யாருளர் என்றில்லை

 

ஶ்ரீரஞ்சனி

 

 

 

“கண்மணி நில்லு காரணம் சொல்லு, காதல்கிளியே கோபமா….”

“சந்திரசேகரின் விருப்பமாக இதோ ஊமை விழிகள் திரைப்படப்பாடல்,” அறிவிப்பாளர் பின்புலத்தில் பேசினார். சிவரஞ்சனி ராகத்தில் அமைந்த பாடல்கள் எல்லாமே அவனுக்குப் பிடித்தவைதான். சேர்ந்துபாடும்படி அவை அவனைத் தூண்டுவதுண்டு. அதுவும் சிவரஞ்சனியில் சுரேந்தரின் குரல் குழைந்து ஒலிக்கும்போது அதற்குத் தனிச்சிறப்பு வந்துவிடுகிறதென அவன் பரவசப்படுவதுண்டு. ஆனால், அந்தப் பாடல் இன்று அவனைக்  கண்கலங்கச் செய்தது. உடனடியாக ரேடியோவை நிறுத்தினான். “ஆம்பிளைப் பிள்ளையடா நீ! ஒரு நாளும் நீ அழக்கூடாது!” அப்படிச் சொல்லிச்சொல்லித்தான் அம்மம்மா அவனை வளர்த்திருந்தார். ஆனால், கையறுநிலையில் இருக்கும்போது அழுவதைத்தவிர என்னதான் செய்யமுடியும் எனத் தனக்காகத் தானே அவன் பரிதாபப்பட்டான்.

‘பிடிகேல்லை, வீட்டை விட்டிட்டுப் போயிடு, எண்டெல்லாம் அவள் இம்சித்தபோது, ஏன் என்னைப் பிடிக்கேல்லை எண்டு சொல்லெண்டுதானே நானும் கேட்டனான். என்ர பிடியிலையிருந்து திமிறிக்கொண்டு போகவெளிக்கிட்டவளைப் பதிலைச் சொல்லிப்போட்டுப் போவெண்டு மறிச்சன். அது கிரிமினல் குற்றமாம். சத்தியமாய் எனக்கு விளங்கேல்லை. ரண்டு வருஷமா ஒண்டாயிருந்திட்டுப் பிடிக்கேல்லைப் போ எண்டால், என்ன காரணத்துக்காண்டி அப்பிடிச் சொல்லுறாள் எண்டு நான் கேட்கக்கூடாதோ?  போயிருக்கவேணுமாம்… அதெப்படிப் போறது? அந்தக் கதாநாயகி அவனில இரங்கி திரும்ப அவனிட்டை வாறாள். இவள் என்னடாவெண்டால் பொலிசைக் கூப்பிடுறாள்.’ அவனின் மனம் மிகவும் வலித்தது.

காரிலிருந்து இறங்கி நடந்தபோது, உடல்நிறை பல மடங்காக அதிகரித்து விட்டதுபோல அவனின் கால்கள் தள்ளாடின. ‘இண்டைக்கு டிசலுசன் செய்யோணும்’ என்ற நினைப்பு வேலையிலிருந்த அவனின் ஆர்வமின்மை மேலும் அதிகரித்தது. டிசலுசன் செய்யும் உபகரணத்துக்குப் போட்டியிருக்கும், நல்ல உபகரணம் ஒன்றை எடுக்கவேண்டுமே என்ற  துடிப்புடன் வழமைபோல் அவனால் ஓடமுடியவில்லை. அவனின் பெயர் பொறிக்கப்பட்டிருந்த வெள்ளைக்  கோர்ட்டை ஏனோதானோவென எடுத்துக் கொளுவிக்கொண்டு பரிசோதனைச்சாலைக்குள் நுழைந்தான். அவனின் மனமோ நடந்துமுடிந்தவற்றையே சுற்றிச்சுற்றிச் சுழன்றுகொண்டிருந்தது.

எல்லோரும் மிகவும் மும்மரமாக தங்கள் தங்கள் வேலைகளில் மூழ்கிப்போயிருந்தார்கள்.  தன்னுடைய பரிசோதனைக்குரிய செய்முறை ஒழுங்குகளைப் பற்றிக் கூறும் ஆவணத்தை அச்சிலெடுத்தவன் அதனைக் கிரகிப்பதற்கு முயற்சித்தான். ஆனால், அவனின் மனதில் எதுவும் பதிவதாக இல்லை, மீளமீள அவற்றை அவன் வாசிக்க வேண்டியிருந்தது. ‘இந்தச் செய்முறை ஒழுங்குகளைப்போல, உறவுகளை எப்பிடிக் கையாளுறதெண்டும் அறிவுறுத்தல்கள் இருந்தால் எவ்வளவு நல்லாயிருக்கும்’ ஆற்றாமையில் அவனின் மனம் குமைந்தது.

மெற்போர்மின் குளிசைகள் உடலில் கரையுமளவைப் பரிசோதிப்பதற்காக வயிற்றுக்குள் இருக்கும் கரைசலை ஒத்த கரைசல் ஒன்றைத் தயாரித்து, அந்தக் குளிசைகள் அதில் கரையுமளவைப் பரிசோதிக்கும் பரிசோதனைதான் அது. லதா அவனிடமிருந்து விலகுவதையும், குளிசைகளைச் சிதைத்து அவன் பரிசோதிக்கப் போவதையும் ஏனோ அவனின் மனம் முடிச்சுப்போட்டுப் பார்த்தது. தேவைப்படும் அமிலமோ, காரமோ தண்ணீரில் நன்கு கரைவதற்காகப் பரிசோதனைக் குடுவைகளை அதிரும் உபகரணமொன்றில் வைத்துத் கலக்குபவர்கள், கரைசல்களின் pHகளைச் சரிபார்ப்பவர்கள், கரைசலிலிருக்கும் வாயுக்களை அகற்றுவதற்காக சொனிக்கேசன் செய்பவர்கள் என அந்தப் பரிசோதனைச்சாலை அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருந்தது. அவனுக்குத் தேவையான கரைசலை உருவாக்குவதற்காக பெரிய வாளி ஒன்றில் தண்ணீரை நிரப்பிக் கொண்டிருந்தபோது, “உங்கள் எல்லாரையும் பாக்கேக்கே, கீரிமலைத் தீர்த்தத் திருவிழாதான் எனக்கு ஞாபகம் வருகுது,” என அந்தக் கொம்பனியில் புதிதாக வேலைக்குச் சேர்ந்திருந்த யமுனா சொல்லிச்சிரித்தாள். அந்த நாட்டிலேயே இருந்திருந்தால் எவ்வளவு நல்லாயிருந்திருக்குமென அவனின் மனம் ஏங்கியது.

பரிசோதனையின்படி அந்தக் குளிசைகள் எவ்வளவு கரைந்துள்ளன என்பதைப் பரீட்சித்துப் பார்த்துக்கொண்டிருந்தான் அவன். “நான் பேசநினைப்பதெல்லாம் நீ பேசவேண்டும்,” என அவனுக்குப் பக்கத்திலிருந்த சங்கர் முணுமுணுத்துக் கொண்டிருந்தான். குறிப்பிட்ட கரைதிறனைப் பெறுபேறுகள் காட்டாவிடில் செய்யப்பட்ட பரிசோதனையில் வழுக்கள் இருந்தன என்பதுதான் முடிவாகவிருக்கும். பின்னர், மேற்பார்வையாளரிடமிருந்து அது தொடர்பான எச்சரிக்கை கிடைக்கும், பரிசோதனையை மீளச் செய்யவேண்டியிருக்கும். அந்தப் பொருளில்தான் எதிர்பார்க்கப்படும் பெறுபேறு திரையில் தெரியவேண்டுமென்ற எதிர்பார்ப்புடன் சங்கர் பகிடியாகப் பாடிக்கொண்டிருந்தான். ‘உறவெண்டால் அப்பிடியெல்லோ இருக்கோணும், வெளிநாட்டுக் கலாசாரத்தில வளந்த அவளோடை உறவுவைச்சதுதான் பிழை’ என எண்ணி அவனை மனம் நோகச் செய்தது அந்தப் பாடல்.

அவனின் பரிசோதனைப் பெறுபேறுகள் இருக்கவேண்டிய வரையறைகளுக்குள் இருக்கவில்லை. ‘என்ன தலையிடி இது, இண்டைக்கு வீட்டுக்கு நேரத்தோடை போகேலாது, பட்ட காலே படும் எண்டு சும்மாவா சொல்லியிருக்கினம்’ – அவனின் மனம் முழுவதும் சலிப்புக் குடிகொண்டது. ஒரே ரென்சனாக இருந்தது. நிகழ்ந்ததைப் பற்றி மேற்பார்வையாளரிடம் கூறிவிட்டு திரும்பவும் அதே பரிசோதனையைச் செய்ய ஆரம்பித்தவனுக்குக் களைப்பாக இருந்தது. கரைசலின் வெப்பநிலை குறித்த நிலையை அடைவதற்கிடையில் ஏதாவது சாப்பிட்டுவிட்டு வருவோமென கன்ரீனை நோக்கிவிரைந்தபோது அம்மம்மாவின் அழைப்பு வந்தது. அவவிடம் லதாவைப் பற்றிச் சொல்லி முட்டுத்தீர்க்க வேண்டுமென அவனின் மனம் விழைந்தாலும் அப்படி மனம்திறந்து பேச அவனால் முடியவில்லை.

ஏதோ சாப்பிட வேண்டுமென்பதற்காகச் சாப்பிட்டிட்டுவந்து, திரும்பவும் அந்தப் பரிசோதனையைத் தொடர்ந்தான். அவனின் சேர்ட் பொக்கற்றுக்குள் இருந்த கைத்தொலைபேசி திரும்பத்திரும்ப அதிர்ந்துகொண்டேயிருந்தது. ஆனால், யார் அழைக்கிறார்கள் என்றோ, ஏன் அழைக்கிறார்கள் என்றோ அக்கறைப்பட அவனால் முடியவில்லை. கடைசியில் பெறுபேறுகள் எதிர்பார்க்கப்பட்ட வரையறைக்குள் வந்திருந்தன. வீட்டுக்குப்போய் ஒரு பியர் குடித்துவிட்டுப் படுத்திட வேண்டுமென நினைத்தபடி வேலையிடத்தைவிட்டு அவன் வெளியேறினான்.

அடுத்தநாள் காலையில் எழுந்து தொலைபேசியைப் பார்த்தபோதே அவனுக்காகக் குரலஞ்சல் காத்திருப்பது தெரியவந்தது. நெருங்கி வாழ்பவர்களுடனான வன்முறையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு நிகழும் தொலைபேசி மூலமான ஆறுவாரக் கவுன்சலிங் வருகிற புதன் கிழமையிலிருந்து ஆரம்பமாக இருப்பதாக அந்தக் குரலஞ்சல் கூறியது.

X     X     X

மூன்று வருடங்களுக்கு முன்னர் ரொறன்ரோவுக்குப் புலம்பெயர்ந்திருந்தபோது மாமா வீட்டில்தான் அவன் தங்கியிருந்தான். கோடைகாலத்தில் மாகாணத்துக்குச் சொந்தமான பார்க் ஒன்றில் கூடாரமிட்டுத் தங்குவது மாமா வீட்டுக்காரரின் வருடாந்தப் பொழுதுபோக்காக இருந்தது. அந்த வருடம் கனடா தினத்துடன் சேர்ந்துவந்திருந்த நீண்ட வாரவிடுமுறையின்போது, அவர்களுடன் சேர்ந்து அவனும் அங்கு போயிருந்தான். மாமியின் ஊரான அச்சுவேலியைப்   பிறப்பிடமாகக் கொண்ட இருபது குடும்பத்தினர் ஒன்றிணைந்திருந்து களிக்கும் இடம்தான் அது. அவனின் ஊர் கொக்குவில் ஆதலால் மாமா குடும்பத்தவரைவிட அவனுக்கு வேறு எவரையும் அங்கு தெரிந்திருக்கவில்லை. அவன் வயதுக்காரரும் அங்கிருக்கவில்லை. அதனால் மாமாவின் வயதுக்காரருடன் உதைபந்தாட்டம் விளையாடுவதைத்தவிர வேறெதுவும் அவனுக்கு ஆர்வமூட்டுவதாக இருக்கவில்லை. பொழுதுசரியும் நேரம் மழை வேறு கொட்டிக்கொண்டிருந்தது, கூடாரத்தில் அது எழுப்பிய ஒலியை ரசித்தபடி, உறங்குவதற்கான பை போன்ற ஒன்றினுள் படுத்திருந்தவன் அப்படியே நித்திரையாகிவிட்டான். அவனின் நீண்ட நித்திரையைச் சூரிய உதயம் பார்க்கவென அவன் வைத்திருந்த அலாரம் குழப்பியது. வேகமாக எழுந்து அந்த ஏரிக்கரைக்குச் சென்றவன், ஏற்கனவே அங்கு ஒரு இளம் பெண் வந்திருப்பதைக் கண்டான். ஆனால், சூரிய உதயத்தை ரசிக்க வந்தவள்போல அவள் இருக்கவில்லை. எங்கோ வெறிச்சுப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

இருட்டுச் சற்று விலக வானத்திலும் ஏரியிலும் வெவ்வேறு நிறங்கள் வர்ணஜாலம் காட்டத் தொடங்கின. அவனுக்கு உற்சாகம் பிறந்தது. அவளுடனும் அது பற்றிப் பேசவேண்டும் போலிருந்தது. “ஓ, மை கோட்! எவ்வளவு அழகாயிருக்கு, என்ன? இதைக் கமெராவுக்குள் அடக்கேலாது,” அவளைப் பார்த்தபடி தன் களிப்பைப் பிரஸ்தாபித்தான்.

“ம்ம்,” பற்றற்ற பதில் அவளிடமிருந்து வந்தது.

“இயற்கையை ரசிக்கிறது உங்களுக்குப் பிடிக்குமா?”

“எனக்கு இதுகளிலை ஈடுபாட்டில்லை.”

“இலங்கையில இருக்கேக்கை இதுகள் ஒண்டும் பெரிசாத் தெரியேல்லை, ஆனா, இப்ப சூரியன் உதிக்கிறதைப் பாக்கிறது, அலையடிக்கிற சத்தத்தைக் கேட்கிறது, நட்சத்திரங்களை எண்ணுறது … எல்லாம் சொர்க்கத்தில இருக்கிறமாதிரிச் சந்தோஷத்தைத் தருது.”

“ம்ம், சொர்க்கம் எப்பிடியிருக்குமெண்டு உங்களுக்குத் தெரியுமோ?”

அவன் சிரித்தான். “நான் என்ன சொல்லுறனெண்டால்…”

“சரி, நான் போகப்போறன்,” அவள் நடக்க ஆரம்பித்தாள். அங்கிருந்து போவதற்கு அவனுக்கு விருப்பமில்லை என்றபோதும் அவளுடன் சேர்ந்து நடப்பதற்காக, ‘நானும் வருகிறேன்,’ என்றபடி அவளைப் பின்தொடர்ந்தான்.

 

சற்று நேரத்தின்பின், காலைச் சாப்பாட்டுக்கென ஒரு அன்ரி ரொட்டி சுட்டார். அப்போது அங்கிருந்த கதிரையொன்றில் ஒரு புத்தகத்துடன் குந்தியிருந்த அவளைக் கண்டதும் அவளும் தங்களின் குழுவினர்தான் என்பது அவனுக்குப் புரிந்தது. பின்னர், கதையோடை கதையாக அவளின் குடும்பம் முதல்நாள் இரவுதான் வந்தது என்றும், அவளின் சினேகிதி அண்மையில் தற்கொலை செய்ததால் அவள் மிகவும் குழம்பிப்போய் இருக்கிறாள் என்றும் மாமியிடமிருந்து அறிந்தான். மதியம் ஏரியில் குளித்துவிட்டு வந்தபோதும் அவள் அதேயிடத்தில் இருந்தாள். அவனுக்கு அவளைப் பார்க்கப் பாவமாக இருந்தது. ஒரு கதிரையை இழுத்துக்கொண்டு போய் அவளருகில் இருந்தவன், “இருக்கலாமோ?” என அவளைக் கேட்டான்.

“இருந்துபோட்டுத்தான் இருக்கலாமோ எண்டு கேட்கிறியள்.”

“அப்ப எழும்பட்டா?” அவன் கதிரையை விட்டெழுந்தான்.

“பரவாயில்லை இருங்கோ. ஆனா, பேச்சுத் துணைக்கு நான் சரிவரமாட்டன்,” என்றாள் அவள் அசட்டையாக. தன்னுடைய நடத்தைக்கு விளக்கம் சொல்வதுபோல, “என்ரை வயசிலை இங்கை ஒருத்தருமில்லை, அதுதான் …” என்றான் அவன்.

“பொதுவா இங்கை இளம் ஆக்கள் வாறேல்லைத்தான், ஒவ்வொருத்தரின்ரை ஆர்வங்களும் வித்தியாசம்தானே.”

“எங்கை வேலை செய்யிறீங்க?”

“அதெப்படி நான் வேலைசெய்யிறன் எண்டு நீங்க அனுமானிச்சியள்?”

“ஓ, சொறி, படிக்கிறீங்களா?”

“ரண்டு கிழமைக்கு முதல்தான் வேலையிலை சேந்திருக்கிறன்.”

“ஓ, வாழ்த்துக்கள், நான் கனடாவுக்கு வந்து எட்டு மாசமாச்சு, பொருத்தமான வேலை ஒண்டும் இன்னும் கிடைக்கேல்லை.”

“என்ன வேலை தேடுறீங்க?”

“சயன்ஸ் டிகிறி இருக்கு, படிச்சதுக்குத் தக்கதா ஏதாவது ஒரு வேலை கிடைச்சால் நல்லதெனப் பாக்கிறன்.”  நீங்க என்ன வேலைசெய்யிறீங்கள் என அவளிடம் கேட்க அவனின் வாய் உந்தியது. ஆனால் அவள் பதில் சொல்வாளோ இல்லையோ என்ற தயக்கம் இருந்ததால் அவன் கேட்கவில்லை.

 

இரவு வானம் முழுவதும் நட்சத்திரங்களால் நிரம்பிவழிந்தது. அண்ணாந்து பார்த்துப் பார்த்து அவனுக்குக் கழுத்து வலித்தது. “நுளம்பு கடிக்கேல்லையா?”  கழிப்பறைக்குப் போட்டுவந்த அவள்தான் கேட்டாள்.

அவள் அப்படித் தானாகக் கதைத்ததில் அவனுக்குச் சந்தோஷமாக இருந்தது.

“இந்த நட்சத்திரங்களைப் பாக்கிறதுக்கு எதையும் தாங்கலாமெண்டிருக்கு.” அவன் சிரித்தான். “இதில வெள்ளி எதெண்டு உங்களுக்குத் தெரியுமோ?”

இது வீனஸ், அது சற்ரேர்ன், அதிலை தெரியிறது பிக் டிப்பர் … என ஒவ்வொன்றாக அவள் பெயரிட அவன் அதை ஆச்சரியமாகப் பார்த்துக்கொண்டிருந்தான்.

அடுத்த நாள் காலையில் சூரிய உதயம் பார்க்கசென்றபோது அவள் வரமாட்டாளா என அவனின் மனம் தேடியது. அவள் வராததில் அவனுக்கு ஏமாற்றமாக இருந்தது.

பகல் ஏரியில் நீந்தச் சென்றபோது, அவளின் அம்மா அவளைப் பலவந்தமாகக் கூட்டிக்கொண்டு வந்திருந்தார். “இரவைக்கும் நட்சத்திரங்களை அடையாளம் காட்டுவீங்களா?” அவன் கேட்டான். அவள் புன்னகைத்தாள். ஆனால், அன்றிரவு மேகக்கூட்டங்கள் அதிகமாக இருந்தமையால் நட்சத்திரங்கள் அதிகம் தெரியவில்லை. நெருப்பைக் கொளுத்திப்போட்டு அந்தக் கதகதப்பில் சுற்றவர இருந்து எல்லோரும் கதைத்துக்கொண்டிருந்தனர். சிறிய குச்சி ஒன்றில் மாஸ்மலோவைக் குத்தியெடுத்துப் பின் அதை நெருப்பில் வாட்டிப்போட்டு அவளிடம் அவன் கொடுத்தான். “நன்றி. ஆனா, நானே செய்யலாம்,” எனக் கூறியபடி அவள் எழுந்து நெருப்பருகே வந்தாள். தலைமயிரை அள்ளி உச்சியில் கொண்டையாகப் போட்டிருந்தவளின் ஒரேயொரு மயிர்க்கற்றை மட்டும் அவளின் நெற்றியில் அழகாக ஊசலாடிக்கொண்டிருந்தது. தீச்சுவாலையில் அவளின் முகம் அப்பழுக்கில்லாமல் ஒளிர்ந்தது, அவனுக்கு அவள் மிக அழகாகத் தெரிந்தாள்.

“என்ரை சினேகிதி ஒருத்தி மருந்துக் குளிசைகள் தயாரிக்கிற கொம்பனி ஒன்றில வேலைசெய்யிறாள். உங்களுக்கு விருப்பமெண்டால் அவளுக்கூடாக உங்கடை ரெசிமியை அங்கை அனுப்பிப்பாக்கலாம்.”

“ஓ, மிக்க நன்றி! அப்படிச் செய்தீங்க எண்டால் மெத்தப் பெரிய உபகாரமாயிருக்கும். உங்கடை போன் நம்பரைத் தருவீங்களோ?”

“என்ரை ஈமெயில் அட்ரஸ் தாறன், அதுக்கு அதை அனுப்பிவிடுங்கோ.”

தன்னுடைய போனில் அவன் அதைக் குறித்துக்கொண்டான். அடுத்த நாள் அங்கிருந்து விலகும்போது மீண்டும் அவளுக்கு அவன் நன்றி சொன்னான்.

அவளின் உதவியால் அவனுக்கு வேலை கிடைத்திருந்தது. ‘அதுக்கு நன்றியாகவேனும் ஒரு கோப்பி வாங்கித் தரலாமா?” என அவளிடம் அவன் ஈமெயிலில் கேட்டிருந்தான். முடிவில் அவர்கள் இருவரும் ரிம் ஹோட்டன் ஒன்றில் சந்தித்தனர். அப்போது அவளின் வேலை, அவனின் வேலை என இயல்பாகப் பேசிக்கொண்டனர். அதன்பின்னர் ஒரு திருமண விழாவில், ஒரு பிறந்தநாள் விழாவில் என அவர்களின் சந்திப்புகள் தொடர்ந்தன. அவளிடம் தான் நெருங்குவதை அவன் உணர்ந்தான்.

ஒரு நாள் தற்செயலாக இருவரும் ஸ்காபோரோ ரவுண் சென்ரறில் சந்தித்துக்கொண்டனர்.  “கோப்பி குடிப்பமா?” அவள்தான் அவனை அழைத்தாள். செக்கண்ட் கப் என்ற அந்தக் கடையில் அவனும் அவளும் ஒரு மணித்தியாலத்துக்கு மேலாக இருந்து கதைத்தனர்.

“வசந்தியின்ர கதையை அறிஞ்சன். கவலையான விஷயம்,” கொஞ்சம் தயக்கத்துடன் அவன் சொன்னான். அவன் வேலைசெய்கின்ற கொம்பனியில்தான் வசந்தியும் வேலை செய்திருந்தபடியால் வேலையிடத்தில் அதுபற்றி அவன் அறிந்திருந்தான்.

“யா… காதலும் கத்தரிக்காயும்! அநியாயமாகச் செத்துப்போனாள் எண்டு எனக்கு அவளிலை சரியான கோவம். அவன் இல்லையெண்டால் என்ன? சரியான விசரி!” பெருமூச்செறிந்தாள்.

“ம், என்ன செய்யிறது? சிலருக்குக் காதல் பெரிய விஷயமாயிருக்கு. அதில்லை எண்டதைத் தாங்கிறதுக்கான உத்திகளோ வழிமுறைகளோ தெரியிறதில்லை. எல்லாருக்கும் வாழோணும் எண்டுதான் ஆசையிருக்கும், இருந்தாலும் …”

“எதுவும் நடக்காதமாதிரி அவன் நல்லாய்த்தானே இருக்கிறான். வசந்தியின்ரை குடும்பம்தான் அதிலையிருந்து மீளமாட்டாமல் இன்னும் தத்தளிச்சுக் கொண்டிருக்கு. அவனைக் கண்டு நாலு கேள்வி கேட்கோணுமெண்டு எனக்கு ஆசை, இன்னும் சந்தர்ப்பம் வருதில்லை”

கோபத்தில் அவளின் முகம் சிவந்தது. அவனுக்கு அது பிடித்திருந்தது. அப்படியாக மெதுமெதுவாக அவர்கள் இணைந்தனர். ஒருவருட உறவுக்குப் பின் அவளின் அப்பார்ட்மென்ற்க்கு அவன் இடம்மாறினான். கலியாணம் கட்டாமல் என்னெண்டு ஒண்டாயிருக்கிறது எனத் தன்னைத் தானே முதலில் கேட்டுக்கொண்டவன், முடிவில் அவளின் ஆலோசனைக்குச் செவிசாய்க்கும் அளவுக்கு அவளில் பைத்தியமாக இருந்தான்.

அப்படி இடம்மாறுவதன்மூலம், மாமா வீட்டில் இருப்பதன் அசெளரியம் குறையும், அவளைச் சந்திப்பதில் இருக்கின்ற சிக்கல்களும் முடிவுக்கு வருமெனத் தனக்குத் தானே அவன் சமாதானம் சொல்லிக்கொண்டான். ஆனால், ஒன்பதுமாத காலத்துக்குள் இப்படியாகுமென அவன் நினைக்கவேயில்லை.

வேலைமுடிந்து வீட்டுக்குப் போகும்போது அவளுக்குக் கோல் பண்ணுவான். வீட்டுக்குப் போனதும் அவளைக் காணாவிடில் திரும்பக் கோல் பண்ணுவான். அவள் உடனே பதிலளிக்காவிட்டால் பத்து நிமிடம் கழித்துத் திரும்பவும் கோல் பண்ணுவான். அவளுடன் கதைக்கும்வரை அவனால் அமைதியாக இருக்க முடிவதில்லை. அவளுக்கு ஏதாவது நடந்திருக்குமோ என்ற தவிப்பு அவனின் மனதில் இருக்கும், அதைவிட அதிகமாக, தன் அழைப்பை உதாசீனம் செய்யுமளவுக்கு அவளுக்கு என்ன முக்கியமான விடயமிருக்கு என்ற கோபம் வரும். அவனின் அந்த நடத்தை அவளுக்கு மிகவும் எரிச்சலை ஏற்படுத்தியது. ஆறு, ஏழுதரம் அவன் கோல் பண்ணிய பின்னர், சிலவேளைகளில் அவள் அவனைத் திருப்பிக் கோல் பண்ணுவாள். “கோல் பண்ணேக்கே பதிலளிக்காட்டி நான் பிஸி எண்டு உங்களுக்கு விளங்காதே. இப்பிடியெல்லாம் கோல்பண்ணி அலுப்புத்தாறது எனக்குப் பிடிக்காது,” எனச் சினப்பாள். “எங்கை நிக்கிறாய், என்ன செய்கிறாய்?” என அவன் கேட்டால் அவளின் சுதந்திரத்தில் அவன் தலையிடுகிறான் என அவளுக்கு ஆத்திரம் வரும். கோல் பண்ணிச் சாப்பிட்டியா என்று கேட்பதுகூட அவளுக்குப் பிடிப்பதில்லை. தான் ஒரு சின்னப் பிள்ளையில்லை, தனக்குத் தன்னைக் கவனிக்கத்தெரியும் என்பதுதான் அவளின் கருத்தாகவிருந்தது.

அவளுக்குப் பிடிக்கவில்லை என்று அவற்றைச் செய்யாமல்விட அவனால் முடியவில்லை. அவள் வீட்டுக்குப் பிந்தி வரும் நாட்களில் வேண்டுமென்று அவளை எரிச்சலூட்டுவதற்காக சினிமாப் பாட்டை உச்சஸ்தாயில் போட்டுக்கேட்பான் அல்லது அவளுக்குப் பிடிக்காத வேறு ஏதாவது ஒன்றைச் செய்வான்.

கடந்த இரண்டு வாரங்களாக, “எங்கடை உறவு சரிவரும்போல தெரியேல்லை. எங்கடை இயல்புகள் எல்லாம் வேறைவேறையா இருக்கு. இந்த உறவு வேண்டாம், விட்டிடுவம். எங்காவது ஒரு இடம் பாத்துக்கொண்டு நீங்க போறது நல்லம்,” என்ற மாதிரி அவள் அவனிடம் அடிக்கடி சொன்னாள். அவள் கூறிய எதையும் அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, சும்மா பேச்சுக்குத்தான் சொல்கிறாள், அவனைப் பிரிகிறதுக்கு அவளுக்கும் விருப்பமிராது. விரைவில் கோபம் ஆறி பழையபடி வந்துவிடுவாள் என்றெல்லாம் தனக்குத் தானே அவன் கற்பனை செய்துகொண்டான்.

அன்று அவள் வேலையால் வந்தபோது அவனுக்கு அவள் மிகவும் அழகாகத் தெரிந்தாள்.  சிவப்பு நிறச் சட்டையில் அவள் நல்ல செக்சியாக இருப்பதாக அவனுக்குத் தோன்றியது. கதிரையில் இருந்தவன் வேகமாக எழுந்து, அவளின் பின்பக்கமாகக் சென்று அவளைக் கட்டியணைத்து அவளின் கழுத்தில் ஆசையாக முத்தமிட்டான். அவள் அவனிடமிருந்த விலக எத்தனித்த போது, அவளை முன்பக்கமாகத் திருப்பி அவளின் உதட்டைக் கெளவினான். அவனுக்கு அவனின் காமத்தை அடக்க முடியவில்லை. அவளுக்கு கோபம் உச்சிக்கேறியது.

“உங்களுக்கு ஒண்டும் விளங்குதில்லையா? எனக்கு உங்களைப் பிடிக்கேல்லை, தயவுசெய்து என்னைத் தொடாதேயுங்கோ,” எனக் கத்தினாள். “எப்ப வீட்டை விட்டிட்டுப் போகப்போறியள்?” என வெடித்தாள். அவளின் கோபம் அவனுக்கு உண்மையிலேயே புரியவில்லை.

“ஏன் என்னைப் பிடிக்கேல்லை எண்டு சொல்லு, பிறகு நான் போறன். எல்லாரும் ஒரே மாதிரி இருக்கேலுமா?”

“என்ன, எல்லாத்தையும் நான் இனி பட்டியல்போட்டுக் காட்டுறதோ? ஒண்டும்தான் பிடிக்கேல்லை!” வெறுப்பை உமிழ்ந்தாள் அவள்.

“அப்ப முந்தி உனக்கு என்னிலை என்ன பிடிச்சது? வீட்டிலை இருக்க வாவெண்டு என்னத்துக்கு கூப்பிட்டனி? ரண்டு வருஷமா இருந்த உறவை சும்மா முறிக்கேலுமோ? மாமாவைக்கும் தெரியும். இதென்ன விளையாட்டு எண்டு நினைச்சியோ? அதோடை நான் வாடகை தாறன். எனக்கு நீ இரண்டு மாத முன்னறிவித்தல் தரவேணும். தெரியுமோ?” பதிலுக்கு அவனும் கத்தினான். அவனிடமிருந்து விலகிச்செல்ல முயன்றவளின் கையைப் பிடித்திழுத்தான்.

அவள் அறைக்குள் போய் கதவைப் பூட்டிக்கொண்டாள். ஆத்திரமடைந்த அவன் மேசையிலிருந்த பூச்சாடியை எடுத்தெறிந்தான். வீடு அதிர்ந்தது. அடுத்த அரை மணித்தியாலத்தில் வீட்டுக்குப் பொலிஸ் வந்துநின்றது. அவளின் விருப்பமில்லாமல் அவளைப் பாலியல்ரீதியாகத் தொட்டது, வீட்டை விட்டுப் போகச்சொல்லியும் போகாதது, கையைப் பிடிச்சிழுத்தது எனப் பல குற்றம்சாட்டி அவனை அவர்கள் கைதுசெய்தனர்.

நடந்ததைச் சொல்லிப் பிணையெடுக்கும்படி மாமாவிடம் கேட்டபோது அவனின் உடலும் மனமும் கூனிக் குறுகிப்போயின. அந்த அவமானத்தைப்போல ஒன்றை அவன் வாழ்நாளில் ஒரு நாளும் உணர்ந்திருக்கவில்லை. பிணையில் வெளியே வந்தபோது இதுபற்றி வேலையிடத்துக்குத் தெரியவராதுதானே எனப் பல தடவைகள் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டான். அவமானமும், வெட்கமும், கோபமும் அவனைப் பிடுங்கித்தின்றன. “அவளின்ர சினேகிதி இறந்த சோகத்தை ஆற்றுறதுக்கான ஒரு வழியாத்தான் அவள் உன்னைப் பாவிச்சிருக்கிறாள். இனியும் இப்பிடியெல்லாம் ஏமாந்து போகாதை, நல்லதொரு பொம்பிளையாய்ப் பாத்து நாங்கள் கட்டிவைக்கிறம்,” என்றார் மாமி. திரும்பவும் மாமா வீட்டில் போயிருக்க அவனுக்குப் பிடிக்கவில்லை. மாமா வீட்டுக்குப் பக்கத்திலிருந்த ஒரு வீட்டின் அடித்தள அறை ஒன்றை வாடகைக்கு எடுத்துக்கொண்டான்

X     X     X

கவுன்சிலிங்கின் பன்னிரண்டு அமர்வுகளில் முதல் சில கோபத்திலேயே கழிந்தன. ஒருநாள் அவன் செய்த எந்தச் செயல்கள் அவளுக்கு அவனில் கோபத்தை ஏற்படுத்தின, ஏன் அவை அவளுக்குக் கோபத்தை ஏற்படுத்தின என அவன் நினைக்கிறான் என்றெல்லாம் எழுதிக்கொண்டு வரும்படி அந்தக் கவுன்சிலர் கேட்டிருந்தார்.

அப்படி அவன் எழுதியவை பற்றி உரையாடியபோது அவளுக்கு அவை ஏன் கோபத்தை ஏற்படுத்தின என்பது தனக்கு விளங்கவில்லை என்றான் அவன். அத்துடன் தான் அப்படிச்  செய்வது தன்னுடைய கரிசனையைத்தான் காட்டுகிறது என விளக்கம் சொன்னான்.

மேலும் இரண்டு வாரங்கள் சென்றன. ஒருவருக்குப் பிடிக்காத போது அவரின் உடலைத் தொடுவது சட்டப்படி தவறு எனக் கனேடியச் சட்டம் இருப்பது தனக்குத் தெரியாது என்றான். இலங்கையில் ஒருவர் கோபித்தால் கையிலை பிடித்து இருத்தித்தான் ஆட்கள் விளக்கம் சொல்வது, விளக்கம் கேட்பது எனக் கலாசார வேறுபாட்டை விளங்கப்படுத்த முயற்சித்தான்.

“உங்கடை ரோல் மொடல் யார்?” என அந்தக் கவுன்சிலர் கேட்டார்.

“நான் சின்ன வயசாயிருக்கேக்கேயே அம்மாவும் அப்பாவும் செல்லடிபட்டு செத்துப் போச்சினம். அம்மம்மாவுடன்தான் நான் வளந்தனான்.”

“ஓ, சொறி. அப்ப ஆண் ரோல் மொடல் எண்டு ஆரைச் சொல்லுவியள்?”

“தெரியேல்லை”

“சரி, உங்கடை அம்மம்மா உயிரோடை இருக்கிறாவா? இந்தச் சம்பவம் பற்றி அவவுக்குச் சொன்னா அவ என்ன சொல்லுவா?”

“அவ இருக்கிறா. ஆனா என்ன சொல்லுவா எண்டு தெரியேல்லை. இதைப்பத்தி அவவுக்கு நான் ஒண்டும் சொல்லேல்லை. தெரிஞ்சால் அவ கவலைப்படுவா.”

“என்னத்தைப் பற்றிக் கவலைப்படுவா எண்டு நீங்க நினைக்கிறீங்க?”

“இப்பிடிப் பொலிசிலை நான் பிரச்சினைப்பட்டதைப்பத்தித்தான்”

“ஓ, சரி, அவவுக்குச் சொன்னீங்க எண்டால் அவ என்ன சொல்லுவா எண்டு நீங்க நினைக்கிறீங்க?”

“அவளுக்குப் பிடிக்கேல்லை எண்டால், விட்டிடவேண்டியதுதானே எண்டு சொல்லக்கூடும்.”

“அது சரி, எங்களை விரும்பச்சொல்லி நாங்க ஒருத்தரையும் வற்புறுத்தேலாது”.

“ஓம், விளங்குது, பறக்கவிடு, அது திரும்பிவந்தால் உன்னுடையது எண்டு எங்கடை ஊரிலை சொல்லுறவை.”

“ம்ம், அவ விலகிப்போயிட்டா, நீங்க தனிச்சுப் போயிடுவியள் எண்டு நினைச்சனியளோ?”

“நான் தனியத்தான் வளந்தனான், அம்மா, அப்பா, சகோதரம் எண்டு ஒருத்தருமில்லை. அம்மம்மாவும் இப்ப தூரத்திலை. ரண்டு வருஷ உறவு இது”

“ரண்டு வருஷமா வளத்த உறவை எப்படிப் பிரியிறது எண்டு யோசிச்சியள்.”

“ஆனா, ஒரு ஆளுக்கு விருப்பமில்லை எண்டால் விலகிட வேணுமெண்டு இப்ப நான் படிச்சிட்டன். சும்மா இழுத்துவைச்சுக் கொண்டிருக்க வெளிக்கிட்டுக் கடைசியிலை பொலிஸ் கேஸ் ஆயிட்டுது. முதல்தரமெண்டதாலை நல்லவேளை வேலையிடத்துக்குத் தெரியவரேலை.”

“உங்கடை சுயமேம்பாட்டுக்காக, இப்பிடியான பிரச்சினைகள் இனிமேல் வராமல் தடுக்கிறதுக்காக என்ன செய்யலாமெண்டு நினைக்கிறியள்?”

“நீங்கதான் சொல்லோணும். இப்ப உங்களுக்கு என்னைப்பற்றித் தெரியும், நான் என்ன செய்யவேணுமெண்டு நீங்க நினைக்கிறீங்க?”

“ம், இந்தப் பிரச்சினையள் வராமல் எப்பிடித் தடுத்திருக்கலாமெண்டு நீங்க நினைக்கிறியள்?”

“எனக்குப் பொறுமை இல்லை. பொறுமையை நான் வளத்துக்கொள்ள வேணும்.?

“மிகச் சரி, பொறுமை மிக முக்கியம்.”

“ஒரு பிரச்சினைக்கு உடனடியாத் தீர்வு காணவேணுமெண்டு வெளிக்கிடுறதாலை பிரச்சினை பெரிசாய்ப் போகுது.  அதைக் கொஞ்சம் ஆறப்போட்டால் சிலவேளை வேறைவிதமா நல்ல தீர்வும் வரலாம்.”

“ம்ம், நல்லதொரு எதிர்வினை அது. அதோடை மற்றவை தூரவிலகினால், மனசிலை ஏற்படுற வெறுமைக்கு என்ன செய்யலாமெண்டும் கற்றுக்கொள்ள வேணும்.”

“அதுக்கு நான் என்ன செய்யலாம்?”

“சமூகத்திலை பல விதமான சமூக சேவை நிறுவனங்கள் இருக்கு. நீங்க அவையை அணுகலாம். அவையை அணுகி, கைவிடப்பட்டு இருக்கிறமாரி அல்லது தனிச்சிருக்கிறமாரி உணர்ற நிலையைக் கையாளுறதுக்குக்கான உத்திகளை அறிஞ்சுகொள்ள விரும்புறதாகச்  சொல்லுங்கோ.”

“ஓம், ஓம்”

“உங்கடை அம்மா, அப்பா செத்துப்போனபோது உங்களுக்கு எத்தனை வயசு?”

“ஏழுவயசு.”

“அந்த இழப்புச் சம்பந்தமாக ஏதாவது கவுன்சலிங்குப் போனனீங்களா?”

“இல்லை”

“ஓ. அப்ப உங்களுக்குக் கவுன்சலிங் கட்டாயம் உதவிசெய்யும், பழைய காயங்களையும் ஆற்றுறதுக்கு உதவுமெண்டு நான் நம்புறன்.”

“உங்களுக்கு மிக்க நன்றி, உங்களிட்டை இருந்து நான் நிறையப் படிச்சிட்டன். முதலிலை எனக்குப் பிடிக்கேல்லை, இப்ப எல்லாம் விளங்குது.”

“உங்களுக்கு உதவ முடிஞ்சதிலை எனக்குச் சந்தோஷம். உங்கடை எதிர்கால வாழ்க்கைக்கு என்ரை வாழ்த்துகள்.”

“மீண்டும் நன்றி.”

தொலைபேசியை வைத்தபோது மனதில் ஒருவகை வெறுமையும், அதேவேளையில் அமைதியும் அவனில் குடிகொண்டன. ஆழமாக மூச்செடுத்தான். பின்னர் ரேடியோவைப் போட்டுவிட்டு தேநீர் போடத் தயாரானான்.

மனமே ஓ மனமே நீ மாறிவிடு, மலையோ அது பனியோ நீ மோதி விடு,” சித்திராவின் இனிய குரலில் ஒட்டோகிராப் திரைப்படப் பாடல் ஒலித்தது.

 

 

 

 

 

2 comments

  1. உணர்வுபூர்வமான கதை. கனடாவில் பிழைக்கவந்து நிலையற்ற எதிர்காலத்தை எதிர்கொள்ளும் கட்டாயத்தில் வாழும் இலங்கையர்களின் நிலைமையைத் தெளிவாகக் காட்டும் கதை. இயல்பான, அருவிபோன்ற மொழிநடை. மிகவும் ரசித்தேன். -இராய செல்லப்பா சென்னை

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.