உஷாதீபன்
முகத்தில் பெருத்த கலவரத்தோடு தன் ஆட்டோவில் ஏறி அமர்ந்த அந்தப் பெண்ணை உற்றுப் பார்த்து விட்டு வண்டியை சட்டென்று உயிர்ப்பித்தான் சரவணன். நல்ல வேளை அவனும் அங்கிருந்து வீட்டிற்குக் கிளம்ப இருந்தான். அந்த ஆட்டோ ஸ்டாண்டில் மற்ற எல்லோரும் அன்று என்னவோ சற்று சீக்கிரமாகவே வீட்டிற்குப் போய் விட்டார்கள். அன்று சரியான முகூர்த்த நாள். காலையிலிருந்து எல்லோருக்குமே நல்ல சவாரி. ஆட்டோ ஸ்டாண்ட் முழுக்கக் காலியாக இருந்தது அன்றுதான்.
ஒருவர் பின் ஒருவராகத்தான் பேசி வைத்துக் கொண்டு வண்டியை எடுப்பார்கள். அந்த அளவுக்கு ஒற்றுமை வேறு எங்கும் இருக்குமா என்பது சந்தேகமே. குறைந்தது பத்து வண்டிகள் நிற்கலாம் அங்கே. ஆனால் தற்போது நின்று கொண்டிருப்பது எட்டுதான். சரவணன்தான் அங்கே ஸ்டாண்டை உண்டாக்கினான். முதன் முதலில் குப்பை மேடாகக் கிடந்த அந்த இடத்தில் மரம் ஒன்று கிளை விட்டுப் படர்ந்து நல்ல நிழல் தந்து கொண்டிருப்பதைக் கவனித்தவன் அவன்தான். ஆனால் அந்த மரம் வேலிக்கு அந்தப்புறம் இருந்து வந்தது. வேலிக்கு வெளியே குப்பை மேடு. வேலிக்கு உட்புறமாக இருந்த பெரிய கட்டிடம் வெகு நாளாக மூடியே கிடப்பதைக் கண்டு விசாரித்தான். அது ஒரு மில் என்றும் சரியான கவனிப்பு இன்றி உற்பத்தி குறைந்து மில்லையே மூட வேண்டிய நிலை ஏற்பட்டது என்றும் அங்கு பணிபுரிந்த நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வெளியே கூலி வேலைக்குப் போய் விட்டார்கள் என்றும் தொழிலாளர்களுக்கு எந்த விதப் பணப்பலன்களும் கொடுக்கப்படாமலேயே கழிந்து விட்டது என்றும் விபரங்கள் அறிந்தான். அந்த இடத்தில் நிற்கும்போதெல்லாம் அங்கு அந்த மில் ஓடிக் கொண்டிருந்தால் அந்த இடம் எவ்வாறிருக்கும் என்று கற்பனை செய்து கொள்வான். மில் ஓடும் சத்தமும் வெளித் தார்ச்சாலையில் பேருந்துகள் போக வர இருக்கும் இரைச்சலும்தான் அந்த இடத்தில் ஸ்டாண்ட் போட ஏற்ற இடமாக அமைந்திருக்குமா என்று யோசிப்பான். ஆனாலும் பலநூறு தொழிலாளர்கள் வேலையில்லாமல் போனது அவன் மனதைப் பெரிதும் இடர்ப்படுத்தும்.
ஆரம்பத்தில் வண்டியை நிறுத்திய காலங்களில் அங்கு சில தொழிலாளர்கள் தினமும் நின்று பேசிக் கொண்டிருப்பதைக் கண்டிருக்கிறான். அடுத்து என்ன செய்வது என்ன வேலைக்குப் போவது யார் யார் என்னென்ன வேலைகளுக்குப் போயிருக்கிறார்கள் எந்த வேலையானாலும் சரி போனவர்கள் எவரெவர் என்றெல்லாம் அவர்கள் பேசிக் கொள்வதும் சித்தாள் வேலை, மூட்டை தூக்கும் வேலை, நெல் மண்டி வேலை, இ.பி. தினக் கூலி வேலை என்று போனவர்கள் பற்றியெல்லாம் அவர்கள் சங்கடத்தோடு பகிர்ந்து கொள்வதும் வாழ்க்கை எவ்வளவு சிக்கலானது என்பதான தோற்றத்தை இவன் மனதில் ஏற்படுத்தும்.
நல்லவேளை. அப்பா செய்து கொண்டிருந்த வேலையான இந்த ஆட்டோ ஓட்டும் பணி தனக்கும் வந்து விட்டது. ஏதோ ஓடிக் கொண்டிருக்கிறது. இன்னும் நல்ல ஏரியாவாகத் தேர்ந்தெடுத்திருக்கலாமோ என்பதாக அவன் சிந்தனை பல சமயங்களில் தள்ளாடுவது உண்டு. ஆனால் பழகின இந்த இடத்தை விட்டு எப்படிப் போவது? இங்கேயே காலூன்றி எத்தனையோ வாடிக்கையாளர்களைக் கையில் வைத்திருக்கையில் புதிய இடத்திற்குப் போவோம் என்ற சிந்தனை சரி வருமா? இப்படி யோசித்து யோசித்தே விட்டு விட்டான் சரவணன். ஏதோ பாதகமில்லாமல் அவன் பாடு கழிந்து கொண்டிருந்தது. அவன் தந்தை மட்டும் அந்த விபத்தில் இறக்காமல் இருந்திருந்தால் குடும்பம் எவ்வளவு செழித்திருக்கும்?
“ஏன் இவ்வளவு மெதுவாப் போறீங்க? சீக்கிரம் போறீங்களா?”
தன் ஆட்டோவில் பயணி ஒருவர் இருக்கிறார் என்பதையே மறந்து போனதுமாதிரித் தான் இருந்து விட்டது சட்டென்று உறுத்த ‘சரிம்மா’ என்று விட்டு போக வேண்டிய இடத்தை ஒரு முறை மனதில் நினைத்துப் பார்த்துக் கொண்டான் சரவணன்.
சே. எவ்வளவு அவசரமாக ஏறி உட்கார்ந்தார்கள். அதை மறந்து விட்டு நான்பாட்டுக்கு அதற்குள் வேறு ;சிந்தனைக்குள் புகுந்து விட்டேனே? மனதிற்குள் வெட்கப்பட்டவாறே போய்க் கொண்டிருந்தான.
அந்த ஆஸ்பத்திரி முன்னால் வண்டியை நிறுத்தியபோது இறங்கி கிடுகிடுவென்று ஓடியது அந்தப் பெண் தனக்கு வாடகை கொடுக்க வேண்டும் என்கிற எண்ணம் கூட இன்றி இந்த ஓட்டம் ஓடுகிறதே என்று வாயடைத்துப் போய் எதுவும் கேட்கவோ சத்தமிடவோ திறனின்றி அப்படியே நின்று கொண்டிருந்தான் சரவணன்.
( 2 )
சுற்றி நின்ற காவலர்களின் கட்டுப்பாட்டினை மீறி தம்பியின் மார்பின் மேல் சாய்ந்து கொண்டு கதறினாள் சாந்தா. அவளால் தன் அழுகையைக் கட்டுப் படுத்தவே முடியவில்லை. எந்தத் தம்பிக்காகவும் தங்கைக்காகவும் தன் வாழ்க்கையைப் பணயம் வைத்து அவள் வாழ்ந்து கொண்டிருக்கிறாளோ அவனுக்கே இந்தக் கேடு ஏற்படுமானால் அவளால் எப்படிப் பொறுக்க முடியும்?
தன் நினைவின்றிக் கிடந்தான் முத்து. இரண்டு பெண்களுக்குப் பிறகு பிறந்தவன் அவன். கடலில் முத்தெடுத்தாற்போல் கிடைத்த அவனை அத்தனை செல்லமாக வளர்த்தார்கள் அந்தக் குடும்பத்தில். இனி குழந்தை பாக்கியமே இல்லை என்று நினைத்திருந்த காலத்தில் பத்தாண்டு இடைவெளிக்குப் பிறகு பிறந்ததனால் அவனுக்கு அத்தனை செல்லம் அந்த வீட்டில். அப்பாவே வெட்கப்பட்டுத்தான் போனார். அழித்து விடுவோம் என்று கூடக் கூறினார்.
“உங்களுக்கு ஆண் குழந்தை வேணும்னு ரொம்ப ஆசை. மனசுல இத்தனை ஆசையை வச்சுக்கிட்டு கடவுளாப் பார்த்துக் கொடுத்திருக்கிறப்போ அதப் போய் அழிக்க நினைப்பாங்களா யாராச்சும்?” – சாந்தாதான் சொன்னாள் அப்பாவிடம். தன் பெண்ணே தனக்கு இது பற்றிக் கூறுவதில் கூசிப்போனார் அவர். அம்மா கூட அழிக்கத்தான் பார்த்தாள். இவர்களுக்குத் தெரியாமல் என்னென்னவோ சாப்பிட்டு அது இல்லாமல் போகட்டும் என்று முனைந்தாள். பிறந்து இந்த உலகத்தில் வலம் வந்துதான் ஆகவேண்டும் என்று இருக்கையில் யார்தான் அதைத் தடுத்து விட முடியும்?
முத்து பிறந்து கைக்குழந்தையாய் இருக்கையில் அவனை வாழை இலையில்தான் போட்டு வைத்திருந்தார்கள். உடம்பு அத்தனைக்கும் அவ்வளவு கொப்புளங்கள். வேனல் தணலாய் வெடித்திருந்தன எல்லாம்.
“எல்லாம் நீ பண்ணின கூத்துதான். கருவை அழிக்கணும்னு எதை எதையோ சாப்பிடப் போக அதெல்லாம் சேர்ந்து இப்போ குழந்தையைப் பாதிச்சிருக்கு.பாரு செக்கச் செவேல்னு பிறந்திருக்கிற குழந்தைக்கு சிவப்பு சிவப்பா உடம்பு அத்தனையும் எப்படிக் கிடக்கு? இது உனக்கே நல்லாயிருக்கா? எங்களுக்கு ஒரு தம்பி இல்லையேன்னு நாங்களே வருத்தப் பட்டுக்கிட்டு இருந்தோம்.;. பத்து வருஷ இடைவெளில இந்தச் சொத்துக் கிடைச்சிருக்கு. இடை இடைல வயித்து வலி, வயித்து வலின்னு எவ்வளவு கஷ்டப் பட்டே? எவ்வளவு மருந்து சாப்பிட்டே? அத்தனைக்குப் பிறகும் இந்த பாக்கியம் கிடைச்சிருக்குன்னா நீயும் அப்பாவும் எவ்வளவு புண்ணியம் செய்திருக்கணும்? உன்னோட அதிர்ஷ்டம்னு சொல்றதை விட அப்பாவோட மனசுன்னுதான் சொல்லணும் இதை. அவர் நல்ல மனசுக்கு, விகல்பமில்லாத கல்மிஷமில்லாத அந்த மனுஷனுக்குக் கடவுள் கொடுத்த கிஃப்ட்தான் இது.”
அந்தச் செல்லத் தம்பி முத்துதான் கிடக்கிறான் இப்படி. வகுப்பில் முதல் இல்லாவிட்டாலும் முன்னோடி அவன். முதலை நோக்கியே அவனது பயணம் இருக்கும். பள்ளியில் நடக்கும் எல்லா விழாக்களிலும் ஆர்வமுடன் பங்கு பெறுவான். பேச்சுப் போட்டி, சித்திரப் போட்டி, விளையாட்டுப் போட்டி, பாட்டுப் போட்டி, நடிப்புப் போட்டி, என்று எதுவும் வேண்டாம் என்று அவன் ஒதுக்கியதே இல்லை. இத்தனை திறமைகள் படைத்தவனாய் இருக்கிறானே, இவனின் ஆர்வத்திற்கு ஏற்ற வளர்ச்சியைக் கொடுக்கும் தந்தையாக நான் இருக்கிறேனா என்று பிரமித்திருக்கிறார் ராமலிங்கம்.
“நீங்க ஏன்ப்பா பயப்படுறீங்க.அவன் விருப்பப்படி எல்லாத்துலயும் அவன் முன்னேறுவதற்கு நான் துணையிருக்கேம்ப்பா.கவலைப்படாதீங்க.” சாந்தா எத்தனை முறை தன் தந்தையை சமாதானப்படுத்தியிருக்கிறாள்? அந்தத் தம்பி, தங்கக் கம்பி, இதோ இங்கே இப்படிக் கிடக்கிறான். எந்த வினையின் விளையாட்டு அவனை இங்கே கொண்டு வந்து போட்டிருக்கிறது? காலம் அவர்கள் இருவரையும் தன் கையில் ஒப்படைத்து விட்டு பெற்றோரை வாங்கிக் கொண்டது.
“அப்டி வாசல்ல இருங்கம்மா .” – குரலில் இருந்த கண்டிப்பு இவளை அங்கிருந்து எழ வைத்தது.
மனதில் கலவரத்தோடு தயங்கித் தயங்கி வெளியேறிய சாந்தா தம்பியின் முகத்தில் நினைவு வருவதற்கான அறிகுறிகள் எதுவுமில்லாதது கண்டு மனம் பதைத்தவாறே போய் சற்றுத் தள்ளிப் போடப்பட்டிருந்த பார்வையாளர்கள் அமரும் இருக்கையில் அமர்ந்தாள். அங்கிருந்து கீழே நோக்கிய போது தான் வந்த ஆட்டோவும், அந்த டிரைவரும் அங்கேயே நின்று கொண்டிருப்பது கண்டு அவனுக்கு வாடகை கூடக் கொடுக்காமல் வந்து விட்டது அப்போதுதான் அவளுக்கு நினைவுக்கு வந்து அவள் மனதை சட்டென்று உறுத்த ஆரம்பித்தது. எழுந்து வேகமாகக் கீழ் நோக்கி நடந்தவள் தரை தளத்தை எட்டியபோது அந்த ஆட்டோ அந்த ஆஸ்பத்திரியின் காம்பவுண்டை விட்டு வெளியேறுவது கண்டு “ஏய்.ஆட்டோ.ஆட்டோ.” என்று குரலெடுக்க அந்தக் குரலைப் பொருட்படுத்தாமல் நகரின் பேரிரைச்சலில் அது கலந்து மறைந்தது.
( 3 )
“ஏண்டா இவ்வளவு நேரம்?” – உள்ளே நுழையும்போதே அண்ணன் இப்படிக் கேட்பார் என்று சரவணன் எதிர்பார்த்ததுதான். ஆட்டோ நுழையும்போதே அவர் பார்வையைக் கவனித்து விட்டான் இவன். பக்க வழியாகக் கொல்லைப் புறம் சென்று நிறுத்துவதுதான் அவனின் வழக்கமான வழக்கம். அங்குதான் உயர்ந்த காம்பவுன்ட் சுவர். கிணற்றடிக்கு ஒட்டி பெரிய சிமின்ட் தளம். கொண்டு நிறுத்தி உள்ளே நிம்மதியாய்த் தூங்குவதற்கு ஏற்ற பாதுகாப்பு. நண்பர்கள், வாசலில் நிறுத்தி வண்டி காணாமல் போன கதை எத்தனையோ உண்டு. இவனுக்கு அமைந்த அவனின் அண்ணன் வீடு அத்தனை பாதுகாப்பு. அண்ணனும் பாதுகாப்பு. அவர் இடமும் பாதுகாப்பு. அப்படியிருக்கையில் கேட்காமல் இருப்பாரா? அல்லது கேட்கக் கூடாது என்றுதான் சொல்ல முடியுமா? அவரின் பாதுகாப்பில் இருக்கும் இவன் அவரின் எல்லாச் சொல்லுக்கும் கட்டுப்பட்டவன்தான். அவரின் பாசத்தின் முன், அவரின் அரவணைப்பின் முன் இவனின் எந்தக் கேள்விகளும் பதிலற்றுத்தான் போய்விடும்.
“கடைசியா ஒரு சவாரிண்ணே.அதான் லேட்டாயிடுச்சி.”
“ராத்திரி பத்து மணிக்கு மேலே என்னடா சவாரி.ஊரே கெட்டுக் கிடக்கு.டயத்துக்கு வந்துடணும்னு உனக்கு எத்தனை தடவை சொல்றது?”- கதிர்வேலுவின் குரல் சற்று உயரத்தான் செய்தது.
“கிளம்பத்தாண்ணே இருந்தேன்.கடைசியா ஒரு சவாரி பரிதாபமா வந்து மாட்டிக்கிடுச்சி.பார்க்கவே பாவமா இருந்திச்சி..அதான்.”
“அதுக்கில்லடா.பக்கத்து ஏரியாவுல ஒரு சம்பவம் நடந்திருக்கு.தெரியும்ல.”
“என்னண்ணே.தெரியாதே.?”
“என்ன ஆட்டோக்காரன் நீ.? எட்டரை ஒன்பது போல ஒரு ஆளை வெட்டிப்புட்டாங்கன்னுல்ல சொல்றாங்க.அந்தப் பக்கமே எந்த வண்டியுமே போகலையாமே?”
“எங்கண்ணே.ராம் நகர் பகுதியிலயா?”
“ஆமடா.அங்கதான்.எத்தனை நெருக்கமான ஏரியா அது.ஓரமா மார்ச்சுவரி கூட இருக்கில்லடா.ஒரே இருட்டாக் கிடக்குமே.ஆஸ்பத்திரியோட பின் பக்கமா வருமே.அங்கதானாம்.”
அதை ஒட்டிய மெயின்ரோடில்தானே, தான் அந்தப் பெண்ணோடு பயணித்தது? எந்தப் பரபரப்புமே இல்லையே? ஒரு வேளை அம்மாதிரிச் சம்பவம் நடந்ததனால்தானோ அந்த இடம் அப்படி இருந்தது? வழக்கத்திற்கு மாறான அமைதி காணப்பட்டதை அப்போதுதான் மனம் உணர்ந்தது சரவணனுக்கு. நிலவின் வெளிச்சத்தில் ஒன்றுமே தெரியவில்லையே? மயானம் மாதிரித்தானே கிடந்தது?
“மனுஷன மனுஷன் ஏன்தான் இப்படிப் பகைச்சிக்கிட்டு அலையுறாங்களோ? சமாதானமாப் பேசித் தீர்த்துக்கிறதுங்கிற முறைக்கே எடமில்லை போலிருக்கு.பிடிக்கலையா.ஆளக் காலி பண்ணுன்னு கிளம்பினா அப்புறம் மனுஷனுக்கும் மிருகத்துக்கும் என்னதான் வித்தியாசம்? வித்தியாசமில்லாமத்தான் போச்சு இப்பல்லாம். அந்தப் பயத்துலதான் கேட்டேன்.எங்க அந்த ஏரியாவுல போயி மாட்டிக்கிட்டியோன்னு.போலீஸ் வந்து என்கொயரி, அது இதுன்னு கிளம்பினா முதல்ல ஆட்டோக்காரங்களைத்தானே விசாரிக்கிறாங்க.உன்ன மாதிரி அப்பாவிப் பசங்களைத்தானே கடுமையா பயமுறுத்தி விசாரிப்பாங்க.அம்மா கேட்டுக்கிட்டே இருந்திச்சு.போ.அம்மாவ முதல்ல பாரு.”
“சரவணா.வந்திட்டியா? நேரமாச்சே காணலியேன்னு பயந்திட்டேயிருந்தேன்.காலா காலத்துல வீட்டுக்கு வந்து சேரக் கூடாதா? மனசு ஏனோ பயந்திட்டேயிருக்குப்பா.எல்லாரும் நேரத்துக்குக் கூட்டுக்குள்ள வந்து அடைஞ்சிட்டீங்கன்னா நா நிம்மதியாத் தூங்குவேன்.போ.போய்ச் சாப்பிடு.உங்க அண்ணியப் பாரு உனக்காக சோத்தச் சுட வச்சிட்டுக் காத்திட்டிருக்கா.”
அண்ணனின் குடும்ப அரவணைப்பில் அப்படியே நெக்குருகித்தான் கிடக்கிறான் சரவணன். வயிறாற உண்டுவிட்டு வந்து படுக்கையில் அவன் சாய்ந்தபோது அன்று கடைசியான தன் சவாரியைப் பற்றிய நினைவு வந்தது அவனுக்கு. அவ்வளவு தூரம் கொண்டு விட்ட நான் வாடகைக்காகக் காத்திருந்தேன் என்றுதான் அவள் நினைத்திருப்பாளோ? அவள் இருந்த கலவரத்தில் உடனே திரும்பினால் மீண்டும் அவளின் இடத்திற்கே கொண்டு விட்டு விடலாம் என்றுதானே காத்திருந்தது. பொழுது கடந்து விட்ட நேரத்தில் அவள் மீண்டும் எப்படித் தன் வீடு போய்ச் சேர்ந்திருப்பாள்? அத்தனை நேரம் காத்திருந்தோமே ஒரு முறை மேலே சென்று என்ன ஏது என்று பார்த்திருக்கலாம் அல்லவா? அது ஏன் தனக்குத் தோன்றாமல் போனது?
சிந்தித்தவாறே படுத்திருந்த சரவணனின் நாசியில் மண் வாசனை வருட ஜன்னல் வழியாகப் பார்த்தபோது மெலிதான தூரல் கிளம்பியிருப்பது தெரிந்தது. இந்த மழைக்காகத்தான் அங்கிருந்து புறப்பட்டது. சமீப நாட்களாக இரவு ஒன்பதானால் சொல்லி வைத்தாற்போல் மழை வந்து விடுகிறது. இன்று சற்றுத் தாமதம். அப்போதிருந்த இடியும் மின்னலும் தன்னைத் துரத்தி விட்டன. வீட்டிற்கு நேரத்தோடு வந்து அடைய வேண்டும் என்கிற பழக்கம். ஆனால் அந்தப் பெண் தனியளாக ஓடிக் கொண்டிருந்தாளே அந்த நேரத்தில்? வீடு; சேர்ந்திருப்பாளா? அல்லது அங்கேயே தங்கியிருப்பாளா? இருந்து அவளை மீண்டும் அவள் வீட்டில் கொண்டு சேர்த்திருக்கலாமோ? –மனச் சங்கடத்தோடேயே உறங்கிப் போனான் சரவணன்.
( 4 )
“இந்தப் பையனை இங்கே கொண்டு வந்து சேர்த்தது யாரு?”
“நாங்கதான் சார்.” – வாசலில் உட்கார்ந்து கொண்டிருந்த அந்த நால்வர் ஒருமித்து இப்படிக் குரல் கொடுத்த போது ஆச்சரியத்தோடே திரும்பிப் பார்த்தார் இன்ஸ்பெக்டர் ஜார்ஜ்.
“நீங்களெல்லாம் யாரு?” – அவரின் கேள்வி தொடர்ந்தது. எல்லாவற்றையும் சொல்வதற்கு நாங்களும் தயார் என்பதுபோல் அந்த நால்வரின் பார்வையும் இருந்தது.
“நாங்க அந்த ஏரியாவுல கடைகள் வச்சிருக்கோம் சார்.இவர் பெட்டிக்கடை இவர் டீக்கடை. இவர் ஒரு ஸ்டேஷனரி ஷாப் வச்சிருக்காரு.இவர் ஒரு புரோட்டாக்கடை நடத்துறாரு.”
“ஏட்டையா.இப்டி வாங்க.இவுங்க சொல்றத அப்டியே குறிச்சிக்குங்க.” – ஒரு வயதான தொந்தியும் தொப்பையுமாக சீருடையில் இருந்த ஒருவர் அவர்கள் அருகில் இருந்த நாற்காலியில் வந்து உட்கார்ந்து எழுதுவதற்குத் தயாரானார்.
“நீங்கள்லாம் ஏன் கூடுறீங்க.? இங்க என்ன வேடிக்கையா காண்பிக்கிறாங்க.போங்க.போங்க.” சுற்றி நின்று கவனித்துக் கொண்டிருந்தவர்களை விரட்டினார் இன்ஸ்பெக்டர். இப்போது அங்கே அவரும் அந்த ஏட்டையா என்று சொல்லப்பட்டவரும் அந்த நான்கு கடைக்காரர்கள் மட்டுமே இருந்தனர். தனது குரலைச் சற்றுத் தணித்துக் கொண்டு ஆரம்பித்தார் அவர்.
“இந்தப் பையனை யார் அடிச்சது? ஏதாச்சும் விபரம் தெரியுமா?”
“எங்களுக்கு எதுவும் தெரியாது சார்.நாங்கதான் கடைய அடைச்சிட்டமே? இந்தப் பய ரத்தத்தோட கிடந்தான். மனசு கேட்கல.தூக்கிட்டு ஓடியாந்துட்டோம்.இவனையும் வெட்டிப் போடாம விட்டாங்ஞளேங்கிறதுதான் ஆச்சரியம். ஏன்னா இதுக்கு முன்னாடி அதே எடத்துல நடந்த இன்னொரு கொலைய அங்க பூ வித்திக்கிட்டிருந்த அம்மா பார்த்திடுச்சின்னு ரெண்டு நா கழிச்சி அந்தப் பொம்பளையையும் போட்டுட்டாங்ஞல்ல.?;.”
“ஒரு மணி கழிச்சி இவனைத் தூக்கியாந்ததா சொல்றீங்க.அப்போ அந்த பாடி கிடந்திச்சா அங்கே?”
“எந்த பாடி சார் சொல்றீங்க?”
“அதான்யா.கொலை செய்யப்பட்ட பாடியத்தான் கேட்கிறேன். வேறெதக் கேப்பாக.”
“அத நாங்க கவனிக்கலையே சார்.கண்ணுக்குப் பட்டமாதிரித் தெரிலயே.அது ஒரு இருட்டுப் பகுதி சார்.நாலு ரோடு; சந்திக்கிற முக்கு சார்.அங்க எத்தன லைட்டை கார்ப்பரேஷன்காரன் போட்டாலும் உடைச்சிப்புடுவாங்க..இந்த மாதிரிக் காரியத்துக்குன்னே அந்த எடத்தை ஒதுக்கிப்புட்டாங்ஞ.கஞ்சா வியாபாரமெல்லாம் கன ஜோரா நடக்கும் சார் அங்க.ஒங்க கிட்டப் போய்ச் சொல்றோம் பாருங்க.ஒங்களுக்குத் தெரியாததா? ஆனா ஒண்ணு சார்.நிலா வெளிச்சம் இருந்திச்சு சார்.அதத்தான் மரங்கள்லாம் மறைச்சுப்புடுதே! அப்புறம் என்னா தெரியும்? ஆளுக யார் போறா வர்றான்னு கூடத் தெரியாது சார்.”
ஜார்ஜ் பலத்த யோசனையில் ஆழ்ந்தார். கொலை செய்யப்பட்டவர் ஒரு பேராசிரியர். தான் உண்டு தன் வேலையுண்டு என்று சிவனே என்று இருப்பவர். அந்த அப்பாவியைப் போய் காலி பண்ணியிருக்கிறார்கள். ஏன்? யார் சொல்லி இது நடந்தது? எதற்காக அவரைக் கொல்ல வேண்டும்? கொல்லக்கூடிய அளவுக்கு அவர் செய்த தப்பு என்ன? யாருடைய முன்னேற்றத்தைத் தடுத்தார் அவர்? யாருக்கு யாருடைய செயல்களுக்குத் தடையாக இருந்தார்?; உறவுகளிலேயே ஏதேனும் பொறாமையால் இது நடந்திருக்குமா? சொத்துத் தகராறா? பெண் பிரச்னையா? இறந்த பேராசிரியரின் காரெக்டர் எப்படி? எந்த விஷயத்தில் அவரின் முனைப்பு இருந்தது. எந்த முனைப்பு எதிராளியின் கவனத்தை சந்தோஷத்தைக் கெடுத்தது? அவரின் எந்த முன்னேற்றம் எதிராளிக்குப் பொறாமையாய் அமைந்தது? – கேள்வி மேல் கேள்வி விழுந்து கொண்டேயிருந்தது அவருக்கு.
“ஏட்டையா.அவுங்க சொன்னதையெல்லாம் எழுதிட்டீங்கல்ல.எல்லார்கிட்டயும் கையெழுத்து வாங்கிக்குங்க.நான் விசாரணைக்குக் கூப்பிடறபோது வரணும்.யாரும் எங்கயும் போயிடக் கூடாது.”
“எங்க பொழப்பே இங்கதானங்க சார்.நாங்க எங்க வெளியூருக்குப் போகப் போறோம்.? இம்புட்டுத் தைரியமா அவனக் கொண்டு வந்து சேர்த்திருக்கோம்.அப்புறம் பயப்படுவோமா சார்.அந்த ஏரியாவுல ஒரு ஸ்பெஷல் பீட் போடணும் சார்.பரபரப்பான ஏரியாவா இருக்குது பிரச்னையான ஏரியாவாவும் இருக்கு.இது மூணாவது கொலை சார் அந்த எடத்துல.பத்து வருஷத்துக்கு முன்னாடி ஒண்ணு நடந்திச்சி சார்.அப்போ ஒரு பொம்பளையவே வெட்டிப்புட்டாங்ஞ சார்.நியாயம் கேட்ட ஒருத்திய நீ எப்டி அதக் கேட்கப் போச்சின்னு போட்டுத் தள்ளிட்டாங்ஞ சார்.அந்தக் குடும்பம் அதுக்கப்புறம் ஒண்ணுமில்லாமப் போச்சு சார்.ஆனா அவுங்ஞ மட்டும் இன்னும் நல்லாயிருந்துக்கிட்டிருக்காங்க சார்.அதே கும்பல்தான் சார் இப்பவும் கைவரிசையைக் காண்பிச்சிருக்கணும்.”
“ரொம்பப் பேச வேணாம்.புரியுதா.அப்புறம் உங்களயும் பிடிச்சி உள்ள போட வேண்டியிருக்கும்.பேசாமப் போயிடுங்க.கூப்பிட்டு விட்டா ஸ்டேஷனுக்கு வந்துட்டுப் போங்க.”
வாயைப் பொத்திக் கொண்டு இத்தோடு விட்டார்களே என்று கிளம்பியது அந்த நால்வர் கோஷ்டி. அதில் ஒருவன் சொன்னான்.
“பார்த்தீங்களாண்ணே.பரிதாபப்பட்டு உதவினா என்ன பேச்சு வருது பார்த்தீங்களா? மனசுல தைரியத்தோட ஒரு உயிரக் காப்பாத்துவோம்னு கடைமையா செஞ்சதுக்கு என்ன பலன் பார்த்தீங்களா? சொன்னாச் சொல்லிட்டுப் போகட்டும்.கூப்பிட்டு விட்டாக் கூடப் போயிட்டு வருவோம்.ஒரு பையனோட உசிரக் காப்பாத்தியிருக்கோமே.அத விட என்ன வேணும்? இவுங்க எப்பவும் இப்டித்தான்.இதுனாலதான் போலீஸ்னாலே ஒதுங்குறாங்க எல்லாரும். இழுக்குற இழுப்புக்கு அன்றாடப் பொழப்புப் பார்க்கிறவன் பாடு நாறிப் போகும்னு நமக்கெதுக்குடா வம்புன்னு கண்டுக்காமப் போறானுங்க.ஆனா சமுதாயத்துல மக்கள் விழிப்புன்னு ஒண்ணு இருக்கு.அது வந்துட்டா அப்புறம் இந்தக் கூலிப்படையெல்லாம் சின்னா பின்னமாப் போகும்.சட்டம் ஒழுங்கு அப்போ தானாத் தலை நிமிரும்.காவல் துறை உங்கள் நண்பன்னு விளம்பரப் படுத்துறாங்களே.அது நூறு சதவிகிதம் உண்மையாகணும்.மக்களுக்கு அந்த நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டியது அவுங்க பொறுப்பு..அப்போ மக்கள் தைரியம் அடைவாங்க.தவறு செய்றவங்க பயப்படவும் செய்வாங்க.”
பேசிக் கொண்டே அவர்கள் போய்க் கொண்டிருந்தனர். அது நேரம் வரை அவர்கள் பேசுவதை அந்தக் காவல்துறை ஆய்வாளருடன் அவர்கள் பேசியதை சற்றுத் தள்ளியிருந்தாலும் கூர்மையாகக் கேட்டுக் கொண்டிருந்த சாந்தா தன் தம்பி அங்கு வந்ததற்கான காரணத்தை முழுமையாக அறிந்தபோது என்ன செய்வதென்று தெரியாமல் விக்கித்துக் கிடந்தாள். .டியூஷன் முடித்து விட்டு அவ்வழியே வர வேண்டாம் என்று எத்தனையோ முறை சொல்லியிருக்கிறாள். சுருக்கு வழி சுருக்கு வழி என்பான் முத்து. இளங்கன்று பயமறியாது.நல்ல வேளை புத்தகம் என்று எதுவுமில்லை. ஒரே ஒரு நோட்டு. அதுவும் எழுதித் திருத்தக் கொடுத்து விட்டு வந்து விடுவான். . காலையில்தான் அவனைப் பார்க்க முடியும் என்று காவல் கண்டிஷன் போட்ட போது வேறு வழியில்லாமல் அவள் கிளம்ப வேண்டியதாயிற்று. இந்நேரம் அம்மா அப்பா இருந்திருந்தால் தன்னால் சமாளித்திருக்க முடியுமா? என்று அவள் சிந்தித்த போது மனசு பெரிதும் தடுமாறியது அவளுக்கு. இப்பொழுது வீட்டிற்குச் சென்று தங்கை கௌசல்யாவை மட்டும் சமாளித்தால் போதும். அவளைக் கூட இவ்வளவு நேரம் தனியாக விட்டு வந்திருப்பது என்பது அபாயம்தான். ஆனால் கூடப் படிக்கும் சிநேகிதிகள் கூட இருந்து கொள்வாள். இந்த நினைப்பினூடே வீட்டை அடைந்தாள் சாந்தா.
( 5 )
மாரிக்கு அந்த இடத்தைக் கடக்கும்போதெல்லாம் உறுத்தத்தான் செய்கிறது. வெறும் உறுத்தல் என்றாலும் பரவாயில்லை. துடைத்து எறிந்து விட்டுப் போய்விடலாம். அப்படி எத்தனையோ முன்னர் செய்ததுதான்.”சேய்ய்.இதென்னடா எழவு.” என்று ஒரு உறாஃப் வாங்கி ஊற்றினால் ஆச்சு.அடுத்த சில கணங்களில் எல்லாமும் மறந்து மண்ணடித்துப் போகும். அப்படிப் போய்க் கொண்டிருந்ததுதான் இது நாள்வரை. ஆனால் இப்போதென்ன புதுசாய்? இது புதுசாஅல்லது ஏற்கனவே நடத்திய பாதகங்களின் படிமங்களா? அப்பொழுதே அவையெல்லாம் தன்னை இடறிக் கொண்டுதான் இருந்தனவா? கொஞ்சங்கொஞ்சமாய்ப் படிந்து வந்த கறைகள் இப்பொழுதுதான் கண்ணுக்குத் தெரிகின்றனவா? இனிமேல் கால் வைத்தாயானால் வழுக்கி உள்ளே இழுத்துக் குழிக்குள் தள்ளி விடுவேனென்று எச்சரிக்கிறதாக்கும்? அப்படியானால் இத்தனையையும் நிகழ்த்தித்தான் இது உணரப்பட வேண்டுமா? என்னவோ செய்கிறதே? எதுவோ தடுக்கிறதே? என்று தோன்றிய காலங்களிலேயே இது ஏன் உணரப்படாமல் போனது? எடுத்துச் சொல்லித் தடுப்பதற்கு ஆள் இல்லாமல் போனதா? அப்படித் தடுத்திருந்தால் தடம் புரண்டிருக்காதா? தடம் புரண்டதுதானே என்று அழுத்தமாக இப்பொழுதுதானே தோன்றுகிறது? முன்னரே இது இத்தனை ஆழமாய் இறங்கியிருந்தால் தடைப்பட்டிருக்குமா?
“உனக்கு மாரின்னு ஏன் ஆசையாப் பேர் வச்சேன் தெரியுமா? மழயா வந்து என் வயிறக் குளிர வச்சவண்டா நீ! கல்யாணங்கட்டி எட்டு வருஷங்கழிச்சு உங்கப்பன் கூத்தியாளத் தேடிப் போக இருந்தப்போ என் வயித்துல ஜனிச்சு அதத்தடுத்தவண்டா நீ! முற தவறிப் போகவிருந்த அப்பனுக்குத் தட போட்ட தகப்பன் சாமிடா நீ.இன்னைக்கு இப்படி ஆயிட்டியே!உன்னை இதுக்காகவா என் வயித்துல சுமந்தேன்? கொதிச்சுப் போயிக் கெடந்த என் வயித்துலயும் ரணமாக் கெடந்த என் நெஞ்சுலயும் பால வார்த்த நீயா இன்னைக்கு இந்தக் காரியஞ் செய்யிறே? இப்டி ஒரு பொழப்பாடா? இந்த மாதிரி ஒரு பொழப்புப் பொழக்கிறதுக்கு நாண்டுக்கிட்டுச் சாகலாமுடா.தூத்தேறி.எம்மூஞ்சிலயே முழிக்காதடா.இனிமே இந்த வீட்டு வாசப்படி மிதிக்காதே.சொல்லிப்புட்டேன்.”
“வாசப்படி மிதிக்காதவா? உறாஉறாஉறா.எங்கயிருக்கு வாசப்படி? என்னவோ கட்டி வச்சிருக்கிற மாதிரிச் சொல்ற? இந்த ஓட்டக் குடிசைக்கு வாசப்படி ஒரு கேடாக்கும்? கூரையப் பிச்சிக்கிட்டுக் குதிக்க வேண்டிதான்.நீ சொல்றபடியே கேக்குறேன்.ஆத்தா.உன் வாக்கத் தட்டவே மாட்டேன்.சர்தானா? இனிமே ராத்திரி வீட்டுக்கு வாரேல மேல் வழியாவே வாரேன்.பொளந்துக்கிட்டுத்தான் குதிப்பேன்.தள்ளிப் படுத்துக்க ஆம்மா.அப்புறம் உம்மேல விழுந்தேன்னு சொல்லாத.உன் வார்த்தயத் தட்டுனவங்கிற கெட்ட பேர் எனக்கு வாணாம்.”
என்ன எகத்தாளமான பேச்சு? அத்தனையையும் கேட்டுக் கொண்டு அழுது தீர்த்ததே ஆத்தா? அந்த அழுகை அப்போதெல்லாம் ஏன் தன் மனசைக் கரைக்கவில்லை?
“டே மாரி.சோமாரி.நீதாண்டா இந்தத் தடவை சரியான ஆளு.நா தீர்மானிச்;சிட்டேன்.எனக்கு நம்பிக்கையானவனும் நீதாண்டா.உன்னத்தான் என் மனசுல ஒக்கார வச்சிருக்கேன்.வேற எவனுக்கும் எடமில்ல.நீதாண்டா இந்தத் தடவ டார்கெட்ட முடிக்கணும்.ஆந்திராவுலேர்ந்து நாலு பேரு துணைக்கு.முகந்தெரியாத ஆளுக.கூட வச்சிக்க.புரிஞ்சிதா? தைரியமாப் போ.முடிச்சிரு.”
“எதுக்குண்ணே நா மட்டும்? அவிங்ஞள வச்சே முடிச்சிற வேண்டிதான? “
“அவிஞ்ஞள வச்சு முடிக்கணும்னா இன்னும் நாலு மாசம் போவணும்டா.நம்ம பொழப்பு என்னாவுறது? எடமெல்லாம் பழகணும்.ஆளுக பழகணும்.பேச்சு பழகணும்.எவ்வளவோ இருக்கு.எவனுக்குமே சந்தேகம் வராம இருக்கணும்.அது ரொம்ப முக்கியம்.அதுவரைக்கும் அவிங்ஞள வச்சி சோறு போடணும்.எவன்ட்ட இருக்கு ஐவேசு.அதெல்லாம் நடவாது.வந்தாங்ஞளா முடிச்சாங்ஞளா.போயிட்டேயிருக்கணும்.எங்க போனோம்.எங்க வந்தோம்னே எவனுக்கும் தெரியாது.தெரியக் கூடாது.ஒடனே பேக் பண்ணி அனுப்பிடணும்.ஆனா ஒண்ணு நீ மொட்டை அடிச்சிக்கி-டணும்.இந்த மொறை.முகத்துல துளி மசிரு இருக்கக்கூடாது.எல்லாத்தையும் மழிச்சிரு.எந்த மாதிரி மூஞ்சிய நாம பார்த்தோம்னு எவனுக்கு மண்டைல ஏறக் கூடாது.ஆளவந்தான்ல கமலப் பார்த்திருக்கேல்ல.அந்த மாதிரி கெட் அப்ப மாத்திக்கோ.உடம்பு மட்டுந்தான் ஒனக்குப் பொருந்தாது.வேசம் பச்சுன்னு ஒக்காந்துக்கும்.எவன்டா இருக்கான் ஒன்னை அடிச்சிக்க.”
கிறங்கித்தானே கிடந்தோம் போதையில். எல்லாமும் நடந்துதான் போனது. ஆனா ஒண்ணு.தங்கச்சியும் போயிருச்சே.அந்த நஷ்டத்தத்தானே தாங்கிக்க முடில.
“சீ. நீயும் ஒரு மனுஷனா? உன்ன என் அண்ணன்னு சொல்லிக்கவே கூசுது.நல்லவேள எங்கம்மா என்னோட நிறுத்திக்கிட்டாக.இன்னொன்ணைப் பெத்திருந்தா அதுவும் ஆம்புளயாப் பொறந்து என்னென்ன பாடு படுத்தியிருக்குமோ.நெனக்கவே பயமாயிருக்கு.நா சொல்றதச் சொல்லிப்புட்டேன்.இனிமே இந்தக் கேடு கெட்ட காரியத்துக்குப் போனே பெறவு நா இந்த வீட்டுலயே இருக்க மாட்டேன் ஆம்மா.இத்தன நாளா உன்னை வெளிய விட்டு வச்சிருக்கிறதே தப்பு.எதுக்காகவோ.சும்மா ஒண்ணும் செய்ய மாட்டாக.அதத் தெரிஞ்சிக்க.நீ பாத்து வச்சயே மாப்ள அதான் என் வீட்டுக்காரரு.டிரெயினிங் முடிச்சு வந்திட்டாரு நா போயிடுவேன் அவரோட.இந்த நாட்டுக்காக ஒழைக்கிறேன்னு அவுரு போறாரு.நீ என்னடான்னா கேடு கெட்ட பொழப்புப் பொழக்கிற.கல்யாணத்துக்கு முன்னாடி இப்டி நடந்திருந்தா அவரு என்ன வேண்டாம்னிருப்பாரு.அதான் நீ எனக்குச் செய்த பெரிய ஒதவி.தூ இதுவும் ஒரு பொழப்பா?”
“சொன்னது போல் அதுவும் கௌம்பிப் போயிருச்சே? தான் உண்டு தன் புருஷன் உண்டுன்னு வடக்க எங்கயோல்ல சொல்லிச்சு.அதயாவது கேட்டு வச்சிக்கிட்டனா? எதயும் கேக்குற மாதிரி நிதானத்துலயா நா இருந்தேன்.எவனோ எதையோ சொல்லட்டும் செய்யட்டும்
நாம இருக்கிறபடி இருப்போம்னுட்டு எம்பொழப்பு இப்டி நாறிக் கிடக்குதே.எவன்ட்டயாவது வாய்விட்டுச் சொல்ல முடியுமா? எதுக்குச் சொல்லணும்? அதான் ஊரெல்லாம் தெரிஞ்ச விஷயமாச்சே? பாக்குறவனெல்லாம் ஒதுங்கி ஒதுங்கிப் போகுறதப் பார்த்தாலே தெரியுதில்ல.ஆனாலும் அதுலயும் ஒரு கிக்கு இருக்கத்தாஞ் செய்யுது.எந்த எந்தப் பய வாய் கிழியப் பேசினானோ அவனெல்லாம் இருக்கிற எடம் தெரியாம ஒக்காந்திருக்கான் இன்னைக்கு.நேர்ல வரப் பயப்படவுல்ல செய்றானுக.ஒதுங்கி ஒதுங்கியில்ல போகுறானுவ.எல்லாரும் கூடிப் பேசி முடிவெடுத்திருப்பானுவளோ? ஆனா ஒண்ணு அன்னைக்கொருத்தன் சொன்னாம்பாரு.சாவடி கிட்ட .தங்கச்சிக்கு அழகா மாப்பிள்ளை பார்க்கத் தெரிஞ்சவனுக்கு தன்னைப் பார்த்துக்கத் தெரிலன்னு.அதுலதான் உறுத்திச்சு வெசயம்.அதுவும் ஆசத் தங்கச்சி வீட்ட விட்டுப் பிரிஞ்சி போனப் பெறவுதா அதிகமாச்சு.”
மாரி குழப்பத்தின் உச்சியில் தலைக் கிறுகிறுப்பில் நடு ரோட்டில் நிலை கொள்ளாமல் தள்ளாடிக் கொண்டிருந்தான்.
( 6 )
“டே.சாவுக்கிராக்கி.உறாரன் அடிக்கிறேன்.காதுல விழலியா? டமாரச் செவுடா ஒனக்கு.காலங்கார்த்தால என் வண்டிதானா கெடச்சது ஓரமாப் போடா எழவெடுத்தவனே.” யாரென்று பார்க்குமுன்னே கடந்து விட்டது லாரி. பழைய மாரி என்றால் இந்நேரம் கல் பறந்திருக்கும். இப்பொழுது எதெதற்கோ யோசிக்க ஆரம்பித்துவிட்ட மாரி. ஆனாலும் கூட குனிந்து பறந்து தேடத்தான் செய்கிறது மனசு. பழைய புத்தி அதுக்குள்ள விடுமா? சுற்றிலும் பெரிது பெரிதாகக் கற்கள் கிடக்கத்தான் செய்கின்றன. அதற்கென்ன பஞ்சம்? ஆனா கை தான் வரமாட்டேங்குது.ஏன்? எடுக்கத் தெம்பில்லையா அல்லது மனசில்லையா? அந்த அளவுக்கா மனது திருந்தி விட்டது? திருந்தி விட்டதா அல்லது திருந்த ஆரம்பித்திருக்கிறதா? நான் கூடவா திருந்த ஆரம்பித்திருக்கிறேன்? நம்ப முடியவில்லையே? இதுவரை பண்ணியுள்ள காரியங்களுக்கு எத்தனை ஜென்மம் எடுத்தாலும் தாங்காதே? அத்தனையும் பாவங்களல்லவா?
“பட்டினியாக் கெடந்து உசிர விட்டாலும் விடுவனே தவிர நீ கொண்டார துட்டுல இந்த வயித்த நெப்பமாட்டேன்டா.ஞாபகம் வச்சிக்க.” சொன்னபடி போயே விட்டாளே பாவி.கோடித்தெரு தவசிதான் சொன்னான்..
“உங்க ஆத்தா நெடுவூர் வயக்காட்டுல கள பிடுங்கிட்டிருக்குடியோவ்.என்னயக் கூட நிமிர்ந்து பார்க்க மாட்டேன்னுடிச்சி.எங்க ஒங்கிட்ட வந்து சொல்லிப் புடுவனோன்னுட்டு பயம் அதுக்கு.ஏண்டா பெத்த தாயே பயப்படுறமாதிரியாவா ஒரு பொழப்புப் பொழக்கிறது? இதுக்காடா ஒன்னய இந்த பூமில விட்டாக.உன்னைப் பார்த்துப் பார்த்து உங்கப்பன் நஞ்சு நாராப் போயி உசிர விட்ட மாதிரி உங்க ஆத்தாளும் உன்னப் பார்க்காமயே உன் நினைப்புல அப்புடி ஆகப் போகுது.உங்க ஆத்தாள இப்புடிக் கஞ்சிக்குக் காத்தாப் பறக்க விட்டுட்டியேடா? நீயெல்லாம் உசிரோட இருந்தா என்ன இல்லாட்டிதான் என்ன?”
பாக்கெட்டுக்குள் இருக்கும் பணம் பாம்பாய் உறுத்தியது மாரிக்கு. பயன்? யாருக்குமே பயன்படாத பணம் இருந்தென்ன போயென்ன?
“ஏண்ணே தெனம் இப்டி அலைய விடுறீக.காலைல காலைல எனக்கு இது ஒரு தண்டனையா? அஞ்சுக்கு பஸ் பிடிச்சாத்தான் ஆறுக்குள்ள வர முடியும்.லேட்டா வந்தா அதுக்கு வேற கத்துவீக? எறங்கி நடந்து.வர்றதுக்குள்ள.”
“பெரிய புடுங்கி இவுரு.காலு வலிக்குதாக்கும் அய்யாவுக்கு.பொடணில ரெண்டு போட்டன்னா.? கோர்ட் தீர்ப்புப்படி மாப்ள ஒழுங்கா வர்லன்னா பெறவு பார்த்துக்க.ஆளே இருக்க மாட்ட.இங்கயே கெடக்குறியா? எங்களுக்கும் சம்மதம்.போன வாரம் நடந்த கொலைல உன் பேர்லதாண்டீ அதிக சந்தேகம்.ஏற்கனவே இம்புட்டு கேசுகள வச்சிக்கிட்டு இங்க தெனம் வந்து கையெழுத்தும் போட்டுக்கிட்டு எங்களயே ஏமாத்துறியா? இதுல நீ என்னமோ வெளியூர்ல இருக்கிற மாதிரி வேறே படம் காட்டுற.? இங்கயே கெடக்குறியா? பேசாம ரெண்டு மூணு கஞ்சாக் கேசப் போட்டு நல்லா இறுக்கி உள்ளயே உக்காத்தி வச்சிடுவோம்.இப்போதைக்கு ஒதவும்ல.என்னா சொல்ற?”
பேசாமல் ஸ்டேஷனிலேயே கிடந்துவிடலாம்தான். வீடு என்று ஒன்று எங்கு இருக்கிறது தனக்கு? ஆசைத் தங்கச்சியும் இல்லை.அருமைத் தாயும் இல்லை.தன் மீது உள்ள குற்றங்களோ அதிகமாகிக் கொண்டே போகிறது.எந்த போதையில் அல்லது என்ன மன உளைச்சலில் இது நடக்கிறது?
“ஒன் கேடு கெட்ட நடத்தையால ஒங்கப்பன முழுங்கின.இப்போ உன்னோட ஆத்தாளயும் முழுங்கப் போற.”
“டாய்.” என்று பாய்ந்து குதறியிருப்பான்தான். அப்படிச் செய்து செய்துதானே இந்த நிலைக்கு வந்திருக்கிறது?
ஒரு வார காலத்திற்குள் ஏன் இந்த மாற்றம்? எங்கே தன்னையும் போட்டுத் தள்ளி விடுவார்களோ என்கிற பயம் வந்து விட்டதோ?
கூடத் திரிந்த சக்திவேல் கூட மாறித்தான் போய்விட்டான். எங்கோ கொல்லன் பட்டறையில் இரும்படிக்கிறானாம். கேட்டால் சிரிப்பாய்த்தான் இருக்கிறது. அவன் தகுதிக்கு அந்த இடமா? எப்படி மெத்தனமாய்த் திரிந்தவன். எவனும் வேண்டாம்.நான் ஒருத்தனே போகிறேன் என்பானே? அடுத்தவன் கதையை முடிப்பதில் எவ்வளவு துடிப்பு அவனுக்கு?
யாரோதான் சொன்னார்கள். “ஆனாலும் அது ஒழைச்சு வர்ற காசுடா.அதுல திங்கிற சோறே வேறடா.அதுதாண்டா ஒழுங்கா செமிக்கும்.இதெல்லாம் என்னைக்காச்சும் வயித்தப் பிடுங்கி ஆளத் தூக்கிடும்டா.இந்த ஈனப் பொழப்பு ஒரு பொழைப்பாடா?
“சே.என்ன இன்றைக்கு மனசைப் போட்டு இந்தப் பாடு படுத்துகிறது? எல்லாம் அண்ணன் பார்த்துக்குவாருன்னுல்ல இருந்தோம்.” – இந்த நினைப்பு திடீரென்று மனசில் வந்தபோது கூடவே பயமும் பெருக்கெடுத்தது மாரிக்கு.
( 7 )
“என்னங்க.அன்றைக்கு ஆஸ்பத்திரிக்குள்ள போனீங்களே.என்னாச்சு? அதுக்கப்புறம் உங்களைப் பார்க்கவே முடியலீங்களே.?- தற்செயலாய் சாந்தாவை அந்தக் கோயில் வாசலில் சந்தித்துவிட்ட சரவணன் பட்டென்று கேட்டு விட்டான். ஒரு கணம் அவன் யார் என்பதை ஊகிக்க முடியாமல் நின்றிருந்த சாந்தா “நாந்தாங்க.அன்னைக்கு ராத்திரி பத்து மணிக்கு மேலே உங்களை ஆஸ்பத்திரில கொண்டு விட்டேனே.ஞாபகமில்லியா.” என்றவுடன் புரிந்து கொண்டு புன்னகைத்தாள்.
“ஒண்ணுமில்லீங்க.என் தம்பி உடம்பு சரியில்லாம இருக்கான்.அதான்.” – அவள் தன்னிடம் மறைக்கிறாள் என்பதைப் புரிந்து கொண்டான் சரவணன். ‘
“ஓண்ணு தெரிஞ்சிக்குங்க.ஆட்டோக்காரனுக்குத் தெரியாத தகவல் கிடையாதுங்க.ஊர்ல எங்கெங்க என்னென்ன நடக்குதுன்னு எப்டியும் எங்க காதுக்கு வந்துடும்.அன்னைக்கு ராம் நகர்ல நடந்த கொலைல உங்க தம்பியை அடிச்சுப் போட்டுட்டாங்க.அதானே..இதெல்லாம் எங்களுக்குப் பழைய நியூசுங்க.அவன் உங்க தம்பிங்கிறதுதான் எனக்குப் புதுசு.அதுவும் இன்னைக்குக் காலைலதான் தெரிஞ்சிது.அந்த உறாஸ்பிடல் வாசல்ல இருக்கிற ஆட்டோக்காரங்க எல்லாரும் எனக்கும் நண்பர்கள்தாங்க.நீங்க தெனமும் வந்துட்டுப் போறதை அவுங்களும் கவனிச்சிட்டுத்தான் இருக்காங்க.அது கிடக்கட்டும்.இப்போ உங்க தம்பி எப்படி இருக்காரு.அதச் சொல்லுங்க.”
“பரவால்லீங்க.ஆனா பயம்தான் நீங்கினபாடில்ல.எவ்வளவோ சொல்லிப் பார்த்துட்டேன்.மனசுலேர்ந்து அந்தப் பதட்டம் வெலகின மாதிரித் தெரில.”
“சின்னப் பையன்தானேன்னு விட்டிருக்கலாம்.அந்தப் பசங்க எதுக்கும் அஞ்ச மாட்டானுங்க.இதுவே பெரிய ஆளாயிருந்திருந்தா இன்னொரு கொலைன்னு கூடப் பார்க்காம முடிச்சிட்டுப் போயிருப்பாங்க.பொடிப் பயதானேன்னு விட்டுட்டாங்க.நா சொன்னதா இத யார்ட்டயும் சொல்லிப் புடாதீங்க.ஏற்கனவே எங்கள விடாம வந்து மேய்ஞ்சிக்கிட்டுதான் இருக்காங்க.போலீசுக்கு பயந்தா எங்க பொழப்பே நடக்காதுங்க.”
அவன் சொல்வதை அமைதியாக நின்று கேட்டுக் கொண்டிருந்த சாந்தா “சரி வர்றேங்க.”என்று விட்டுக் கிளம்பினாள்.
“ஏங்க.வண்டில வாங்களேன்.கொண்டு விட்டுட்டுப் போறேன்.”
“பார்த்தீங்களா.அன்னைக்கு உங்க வண்டில வந்ததுக்கே இன்னும் நான் காசு தர்லே.இந்தாங்க பிடிங்க.”
“இப்போ வர்றேன்னு சொல்லுங்க.வாங்கிக்கிறேன்.”
“இல்லீங்க.நான் பஸ்லயே போய்க்கிறேன்.”
“இந்த ஏரியாவுலே அடிக்கடி பஸ் வராதுங்க.ஏறுங்க.கொடுக்குறதக் கொடுங்க.”
அவனின் வற்புறுத்தலில் தளர்ந்து போன சாந்தா ஏறி உட்கார்ந்தாள். கடுமையான வாகன நெரிசலில் அநாயாசமாக அவன் வண்டியை ஓட்டிக் கொண்டு போவது அவளுக்குப் பிடித்திருந்தது. அவனின் ஓட்டுதலில் தெளிந்த நிதானத்தை உணர்ந்தாள் அவள். எதிர் வரும் வாகனங்களை சங்கடமின்றி விலக்கிக் கொண்டு தனக்கென்று உள்ள பாதையில் முன்னும் பின்னும் நகரும் வாகனங்களின் அருகாமையை அளவாக உணர்ந்து எந்தக் குலுங்கலும் பதட்டமும் இல்லாமல் அவன் முன்னேறியது அவளை திருப்திப் படுத்தியது. எந்தவொரு இடத்திலும் உறாரன் சத்தம் எழுப்பாமல் அவன் முன்னேறியதுதான் அவளுக்கு ஆச்சரியமாய் இருந்தது.
“உறாரனே அடிக்க மாட்டேங்கறீங்க.?” கேட்டே விட்டாள் அவனிடம்.
“எதுக்குங்க தேவையில்லாம.? அதுதான் வரிசையா எல்லா வெஉறிக்கிளும் போய்க்கிட்டே இருக்குல்ல.ஒருத்தன் பின்னால ஒருத்தன் போயிட்டேதான இருக்காங்க.உறாரன் அடிச்சு தேவையில்லாம எதுக்குச் சத்தம் எழுப்பணும்.? நிறையப் பேரு அநிச்சையா அதைச் செய்திட்டிருக்காங்க.என்னவோ இவுங்க உறாரன் பண்றதுனாலதான் அவுங்க விலகுறாங்கங்கிற மாதிரி.அது அப்டியில்லீங்க.முன்னாடி போகுற வாகனத்தை மனசுல வச்சு அவனவன் ஸ்டெடியாப் போயிட்டிருந்தாலே எல்லா வண்டியும் தன்னால நகர்ந்திடும்ங்க.நம்ம வாழ்க்கை கூட அப்டித்தாங்க..”
“என்ன சொல்றீங்க.?” – புரியாமல் கேட்டாள் சாந்தா.
“ஆமாங்க.நமக்கு முன்னாடி வாழ்ந்து முடிச்சவங்க எப்டி எப்டி வாழ்ந்திட்டுப் போயிருக்காங்கங்கிறதைக் கூர்ந்து கவனிச்சாலே போதும்.நம்ம வாழ்க்கை தானாச் சீராயிடும்.நம்மள மீறி எந்தத் தப்பும் நடந்திடாது.”
“ரொம்ப அனுபவப்பட்ட மாதிரிப் பேசறீங்க.?”
“அன்றாட வாழ்க்கையே ஒரு அனுபவம்தாங்க.எத்தனை விதமான மனுஷாளை இந்த வண்டியில ஏத்திட்டுப் போயிருக்கோம்.நல்லவன் கெட்டவன்ங்கிற வித்தியாசமில்லாம.எல்லாவிதமான ஆளுகளையும் பார்த்தாச்சுங்க.கைப்பையை மறந்து வச்சவங்களும் இருக்காங்க.வேணும்னே விட்டுட்டுப் போனவங்களும் இருக்காங்க.திரும்பக் கொடுத்த போது நன்றி சொன்னவங்களும் இருக்காங்க.இது என்னுதுல்லையேன்னு வம்புல மாட்டி விட்டவங்களும் இருக்காங்க.”
“உங்களோட பேசினதுல நேரம் போனதே தெரிலீங்க.”
“அது சரிங்க.உங்க தம்பிக்கு யார் துணையிருக்காங்க.?”
“என் தங்கச்சிய உட்கார்த்தி வச்சிருக்கேங்க.நா இப்போ போயிடுவேன்.ராத்திரி அங்கதான் தங்கல்.”
“அப்போ ஒண்ணு செய்யுங்க.இந்த நம்பருக்கு ஒரு போன் பண்ணுங்க.நா கொண்டு விடறேன் உங்களை.”
வண்டியை நிறுத்தி சரவணன் தன் ஃபோன் நம்பரை ஒரு சிறு தாளில் எழுதிக் கொடுத்த போது வேண்டாம் என்று சொல்ல ஏனோ மனம் வரவில்லை சாந்தாவுக்கு. அவனின் மேல் ஏன் இந்த ஈர்ப்பு அவளுக்கு? தன்னைத்தானே கேட்டுக் கொண்டாள் ஒரு முறை. ரொம்பவும் அபூர்வமாகத்தான் அவள் ஆட்டோவில் பயணிப்பது வழக்கம். அப்படிப்பட்ட தான் எப்படி இதற்குச் சம்மதித்தோம்? பஸ்ஸில் போய்த்தானே பழக்கம்? இப்போது திடீரென்று எடுத்ததெற்கெல்லாம் ஆட்டோ என்றால் காசுக்கு எங்கே போவது?
“யோசிக்காதீங்க.ஒரு அவசரத்துக்குத்தானே..அதுக்கு உதவாட்டா அப்புறம் இந்தத் தொழில் செய்துதான் என்ன புண்ணியம்? நாங்க பிரசவத்துக்கு மட்டும் இலவசம் இல்லை.அவசரத்துக்கும்தான் இலவசம்ங்க.என்ன கொஞ்சம் சாவகாசமாப் பணம் வாங்கிக்கிடுவோம்.உங்கள மாதிரித் தெரிஞ்சவங்களுக்குத்தான் அந்தச் சலுகையும்.”
சரவணன் இதைச் சொன்ன போது இருவரும் தங்களை மறந்து சிரித்து விட்டனர். அந்த சந்தோஷத்தில் பணம் கொடுத்த அவள் கைகள் புதியதாக ஒரு ஆணின் ஸ்பரிசத்தை அந்தக் கணத்தில் வெகு மென்மையாக ஆதரவாக உணர்ந்தன.
“உங்க தம்பியப் பத்திக் கவலைப் படாதீங்க.அங்க வெளிய எங்க ஆட்கள்ட்ட சொல்லி வைக்கிறேன்.குணமாக்கி சேப்டியா வீட்டுக்குக் கூட்டி வந்திடலாம்.நீங்க நினைக்கிற மாதிரி இல்லை..அந்தக் கேசு வேறே திசைல போயிட்டிருக்கு. உங்க தம்பிக்கு ஏதாச்சும் ஆபத்து வந்திடுமோன்னுல்லாம் நினைக்க வேண்டாம்.பயப்பட எதுவுமேயில்லை.அதெல்லாம் பெரிய எடத்து விஷயம்.கதையே வேறே.”
சொல்லிவிட்டு அவன் ஆட்டோவை எடுத்துக் கொண்டு பறந்த போது அது செல்லும் திசையையே பார்த்துக் கொண்டிருந்தாள் சாந்தா. இரைச்சலும் போக்குவரத்தும் ஓய்ந்திருந்த அந்த நேரத்தில் ஒரு வாகனம் எந்த விகிதத்தில் செல்ல வேண்டுமோ அந்த சரி விகிதத்தில் சரவணனின் வாகனம் நகர்ந்ததாய்த் தோன்றியது அவளுக்கு. ரொம்பவும் நிதானமான பொறுப்பான பொருத்தமான ஒரு இளைஞனைத் தான் சந்தித்து விட்டதாய் அவள் மனம் சொல்லியது அப்போது.
( 8 )
மாரியின் மனசு கொதித்துக் கொண்டிருந்தது. அண்ணன்ட்டேயிருந்து எந்தத் தகவலும் இல்லையே.காரியம்னாத்தான் மட்டும் பேசுவாரோ.என்னடா தெனம் ஸ்டேஷன் போயிட்டிருக்கியா.சும்மா தைரியமாப் போயிட்டு வா.எல்லாம் நா பார்த்துக்கிடுறேன்.ஒரு வார்த்த சொல்லலியே.இத்தன நா இப்டி இருந்ததில்லையே.தங்கச்சி பிரிஞ்சி போயிடுச்சின்னு புலம்பினனே.அதுல கோபமாயிட்டாரோ.அதுகிட்ட ஒரு முறை வாலாட்டி வாங்கிக் கட்டிக்கிட்டாரே.அந்தக் கோபமோ.ஆத்தாளக் காணலன்னு அழுதேனே.அது பிடிக்கலையோ.அவருக்கென்ன எல்லாத்தையும் உதிர்த்தவரு.நம்பள மாதிரி அப்பா அம்மா தங்கச்சின்னு இருந்தாத்தான தெரியும்.அவுருக்குத்தான் எதுவுமே கெடையாதே.கூத்தியாளக் கட்டிட்டு அழுதிட்டிருக்குறவரு.சீ அதுவும் ஒரு பொழப்பா.அவளும் அவ மூஞ்சியும்.ஆனாலும் அவ ஒடம்பு ஆத்தாடீ.அன்னைக்கு என்ன மறந்து ஒரு பார்வை பார்த்தனே அந்தாளு மூஞ்சி எம்புட்டுச் சிறுத்துப் போச்சு.அவளும் என்னைப் பார்த்தாளே.அதான் பிடிக்கலையோ? சே.அப்பவே தங்கச்சி சொல்லிச்சு.மச்சானோட தங்கச்சி ஒண்ணு இருக்கு கட்டிக்கன்னு.இந்த முட்டாப்பய மண்டைல ஏறிச்சா? எல்லாரும் எனக்கு நல்லதுதான் சொன்னாக.நாந்தான் இப்டிச் சீரழிஞ்சு போயிட்டேன்.சும்மாத் திரிஞ்சிக்கிட்டு இருந்தவன கரெக்டா வலை போட்டுப் பிடிச்சிட்டானுக.அதுக்காக? எனக்கெங்க புத்தி போச்சு? எல்லாம் என் கேடு காலம்.இப்டித்தான் சீரழியணும்னு தலையெழுத்தோ என்னவோ? இல்லன்னா இப்போ இப்டியெல்லாம் நெனக்கத் தோணுமா? கெட்டுச் சீரழிஞ்சாத்தானே இப்டியெல்லாம் புத்தி வரும்? இதெல்லாமும் அன்னைக்கு ரத்தம் பார்த்த போது உண்டான தடுமாத்தமோ?
அதுக்கு முன்னாடி அந்த ஆந்திராக்காரப் பயலுக செய்துட்டுப் போயிட்டானுங்க.கையைக் காண்பிச்சதோட சரி.இப்போ நாமளேல்ல செய்ய வேண்டி வந்திடுச்சி.பாவம்யா அந்தாளு.எப்டிக் கால்ல விழுந்து கெஞ்சினான்.கெஞ்சக் கெஞ்ச வெட்டினானுங்களே.வெட்டினானுங்க என்ன.நானுந்தான வெட்டினேன்.சே! அன்னைக்கு ஊத்தாமப் போனதுதான் பெரிய தப்பாப் போச்சு.பொடியவாவது கசக்கி இழுத்திருக்கணும்.எப்டி ரெண்டையும் செய்யாமப் போனேன்.ஒரு வாரத்துக்கும் மேல ஆவப் போகுது.நம்ப கோஷ்டிக்காரனுவ எவனும் கண்ணுலயே படல.எல்லாத்தையும் புடிச்சி உள்ள தள்ளிட்டானுகளா?ஒரு வேள சரண்டர் ஆயிட்டானுவளோ? என்னைய மட்டும் விட்டுட்டானுக.தெனமும் டேஷனுக்கு வர்றேன்னு நோட்டம் பார்க்குறாகளோ? என்னப் பொறியா வச்சி மத்தவுகள வலை போடுறாங்ஞளோ? இந்தப் போலீசு வேலயே மர்மமால்ல போச்சு? எப்போ எதுக்கு உள்ள போடுவானுங்க.எதுக்கு வெளில விடுவானுங்கன்னே கணிக்க முடில்லயே? அண்ணன்கிட்ட அதெல்லாம் நமக்கு வேண்டாம்ணேன்னு பீத்தப் பேச்சுப் பேசினேன்.அது ஏன்? அந்தாளு கிரீடத்தத் தலைல வக்கப் போறான்னா?”
“அடுத்தவங்க சிந்துற ஒவ்வொரு துளி ரத்தத்துக்கும் நீ பதில் சொல்லிதாண்டா ஆகணும்.உசிர எடுக்கிறதுக்கா உங்க ஆத்தா உனக்கு உசிரக் கொடுத்தா? நீ எடுக்கிற உசிரோட உசிரா இருக்காளே இன்னொரு ஆத்தா.அவளோட வயித்தெறிச்சல் வீண் போகாதுடா வீண் போகாது.அது உன்னை அழிச்சே தீரும்.அவ கும்பி கொதிச்சா நீ வெளங்குவியா? என் கும்பி கொதிக்குதுடா.இதுக்கே நீ அழிஞ்சு போவே.நீ சீப்பட்டுத்தான் சாகப் போறே பாரு.எவனோ ஒருத்தன் சொன்னானாம்.இவன் செய்தானாம்.ஒம்புத்தி எங்கடா போச்சு? அவன் பீயத் தின்னுன்னு சொன்னா தின்னுவியா? அறிவு கெட்ட முண்டம்.உன்னப் பெத்த ஆத்தாள விட அவன் எந்த வகைலடா பெரிசு? எதுல உசத்தி? அவ பேச்சக் கேட்காம அவன் பின்னாடி ஓடினியாக்கும்.? நீ அவனுக்குப் பயன்படுறவரைக்கும் தாண்டா வேணும் அவனுக்கு.பெறவு உன்னையும் போட்டுத்தள்ளத் தயங்க மாட்டாம் பாரு.உன் உசிரக் கொடுத்து அவனக் காப்பாத்துனேங்கிறியே.இன்னொரு உசிரை எடுக்கச் சொல்றவன் உன் உசிர எடுக்க இன்னொருத்தன ஏவ மாட்டாங்கிறது என்ன நிச்சயம்? எத்தன நாளைக்கு விட்டு வைப்பான்னு நினைக்கிறே? அதுக்கும் குறி வச்சிட்டுத்தான் இருப்பாங்கிறதை மறந்திடாத.வேள வர்றபோது உந்தலையும் தப்பாதாக்கும்.இப்டியாச்சும் பொழச்சு உயிர் வாழணுமாடா?”
“அன்னைக்கு சக்திவேல் எம்புட்டுச் சொன்னான். எதயுமே காதுல வாங்கலியே நா.இதுக்கு ஆடு மாடா பன்னியாப் பொறந்து ஓரத்துல மேய்ஞ்சிட்டு சாக்கடைல பொறண்டுட்டுப் போயிடலாம்னானே? கடவுளே எம்புட்டு நடந்து போச்சு? சும்மாத் திரிஞ்ச காலத்துல இருந்த நிம்மதி கூட இப்ப இல்லையே? மனசு போட்டு இந்த அழுத்து அழுத்துதே! இதுதா நா சம்பாதிச்சதா? கை நிறையப் பை நிறையக் காசு வச்சிருக்கனே? அது நிம்மதியைத் தராதா? அது பாபக் காசா? யாருமே வேண்டாம்னுட்டாகளே.அதத் தொடக் கூட இல்லையே ஆத்தா? அவ ரத்தத்துலதான பொறந்தேன் நான்.ஏன் எனக்கு புத்தி இப்டிப் பொறண்டு போச்சு.? மாரிக்குத் தலை சுற்றியது.
( 9 )
கண்கள் இருண்டு லேசான தடுமாற்றம் மாரியை ஆட்கொண்ட போது சரேலென்று அவனை இடிப்பது போல் சென்று பறந்த அந்தக் காரைப் பார்த்து திடுக்கிட்டான் அவன். யாரோ உள்ளே கெக்கலியிட்டுச் சிரித்தது போலிருந்தது. பெரிய இடிச் சிரிப்பு. நான்கைந்து பேர் சேர்ந்து போட்ட கும்மாளச் சிரிப்பு அது! கேட்ட குரல்தானா? வெறும் சிரிப்பில் எதைக் கண்டு பிடிக்க முடியும்? எவர்களாயிருக்கும்? அண்ணனோ? சே.சே.அவருன்னா வண்டிய நிறுத்தாமப் போவாரா? நான்னு தெரியாமப் போயிருப்பாகளோ? தெரிஞ்சிருந்தா வண்டி நின்னிருக்குமே? என்ன விட்டிட்டு அவுக எந்தக் காரியத்தைப் பார்க்க? அது சரி அவுரு ஏன் இங்க வரணும்? ஒரு வேள ஸ்டேஷனுக்கு வந்திருப்பாரோ.அங்க என்ன அவருக்குச் சம்பந்தம்? எனக்குத் தெரியாமயா? எனக்கு மட்டுந்தான இங்க கொடுத்திருக்காக.அவருக்கு டவுனாச்சே.அதுவும் பழைய கேஸாச்சே.இதுக்குக் கெடயாதே.பின்ன இங்க ஏன் திரியராரு.எத்தன எடத்தத்தான் பழகி வச்சிருப்பாரு? போறது யாரு.உண்மையிலேயே அவுருதானா? இல்ல வேற பார்ட்டியா? வேற பார்ட்டி இந்த வேளைல ஏன் இங்க அலையணும்? அவுரு வண்டிதானா அது? இல்ல வேற யாருதுமா? அடடே.நம்பரப் பார்க்க விட்டிட்டமே.எதுக்காக எம்பக்கத்துல வந்து கட்டிங் போடுறானுங்க.?
மாரி நிதானிக்கும் முன் அந்த இரண்டு புல்லட்களும் அவனை இடித்துத் தள்ளுவது போல் அருகருகே ஒட்டி உரசியவாறே கடந்து பறந்த அந்தக் கணத்தில் சரேலென்று ஏதோ ஆபத்தை உணர்ந்தவனாய் தன்னை மறந்த ஒரு உத்வேகத்தில் சட்டென்று வேகமெடுத்து ஓட ஆரம்பித்தான் அவன். எங்கிருந்துதான் கால்களுக்கு அப்படியொரு வேகம் வந்ததோ.தறி கெட்டுப் பறந்த அந்தக் கால்கள் சந்தித்த மேடு பள்ளங்கள் அவனைப் புறட்டிப் போட யத்தனித்துத் தோற்றுப் போயின. தோண்டிப் போட்டிருந்த பள்ளங்களையும். சிமென்ட் குழாய்களையும் தடுப்புப் பலகைகளையும் தாண்டித் தாண்டிப் பாய்ந்து கொண்டிருந்த அவன் அந்தக் காவல் நிலையத்;துக்குள் நுழைய முற்பட்டபோது சரேலென்று எங்கிருந்தோ மின்னலெனப் பாய்ந்த அந்த நீண்ட வீச்சரிவாள் அவன் உயிரை அரைக் கணத்தில் பறித்துக் கொண்டு அருகேயிருந்த குப்பை மேட்டில் போய் விழுந்தது. என்ன நடக்கிறது என்பதைக் கணிக்கும் முன் மேலும் நாலைந்து தடித்த உருவங்கள் அவன் உயிர் காவு கொள்ளப்பட்டதா என்பதை உறுதி செய்து கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில்; அந்த இடத்தை விட்டு அந்தப் பெரிய வாகனத்தில் பறந்த போது வாசலில் காவலில் நின்ற காவலர்கள் பயத்தில் வெளிறிப் போய் பிணமாய் நின்று கொண்டிருந்தனர்.
( 10 )
நடந்த கொலைக்கு கண்ணால் கண்ட சாட்சிகளே இல்லையென்று வழக்கு தள்ளுபடியெனத் தீர்ப்பான அந்த நாளில் சரவணன் மூலமாக அந்தச் செய்தியை அறிய நேர்ந்த சாந்தாவின் மனதில் என்னவோ ஒரு துக்கம் நெருடத்தான் செய்தது. அறியாப் பருவத்தில் பயத்திலிருந்து மீண்டு தன் கல்வியை செவ்வனே கவனித்துக் கொண்டிருக்கும் தன் தம்பியை அவள் நினைத்துக் கொண்டாள். எத்தனையோ ஆயிரம் வழக்குகளில் ஒன்றாகிப் போன அந்தச் சம்பவம் காலத்தோடு காலமாகக் காணாமல் கரைந்து போனது.
“இது கலி காலமுங்க.இப்போ இப்டித்தான் நடக்கும்.மனுஷன மனுஷன்; வெட்டிக்குவான்.குத்திக்குவான்.எல்லாவிதமான முரணான விஷயங்களும் இந்த யுகத்துலதான் நடக்குமாம்.அநியாயமும்; அக்கிரமமும்தான் கொடி கட்டிப் பறக்குமாம். இந்த யுகத்துக்குப் பிறகுதான் கல்கி தோன்றுவாராம்.அப்போதான் எல்லாக் கெட்டவைகளும் அழியுமாம். அந்தக் காலம் வரைக்கும் இந்த உலகம் பொறுக்க வேண்டிதான்.நம்மள மாதிரி நடுத்தர வர்க்க சமுதாயம் இதுகளையெல்லாம் பார்த்து மனசுக்குள்ளயே கொதிக்க வேண்டிதான்.இல்லன்னா கண்ண மூடிக்கிட்டுக் கிடக்க வேண்டிதான்.ரொம்பச் சரியா யோசிச்சா அதத்தான் செய்ய முடியும்.தீமையை அழிக்கிறதும் நியாயத்தை நிலை நாட்டுறதும் கதைகள்லயும் சினிமாவுலயும் வேணும்னா பார்க்கலாம். பார்த்து ஆறுதல் பட்டுக்கலாம். நிஜத்துல நடக்கணும்னா அதுக்கு யுகாந்திர காலமாகும்.உங்களப் பொறுத்த வரைக்கும் உங்க தம்பி முழுசாக் கிடைச்சுட்டான்ல.அத்தோட விடுங்க.அவ்வளவுதான்.இந்த உலகத்துல எவ்வளவோ நடக்குது.நமக்குத் தெரிஞ்சது ரொம்பக் கொஞ்சம்.அந்த ரொம்பக் கொஞ்சமே நம்மளை இவ்வளவு கஷ்டப்படுத்தினா இன்னும் பலதையும் தெரிஞ்சிக்கிட்டோம்னு வையுங்க.போதும்டா சாமின்னு ஆயிடும்.நா பேசுறது பொட்டத்தனமாக்கூட உங்களுக்குத் தெரியலாம்.ஆனா அதுதான் யதார்த்தம்.” – சரவணன் சொல்லிக் கொண்டே வண்டியைத் திருப்பினான். சாந்தாவின் வீடு வந்தது.
“உள்ளே வாங்க அங்கிள்.வந்து சாப்டுட்டுப் போங்க.” – சாந்தாவின் தம்பியும் தங்கையும் அவனை ஆளுக்கொரு பக்கமாய்க் கைகளைப் பிடித்துக் கொண்டு வீட்டிற்குள் அழைத்துச் சென்றபோது சாந்தா அதை ஏனோ தடுக்கவில்லை.
—————————————-