்பாசிடர் கார் ஆகியவற்றை நான் இன்று ஓவர்டேக் செய்ததை கவனித்தீர்களா,அது மூர்க்கத்தனமான போட்டி ,அது எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சியைத் தந்தது. காலையிலிருந்து இரவு வரை இந்தப் பழைய ஸ்கூட்டரினால் என் மனைவி சுறுசுறுப்பாக இருக்கிறாள், நான் அலுவலகத்திற்கு கிளம்புவதற்கு முன்னால், தினமும் காலையில் கவனமாக சுத்தம் செய்கிறாள்; அவள் அன்று என்ன சொன்னாள் தெரியுமா? ஆயிரம் வண்டிகள் இருக்குமிடத்தில்கூட சத்தத்தை வைத்துக் கொண்டே அவள் இதைக் கண்டு பிடித்து விடுவாளாம்.” அவர் என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டே சொன்னார். அவருடைய முகத்தில் வெளிச்சமும், நிழலும் விளையாடிக் கொண்டிருந்தன. ஏதோ ஆவி பிடித்தவர் போலத் தெரிந்தார்.
ஆற்றிலிருந்து எழும் காற்றிலிருந்து ஓர் ஈரப்பதம் வெளிப்பட்டது. அந்த இயந்திரப் படகுகள் இன்னமும் வெளுத்த நீலநிறப் படுக்கையில் நின்றிருந்தன. பல்புகளின் வெளிச்சம் பட்டதால் நீர் ஒருவித அசைவிலிருப்பது போலத் தெரிந்தது. அது படகுகள் அசைவது போன்ற தோற்றத்தை பார்ப்பவர்களிடம் ஏற்படுத்தும்.
தொலைவில் ஒரு மணி எட்டு முறை ஒலித்தது. “நாம் போகலாம், மிகத் தாமதமாகிவிட்டது.” நான் அவரைப் பின் தொடர்ந்தேன்.
தெருவில் கூட்டத்தின் அளவு குறைந்திருந்தது. நியான் விளக்குகளின் வெளிச்சம் காவலர் போல எங்களுக்கு வழி காட்டியது. ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்ய அவர் பதினோரு தடவை அழுத்த வேண்டியிருந்தது. மின்சாரம் சரியாகப் பாயாமல் இருக்கலாம், கண்டன்சர் பைப்பின் குறையாகவும் இருக்கலாம்.
சில நாட்களுக்குப் பிறகு ஒருநாள் பின்னிரவில் தத்தா கதவைத் தட்டினார். முகம் முழுக்க வியர்த்திருக்க. மிகச் சோர்வாகத் தெரிந்தார். ஸ்கூட்டர் தெருவில் நிற்க, திருமதி தத்தா அவர் பின்னால் நின்றிருந்தார். எந்த வழக்கமான ஒலியுமில்லாமல் வண்டி அமைதியாக இருந்தது எனக்கு வியப்பைத் தந்தது.
“ஏது இந்த நேரத்தில்?”
“எப்போது நான் கியரை இழுத்தாலும் இந்த ஸ்கூட்டர் ஸ்டார்ட் செய்வது நின்று போகிறது. இன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் ஒர்க்ஷாப்கள் மூடியிருக்கின்றன, வண்டியைத் தள்ளிக்கொண்டே நான் வீட்டிற்கு வந்து சேர்ந்தேன்.”
ஏதோ மோசமாகப் பழுதாகியிருக்க வேண்டும். காலையில் நான் மெக்கானிக்கை அழைத்துக் கொண்டு வருவதாகச் சொன்னதும் அவர்கள் போய் விட்டனர்.
ஆனால் அடுத்த நாளே நான் வேலை விஷயமாக இரண்டு மாதங்களுக்கு கல்கத்தா போக வேண்டியதாயிற்று. நான் ஊர் திரும்பிய பிறகும் தத்தாவின் உறுமும் ஸ்கூட்டரின் ஞாபகம் எனக்கு வராமல் போய்விட்டது. அடுத்த நாள் காலையின் வானொலி வட்டாரச் செய்தி எனக்கு உறுமலை நினைவூட்டியது. அது அங்கேயில்லை. அந்த குறுகிய சாலையில் அமைதி மட்டுமே.
மாலையில் நான் அவர்களின் வீட்டிற்குப் போனேன். மங்கிய விளக்கு வெளிச்சத்தில் திருமதி தத்தா ஒரு சிலையைப் போல நின்றிருந்தார்.
“உள்ளே வாருங்கள்.”
“தத்துடா எங்கே?”
“இன்னமும் வரவில்லை, மார்க்கெட்டிற்குப் போயிருக்கலாம்.”
“ஸ்கூட்டர்?”
“ஓ, ஸ்கூட்டர் உடைந்து விட்டது. அதற்குள் ஏராளமான கோளாறுகள் இருந்தன. அது இனிமேல் ஓடாது என்று சொல்லி விட்டார்,” அவர் குரல் நடுங்கியது.
கதவருகிலேயே நான் உறைந்து நின்றேன். காலம் அப்படியே நின்று போய்விட்ட ஓர் உலகத்தில் நான் நுழைந்தது போல உணர்ந்தேன். அங்கு ஓட்டமோ, இயக்கமோ இல்லை. சுற்றியிருந்த இருட்டு மனிதனின் கடைசி உந்து சக்தியை உறிஞ்சிக் கொண்டது போல இருந்தது.
“இல்லை, அப்படியெல்லாம் ஒன்றுமில்லை, அதைச் சரி செய்து விட முடியும்.”அந்த மரத்த உணர்வை உடைக்க முயன்றேன். அவர் அறை விளக்கைப் போட்டார். ஆடம்பரம் இல்லாத ஒரு சிறிய அறை, எளிமையாகவும் நன்கு பராமரிக்கப்பட்டும் இருந்தது. ஒரு சில நாற்காலிகள், பக்க மேசை, மைய மேசை, அதன் மேல் சில பத்திரிக்கைகள், சில காலண்டர்கள், மற்றும் பிரேம் செய்யப்பட்ட ஒரு புகைப்படம். மூலையில் வரலாற்றுக் காலத்துக்கு முந்தையதான அந்த ஸ்கூட்டர்.
திருமதி தத்தா உள்ளே போனார், தேநீர் தயாரிக்க இருக்கலாம். நான் ஸ்கூட்டரின் அருகில் போனேன்.வெறும் எலும்புக்கூடுதான், ஸ்டார்ட்டர் உடைந்திருந்தது, அப்சார்பர் இரண்டு துண்டுகளாக இருந்தது, ஹெட்லைட்கீழே தொங்கிக் கொண்டிருந்தது, என்ஜினின் கவர் அதனிடத்தில் இல்லை, உள்ளே ஏராளமான வெல்டிங் அடையாளங்கள், சில பகுதிகள் ஒரு சிறிய குவியலாக வைக்கப்பட்டிருந்தன; இல்லை, இந்த இயந்திரம் செத்துப் போய்விட்டது. அது ஓர் இறந்த உடலின் காட்சியாகத் தெரிந்தது.
அந்தக் கணத்தில் சுவற்றில் தொங்கிக் கொண்டிருந்த அந்த புகைப்படத்தை நான் பார்க்க நேர்ந்தது; தூசியைத் தட்டிய பிறகு அது அப்பாவியான, உற்சாகமான இளம் பெண்ணின் படம் என்று என்னால் யூகிக்க முடிந்தது. நிச்சயமாக அவள் நிராதான்; ஏழு வருடங்களுக்கு முன்னால்,ஒரு குளிர்ச்சியான காலையில் தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்.
“அந்தச் சமயத்தில் அவள் கருவுற்று இருந்தாள்.”
“என்ன பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்?” நான் என்னை உணர்ந்தேன்.
ஹிரு தத்தா பை நிறைய மளிகை சாமான்களுடன் கதவருகே நின்றிருந்தார். முகம் பலவீனத்தில் சோர்வுற்றிருக்க, நகரப் பேருந்தின் நெரிசலில் உடைகள் கசங்கியிருந்தன. பூமியின் நகர்வற்ற கணம் அந்த அறையில் தொங்கிக் கொண்டிருந்தது.
———————————-
நன்றி : Indian Literature ,Sahitya Akademi’s Bi—Lingual Journal NOV/Dec 2015