உலக நிலவரத்தையும் அதை ஏற்க மறுப்பதன் ஆழத்தையும் எதிர்கொள்கையில், நமக்கு தொடர்ந்து கிட்டும் தரவுகளை எதிர்கொள்கையில், உயர்தளத்தில் களிப்புக் கொண்டாட்டங்கள் மேலும் மேலும் ஓங்கி ஒலிக்கையில் பாதாளத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் கப்பலில் இருக்கும் உணர்வை எதிர்கொள்கையில், ‘இருத்தல் சார்ந்த படைப்பூக்கம்’ என்று நான் அழைக்கும் வகைப்பட்ட எழுத்து முறைமையையும் பார்வையையும் வளர்த்துக் கொள்ளும் தேவையை உணர்கிறேன். காலத்தின் முடிவுக்குத் தக்க படைப்பூக்கம் இது.
காலத்தின் முடிவு நெருங்குவதை உணரும் ஆற்றல் ஒரு சிலருக்கே அளிக்கப்படுகிறது. அட்லாண்டிஸ்சில் வாழ்ந்தவர்களில் சிலர் அதை உணர்ந்திருக்கலாம். பொம்பெய்யின் சாதுக்கள், அத்தகையவர் அங்கிருந்திருந்தால், அதை முன்கூட்டியே அறிந்திருக்கலாம். கடல் வழி படையெடுத்து வந்தவர்களால் சிதைக்கப்படவிருந்த சமூகங்களுக்கு உரிய நாகரீகங்கள் ஒரு வேளை இந்த உணர்வுக்கு ஆளாகி இருந்திருக்கலாம். ஆனால் அழிவு நெருங்கிக் கொண்டிருக்கிறது என்ற தரவுகள் அறியப்பெற்றவர்கள், ஒவ்வொரு நாளும் அது குறித்த விபரங்கள் அருவியாய் வீழக் கண்டும் எல்லாம் எப்போதும் போல் இருப்பது போல் வாழ்ந்தவர்கள் யாரும் இருந்ததாய் நினைத்துப் பார்க்க முடியவில்லை.
ஆல்பெர் காமு, இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் எழுதிக் கொண்டிருக்கும்போது, தன் காலத்துக்குரிய அதிதீவிர உண்மைகளை அளிக்கக்கூடிய புதிய தத்துவத்தின் தேவையை உணர்ந்தார். அங்குதான் அபத்த இலக்கியம் பிறந்தது. அதிதீவிர இடர்ப்பாடுகளின் பிடியில் தத்தளித்த உலகில்தான் இருத்தலியலும் பிறந்தது. ஆனால் நாம் இதுவரை எதிர்கொண்ட இடர்ப்பாடுகளில் மிகப் பெரியதன் விளிம்பில் இதோ நாம் நிற்கிறோம். இக்காலத்துக்குரிய, மானுட வரலாற்றின் இறுதிக்கு அருகாமையில் நிற்கும் இக்கணத்துக்குரிய, புதிய தத்துவம் நமக்குத் தேவைப்படுகிறது,
இந்த உணர்விலிருந்தே நான் இருத்தல் சார்ந்த படைப்பூக்கத்தை முன்வைக்க விரும்புகிறேன். அதை எவ்வாறு வரையறுத்துக் கொள்கிறேன்? எதையும் வீணாக்காத படைப்பூக்கம் அது. ஓர் எழுத்தாளனாய் நான் எழுதும் ஒவ்வொன்றும் மானுட இனமென நாம் வந்து நிற்கும் பேராபத்து நிலை குறித்து நம் கவனத்தை ஈர்க்கும் உடனடி நோக்கம் கொண்டதாய் இருக்க வேண்டும் என்று இது பொருள்படுகிறது. அலங்காரங்கள் இல்லாத எழுத்து என்பது இதன் அர்த்தம். இது உண்மை மட்டுமே பேச வேண்டும். இந்த உண்மை அழகாகவும் இருக்க வேண்டும். இது மிகவும் சிக்கனமான எழுத்தைக் கோருகிறது. நான் செய்வதெல்லாம் ஒற்றை நோக்கம் கொண்டதாய் இருக்க வேண்டும் என்றாகிறது.
இவையே நான் எழுதும் கடைசி விஷயங்கள் என்பது போல் நான் எழுத வேண்டும் என்றும் பொருள்படுகிறது, நம்மில் யார் எழுதக்கூடியவற்றிலும் இறுதிச் சொற்கள் இவை. மானுடக் காதையின் இறுதி நாட்களில் நீங்கள் இருக்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும் என்றால், நீங்கள் என்ன எழுதுவீர்கள்? எப்படி எழுதுவீர்கள்? உங்கள் அழகியல் எதுவாக இருக்கும்? தேவைக்கு மேல் சொற்களைப் பயன்படுத்துவீர்களா? கவிதையின் உண்மை வடிவம் எதுவாக இருக்கும்? நகைச்சுவையின் கதி என்ன? நம்மால் சிரிக்க முடியுமா, இறுதி நாட்கள் வந்துவிட்டன என்ற உணர்வுடன்?
எல்லாம் முடிந்து விட்டது என்று கற்பனை செய்து பார்க்கக் கூடியவர்களாய் நாம் இருக்க வேண்டும் என்று சில சமயம் நினைத்துப் பார்க்கிறேன். நாம் எதைக் கற்பனை செய்கிறோமோ, அதைக் கடந்து செல்வதையும் நாம் கற்பனை செய்ய முடியும். மானுடம் தன் முடிவை நினைத்துப் பார்க்க இயலாததாய் இருப்பதே என் கவலைகளில் மிகப் பெரியது. சாதாரண, நல்லெண்ணம் கொண்ட குடிமக்கள் பருவ மாற்றத்தின் நிதர்சனங்களை எதிர்கொள்ள மறுப்பதை வேறு எப்படி விளக்க முடியும்? நாம் எதிர்கொள்ள மாட்டோமென்றால், மாற்ற மாட்டோம். நாம் மாற்ற மாட்டோமென்றால், தடுத்து நிறுத்தக்கூடிய விஷயங்களை செய்யத் துவங்க மாட்டோம். ஆக, நாம் எதிர்கொள்ள மறுக்கும் விஷயங்களே நாம் என்ன நடக்கக்கூடாது என்று நினைக்கிறோமோ அது நடப்பதை உறுதி செய்யும்.
நாம் ஒரு புதிய கலை கண்டாக வேண்டும், நாம் வாழும் உலகம் பிழைக்க வேண்டுமென்றால் அதற்குத் தேவையான மாற்றங்கள் செய்வதைத் தடுக்கும் அக்கறையின்மை மற்றும் மறுதலிப்பை துளைத்துச் செல்லக்கூடிய புதிய உளவியல் காண வேண்டும். நம் மீது கவியும் பேராபத்து குறித்தும் அது விஷயமாக நாம் இப்போதும் ஏதாவது செய்ய முடியும் என்பதையும் உணர்த்தும் புதிய கலை நமக்கு தேவைப்படுகிறது.
நாம் எதை மிகவும் அஞ்சுகிறோமோ அதைக் கற்பனை செய்து பார்க்கும் ஆற்றல் ஒரு திறன். அச்சங்களைக் கடந்து செல்ல இயற்கை நமக்கு அளித்துள்ள பரிணாம வளர்ச்சிக் கருவி அது. மிக மோசமான உலகங்களைக் கற்பனை செய்து பார்ப்பது அவற்றை உண்மையாக்கி விடும் என்ற நினைப்பு எனக்கில்லை. மிக மோசமான நிலையை நினைத்துப் பார்ப்பது அப்படியொன்று நிகழாது தடுக்கும் கூறுகளில் ஒன்றாக இருக்கக்கூடும். பிறழ் உலகங்கள் மற்றும் பொன்னுலகங்களின் பயன் அதுவே: ஒன்று நாம் போகக்கூடாத இடத்தின் மெய்த் தோற்றம் அளிக்கிறது, மற்றது சாத்தியமாகக் ஒரு எதிர்காலத்தை நமக்காக கற்பனை செய்து பார்க்கிறது. ஏழ்மை குறித்த அச்சத்தால் பலர் பணக்காரர்கள் ஆகியிருக்கிறார்கள். மரணம் குறித்த அச்சம் பலரின் ஆரோக்கியத்தைக் காப்பாற்றியிருக்கிறது, தாம் எப்படி வாழ்கிறோம் என்பது குறித்து அறிவோடு நடந்து கொள்ளச் செய்திருக்கிறது.
நம்பிக்கைக்கு ஒரு காலமுண்டு, நிதர்சனத்தை ஏற்றுக் கொள்வதற்கு ஒரு காலமுண்டு. ஆனால் நம்பிக்கைக்கும் இயல்புவாதத்துக்கும் அப்பாற்பட்ட ஒன்றே இப்போது வேண்டியது. மானுட பிரக்ஞையிலும் நம் வாழ்வு முறையிலும் மிகப் பெரிய நகர்வை சாத்தியப்படுத்துவதற்கு நம்மை நாம் அர்ப்பணித்துக் கொள்ள வேண்டிய காலம் இது. பரிணாம வளர்ச்சியில் பிரக்ஞைப்பூர்வமாய் ஒரு தாவலை நிகழ்த்த நாம் சங்கல்பம் செய்து கொண்டாக வேண்டும். நாம் இதுவரை இருந்த மனிதர்களாய் இனி இருக்க முடியாது: வீண் செய்பவர்கள், முன்யோசனை இல்லாதவர்கள், சுயநலமிகள், அழிப்பவர்கள். நாம் இதுவரை இல்லாத அளவு படைப்பூக்கம் கொண்டவர்களாய் இருக்க வேண்டிய வேளை இது, மிகவும் தொலை நோக்கு பார்வை கொண்டவர்களாய், மிகவும் யதார்த்தமானவர்களாய், மிகவும் விழிப்பு நிலையில், தன்னலமற்றவர்களாய் இருக்க வேண்டிய வேளை இது. இதுவரை இவ்வளவு பெரிய இழப்பை எதிர்கொண்டதில்லை, இனி இது போன்ற ஒரு இழப்பை எதிர்கொள்ளப் போவதில்லை.
இவ்வுலகு சார்ந்து ஒரு தனி வகை நேசம் தேவைப்படுகிறது. இதோ இழக்கப் போகிறோம் என்பதை அறிந்த காரணத்தால் உயிரின் நுண்மதிப்பை அறிய வந்தவர்களின் நேசம் அது. உலகங்களில் மிக அழகானதும் அபூர்வமானதுமான இவ்வுலகு, அண்டம் எங்கிலும் ஓர் அதிசயம், ஆன்மாக்களின் வளர்ச்சிக்குரிய அகம், அண்ட வெளியின் வளமைகளில் ஒரு சிறு சுவர்க்கம், இங்குதான் நாம் வாழ்ந்து வளர்ந்து மகிழ்ச்சி காண வேண்டும் என்று அளிக்கப்பட்ட இவ்வுலகை இழக்கும் நிலையின் விளிம்புக்கு வந்து விட்டோம், இந்த உலகை நாம் ஒவ்வொரு நாளும் ஆகாயத்தில் சுழலும் வறண்ட கல்லாக்கிக் கொண்டிருக்கிறோம்.
எனவே ஒரு புதிய இருத்தலியல் தேவைப்படுகிறது. எதிர்மறைத்தன்மை கொண்டதும் துவளாது தாளும் தன்மை கொண்டதுமான காமு மற்றும் இழான் பவுல் சார்த்தரின் இருத்தலியல் அல்ல, தீரமும் தரிசனத்தன்மையும் நிறைந்த இருத்தலியல் இது. இங்கு களைஞர்களாய் நம் நாம் வாழ்வை வேறொரு சமூகத்தை உருவாக்கும் கனவுக்கு அர்ப்பணித்துக் கொள்கிறோம். நாம் வலுவான கனவுகள் கொண்டவர்களாய் இருக்க வேண்டும். சிந்திக்க முடியாத கேள்விகள் எழுப்ப வேண்டும். நாம் ஏன் இப்படி எல்லாம் தின்று அழிக்கும் உயிரினமாய் இருக்கிறோம், மிகையான அளவு போட்டி போடுகிறோம், பிறவற்றை வெற்றி காணும் உந்துதலால் செலுத்தப்படுகிறோம், படிநிலைகளை அமைத்துக் கொள்கிறோம், என்ற கேள்விகளின் வேர்களுக்குச் செல்ல வேண்டும்.
பணம், அதிகாரம், பசி, இவற்றைக் குறித்து கேள்விகள் எழுப்ப வேண்டும். அடிப்படையில் எல்லாருக்கும் தேவையான எல்லாம் போதுமான அளவு இருக்கிறது என்று அறிவியலாளர்கள் சொல்கிறார்கள். இப்புவி நாம் வாழ்வதற்கான எல்லாம் வைத்திருக்கிறது. இனியும் ஆழமற்ற கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருக்கக் கூடாது. நாம் யார் என்பதன் மையத்துக்கு நாம் ஏன்கள் செல்ல வேண்டும். அதன்பின் நம்மை மாற்றிக் கொள்ளும் பயணம் துவங்க வேண்டும். நாம் நம்மை மீளுருவாக்கம் செய்து கொள்ள வேண்டும். ஏனோ நாகரீகம் தவறான திசையில் திரும்பி விட்டது, நாம் கூட்டாக நம் இலக்கைத் திருத்திக் கொள்ள வேண்டும், நம் பயணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். மானுட அழிவின் விளிம்பு வரை சென்று நிற்க இரண்டாம் வாய்ப்பு கிடைக்காது. இந்த விளிம்பைப் பிழைத்து விட்டால், நமக்காக காத்திருக்கும் யுகச்சந்தியை நெருங்காது பின்வாங்க முடியுமென்றால், புவி முழுமைக்கு, புவியில் உள்ள மக்கள் அனைவருக்கும் ஜீவிதமும் நீதியும் அழகும் அளிக்கும் உலகளாவிய திசை கண்டாக வேண்டும்.
நமக்கு இருக்கக்கூடிய மிகச் சிறந்த, மிக இயல்பான வீடு இதுவாகவே இருக்க முடியும். அதற்குரிய தகுதி கொண்டவர்களாய் நாம் இருக்க வேண்டுமென்றால் புதிய மனிதர்களாய் மாற வேண்டும். அதை மீள்கனவு காண நாம் புதுக்கலைஞர்களாய் மாறியிருக்க வேண்டும். எனவேதான் இருத்தல் சார்ந்த படைப்பூக்கத்தை முன்வைக்கிறேன், நாம் காலத்தின் தவிர்க்க இயலாத உண்மைக்கு ஊழியம் செய்வதற்கு என்று. எனவேதான் தரிசன இருத்தலியல் வேண்டுமென்கிறேன், சுற்றுச்சூழல் பேரழிவின் விளிம்பிலிருந்து நாம் மீட்டெடுக்கக் கூடிய எதிர்காலத்துக்கு ஊழியம் செய்வதற்கு என்று.
இன்று நாம் எதிர்கொள்ளும் உண்மையின் ஆழத்திலிருந்து மட்டுமே எதிர்காலத்தை வளர்த்தெடுக்க முடியும்.
நன்றி – The Guardian